சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும்
அபூ அஸீம், இலங்கை
மார்ச் தொடர்ச்சி….
அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். அவனது செல்வமும், அவன் செய்தவைகளும் அவனைக் காக்கவில்லை, கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும் விறகு சுமப்பவளாகிய அவனது மனைவியும் கருகுவார்கள். அவனது கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது (111:1-5) எனும் குர்ஆன் வசனம் இறங்கக் காரணமானவரான; அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களது சிறிய தந்தையாக இருந்தும் அவர்களது அழைப்புப் பணியின் முதல் நாளிலிருந்தே நபியவர்களிடம் கடுமையான பகைமையைக் காட்டி வந்த குறைஷ´த் தலைவர்களில் ஒருவரான அபூலஹபின் மனைவியும் அபூ ஸுஃப்யானின் சகோதரியுமான உம்மு ஜமீல் என்பவள்; (அர்ரஹீக் அல்மக்தூம் : 119) சொல்லாலும், செயலாலும் இழைத்த கொடுமைகளையயல்லாம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பொறுத்துக் கொண்டார்கள். மேலும் அச்சமூகத்தவர்கள் “கேலி செய்வார்கள்”
(நபியே!) இவ்வாறே அவர்களில் சிலரை, சிலரைக் கொண்டு நாம் “சோதித்ததில்’ “எங்களை விட்டு (விட்டு ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்து விட்டான்?” என்று (பணக்காரர்கள்) கூற முற்பட்டனர். (6:53) அவர்கள் கேலி செய்த முறைகளாவன.
“ஏளனமாகவும், பரிகாசமாகவும், கண் ஜாடை காட்டிக் கொள்கின்றனர்’
நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) நம்பிக்கை கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிக்கின்றனர். அவர்களின் சமீபமாகச் சென்றால் (பரிகாசமாகத் தங்களுக் குள்) ஒருவருக்கொருவர் கண் ஜாடையும் காட்டிக் கொள்கின்றனர். (அவர்களை விட்டும் விலகித்) தங்களது குடும்பத்தாரிடம் சென்றுவிட்ட போதிலும் (பின்னும்) இவர்களுடைய விஷயங்களையே (பரிகாசமாகப் பேசி) மகிழ்ச்சியடைகின்றனர். (வழியில்) இவர்களைக் கண்டால் (இவர்களைச் சுட்டிக் காண்பித்து) “நிச்சயமாக இவர்கள் வழிகெட்டுப் போனார்கள்’ என்றும் கூறுகின்றனர். (நம்பிக்கையாளர்களைப் பற்றி எதற்காக இவர்கள் இவ்வளவு கவலைப்படுகின்றனர்?’) இவர்கள் அவர்கள் மீது பாதுகாப்பாளர்களாக அனுப்பப்படவில்லையே! (83:29-33) இவ்வாறு ஒவ்வொரு நாளும் கேலி கிண்டல், குத்திப் பேசுதல் போன்ற இடையூறுகளை அதிகரித்துக் கொண்டே சென்றனர். இது நபி(ஸல்) அவர்களின் மனதைப் பெரிதும் பாதித்தது. இது குறித்து அல்குர்ஆனில் இவ்வாறு அல்லாஹ் கூறுகின்றான்.
(நபியே! உங்களைப் பற்றி) அவர்கள் (கேவலமாகக்) கூறுபவை உங்களுடைய உள்ளத்தை நெருக்குகின்றது என்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (அதை நீங்கள் ஒரு சிறிதும் பொருட்படுத்தாதீர்கள், பொறு மையாக இருங்கள். 15:97, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 4, பக்கம் 1067-1072, அர்ரஹீக் அல்மக்தூம் : 102-106) என்று அல்லாஹ் ஆறுதல் கூறுகின்றான். அத்துடன்;
“இவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமை கொள்ள வேண்டும்’
இவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறு மையுடன் இருப்பீராக! இன்னும், வல்லமையுள்ள நமது அடியார் தாவூதையும் நினைவு கொள்வீராக! நிச்சயமாக அவர் (பொறுமையுடன் எந்நிலையிலும், நம் மையே) திரும்பக்கூடியவராக இருந்தார். (38:17) இதில் “திரும்பக்கூடியவர்” என்பதைக் குறிக்க “அவ்வாப்’ எனும் சொல் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது தம்முடைய எல்லாக் காரியங்களிலும், விவகாரங்களிலும், (பொறுமை கொண்டவராக) மாண்பும், மகத்துவமும் மிக்க அல்லாஹ்விடம் அதிகம் திரும்பக்கூடியவரைக் குறிக்கும். (தஃப்ஸீர் இப்னு காஸீர், பாகம் 7, பக்கம் 822-825)
அதுபோலவே, “இறைவனின் கட்டளைக்காகப் பொறுமை கொள்ள வேண்டும்”
இதுபோன்ற; இறைத்தூதர்களாகி “திட சித்தமுள்ளவர்களின், உறுதிமிக்கவர்களின், பொறுமை உங்களுக்கும் வேண்டும்”
(நபியே! நம்முடைய) தூதர்களிலுள்ள, திடசித்தமுள்ளவர்களான, உறுதிமிக்கவர்கள், (கஷ்டங்களை) பொறுத்துக் கொண்டிருந்த பிரகாரமே, நீரும் எந்நிலையிலும் உமது இறைவனுக்காக அழகிய பொறுமையுடன் இருப்பீராக!… (46:35, 16:127, 30:60, 40:55,77, 46:35, 70:5, 74:7, 76:24, 38:17, 11:115, 20:130,132,18:28, 50:39) ஏனெனில், முந்தைய இறைத்தூதர்கள் தமது சமுதாய மக்களால் பொய்ப்பிக்கப்பட்டுக் கடுமையாக துன்புறுத்தப்பட்டார்கள். ஆனாலும் அவர்கள் பொறுத்துக் கொண்டார்கள்.
ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காகப் பொறுமையுடன் (எதிர் பார்த்து) இருப்பீராக; அன்றியும், அவர்களில் நின்று எந்தப் பாவிக்கோ அல்லது நன்றியற்றவனுக்கோ நீர் வழிபடாதீர். (76:24) இதே நிலையில்;
“எந்நிலையிலும் பொறுமை கொள்ள வேண்டும்” :
(நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான். (11:115) அத்துடன்,
“அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்று நம்பிப் பொறுமை கொள்ள வேண்டும்”:
ஆகவே, (நபியே!) நீர் “பொறுமையுடன்’ இருப்பீராக; நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. அவர்க ளுக்கு வாக்களிக்கப்பட்ட சிலவற்றை, நாம் உமக்குக் காண்பித்தாலும் அல்லது அதற்கு முன்னரே நிச்சயமாக நாம் உம்மை மரணமடையச் செய்தாலும், அவர்கள் நம்மிடமே கொண்டுவரப்படுவார்கள். (40:77) அத்துடன்,
பாவங்களுக்காக மன்னிப்புக் கோரிய நிலையில், காலையிலும், மாலையிலும், இறைவனைப் போற்றிப் புகழ்ந்தவர்களாகப் பொறுமையுடன் இருக்க வேண்டும்.
ஆகவே, நீர் “பொறுமையுடன்’ இருப்பீராக, நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உமது பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக, மாலையிலும், காலையிலும் உமது இறைவனைப் புகழ்ந்து தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டு இருப்பீராக! (40:55)
மேலும், (அவர்கள் பொறுமையை மேற்கொண்டவர்களாக) “எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் (பொறுமையைத் தந்து) நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக’ என்பதைத் தவிர (இம்மாதிரி சந்தர்ப்பங்களில்) அவர்கள் கூறியது வேறெதும் இல்லை. (3:147) ஆனாலும் இது,
“உள்ளச்சம் உடையவர்களுக்கே சாத்திய மானதாக இருக்கும்”
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (2:45) எனவே;
(நபியே!) உமக்கு முன்னர் (வந்திருந்த நமது) தூதர்கள் பலரும் பொய்யர்கள் எனக் கூறப்பட்டுள்ளார்கள். (எனினும்) அவர்கள் பொய்யர்கள் எனக் கூறப்பட்டுப் புண்படுத்தப்பட்டபோதிலும், துன்புறுத்தப்பட்ட போதிலும், அவர்கள் பொறுத்துக் கொண்டார்கள்; இறுதியில் நமது உதவி அவர்களுக்கு வந்தது அல்லாஹ்வின் முடிவுகளை யாராலும் மாற்ற முடியாது; (எனவே உங்களுக்கு முன்னிருந்த இறைத்) தூதர்களின் இத்தகைய செய்திகள் உம்மிடம் வந்தேயிருக்கின்றன. (6:34)
இறை நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன்னர் (வாழ்ந்து மறைந்து) சென்று விட்டார்களே, அத்தகையோரின் உதாரணம்; (சோதனை நிறைந்த நிலைகள்) உங்களுக்கு வராத நிலையில் நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்துவிடலாமென்று எண்ணிக் கொண்டீர்களா? அவர்களை வறுமையும், துன்பமும், பிணியும் பீடித்தன. (இறுதியில் இறைத்) தூதரும் அவருடன் இறை நம்பிக்கை கொண்டவர்களும் அல்லாஹ்வுடைய உதவி எப்போதுதான் வந்து சேரப்போகிறதோ?”) என்று கூறும் வரை அவர்கள் (இன்னல்கள் பலவற்றால்) அலைக்கழிக்கப்பட்டு விட்டார்கள். இதோ! “தெரிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக மிகச் சமீபத்திலிருக்கிறது” (என்று அவர்களிடம் கூறப்பட்டது. (2:214) மேலும்,
