இஸ்லாமிய மார்க்கத்தில் ஒற்றுமை…
அஹ்மத் இப்ராஹீம், புளியங்குடி.
இஸ்லாமிய சமுதாய ஒற்றுமை பற்றி பேசாத எந்த இயக்கமும் இல்லை. இதை வலியுறுத்திப் பேசாத எந்த ஜும்ஆ மேடையுமில்லை. ஆனால் உண்மையான ஒற்றுமை எது? எது சாத்தியம் என்பது பற்றி மட்டும் சமுதாயத் தலைவர்களும் முஸ்லிம் மதத் தலைவர்களான மத்ஹபு மற்றும் தவ்ஹீத் முல்லாக்களும் மிகச் சரியாக மறைத்து விடுவார்கள். காரணம் தங்களுடைய தொப்பையை நிரப்பும் வழி அடைக்கப்பட்டு விடும் என்ற அச்சமே.
ஒற்றுமைக்கு வழி கூறும் தலைவர்கள் எல்லோரும் வாருங்கள் ஒன்றுபடுவோம் என்கின்றனர். இவர்களைப் போல நாங்கள்தான் தூய இஸ்லாமிய மார்க்கத்தை சொல்லும் அதே நேரத்தில் சீனியாரிட்டிப்படி முந்தையவர்கள் நாங்கள். எனவே எல்லோரும் வாருங்கள் என வினரும், அதேபோல் சீனியர் தமுமுக. எனவே தமுமுகவிற்கும், அதேபோல் தமுமுகவிற்கு சீனியரான தங்கள் இயக்கத்திற்கும் இதைத்தாண்டி இ.யூ.முஸ்லிம் லீக்கினர் தவ்ஹீத் இயக்கங்களை பார்த்து நீங்களெல்லாம் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள். எனவே தாய்ச்சபையான எங்களோடு ஒன்றுபடுங்கள் என்கின்றனர்.
மேற்கண்ட இயக்கங்கள் அனைத்துமே வழிகெடுக்கும் மனிதர்களால் உருவாக்கப்பட்டதே. இவைகளால் சமுதாயத்திற்கு கேடுகளும் ஒற்றுமையை குலைத்த குற்றமும் அதன் காரணமாக அல்லாஹ்வின் கோபம் நம்மீது இறங்கக் காரணமாகவும் ஆகிவிடுகிறது. மாற்றார்கள் பார்வையில் நமது சமுதாயம் மிகக் கீழான நிலையை அடைவதற்கு மேற்கண்ட இயக்கங்களின் தலைவர்களே காரணமானவர்.
இந்த இழிநிலை மாற சீனியாரிட்டியிலும் சீனியர்களான மனிதப் புனிதர்களான சத்திய சஹாபாக்கள் அடைந்த உயர்தரமான வாழ்க்கையை நாம் அடைவதற்கு உள்ள ஒரே வழி சஹாபாக்கள் தேர்ந்தெடுத்த பாதையான அல்குர்ஆன் மற்றும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான நபிமொழியின் அடிப்படையிலான வழியேயாகும்.
அந்த வழி எது எனப் பார்ப்போம்.
முதலாவதாக அல்குர்ஆனை எல்லோரும் ஒற்றுமையாகப் பற்றிப் பிடிப்பதுதான் அது. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித் துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள்கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள். உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் (ஆயத்களை) வசனங்களை உங்களுக்கு தெளி வாக்குகிறான். (அல்குர்ஆன் 3:103)
அடுத்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை மட்டுமே நமது முன்மாதிரியாக இருப்பதற்கு அன்னாரின் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை மட்டும் எடுத்து நடப்பது. ஏனெனில் மத்ஹபுவாதிகள் இட்டுக்கட்டப்பட்ட நபிமொழிகளை பின்பற்றுவதாலும் தவ்ஹீத்வாதிகள் தங்கள் மவ்லவிகளை அவர்களுடைய அல்குர்ஆன் மற்றும் ஹதீஃதுக்கு மாற்றமான அந்த மவ்லவிகளின் யூகங்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவது கொண்டு மாறுபடுகின்றனர். எனவே ஆதாரப்பூர்வமான நபிமொழி களையே நாம் பின்பற்றவேண்டும்.
