ரமழானின் பிந்தியது பத்து!
இப்னு ஹத்தாது
லைலத்துல் கத்ரின் சிறப்பு :
அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக, நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத் துல்கத்ர்) இரவில் இறக்கினோம். கண்ணியமிக்க இரவு எதுவென உமக்கு அறிவித்தது எது? மேலும் கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் வானவர்களும் ரூஹும்(ஜிப்ரீலும்) தம் இறைவனின் அனுமதியுடன் (அவனுடைய) கட்டளை ஒவ்வொன்றையும் செயல்படுத்துவதற்காக இறங்குகின்றனர். (அந்த இரவு முழுக்க) சாந்தி (பொழிந்த வண்ணமிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை நீடிக்கும்!’ (அல்குர்ஆன் 97:1-5)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“யார் ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ! அவர்(அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!”
இதை அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி: பாகம் 2, ஹதீத்:2014)
லைலத்துல் கத்ர் இரவை (ரமழானின்) கடைசி ஏழு நாட்களில் தேடுதல் :
இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறியதாவது:
நபித் தோழர்களில் சிலருக்கு (ரமழானின்) கடைசி ஏழு நாட்களில் வந்த) கனவில் லைலத்துல் கத்ர்(இரவு) காட்டப்பட்டது; அப்போது, நபி(ஸல்) அவர்கள் “உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாட்களில் (லைலத்துல் கத்ரைக் கண்ட விஷயத்தில்) ஒத்து அமைந்திருப்பதை நான் காண்கிறேன்! இப்னு ஹத்தாது
ஆகவே, அதைத் தேடுபவர், (ரமழானின்) கடைசி ஏழு நாட்களில் அதைத் தேடட்டும்!” என்று கூறினார்கள். (புகாரி: பாகம்2, ஹதீத் 2015)
அபூ ஸயீத்(ரழி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமழானின் நடுப்பத்தில் இஃதிகாஃப் இருந் தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தி னார்கள். (அவ்வுரையில்) “எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது; பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே, நீங்கள் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதைத் தேடுங்கள்! நான் (லைலத்துல் கத்ரில்) ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்வது போல் (கனவு) கண்டேன்! ஆகவே, யார் என்னோடு இஃதி காஃப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும்!” என்றார்கள். நாங்கள் திரும்ப சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகப் பொதியைக் கூட அப்போது நாங்கள் காண வில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந்தது. அதனால், பள்ளிவாசலின் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அந்தக் கூரை பேரீச்சை மட்டையினால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் நபி(ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்யும் நிலையில் நான் கண்டேன். அவர்களின் நெற்றியில் களிமண்ணின் அடையாளத்தை நான் பார்த்தேன். (புகாரி, பாகம்: 2, ஹதீத் 2016)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!” இதை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, பாகம்:2, ஹதீத்: 2017)
அபூ ஸயீத் அல் குத்ரீ(ரழி) அவர்கள் கூறியதாவது :
