நபிவழி நடந்தால் நரகமில்லை!
அஹமது இப்ராஹிம்
எழுதப் படிக்கத் தெரியாத உம்மி சமுதாயம் என்பது உலக மாந்தரை நேர்வழிக்கு இட்டுச் சென்ற சத்திய ஸஹாபாக்களேயாவர்.
அவன்தான், எழுத்தறிவில்லாத மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக் காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும்படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான். அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். (அல்குர்ஆன் : 62:2)
தற்போதைய முஸ்லிம்கள் முகல்லிதுகள் எனப்படும் (ஆலிம்களையும், மூதாதையர்களையும் கண்மூடிப் பின்பற்றும்) அப்பாவிகளாவர்.
என்னதான் அப்பாவிகள் என்றாலும், நேர்வழி தவறினால் அதற்கான கூலி நரகமே.
ஏனெனில் அப்பாவிகளிலேயே மிகவும் அப்பாவி நபி(ஸல்) அவர்களின் தந்தையான அப்துல்லாஹ் அவர்களே. ஆனாலும் அவர் தங்களின் தலைவர்களான தாருந்நத்வா என்ற ஜமாஅத்துல் உலமா சபை ஆலிம்களையும், தங்களுடைய பெரியார்களையும், மூதாதையர்களையும் கண்மூடிப் பின்பற்றிய காரணத்தினால் நபி(ஸல்) அவர்களின் தந்தையான அப்துல்லாஹ் அவர்கள் நற்பண்புள்ளவராக இருந்திருந்தும் நரகத்திற்கு உரியவரானார். ஆதாரம் : கீழே.
அனஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது :
ஒரு மனிதர் (நபி(ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “நரக நெருப்பில்’ என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்றபோது அவரை நபி(ஸல்) அவர்கள் அழைத்து, “என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில்தான் (இருக்கிறார்கள்)’ என்று கூறினார்கள். முஸ்லிம்:347, அத்தியாயம்:1, இறை நம்பிக்கை.
எனவே எனது அன்பான இஸ்லாமிய சகோதரர்களே, சகோதரிகளே!
நரகத்திற்கு வழிகாட்டும் அனைத்து மத்ஹபுகளையும் அதுபோன்ற இஸ்லாமிய பெயர் தாங்கிய தவ்ஹீது இயக்க பிரிவுகளையும், இதுபோன்ற இஸ்லாமிய பெயர் தாங்கிய பிரிவு இயக்கங்களையும் விட்டு நீங்கி எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு சூட்டிய பெயரான அல்முஸ்லிமீன் (ஆதாரம்:அல்குர்ஆன் 22:78) என்ற பெயரிலேயே ஒரே அமீரின் கீழ் ஒரே ஜமாஅத்தாக ஒன்றிணைந்து அல்குர்ஆன் மற்றும் நபிவழியின் அடிப்படையில் ஒரே சமுதாயமாக செயல்படுவோமேயானால் நமது ஆதரவு இல்லாமல் மத்திய மாநில ஆட்சியில் எக்கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது.
எனவே அந்த மாதிரியான அல்முஸ்லிமீன் என்ற ஒரே ஜமாஅத்தாக செயல்பட்டு இம்மை மறுமை வெற்றியைப் பெற தங்களனைவரையும் அன்போடு அழைக்கின்றேன். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அத்தகைய பாக்கியத்தை தந்தருள் புரிவானாக. ஆமீன்.