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)
ஆக இந்த இரண்டினடிப்படையில் தான் சஹாபாக்கள் வெற்றி பெற்றனர்.
இதனடிப்படையில் நபி(ஸல்) அவர்களும் அன்னாரின் தோழர்களும் ஓர் உலகளா விய இஸ்லாமிய இயக்கத்தில் இருந்துள்ளனர். அந்த இயக்கத்திற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வே பெயர் சூட்டியுள்ளான்.
அந்தப் பெயர் அல்முஸ்லிமீன், ஆதாரம் அல்குர்ஆன் 22:78வது வசனம் அல்லாஹ் வைத்த இந்த அழகான பெயரோடு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஜமாஅத் என்பதை இணைத்து ஜமாஅத்துல் முஸ்லிமீன் (ஆதாரம் : புகாரி 3606) என்ற உலகளாவிய இஸ்லாமிய பேரியக்கத்தை உருவாக்கி நடத்திட்டுச் சென்றுள்ளனர்.
எனது அன்புச் சகோதரர்களே! சகோதரிகளே! இதைவிட வேறு ஓர் இயக்கம் வேண்டுமா? இந்த ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்ற அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக ஹனஃபி, ஷாஃபி போன்றவர்கள் பெயரால் பொய்யாக உருவான மத்ஹபுகளையும், ஜின்னா, கமாலுத்தீன் மதனி, பீ.ஜை. ஜவாஹிருல்லாஹ், தெஹ்லான், பாக்கவி போன்ற பிரிவினை இயக்கத் தலைவர்கள் உருவாக்கிய இயக்கங்களையும் பின்பற்றினால் நாளை நரகில் கீழ்க்கண்டவாறு புலம்ப நேரிடும் என எச்சரிக்கின்றோம்.
நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிப் பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார் கள். (அல்குர்ஆன் 33:66)
“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள்’ என்றும் அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 33:67)
“எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களைப் பெருஞ்சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக’ (என்பர்). (அல்குர்ஆன்33:68)
மேலும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் எச்சரிக்கையை புறக்கணித்தால் இவ்வுலகி லேயே இழிவும் ஏற்படும்.
\”எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குரு டனாகவே எழுப்புவோம்’ (அல்குர்ஆன் 20:124)
வல்ல அல்லாஹ்வின் கட்டளையை நாம் புறக்கணிப்பதால்தான் நம்முடைய சமுதாயம் ஸ்பெயினில் எப்படித் துடைத்தெறியப்பட்டதோ அவ்வாறே துடைத்தெறியப்படும் அபாயம் காவிகளால் ஏற்படும். இது நமது செயல்களால் நாமாகவே உண்டாக்கிக் கொண்ட தீமையாகும்.
மேற்கண்ட நெருக்கடியான வாழ்க்கை என்பது தற்போதுள்ள காவி அரசு மூலமாகத்தான் ஏற்படும் என்பதில் சந்தேகமுண்டா?
எனவே அன்பானவர்களே ஹனஃபி, ஷாஃபி, தவ்ஹீது இயக்கங்கள் போன்ற சமுதாய ஒற்றுமையைக் குலைக்கும் இயக்கங்களை கைகழுவிவிட்டு நபி(ஸல்) அவர்கள் உருவாக்கி நடத்திக் காட்டிச் சென்றுள்ள உலகளாவிய பேரியக்கமான ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்ற ஜமாஅத்தை பற்றிப் பிடிப்பது இம்மை மறுமை வெற்றியைப் பெற எல்லா இஸ்லாமியப் பெயர் தாங்கிய பிரிவினை இயக்கத்தினர் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். வஸ்ஸலாம்.