திருக்குர்ஆனை விளங்கி படிக்க வேண்டாமா?
ஷாஹுல் ஹமீது
நபி(ஸல்) அவர்கள் இறுதி (ஹஜ்) யாத்திரையின் போது பேசிய குத்பா உரையின் முக்கிய குறிப்பு :
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: “நான் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன்; அதை என் உம்மத்தாகிய நீங்கள் பற்றிப் பிடித்துக் கொண்டீர்களேயானால் நீங்கள் எப்போதும் வழிதவறி செல்லமாட்டீர்கள்; அது குர்ஆன் மற்றும் என் சுன்னத் தான வழிமுறைகள்’. அல்முஅத்தா, பாகம் 46, எண்3.
இந்த ஹதீதில் நபி(ஸல்) அவர்கள் முதலில் திருக்குர்ஆனை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்கள். அதன் கருத்து என்னவென்றால் திருமறையில் கூறியுள்ளபடி நம் வாழ்வில் நடந்தால் எவரும் வழிதவறிச் செல்லமாட்டீர்கள் என்று குறிப்பிடுகின்றார்கள். அதற்கு நாம் முதலில் திருக்குர்ஆனை விளங்கி கொள்ள வேண்டியது அவசியமாகும். இதற்கு மாறாக நாம் விளங்காமல் அல்லது விளங்க முயற்சிக்காமல் விட்டுவிட்டால் கண்டிப்பாக வழிதவறி விடுவோம் (அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக) என்பதில் ஐயமில்லை.
இம் மேற்குறிப்பிட்டுள்ள ஹதீதின்படி நடக்க முயன்றால் நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தை கடைப்பிடித்த நன்மையும் நமக்கு கிடைத்துவிடும்.
குர்ஆன் என்றால் என்ன?
நாம் குர்ஆனைப் படிப்பதற்குமுன் முதலில் “குர்ஆன்’ என்ற சொல்லுக்கு பொருள் விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
“குர்ஆன்’ என்றால் “ஓதுதல்’ என்று பொருள்; “ஓதுதல்’ என்ற தமிழ்ச்சொல் “படித்தல்’, “வாசித்தல்’ என்ற சொற்களிலிருந்து சிறிதளவு வித்தியாசப்படுகிறது. அதாவது “வாசித்தல்’ என்றால் விளங்காமல் படிப்பது, (நம்மில் சிலர் குர்ஆனை விளங்காமல்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் வருந்த வேண்டிய விஷயமாகும்)
அடுத்து “படித்தல்’ என்றால் விளங்கி படிப்பது; ஆனால் “ஓதுதல்’ என்றால் விளங்கி படித்து அதன்படி நடத்தல் என்று பொருளாகும். ஆகையால் “குர்ஆன்’ என்பதற்கு “ஓதுதல்’ என்று குறிப்பிடுகிறார்கள்.
நபி(ஸல்) அவர்களுக்கு முதன்முதலில் “வஹி’ இறங்கியபோது கூறப்பட்ட வார்த்தை ஓதுவீராக! என்பதாகும். திருமறையில் 96:1-5 பார்க்கவும். திருமறையை விளங்கி தான் படிக்க வேண்டும் என்று அல்லாஹ்வே மறையில் குறிப்பிட்டுள்ளான்.
“மனிதர்கள்’ அறிவுரை பெறுவதற்காக நிச்சயமாக நாம் இக்குர்ஆனை மிகவும் எளிதாக்கி வைத்திருக்கின்றோம். ஆகவே அறிவுரை பெறுவோர் எவரும் உண்டா?
திருக்குர்ஆன் 54:17,22,32,40
ஒரே அத்தியாயத்தில் நான்கு முறை வலியுறுத்திக் கூறியுள்ளான். அதேபோல் மற்றும் ஓர் அத்தியாயத்தில் அல்லாஹ் நம்மை பார்த்துக் கேட்கிறான்! “இத்திருமறையைப் பற்றி சிந்திக்க வேண்டாமா? (ஆராய்ந்துப் பார்க்க வேண்டாமா?) உங்களுடைய இருதயங்கள் தாழிடப்பட்டுள்ளதா?’ திருக்குர்ஆன் 47:24
அல்லாஹ் நமக்கு அறிவையும், சிந்தித்து செயல்படக்கூடிய திறமையையும் தந்துள்ளான். அதை நாம் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டாமா? என்று நம்மை கேட்கிறான்.
இந்த திருக்குர்ஆனை நாம் விளங்கிப் படிக்காமல் எப்படி மார்க்க நெறிப்படி இவ்வுலகில் வாழமுடியும்?
