ஷைத்தானின் சபதம்!

in 2022 மே

ஷைத்தானின் சபதம்!

– அபூ மலிக்

நமது ஆதிபிதா ஆதம்(அலை) அவர்களைப் படைத்து, அவரை வானவர் சபையில் கண்ணியப்படுத்தியது மட்டுமல்லாமல், அனைவரும் அவருக்கு ஸுஜூது செய்ய வேண்டும் என்று இறைவன் கட்டளையிட்டபோது அனைவரும் அதற்குக் கட்டுப்பட்டு ஆதம்(அலை) முன்னால் மண்டியிட இப்லீஸ் மட்டும் அசையாது நின்று கொண்டிருந்தான். தன்னை விடவும் பலவீனமானதொரு படைப்பின் முன்னால் சிரம் பணிய அவனது அகந்தை இடம் கொடுக்கவில்லை. இறைவனின் நேரடிக் கட்டளையையே மறுக்கும் அளவுக்கு ஆண வம் அவனது அறிவுக் கண்ணை மறைத்து விட்டது.

விளைவு :

இறைவனால் சபிக்கப்பட்டு, சிறுமை பெற்றதொரு மாபாவியாக அவன் துரத்தி யடிக்கப்பட்டான். தனது சிறுமைக்குக் காரணமாக அமைந்த ஆதமையும், அவரது சந்த திகளையும் வேரோடு கருவறுக்க வேண்டு மென்ற வைராக்கியம் அவனுக்குள் மிகைக்க…

தனது சபதத்தை இறைவனிடம் முன் வைத்து, ஆதமின் குடும்பத்தைப் பழி வாங்கத் தனக்கு அவகாசம் தருமாறு இறைவனிடன் அவன் இறுதியாக ஒரு விண்ணப்பத்தை முன்வைத்தான். சில நிபந்தனைகள் சகிதம் இப்லீஸுக்கு அவகாசம் அளிக்கச் சம் மதித்த நீதி மிக்க இறைவன் அதற்கென்று அவனுக்குச் சில வசதிகளையும் செய்து கொடுத்தான்.

இப்லீஸின் அந்தச் சபதத்தின் பின் விளைவாகவே இன்று இன்னல் மிக்க இந்த உலகில் நாமெல்லாம் பல சோதனை களோடு போராடிக் கொண்டு வாழ்கி றோம். இப்லீஸின் சபதம் என்னவென்பதை யும், அதற்கு இறைவன் விதித்த வரம்புகள் என்னவென்பதையும் பின்வரும் திருமறை ஆதாரங்கள் வாயிலாக அழகாகப் புரியலாம்.

ஆதாரம் 1 :

“அவ்வாறாயின் நீ இதிலிருந்து வெளி யேறிவிடு. நிச்சயமாக நீ விரட்டப்பட்டு விட்டாய், தீர்ப்பு நாள் வரை என் சாபம் உன்மீது நிச்சயமாக நிலைத்திருக்கும்” என்று இறைவன் கூறினான்.

அதற்கவன் (ஷைத்தான்), “என் இறைவனே! (மரணித்தவர்கள்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடு” என்றான்.

“நிச்சயமாக உனக்கு அவகாசம் அளிக் கப்பட்டு விட்டது, குறிப்பிட்ட அந்நாள் வரை” என்று இறைவன் கூறினான். அதற்கு (ஷைத்தான்), “”உன் மகத்துவத்தின் மீது சத்தியமாக (மனிதர்கள்) அனைவரையும் (நான்) வழிகெடுத்து விடுவேன். அவர்களில் பரிசுத்த மனதுடைய உன் அடியார்களைத் தவிர என்று கூறினான்.”