நபி(ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில் இஃதி காஃப் இருப்பார்கள்; இருபதாம் இரவு கழிந்து மாலையாகி, இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்பு வார்கள்; அவர்களுடன் இஃதிகாஃப் இருந்த வர்களும் திரும்புவார்கள். இவ்வழக்கப்படி நபி(ஸல்) அவர்கள் ஒரு மாதம், எந்த இரவில் இல்லம் திரும்புவார்களோ, அந்த இரவில் தங்கி மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹ் நாடிய விஷயங்களை அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். பின்னர் “நான் இந்தப் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தேன்; பிறகு கடைசி பத்து நாட்களில் இஃதி காஃப் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது; எனவே என்னுடன் இஃதி காஃப் இருந்தவர்கள் இருந்த இடத்திலேயே தங்கியிருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்குக் காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது;
எனவே கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடுங்கள்! (அந்த நாட்களிலுள்ள ஒவ்வொரு ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடுங்கள்! நான் ஈரமான களிமண்ணில் (அந்த இரவில்) ஸஜ்தா செய்வது போல் (கனவு) கண்டேன்! எனக் குறிப்பிட்டார்கள். அந்த இரவில் வானம் இரைச்சலுடன் மழை பொழிய பள்ளிவாசல் கூரையிலிருந்து) நபி(ஸல்) அவர்கள் தொழும் இடத்தில் (மழை நீர்) சொட்டி யது. இருபத்தொன்றாம் இரவில் நடந்த இதை நான் என் கண்களால் பார்த்தேன்! மேலும், நபி(ஸல்) அவர்கள் தமது முகத்தில் ஈரமான களிமண் நிறைந்திருக்க ஸுப்ஹு தொழுது விட்டுத் திரும்புவதையும் நான் கண்டேன். (புகாரி, பாகம்:3, ஹதீத்: 2018)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“(லைலத்துல் கத்ரை) தேடுங்கள்!” இதை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, பாகம்:2, ஹதீத்: 2019)
ஆயிஷா(ரழி) அவர்கள் கூறியதாவது :
நபி(ஸல்) அவர்கள் ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்” எனக் கூறுவார்கள். (புகாரி, பாகம்:2, ஹதீத்:2020)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்!” லைலத்துல் கத்ரை இருபத்தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடுங்கள்!’ இதை இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, பாகம்:2, ஹதீத்:2021)
உபைதா பின் ஸாமித்(ரழி) அவர்கள் கூறியதாவது:
லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் புறப் பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்கள், “லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன்; அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர்; எனவே, அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டு விட்டது! அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்! எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இரு பத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்!’ எனக் கூறினார்கள். (புகாரி, பாகம்:2, ஹதீத்: 2023)
ஆயிஷா(ரழி) அவர்கள் கூறியதாவது:
(ரமழானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்து விட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள்! (புகாரி, பாகம்:2, ஹதீத்: 2024)
லைலத்துல் கத்ர் துஆ:
அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ.
பொருள்: யா அல்லாஹ்! நிச்சயமாக நீயே மன்னிப்பவன். மன்னிப்பை விரும்புகிறவன். எனவே என்னை மன்னித்தருள்வாயாக!
மேலே எழுதப்பட்டுள்ள குர்ஆன் வசனம் மற்றும் ஹதீத்களிலிருந்து ஆயிரம் மாதங்களைவிட சிறப்புக்குரிய லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புகளும், அந்த இரவை அடைந்து கொள்வதற்காக முஸ்லிம்கள் பாடுபடவேண்டும் என்பதும், அதுவும் சிறப்பாக பிந்திய பத்தில் அதிலும் ஒற்றைப்படை இரவுகளில் அந்த இரவை அடைந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்று ஆர்வமூட்டப் பெற்றுள்ளது. ரமழானின் பிந்திய பத்தில் இஃதிகாப் இருந்து லைலத்துல் கத்ர் இரவை அடைய ஆர்வமூட்டப்பட்டிருக்கிறது. அதில் எப்படி துஆ கேட்க வேண்டும் என்றும் கற்றுத்தரப்பட்டுள்ளது.
