மத்ஹபுகள் முதல் மன்றங்கள் வரை தனி அமைப்புகள் நபிவழியா?
கடந்த கால வரலாற்றில் மனித சமுதா யம் வழி தடுமாறிச் செல்லும்போது, அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய “நடுநிலைச் சமுதாய”மாகிய முஸ்லிம்களில் பெரும்பாலோர் தமது பணிகளை செய்யத் தவறிய போதெல்லாம், முஸ்லிம்களை தட்டியயழுப்பி குர்ஆனைப் படித்து விளங்கி செயல்படவும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களைப் பற்றிப் பிடித்திடவும் நீண்ட நெடுங்காலமாக பல மார்க்க அறிஞர்கள் அரும்பாடுபட்டிருக்கிறார்கள்.
தூய இஸ்லாத்தைப் பேணி நடந்து நீதி நெறி ஆட்சி செய்த கலீஃபாக்கள் முதல், மரியாதைக்குரிய இமாம்களிலிருந்து அடுத்தடுத்த காலகட்டங்களில் இந்த நூற்றாண்டு வரை உலகளவில் பற்பல நாடுகளில் பல்வேறு அறிஞர் பெருமக்களும், உலமாக்களும் செய்த பணிகளும், தியாகங்களும், அபார சாதனைகள். (அல்லாஹ் அவர்களுக்கெல்லாம் நற்பதவிகள் வழங்க துஆ செய்வோம்)
ஆனால், தற்பொழுது பிரச்சினை என் னெவென்றால், உலகளவில் முஸ்லிம்கள், இஸ்லாமியப் பற்றை நெஞ்சிலே சுமந்திருந்தாலும், அந்த பெரியார்களை கண்ணியப் படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அந்தப் பெரியார்களின் பெயராலேயே மத்ஹபுகளையும், பிரிவுகளையும், இயக்கங்களையும் ஏற்படுத்தி விட்டார்கள்.
உதாரணம் ஹனஃபி, ஷாஃபி, மாலிகி, ஹன்பலி, ஷிஆ, ஸலஃபி, இஸ்லாமிக் சென்டர்ஸ் (U.S.) டார்வின் இஸ்லாமிக் சென்டர் (ஆஸ்திரேலியா) ஜமாஅத்தே இஸ்லாமி, முஹம்மதியா ஜமாஅத், SIM, SIO, IAC, ISM, முஜாஹித், அஹ்ல ஹதீத், JAQH, காதியானி மற்றும் ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு பிரபலமாகாத மன்றங்கள், இயக்கங்கள், இஸ்லாமிய வழிகாட்டி மையங்கள் மற்றும் தப்லீக் ஜமாஅத், தரீக்கா ஜமாஅத்துகள்.
மேற்கண்ட இயக்கங்களில், இறையச்சத்தோடு செயல்படும் நல்லுள்ளம் கொண்ட பெரியோர்களே! தனித்தனிப் பிரிவாக, தனித்தனிப் பெயர்களில் இஸ்லாமிய பிரசாரப் பணியில் ஈடுபட குர்ஆனிலோ, ஹதீதிலோ ஒரு ஆதாரம் கூட கிடையாது என்பதை பகிரங்கமாக தெரிவிக்கின்றோம்.
“இயக்க அமைப்புகளை உலகியல் காரணங்களுக்காக நிர்வாக வசதிக்காக வைத்திருக்கிறோம்” என்று நியாயப்படுத்தக் கூட குர்ஆன், ஹதீதில் தெளிவான தடை இருப்பதை தொடர்ந்து எழுதியும், பேசியும் வருகிறோம். இன்றுவரை பதிலில்லை என்பது வேதனையான விசயம் ஆகும். இது சம்பந்தமாக மேலும் அறிய விரும்பினால் எங்களோடு, நேரிலோ, கடிதம் மூலமோ தொடர்பு கொள்ளலாம்.
நாம் ஒவ்வொருவரும் முழு இஸ்லாமிய வாழ்க்கையில் நுழைந்திடவும், நபி(ஸல்) அவர்கள் அமைத்து, வழிநடத்தி, சத்திய சஹாபாக்கள் வழிவந்த ஒன்றுபட்ட சமுதாயமாகிய “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” எப்படி இயங்கியதோ, அதன்படி அனைவரும் ஒன்றுபட பாடுபடுவோம்! துஆ செய்வோம்.