அதற்கு இறைவன், “நான் உண்மையே கூறுபவன். உண்மை என்னவென்றால், உன் னையும் உன்னைப் பின்பற்றிய அனைவரை யும் கொண்டு நரகத்தை நிரப்புவேன்” என்றான். (அல்குர்ஆன் 38:77-85)

ஆதாரம் 2 :

என் இறைவனே! என்னை நீ வழி கெடுத்ததன் காரணமாக பூமியிலுள்ள வற்றை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் அனைவரையும் நான் வழிகெடுப் பேன். எனினும், அவர்களில் கலப்பற்ற உள்ளம் கொண்ட உன் அடியார்களைத் தவிர, என்று (ஷைத்தான்) கூறினான்.

அதற்கு (இறைவன்) “அதுதான் என்னி டம் (வருவதற்குரிய) நேரான வழியாகும். எனது (நல்ல) அடியார்களிடம் நிச்சயமாக உனக்கு ஒரு செல்வாக்கும் இருக்காது. வழி கேட்டில் உன்னைப் பின்பற்றியவர்களைத் தவிர (உங்கள்) அனைவருக்கும் வாக்களிக்கப்பட்ட இடம் நிச்சயமாக நரகம்தான்” என்று கூறினான். (அல்குர்ஆன் 15:38-43)

ஆதாரம் 3 :

“என்னை விட நீ கெளரவப்படுத்தி இருப்பது இவரைத்தான் என்பதை நீ கவனித்தாயா? என்னை மறுமை நாள் வரை நீ பிற்படுத்தி வைத்தால் வெகு சிலரைத் தவிர இவரது சந்ததிகள் அனைவரையும் நான் வேரறுத்து விடுவேன்”. என்று (ஷைத்தான் இறைவனிடம்) கூறினான்.

(அதற்கு இறைவன்) “நீ போய்விடு, அவரது சந்ததிகளில் உன்னைப் பின்பற்றிய வர்களுக்கும் (உனக்கும்) முற்றிலும் தகுதி யான கூலி நிச்சயமாக நரகம்தான்” என்றும், “உனக்குச் சாத்தியமான அளவு கூச்சல் போட்டு அவர்களை நீ தூண்டிவிடு, உன் குதிரைப் படைகளையும், காலாட்படை களையும் அவர்கள் மீது ஏவி விடு. அவர் களது பொருளிலும், சந்ததியிலும் நீ கூட் டாக இருந்து கொண்டு அவர்களுக்கு (நயத் தையும், பயத்தையும் காட்டி) வாக்களித் துக் கொள்” என்றும் கூறினான். எனினும், ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதெல் லாம் ஏமாற்றமே தவிர வேறில்லை.

“நிச்சயமாக எனது (தூய) அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை” (என்றும் இறைவன் கூறினான்) (அந்த நல்ல டியார்களைப்) பொறுப்பேற்றுக் கொள்ள உமது இறைவனே போதுமானவன்.  (அல்குர்ஆன் 17:62-65)

ஆதாரம் 4 :

அந்த ஷைத்தானை அல்லாஹ் கோபித்து சபித்தான். அதற்கவன்  “உன் அடியர்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நிச்சயமாக நான் எடுத்துக் கொள்வேன்” என்று கூறினான்.

மேலும், “நிச்சயமாக நான் அவர்களை வழிகெடுப்பேன். அவர்களுக்கு வீண் நம்பிக்கைகளை உண்டுபண்ணி ஆடு, மாடுகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். அல்லாஹ்வின் படைப்பினங்(களின் கோலங்)களை மாற்றும்படியாகவும் நிச்சயமாக நான் அவர் களை ஏவுவேன்.” (என்றும் ஷைத்தான் கூறினான்). (அல்குர்ஆன் 4:118-119)

ஆதாரம் 5 :

“நீ என்னை பங்கப்படுத்தியதால், (ஆதமுடைய சந்ததிகளாகி) அவர்கள் உன் நேரான வழியில் செல்லாது (அதில் குறுக்கே) உட்கார்ந்து கொள்வேன். பிறகு அவர்களுக்கு முன்னும், பின்னும் அவர்களின் வலப்புறமும், இடப்புறமும் அவர் களிடம் நிச்சயமாக வந்து (வழிகெடுத்துக்) கொண்டே இருப்பேன். இதனால், அவர்களில் பெரும்பாலானோரை (உனக்கு) நன்றி செலுத்துபவர்களாக நீ காண மாட்டாய்” என்று (இப்லீஸ் இறைவனிடம்) கூறினான்.