குர்ஆன் ஹதீத்படி நடப்பவர்கள் கண்டிப்பாக நபி(ஸல்) அவர் கள் செய்து காட்டிய அல்லது செய்யச் சொன்ன, அல்லது நபி தோழர்கள் செய்ததைப் பார்த்து அங்கீகரித்த செயல்களை மட்டுமே மார்க்கமாக எடுத்துச் செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதிலும் எவ்வித சந்தேகமுமில்லை. அந்த அடிப்படையில் பாங்குக்கு முன்னால் சொல்லப்படும் ஸலவாத் “பித்அத்’ என்கிறோம். கடமையான தொழுகைக்குப் பிறகு கூட்டாக துஆ பிரார்த்தனை செய்வது “பித்அத்’ என்கிறோம். ரமழான் இரவுகளில் தொழும் இரவுத் தொழுகையை (தராவீஹ்) 20+3 தொழுதால் அது பித்அத் என்கிறோம். இப்படி நபி(ஸல்) அவர் கள் காட்டித் தராத எந்த அமலையும் செய் வத “பித்அத்’ என்றே கூறி வருகிறோம். இதற்கக் காரணம் நபி(ஸல்) அவர்கள் தெள்ளத் தெளிவாக “நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யார் அதில் புகுத்துகிறாரோ அது மறுக்கப்பட வேண்டிய ஒன்று’ என்று ஆணித் தரமாக அறிவித்து இருக்கிறார்கள். (ஆயிஷா (ரழி), புகாரி)
இந்த எச்சரிக்கையை சிரம் மேற்கொண்டு செயல்படுவதாகத் தம்பட்டம் அடிக்கும் தெளஹீத்வாதிகள் என்று பறைசாற்றிக் கொள்ளும் சகோதரர்களும் தங்களை அறியாமலேயே நபி(ஸல்) காட்டித் தராத சில, பல செயல்பாடுகளை செய்து வருகிறார்கள். அது மட்டுமல்ல; தங்களது வாதத் திறமையால் அவற்றை நியாயப்படுத்தவும் செய்கின்றனர். இவ்வாறு செய்வது கொண்டு அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்களே அல்லாமல் உண்மை விசுவாசிகளையும், அல்லாஹ்வையும் அவர்கள் ஏமாற்ற முடியாது. (பார்க்க. 2:9)
அந்த வரிசையில் ரமழானின் பிந்திய பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் மார்க்கப் பிரசாரகரர்களைக் கொண்டு விமரிசையாக மார்க்க உபதேசங்களைச் செய்து வருகிறார்கள். மார்க்கம் தெரியா மக்களுக்கு மார்க்கத்தைத் தானே போதிக்கிறோம் என்றுதங்களின் இந்தச் செயலை நியாயப்படுத்துகின்றனர்.
மற்றபடி பாங்குக்கு முன்னால் சொல்லப்படும் ஸலவாத் தொழுகைக்குப் பின்னால் கூட்டாக ஓதப்படும் துஆ, ரமழானின் இரவுகளில் தொழப்படும் 20+3 ரகாஅத்துகள் இவையனைத்தும் “பித்அத்’ என்பதற்கு அவர்கள் கொண்டிருக்கும் அளவுகோல் இங்கே காற்றில் பறக்கவிடப்படுகிறது. மத்ஹபுவாதிகள் செய்யும் பித்அத்கள் விஷயத்தில் மிகமிகக் கடுமை காட்டும்-வானத்திற்கும், பூமிக்கும் குதிக்கும் இந்த தவ்ஹீத்வாதிகள் தாங்கள் செய்யம் பித்அத்களை உணராதிருப்பது தான் வேதனையான விஷயம்.
ரமழானின் பிந்திய பத்தின் ஒற்றைப் படை இரவுகளின் தனித்தனியாக நின்று வணங்கி, திக்ர் செய்து, குர்ஆன் ஓதி துஆ செய்து லைலத்துல் கத்ர் இரவை அடைந்து கொள்ள நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்திருக்கிறார்களே அல்லாமல், பயான் செய்து காட்டித்தந்தார்களா? என்று இவர்கள் பார்ப்பதில்லை. நபி(ஸல்) அவர்கள் ரமழான் இரவுகளில் இப்படி தொடர் பயான்களையோ, அல்லது ஒற்றைப்படை இரவுகளில் தொடர்ந்து பயான் செய்திருக்கிறார்களா? என்று ஆதாரங்களைத் தேடினால் ஆதாரம் பூஜ்ஜியம்தான். ஆனால் “லைலத்துல் கத்ர்” இரவை அடையும் முயற்சி பற்றி புகாரி 2016 ஹதீதில் 20ம் நாள் காலையில் உரை நிகழ்த்தியதாகவும் 2018 ஹதீதில் “எந்த இரவில் இல்லம் திரும்புவார்களோ அந்த இரவில் தங்கி மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்; அல்லாஹ் நாடிய விஷயங்களை அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்” என்றே காணப்படுகிறது. மற்றபடி பிந்திய பத்திலோ அல்லது பிந்திய ஒற்றைப்படை இரவுகளிலோ மக்களுக்கு மார்க்க உபதேசம் செய்ததாக எந்த ஆதாரமும் இல்லை.