முடிவில் (நமது) தூதர்கள் நம்பிக்கை இழந்து, தாங்கள் (மக்களால்) நிராகரிக்கப்பட்டு விட்டோம் என்று எண்ணியபோது, நமது உதவி அவர்களிடம் வந்தது, நாம் யாரை நாடினோமோ அவர்கள் காப்பாற் றப்பட்டனர். குற்றம் புரிந்த கூட்டத்தை விட்டும் நமது வேதனை நீக்கப்படாது. (12:110, 2:214) ஆகிய இந்த இரு வசனங்களும் ஒரே கருத்தையே வலியுறுத்துகின்றன. முந்தைய நபிமார்களும், அவரவர்களுடைய சமுதாயத்தவர்களும் இறை நம்பிக்கை கொண்ட காரணத்திற்காக எதிரிகளால் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். “அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்?’ “அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்?’ என்று கேட்கும் அளவிற்கு அவர்கள் வாழ்க்கையில் துன்பங்களைத், துயரங்களை அனுபவித்தார்கள். இறையுதவி தாமதிக்கத் தாமதிக்க “அல்லாஹ்வின் உதவி நிச்சயம் கிடைக்கும்’ என்று இறைத்தூதரால் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியே பொய்யோ என இறை நம்பிக்கையாளர்களே கூட எண்ணலாயினர். அப்போதுதான் அல்லாஹ்வின் உதவியும், விசேஷப் பாதுகாப்பும் அவர்களுக்குக் கிடைத்தது. இறுதித் தூதரின் சமுதாயத்தவர்களாகிய நீங்களும் இப்படிப்பட்ட துன்பங்களையும், துயரங்களையும் சந்திக்காமலேயே சொர்க்கம் சென்றுவிடலாம் என எண்ணுகின்றீர்களா?’ என அல்லாஹ் வினா எழுப்புகின்றான்.
இப்னு அபீ முலைக்கா(ரஹ்)அறிவித் தார்; இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் “(நிராகரிக்கும் மக்கள் இனி நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று) இறைத் தூதர்கள் நிராசையடைந்தார்கள்; மேலும், தங்களிடம் (இறையுதவி வருமென்று) பொய்யுரைக்கப்பட்டது என (நம்பிக்கை கொண்ட மக்களும் கூட) கருதலானார்கள். இந்நிலையில் நம்முடைய உதவி அவர்களுக்கு வந்தது’ எனும் (திருக்குர்ஆன் 12:110வது) வசனத்தில் (“குஃத்திபூ’ இறைத்தூதர்கள் தாம் பொய்ப்பிக்கப்பட்டு விட்டோம் என்று கரு தலானார்கள்’-என்று வாசிக்காமல்) “குஃதிபு’ (தங்களிடம் பொய்யுரைக்கப்பட்டது என மக்கள் கருதலானார்கள்)’ என்று வாசித்து விட்டு அவ்வசனத்திலிருந்து, “இறைத் தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்? என்று கேட்கிற அளவிற்கு அலைக் கழிக்கப்பட்டார்கள். “இதோ! அல்லாஹ்வின் உதவி நிச்சயமாக அண்மையில் இருக்கிறது’ (என அவர்களுக்குச் சமாதானம் கூறப்பட்டது) எனும் (திருக்குர்ஆன் 2:214 வது) வசனத்திற்குச் சென்று (அதனை) ஓதிக் காட்டினார்கள். (புகாரி:3399,4524,4695) இது போன்ற முன்சென்ற நபிமார்களிடமும்,
“எங்களைப் போன்ற சாதாரண ஒரு மனிதராகவே நாங்கள் உம்மைக் காண்கிறோம்”
எங்களில் மேம்போக்கான கருத்துடைய (அதாவது ஆழமாகச் சிந்திக்கத் தெரியாத) எடுத்த எடுப்பிலேயே விபரமில்லாமல் முடிவு செய்யக்கூடிய சிறு சிறு வியாபாரிகள், நெசவாளர்கள், நாவிதர்கள், செருப்புத் தைப்பவர்கள், அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள், பலவீனமானவர்கள், எளியவர்கள் போன்ற அடிமட்டத்திலுள்ள தாழ்ந்தவர்கள்தான் உம்மைப் பின்பற்று வதைக் காண்கிறோம். அத்தகையவர்களைத் தவிர வேறு யாரும் உம்மைப் பின்பற்றுவதை நாங்கள் காணவில்லை. எங்களில் பிரமுகர்களோ தலைவர்களோ உம்மைப் பின்பற்றுவதில்லை என்றுதான் நூஹ்(அலை) அவர்களிடம் ஏக இறைவனை மறுத்த பிரமுகர்கள் கூறினார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 4, பக்கம் 611615, 11:25-27, தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம் 6, பக்கம் 582, சிறு குறிப்பு 15ஆவது) மேலும், அவர்கள் “தாழ்ந்தோரே உம்மைப் பின்பற்றியிருக்கும் நிலையில், உம்மீது நாங்கள் நம்பிக்கை கொள்வோமா? என்று (நூஹ் நபியிடம்) கேட்டார்கள். (26:111)