(அதற்கு இறைவன்) “நீ நிந்திக்கப்பட்ட வனாகவும், விரட்டப்பட்டவனாகவும் இதிலிருந்து வெளியேறிவிடு. நிச்சயமாக (உன் னையும்) உன்னைப் பின்பற்றியவர்க(ளோடு சேர்த்து) உங்கள் அனைவரையும் கொண்டு நரகத்தை நிரப்புவேன்”. என்று கூறினான். (அல்குர்ஆன் 7:16-18)

இப்லீஸ் சபதமிட்ட இந்த ஒரே சம்ப வத்தைத் திரும்பத் திரும்பப் பல இடங்களில் பல்வேறுபட்ட வார்த்தை வடிவங் களில் இறைவன் தன் திருமறையில் சொல் லிக் காட்ட வேண்டிய தேவை என்ன?

காரணம் இல்லாமலில்லை…

தனது சபதத்தின் போது இப்லீஸ் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்குப் பின் னாலும் பாரதூரமான அர்த்தங்களும், திட் டங்களும் உள்ளன. அவனது சபதத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் ஒரு முஸ்லிம் கூர்ந்து கவனிக்க வேண்டியது அத்தியாவசி யம். அப்படிக் கவனித்தால் மட்டுமே இவ் வுலகில் நம்மை நாசம் செய்ய இப்லீஸ் மேற் கொள்ளும் தந்திரோபாயங்களின் அடிப் படைகளைச் சரியாக இனம் காணலாம்.

இதற்காகத் தான் இப்லீஸின் சபதத்தை இறைவன் தன் திருமறையில் பல இடங்களில் திரும்பத் திரும்பச் சொல்லிக் காட்டி யுள்ளான். எனவே, அவற்றைச் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டியது நமது கடமை. ஒரு திருமறை வசனத்தில் குறிப்பிடப்பட்ட பிரகாரம், “”ஆதமின் மக்கள் அனைவரை யும் வழிகெடுப்பேன்” என்று இப்லீஸ் சபதம் செய்கிறான்.

என்னென்ன வழிகளில் நம்மை வழிகெடுக்க இப்லீஸ் வருவான்?

அதையும் இன்னொரு திருமறை வசனத்தில், “அவர்கள் உனது நேரான வழி யில் செல்லாது (குறுக்கே) உட்கார்ந்து கொள்வேன். பிறகு, அவர்களுக்கு முன் னும், பின்னும் அவர்களின் வலப்புறமும், இடப்புறமும் அவர்களிடம் நிச்சயமாக வந்து கொண்டே இருப்பேன்”. என்று அவனே சொல்லிக் காட்டுகிறான். சுருங்கக் கூறினால், நான்கு திசைகளிலிருந்தும் நம்மை வழிகெடுக்க அவன் ஓயாது வந்து கொண்டே இருப்பான். அவனது திடீர்த் தாக்குதல்களுக்கு முடிவே இருக்காது.

எந்த அடிப்படையில் அவன் மனிதரை வழி கெடுப்பான்?

அதையும் அவனே இன்னொரு திரு மறை வசனத்தில், “பூமியிலுள்ளவற்றை (சுக போகங்களை) அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் அனைவரையும் வழி கெடுப்பேன்” என்று சொல்லிக் காட்டுகிறான்.

அதாவது சுவர்க்கத்தின் மீதான ஆசைக்குப் பதிலாக உலக மோகத்தை நமக்குள் ஏற் படுத்துவதன் மூலமே அவனது வழிகேட் டின் வாசலே ஆரம்பிக்கிறது என்பதை இங்கு தெளிவாகப் புரியலாம். இவ்வாறு நமக்குள் உலக மோகத்தை மிகைக்கச் செய்து வழிகெடுப்பதன் மூலம் இப்லீஸ் எதிர்பார்க்கும் இறுதி விளைவு என்ன?