இப்போது இந்த தவ்ஹீத்வாதிகள் சிந்திக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத ஒரு “அமலை’ நாமாகச் செய்தால் அதன் நிலை என்ன? மத்ஹப்வாதிகள் செய்தால் தான் அது நிராகரிக்கப்படும்; தவ்ஹீத் வாதிகளாகிய நாங்கள் செய்தால் அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்வான் என்று யூதர்கள் சொன்னது போல் சொல்லப் போகிறார்களா? அல்லது நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத அனைத்துச் செயல்களும் “பித்அத்களே’ என்று விளங்கி ஒதுங்கப் போகிறார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
ரமழான் பிந்திய பத்தின் ஒற்றைப் படை இரவுகளில் தான் மக்கள் அதிகமாகக் கூடுகிறார்கள். அவர்களிடையே மார்க்கப் பிரசாரம் செய்ய நல்லதொரு அரிய வாய்ப்புக் கிடைக்கிறது என்று கூறியும் தங்களின் இந்த பித்அத்தான செயலை நியாயப்படுத்த முடியாது. இவர்கள் இப்படி சாக்குப் போக்குச் சொல்லி தங்களின் இந்த பித்அத்தான செயலை நியாயப்படுத்த முற்பட்டால், அவர்கள் அறிந்து கொள்ளட்டும், அதேபோல் மத்ஹபுவாதி கள் தங்களின் 20+3 ரகாஅத் இரவுத் தொழுகையை நியாயப்படுத்த இவர்களை விட பல மடங்கு நியாயம் உள்ளவர்களாக ஆகிவிடுகிறார்கள். ரமழான் இரவுகளில் நின்று வணங்குவது விரும்பி வரவேற்க வேண் டிய வியம். (பார்க்க. புகாரி பாகம் 2, ஹதீத் 2014) ரமழான் இரவுகளில் மார்க்கப் பிரசாரம் செய்வது விரும்பி வரவேற்கப்படுவதாக ஒரு ஹதீதையும் பார்க்க முடியாது. ஆனால் மத்ஹபுவாதிகள் நபி(ஸல்) காட்டித்தராத 20+3 ரகாஅத்துகளை ஸுன்னத்-நபிவழி என்று பொய்யாகக் கூறி மக்களைக் கூட்டாக -ஜமாஅத்தாக தொழச் சொல்லுவதையே
பித்அத் என்கிறோம்; கண்டிக்கிறோம். காரணம்:
“உண்மையை எளிதாக்குங்கள்; சிரமப்படுத்திவிடாதீர்கள்; நல்லதைக் கூறுங்கள்; சலிப்படைந்து வெருண்டோடும்படி செய்து விடாதீர்கள்” என்பது நபி(ஸல்) அவர்களின் கடுமையான எச்சரிக்கை. (அனஸ்(ரழி), புகாரி)
தொழுகையில்தான் மக்கள் சலிப்படைவார்கள்; பயானில் மக்கள் சலிப்படைய மாட்டார்கள் என்று இவர்கள் சப்பைக் கட்டுக் கட்டலாம். அதற்கும் மறுப்பு இருக் கிறது.
இதோ பாருங்கள்:
இப்னு மஸ்வூத்(ரழி) அவர்கள் வியாழக்கிழமை தோறும் எங்களுக்கு உரை நிகழ்த்தி விடுவார்கள். அப்போது அவர்களிடம் ஒருவர் “அபூ அப்துர்ரஹ்மான் அவர்களே! தினமும் நீங்கள் எங்களுக்கு உரை நிகழ்த்துவதை நான் விரும்புகிறேன்” என்று கூறினார். அதற்கு இப்னு மஸ்வூத்(ரழி) அவர்கள்:
“அறிந்து கொள்ளுங்கள்! உங்களை நான் (தினமும் உரை நிகழ்த்தி) சலிப்படையச் செய்திடுவேனோ” என நான் அஞ்சுவது தான் இவ்வாறு செய்ய என்னைத் தடுக்கிறது. நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு சலிப்படைவதை அஞ்சியே சந்தர்ப்பம் அறிந்து உரை நிகழ்த்துவார்கள். இது போலவே நானும் சந்தர்ப்பம் அறிந்து உங்களுக்கு உரை நிகழ்த்துகிறேன்” என்று கூறினார்கள். அபூவாயில் இப்னு ஸலமா. (புகாரி, முஸ்லிம், அஹ்மது)
இந்த ஹதீத் மார்க்க உரையை மக்கள் விரும்பித் தினசரி செய்யச் சொன்னாலும் நபி (ஸல்) அவர்களின் நடைமுறையைப் பேணி நடப்பவர்கள் ஒருபோதும் அதை ஏற்க முடியாது. அது “பித்அத்’ என்ற நவீன செயலே என்பதை உணர்த்துகிறது.