திருக்குர்ஆன் ஓதுவதின் பயன்கள் :
இந்த திருமறையை ஓதுவதினால் நாம் நேரான பாதையை விளங்கி கொள்ள முடியும் என்று அல்லாஹ் தன் மறையில் குறிப்பிட்டு உள்ளான். “நிச்சயமாக’ இந்தக் குர்ஆன், (மனிதர்களுக்கு) நேரான வழியை அறிவிக்கின்றது. திருக்குர்ஆன் 17:9
உங்கள் வீடுகளில், குடும்பத்தினர்களுக்கு திருகுர்ஆனை விளக்கி கற்றுக் கொடுங்கள் என்றும் இறைவன் கட்டளையிட்டுள்ளான். “உங்கள் வீடுகளில்’ ஓதப்பெறும் அல்லாஹ்வுடைய வசனங்களை நினைவில் வையுங்கள். (அவற்றைக் கொண்டு நல்லுணர்ச்சி பெறுங்கள்). திருக்குர்ஆன் 33:34
நம் குடும்பத்தினர்களுக்கு விளக்கி சொல்லிக் கொடுப்பதால் நாம் அனைவரும் நேரான வழியை அடைவோம். அல்லாஹ்வுடைய பொருத்தம் நமக்கு கிடைக்கும்.
நாம் திருமறையை அதிகமாக ஓதுவதினால் நம் மனதில் எழுகின்ற, தவறான எண்ணங்கள் பொறாமை, பாசாங்கு, கர்வம் மிகுந்திருத்தல், மனக்குரோதம் போன்ற தீய குணங்களை நீக்கக்கூடிய ஆற்றல் உள்ளது என்று இறைவன் தன் திருமறையில் தெள்ளத் தெளிவாக கூறியுள்ளான்.
“மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அறிவுரை உங்களிடம் திண்ணமாக வந்திருக்கிறது; இது இதயங்களில் உள்ள நோய்களைக் குணப்படுத்தக் கூடிய தாகவும், தன்னை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களுக்கு வழிகாட்டக் கூடியதாகவும், ஓர் அருட்கொடையாகவும் திகழ்கின்றது’ திருக்குர்ஆன் 10:57
நாம் திருமறையை ஓதுவதினால் நம்முடைய நம்பிக்கை அதிகரிக்கும் நமக்கு இறைவன் மேல் உறுதி அதிகரிக்கும்போது நம்மில் உள்ள தவறுகள் குறைவதற்கு வழி வகுக்கிறது. அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான். “…மேலும், அவனுடைய வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பட்டால் அவர்களுடைய நம்பிக்கை அதிகமாகிவிடும். மேலும், அவர்கள் தங்களுடைய இறைவனையே முழுவதும் சார்ந்திருப்பார்கள்’. திருக்குர்ஆன் 8:2
நாம் அனைவரும் திருமறையை விளங்கி படித்து நன்மைகளை அதிகரிக்க முயற்சி செய்யவேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் மறுமையில் இறைவனிடம் அவர்களின் உம்மத் இத்திருக்குர்ஆனை அலட்சியப்படுத்திவிட்டார்கள் என்று சாட்சி கூறுவார்கள் என்று திருமறையில் இறைவன் கூறிக் காண்பிக்கிறான்.
“மேலும், இறைத்தூதர் கூறுவார்: “என் இறைவா! என் சமூகத்தைச் சார்ந்த மக்கள் இந்த குர்ஆனை நகைப்புக்குரியதாக்கிக் கொண்டிருந்தார்கள். திருக்குர்ஆன் 25:30
இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ள மனிதர்கள் எத்தகையவர்கள் என்றால் இத்திருமறையை விளங்கி படிக்காமல் இவ்வசனங்களை நடைமுறைப்படுத்தாமல் இருப்பவர்களைக் குறிக்கின்றது. இதுபோன்ற மனிதர்களிடம் சென்று இத்திருவசனங்களை நடைமுறைப்படுத்த கூடாதா? என்று கேட்டால் இவர்கள் சொல்லும் ஒரே பதில், “இந்த காலத்திற்கு இதெல்லாம் முடியாத காரியம்’ என்று கூறுவார்கள். இறைவன் தான் நம் சமூகத்தை காப்பாற்ற வேண்டும்.
நாம் வாழும் இன்றைய சூழ்நிலையில் பலவிதமான குழப்பங்களும், குழப்பவாதிகளும் மலிந்துவிட்டனர்.
இத்தகைய குழப்பங்களும், குழப்பவாதி களும் ஒன்றும் அறியாத அப்பாவி மக்களை தவறான பாதையில் வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறார்கள். இத்தகைய அபாய கரமான நிலையில் நாம் வழிதவறாமல் நேரான பாதையில் நடக்கவேண்டுமென்றால் இத்திருகுர்ஆன் என்ற கையிற்றை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நபி(ஸல்) அவர்கள் சொன்னது போன்று நீங்கள் ஒருபோதும் வழிதவறிச் செல்லமாட்டீர்கள்.
“(நபியே!) நாம் மனிதர்கள் அனைவருக்காகவும் சத்தியத்துடனான இந்த நெறி நூலை உம்மீது இறக்கியிருக்கின்றோம். இனி யாரேனும் நேரிய வழியில் நடந்தால் அது அவருக்கே நன்மை தரும்.
யாரேனும் வழி தவறினால், வழி தவறிய தன் தீய விளைவு அவரையே சாரும். நீர் அவர்களுக்குப் பொறுப்பாளர் அல்லர்’ திருக்குர்ஆன் 39:41
“சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்!’ திருக்குர்ஆன்: 17:81