அதையும் வேறொரு திருமறை வசனத்தில்,””வெகு சிலரைத் தவிர இவரது சந்ததி கள் அனைவரையும் நான் வேரறுப்பேன்” என்று அவனே சொல்லிக் காட்டுகிறான்.

அதாவது, இவ்வுலகின் அற்ப வாழ்வை நமக்கு அழகாகக் காண்பித்து, இங்கு நீண்ட காலம் சுகபோகங்களோடு வாழவேண்டும் எனும் லட்சியத்தை நமக்குள் ஏற்படுத்தி, அந்த லட்சியத்துக்காகவே சதாவும் உழைக் கும் இயந்திரங்களாக நம்மை மாற்றிய பிறகு நம்மை ஈருலகிலும் வேரோடு கரு வறுப்பது இப்லீஸுக்கு சுலபம் என்ப தையே இவ்வசனம் குறிக்கிறது.

நம்மை ஈருலகிலும் வேரறுக்கும் இந்த இறுதி விளைவை அடைவதற்கு வசதியாக ஆதமின் மக்களை அவன் என்னவாக மாற்றுவான்?

அதையும் அவனே இன்னொரு திரு மறை வசனத்தில், “உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நிச்சயமாக நான் எடுத்துக் கொள்வேன்.” என்று சொல்லிக் காட்டுகிறான்.

“எடுத்துக் கொள்வேன்” என்றால் என்ன?

அல்லாஹ்வின் அடிமைகளாக இவ்வுல கில் பிறக்கும் மனிதப் பிறவிகளை, அல்லாஹ்விடமிருந்து மெல்லப் பிரித் தெடுத்துத் தனது சொந்த அடிமைகளாக மாற்றித் தனது கைப்பாவைகளாக வைத்துத் தேவை தீரும் வரை அவர்களை ஆட்டுவித்த பிறகு, இறுதியில் தானே அவர்களைப் படு குழியில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கும் ஒரு குரூரம் மிக்க விளையாட்டையே இப்லீஸ் இங்கு குறிப்பிடுகிறான்.

இப்படி உலக மோகத்தை வைத்து வழி கெடுக்கப்பட்டு இப்லீஸின் அடிமைகளாக மாறும் மனிதர்களிடம் வெளிப்படும் பிரதான அடையாளம் என்ன?

அதையும் இன்னொரு திருமறை வச னத்தில், “இதனால், அவர்களில் பெரும் பாலானோரை (உனக்கு) நன்றி செலுத்துப வர்களாக நீ காணமாட்டாய்”. என்று அவனே கூறிக் காட்டுகிறான்.

திட்டம் புரிந்ததா?

ஒரு மனிதன் எந்தப் பக்கம் திரும்பி னாலும், அந்தப் பக்கமிருந்து இவ்வுலகின் சுகபோகங்கள் அவனை ஈர்க்கும். அதன் பால் ஈர்க்கப்பட்டு அவன் அதை நெருங்க நெருங்க, அவனுக்குள் மெல்ல மெல்ல உலக மோகம் வியாபிக்கத் தொடங்கும்.

அந்த உலக மோகம் ஒரு கட்டத்தைத் தாண்டி வளரும்போது, அந்த மனிதன் தனது சுய கட்டுப்பாட்டை இழந்து, தனது உண்மையான எஜமானாகிய அல்லாஹ் வின் வரம்புகளைக் கடந்து, இப்லீஸை எஜ மானாகக் கொண்ட சாம்ராஜ்ஜியத்தினுள் பிரவேசித்து விடுவான்.

அதன் பிறகு அவனைத் தனது ராஜ்ஜி யத்தின் குடிமகனாக உள்வாங்கிக் கொள் ளும் இப்லீஸ், மீன் தொட்டிக்குள் ஒரு மீனைப் போட்டு வேடிக்கை பார்ப்பது போல், இவ்வுலக மோகம் எனும் தொட் டிக்குள் அம்மனிதனை மூழ்கடித்து, அத னுள் வைத்தே அவனை மூடி விடுவான்.

