இப்போது முஸ்லிம்கள் செய்யவேண்டியது…
C.M.N. சலீம்
மாவட்ட வாரியாக, மஹல்லா வாரியாக இது குறித்து ஜமாஅத்தினர் ஆலோசிக்க வேண்டும்.
1000 ரூபாய் தொடங்கி 1 லட்சம் ரூபாய் வரை பங்கு தொகைகளை பெற்று, பொது அறக்கட்டளைகள் நிறுவி, மகளிர் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
முக்கியமாக 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பெண்கள் பள்ளிக்கூடங்களே முதன்மை தேவைகளாக உள்ளது.
நகர்புறமாக இருப்பின் ஒரு ஏக்கர் இடமும், கிராமப்புறமாக இருப்பின் 3 ஏக்கர் இடமும் தேவை. 10 ஆயிரம் சதுர அடியில் கட்டிட அமைப்பு தேவை.
உள் கட்டமைப்பு, அரசு அனுமதி பெறுதல், மூன்றாண்டுகளுக்கான நிர்வாக செலவுகள் என 2 கோடி ரூபாய் மூலதனம் தேவைப்படும்.
மதரஸா இடங்கள், மஸ்ஜித் வளாகங்கள், தர்கா வளாகங்கள், வக்பு நிலங்கள் ஆகியவற்றை இதற்கு பயன்படுத்திக் கொள்வது பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும்.
வட இந்தியாவில் உள்ள ஜாமியாமில்லியா, அலிகர் (புனிU) போன்ற உலக தரமிக்க பல்கலைக் கழகங்கள் தமிழக முஸ்லிம் சமூகத்திடம் இல்லை என்ற குறையும் இருக்கிறது.
சென்னைக்கு அருகிலோ அல்லது திருச்சி, தஞ்சைக்கு இடையிலோ இது போன்ற பல்கலைக் கழகங்கள் எதிர் காலத்தில் உருவாகிட செயல் திட்டங்கள் தேவை.
அதுபோல் சட்டக் கல்லூரி ஒன்றும், வேளாண் கல்லூரி ஒன்றும், மருத்துவ கல்லூரி ஒன்றும் தேவையாக உள்ளது.
அங்கு அனைத்து மதத்தினரும், சாதி யினரும் அவரவர் உரிமைகளோடு பயிலும் வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
பொறுப்பு மிக்க குடிமக்களை உருவாக்கும் அறிவு களங்களை கட்டமைப்பதன் மூலமே காலத்தின் சவால்களையும், சமகால நெருக்கடிகளையும் எதிர் கொள்ள முடியும்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், செல்வந்தர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரை கொண்ட ஒருங்கிணைப்பு குழு மாவட்ட வாரியாக இதற்காக அமைக்கப்பட வேண்டும்.
இத்துறை சார்ந்த நிபுணர்கள், ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர்களிடமும் இது குறித்து கூடுதல் ஆலோசனைகளை பெறலாம்.
இதற்காக ஓராண்டு செயல் திட்டம் வகுத்து களமிறங்க வேண்டும்.
முஸ்லிம்களின் போராட்டத்திற்கு நாம் செலுத்தும் உதவி இதுவாகவே இருக்க வேண்டும்.
கவிஞர் அல்லாமா இக்பாலின் புகழ் பெற்ற கவிதை நினைவுக்கு வருகிறது.
“அறிவாளிகளை கொண்ட கூட்டத்திற்கு ஆயுதங்கள் தேவை இல்லை”.