இதுபோல் தவ்ஹீத் சகோதரர்கள் “பித்அத்களை’ மிகக் கடுமையாகக் கண்டித்துக் கொண்டே இவர்களும் தனித்தனிப் பிரிவு, ரமழான் ஒற்றைப்படை தொடர் பயான் போன்ற பித்அத்களை ஆர்வமாகச் செய்யக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள். இந்த புனித ரமழானில் தங்களின் குறை நிறைகளை அலசி ஆராய்ந்து நபி(ஸல்) அவர்கள் 73 பிரிவுகளில் சுவர்க்கம் செல்லும் ஒரே பிரிவு எப்படி நடந்து கொள்வார்கள் என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்களோ – அதாவது நபி(ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் ஒரே ஒரு ஒன்றுபட்ட ஜமாஅத்தாக இருந்தபோது, மார்க்க விஷயத்தில் அவர்களிடம் காணப்பட்ட விஷயங்களை மட்டும் மார்க்கமாகவும் அவர்களிடம் காணப்படாத விஷயங்கள் இவர்களுக்கு எவ்வளவு அழகாக இவர்களது அறிவில் பட்டாலும் அவற்றை நிராகரித்து மார்க்கத்தில் நபி(ஸல்) அவர்களால் காட்டித் தரப்பட்டவற்றை மட்டும் செய்து ஈடேற்றம் பெற வேண்டுகிறோம்.
*****************************************************************************************************************************************************************************
படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் இறைநூலை!
ஷரஹ் அலி
உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்.
(படைத்த) அந்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள்புரியட்டும்.
அந்த ஒரே இறைவனின் பெயரால்…
சான்றுகளும், எச்சரிக்கைகளும் நம்பிக்கை கொள்ளாத கூட்டத்திற்கு பயன் அளிக்காது. இறைநூலைப் படித்தவர்கள், படிப்பவர்கள் நேர்வழி பெறுவார்கள் என்று சொல்வதெல்லாம் உண்மையா?
இவ்வாறு யாரேனும் கேள்வி கேட்டால் இதற்கு சரியான பதில் நம்மிடத் தில் இருக்கிறதா?..?..?
ஆனால்… இக்கேள்விக்கான பதில் இறைநூலில் தெளிவாக இருக்கிறது.
சத்தியத்தை தெரிந்து கொள்ள வேண்டும், அதையறிந்து அடுத்த கணமே, பிறர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற தேட்டத்தில் தேசம் தேசமாக வலம் வருபவர்கள் இருக்கிறார்கள். சத்தியத்தைத் தெரிந்திருந்தும் அதை அலட்சியப்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.
இந்த இரு சாராரில் நாம் எந்த வகையினரின் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்?
சத்தியத்தை தெரிந்து கொள்ளும் போது தயங்காமல் ஏற்றுக் கொள்பவர்களாக நாம் இருக்க வேண்டும். அதை அழகிய முறையில் நம்பிக்கை கொள்பவர்களாக மாற வேண்டும். உண்மை யைத் தெரிந்து கொண்ட பின் உதாசீனப் படுத்தாமல் உறுதியாக, உண்மையாக நம்பிக்கைக் கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருந்தால் தான் இறைநூல் வசனங்கள் நமக்கு நல்ல முறையில் பயனளிக்கும்.
இதோ இறைநூல் கூறுவதை பாருங்கள்:
அறிவுரை கூறுவீராக! இந்த (இறை நூல்) அறிவுரை உண்மையான இறை நம்பிக்கையாளருக்குத் தான் பயன் தரும். (இறைநூல் 51:55)
இவை மனிதர்களுக்குத் தெளிவான சான்றுகள், உறுதியாக நம்பும் சமுதாயத்திற்கு நேர்வழியும் அருளும் ஆகும். (இறைநூல் 45:20)
வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை சிந்தியுங்கள் என்று கூறுவீராக! சான்றுகளும், எச்சரிக்கைகளும், நம்பிக்கை கொள்ளாத கூட்டத்துக்கு பயனளிக்காது. (இறைநூல் 10:101)
காட்டித் தரப்பட்டவற்றை மட்டும் செய்து ஈடேற்றம் பெற வேண்டுகிறோம்.