அதன் பிறகு அம்மனிதன் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் பானம் என்று சகலதுமே உலக மோகம் எனும் அந்தத் தொட்டியின் நீராகவே மாறிவிடும்.

நீருக்குள் மூழ்கடிக்கப்படும் ஒரு மனிதன் மூச்சு முட்டி, இறுதியில் செத்துப் போவதைப் போல், உலக மோகம் எனும் மீன் தொட்டிக்குள் மூழ்கடிக்கப்படும் அந்த மனிதனது ஈமானும் மெல்ல மெல்ல மூச்சு முட்டி இறுதியில் ஒரு கட்டத்தில் செத்துப் போய்விடும். அத்தோடு கதை முடிந்து விடும்.

ஸ     இப்லீஸின் இந்தச் சதித் திட்டத்தின் எந்தக் கட்டத்தில் நான் தற்போது உள் ளேன்?
ஸ     உலக மோகம் எனும் போதையில் எவ்வ ளவு தூரம் நான் மூழ்கியுள்ளேன்?
ஸ     அல்லாஹ்வின் வரம்புகளைக் கடந்து விட்டேனா?
ஸ     இப்லீஸின் சாம்ராஜ்ஜியத்தினுள் பிர வேசித்து விட்டேனா?
ஸ     இப்லீஸின் மீன் தொட்டிக்குள் அடை பட்டு விட்டேனா?
ஸ     தொட்டிக்குள் சுவாசிக்க முடியாமல் எனது ஈமான் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறதா?
ஸ     இதில் எந்தக் கட்டத்தில் நான் தற்போது உள்ளேன்?

நம்மில் ஒவ்வொருவரும் நம்மை நாமே கேட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டிய கேள்விகள் இவை.

இந்தக் கேள்விகளுக்குச் சுற்றி வளைத்துப் பதில்களைத் தேடுவதை விட இப்லீ ஸின் திட்டத்தில் எந்தக் கட்டத்தில் நாம் உள்ளோம் என்பதை இலகுவாகக் கண்ட றிய ஒரு சுயபரிசோதனை உண்டு. அந்தச் சுயபரிசோதனை என்னவென்பதையும் மேற்கண்ட திருமறை வசனமே சுட்டிக் காட்டி விட்டது.

நன்றியுணர்வு :

ஆம், ஒரு மனிதன் தனது இறைவனுக்கு எந்த அளவுக்கு நன்றி செலுத்துகிறான் என் பதை வைத்தே அவன் உலக மோகத்திலும், ஷைத்தானின் சதி வலையிலும் சிக்கியுள் ளானா, இல்லையா என்பதை இலகுவாகக் கண்டறியலாம்.

உண்மையான ஒரு முஃமின் தனது வாழ்வின் எந்த நிலையிலும் தன்னைப் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்த மறக்க மாட்டான். நமது ஈமானில் கோளா றுகள் ஏற்பட்டு, இப்லீஸின் அடிமையாக நாம் மாறத் தொடங்கும் போதே நம்மைப் படைத்தவனுக்கு நன்றி செலுத்தும் வழக்கம் நம்மிடம் இல்லாது போகத் தொடங்கும்.
இதை நானாகச் சொல்லவில்லை, பின் வரும் ஹதீத் வாயிலாகவே இதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆதாரம் :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இரவில் தமது பாதங்களை (வீங்கி) வெடிக்கும் அளவுக்கு (நெடுநேரம்) நின்று வணங்குவார்கள்.

