முஸ்லிம்களின் கல்வியை பறிக்கும் பாஸிச ஆட்சியாளர்கள்
அதற்கு துணை போகும் முஸ்லிம்கள்!
அன்புள்ள சகோதர சகோதரிகளே! உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்!
சமீப காலத்தில் முஸ்லிம் பெண்கள் கல்வி கற்று உயர் பதவிகளில் அமர்வது பாஸிஸ்ட்களின் கண்களை உறுத்துகிறது. இளைஞர்களை இஸ்லாமிய பிரிவு இயக்கங்கள் மூலம் வழிகெடுத்த இவர்கள், ஹிஜாப் தடை சட்டம் மூலம் முஸ்லிம் பெண்கள் கல்வி கற்பதை தடை செய்ய முயற்சிக்கின்றனர். முஸ்லிம் பெண்கள் படித்தால் அவர்கள் தங்களின் குழந்தைகளையும் கல்வியாளர்களாகவும், சிறந்தவர் களாகவும் வளர்க்க முடியும். ஒரு பெண் படிப்பது அந்த குடும்பத்திற்கே கல்வி அளிப்பது போல் ஆகும். ஆண் உலக கல்வி கற்பது அவன் பொருளீட்டவே பயன்படுகிறது.
பாஸிஸ்ட்களின் ஹிஜாப் தடை சட்டத்தால் இஸ்லாமியர் பலர் பெண் குழந்தைகளை பள்ளிகூடத்திற்கு அனுப்பமாட்டோம் என்கின்றனர். இது அறிவுடைமை அல்ல, முன்பு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முஸ்லிம் புரோகிதர்கள் ஆங்கிலம் கற்பது ஹராம் என்று முட்டாள்தனமான தீர்ப்பை கூறினார்கள். இதனால் முஸ்லிம் சமுதாயம் கல்வியை இழந்தது. இன்றும் முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியிருக்க காரணம் இந்த தீர்ப்புதான். இது அறிவுடைய முடிவு அல்ல. ஹிஜாப் தடையினால் பெண் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பமாட்டோம் எனக் கூறி அவர்கள் கல்வியை பறிப்பது அறிவுடையவர்களின் செயல் ஆகாது. ஆங்கிலம் படிப்பது ஹராம் என்று கூறியவர்களின் செயல் ஆகும். அதனால் ஏற்பட்ட விளைவுதான் இப்போதும் ஏற்படும். பாஸிஸ்ட்களின் வெற்றிக்கு இது உதவியாகவே இருக்கும்.
இஸ்லாமியர்கள் உடனடியாக செய்ய வேண்டியது :
- தங்களுக்குள் இயக்க சண்டை போடுவதை நிறுத்த வேண்டும்.
2. ஒன்றிணைந்து மஹல்லா வாரியாக பள்ளிக் கூடங்களையும், கல்லூரிகளையும் ஆரம்பிக்க வேண்டும். தரமான கல்வி அளிக்க வேண்டும்.
3. உலக கல்வியுடன் மார்க்க கல்வியையும் அளிக்க வேண்டும்.
4. ஹிஜாப் அனுமதிக்காத பள்ளிகளை புறக்கணித்து அனுமதிக்கும் பள்ளிகளிலும் சேர்த்து படிக்க வைக்கலாம்.
5. ஆர்பாட்டம், போராட்டம் என்று அரசியல் செய்யாமல் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து சட்டரீதியான முறையில் ஹிஜாப் தடை நீக்க பாடுபட வேண்டும். அல்லாஹ் நாடினால் பலன் கிடைக்கும்.
இன்றைய பிரச்சனைக்கு தீர்வு :
முஸ்லிம்களை விட குறைவான சதவிகிதத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் கல்வி துறையிலும், மருத்துவத் துறையிலும் அதிகமாக ஈடுபட்டு பல பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்தியுள்ளனர். அதுபோல் நமது சந்ததிகளின் கல்விக்கு தடை ஏற்படாமல், பள்ளி கூடங்கள் அதிகம் கட்டி அதில் மார்க்க கல்வியுடன் கூடிய உலகக் கல்வி தருவது பலன் தரும். இதனால் விரோதிகளின் எண்ணம் முறியடிக்கப்படும்.
முஸ்லிம்களே! உங்கள் முன்னோர் செய்த கல்வி தடையை நீங்களும் உங்கள் சந்ததிகளுக்கு ஏற்படுத்தாதீர். பெண் குழந்தைகள் படிப்பதை தடுத்து விடாதீர்கள்.
தான தர்மங்களில் சிறந்தது! ஒரு முஸ்லிம் தானும் கல்வி கற்று பிறகு அதை தமது சகோதர முஸ்லிம்களுக்கு கற்றுக் கொடுப்பதே ஆகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: இப்னுமாஜா.
கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூதர்(ரழி), அபுதாவுத், திர்மிதி. இப்னு மாஜா
உங்களில் இறை நம்பிக்கையாளர்களுக்கும் கல்வி கொடுக்கப்பட்டவர்களுக்கும் பல படித்தரங்களை அல்லாஹ் உயர்த்துகிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிபவன். இறைநூல்: 58:11
இறைவன் மீது நம்பிக்கை கொண்டு கல்வி கொடுக்கப்பட்டவர்களில் என்னையும், உங்களையும் இறைவன் ஆக்குவானாக!