(அதைப் பார்த்து) நான், “அல்லாஹ்வின் தூதரே, உங்களது முன், பின் பாவங் கள் அனைத்தையும் ஏற்கனவே அல்லாஹ் மன்னித்திருக்கும்போது ஏன் இப்படி நீங் கள் செய்ய வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அன்னார், (அல்லாஹ்வுக்கு) நன்றி யுள்ள ஓர் அடியானாக நான் இருக்க ஆசைப்படக் கூடாதா? என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி), நூல்: புகாரி 4837

வெளிப்பார்வைக்கு இந்த ஹதீத் ஒரு சிறு படிப்பினையைச் சொல்வது போலவே பலருக்கும் தோன்றும். ஆனால், இப்லீஸின் சபதத்தோடு இதை வைத்து ஒப்பிட்டுப் பார்க்கும்போது தான் இந்த ஹதீதின் உண் மையான கருத்தாழம் புரியும். உண்மையான ஒரு முஃமின் இப்லீஸுக்குக் கொடுக்கும் மாபெரும் செருப்படி என்ன தெரியுமா?
அல்லாஹ்வுக்கு அடிக்கடி நன்றி செலுத்துவது தான் அந்தச் செயல்…

ஏனெனில், மனிதரை வழிகெடுப்பேனென்று அல்லாஹ்விடம் சபதமிட்டபோது இப்லீஸ் சொன்ன முன்னறிவிப்பு, தனது வழிகேட்டின் விளைவாக மனிதரில் பெரும் பாலோர்”இறைவனுக்கு நன்றி கெட்டவர்களாக மாறிவிடுவார்கள்”. என்பதுதான். இறைவனுக்கு சவால் விட்ட இப்லீஸின் இந்த முன்னறிவிப்பைப் பொய்ப்பித்து, அவனைத் தோற்கடித்து, இறைவனுக்கு எப்போதும் நன்றி செலுத்தி, இறைவனது உள்ளத்தைக் குளிர்விப்பவனே உண்மையான முஃமின்.

அப்பேற்பட்ட ஒரு முஃமினாக இருக்கவே நபி(ஸல்) அவர்கள் எப்போதும் முயற்சித்தார்கள். அந்த முயற்சியையே மேலுள்ள ஹதீத் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது.

இப்போது நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி :

இன்பமோ, துன்பமோ, லாபமோ, நஷ்டமோ, யோகமோ, துரோகமோ, எது வாக இருந்தாலும் அனைத்திலும் இறைவன் நமக்கு ஏதோ ஒரு நன்மையை நிச்சயம் வைத்திருப்பான் என்று அடிமனதில் நம்பி, இறைவன் நமக்குத் தந்துள்ள எண்ணற்ற அருட்கொடைகளுக்காக அவனுக்கு எப்போதும் நன்றி செலுத்தும் ஒரு முஃமினாக நான் உள்ளேனா?
அல்லது, இறைவன் இதுவரை நமக்குத் தந்திருக்கும் எந்த அருட்கொடைகளுக்கும் நன்றி செலுத்தாமல், நமக்கு அவன் தாராத வற்றைப் பற்றி மட்டுமே சதாவும் புலம்பும் நன்றிகெட்ட இப்லீஸின் அடிமையாக நான் உள்ளேனா?

பதிலை நம் மனசாட்சியே நம்மிடம் சொல்லும் :

உலக மோகத்தை ஒரு சாதாரண வி­யமாக ஒருபோதும் கருத வேண்டாம். ஒரு மனிதனுக்குள் அளவு கடக்கும் உலக மோகமே இறுதியில் அவனை இறைவ னுக்கு நன்றிகெட்ட இப்லீஸின் அடிமையாக மாற்றி விடும். இதையும் நானாகச் சொல்லவில்லை, அல்லாஹ்வே பின்வரு மாறு கூறிக் காட்டுகிறான்.

நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாகவே இருக்கின்றான். அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான். இன்னும், நிச்சயமாக அவன் (உலகின்) பொருட்களை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான். (அல்குர்ஆன் 100:6-8)

இதன் நிறைகள் அனைத்தும் அல்லாஹ்வைச் சாரும், குறைகள் அனைத்தும் என்னையே சாரும். அல்லாஹ்வே அனைத்தும் அறிந்தவன்.

Previous post:

Next post: