K.M.H. அபூ அப்தில்லாஹ்
அன்புள்ள சகோதரர்களே!
யார் சாதனையாளர் என்ற கேள்விக்குப் பலரும் பலவிதமான பதிலைத் தருவார்கள். ஒரு அரசியல்வாதியிடம் கேட்டால் அரசியலில் ஈடுபட்டு மந்திரி, முதன்மந்திரி, பிரதம மந்திரி ஆகிறவர்கள் சாதனையாளர்கள் என்பார். பல கோடிகளைத் திரட்டி வைத்திருக்கும் பெரும் செல்வந்தர் ஒருவரிடம் இதைக் கேட்டால் பணம் பண்ணுவதே சாதனை என்பார்; பெரும் படிப்புப் படித்துப் பெரும் மேதையாகத் திகழ்பவரிடம் கேட்டால் கல்வியின் மூலம் மேதையாகத் திகழ்பவரே சாத னையாளர் என்பார்; புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து மக்களிடையே பிரபல்யமானவர் பெரும் விஞ்ஞானியே சாதனை யாளர் என்பார்; இதுபோல் யார் யார் எந்தெந்த துறையிலிருந்தாலும் அது வியாபாரத் துறையாக இருந்தாலும், கல்வித் துறையாக இருந்தாலும், விஞ்ஞானத் துறையாக இருந்தாலும், நடிப்புத் துறையாக இருந்தாலும், விளையாட்டுத் துறையாக இருந்தாலும் இவை போல் எந்தத் துறையாக இருந்தாலும் அத்துறையில் மேலே வந்து மக்களிடம் அறிமுகமாகி பிரபல்யமாகி விட்டால் அவர்கள் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பெற்று விடுகிறார்கள். மக்கள் கணிப்பில் இவர்கள் தான் சாதனையாளர்கள்.
ஆனால் இப்படிப்பட்ட சாதனைகள் மனிதனுக்கு அசலான வெற்றியைத் தருமா? ஈடேற்றத்தைத் தருமா? அவன்தான் உண்மையான சாதனையாளனா? என்றால் நிச்சயமாக இல்லை என்ற பதில்தான் சரியானது. காரணம் இறைவன் மனிதனை இந்த உலகில் படைத்திருப்பது இப்படிப்பட்ட சாதனைகளை நிகழ்த்திக் காட்ட அல்ல. மனிதப் படைப்பின் அசல் நோக்கம் இவை அல்ல. பின்னர் மனிதன் ஏன் படைக்கப்பட்டிருக் கிறான். மனிதனைப் படைத்த இறைவன் ஏன் மனிதனைப் படைத்தான் என்று அவனே சொல்லுவதை அப்படியே ஏற்று நடப்பவர்களே உண்மையான சாதனையாளர்கள்.
இறைவன் ஆதி மனிதனின் படைப்பில் இருந்து காலத்திற்குக் காலம் மனிதனை மனிதனாக வாழச் செய்ய, மனித நேயத்தோடு வாழச் செய்ய தன் புறத்திலிருந்து பல இறைத் தூதர்களை அனுப்பி வைத்தான். ஆதம், நூஹ்(நோவா), இப்றாஹீம் (ஏப்ர ஹாம்), மூஸா (மோஸஸ்), ஈஸா(ஜீஸஸ்) இவர்கள் எல்லாம் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களே! இந்த இறைத் தூதர்களுக்கு முத்திரையாக இறுதித் தூதராக அனுப்பப்பட்டவர்களே முஹம்மது(ஸல்) அவர்கள். இதற்கு முன்னால் கொடுக்கப்பட்ட வேதங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இறுதியாகக் கொடுக்கப் பட்டதே இறுதி நெறிநூல் அல்குர்ஆன். அரசு அன்றிலிருந்து இன்று வரை ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டுக் கொண்டிருக்கிறது. 100 வருடங்களுக்கு முன்பு விடப்பட்டதும் அரசின் ரூபாய் நோட்டுதான். இப்போது இருப்பதும் அரசின் ரூபாய் நோட்டுதான். அன்றைய நோட்டுக்கும் இன்றைய நோட்டுக்கும் எத்தனையோ ஒற்றுமைகள் காணப்படத் தான் செய்யும். யாரிடம் காட்டினாலும் ரூபாய் நோட்டுகள் என்றுதான் சொல்வார்கள்.
ஆனால் 100 வருடங்களுக்கு முன்னர் இருந்த நோட்டை இப்போது செலவாணி பண்ண முடியுமா? முடியாது? பழங்காலத்து நோட்டு என்று பத்திரப்படுத்தலாம். நினைவுச் சின்னமாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் புழக்கத்தில் செலவாணியில் விட முடியாது. இதை நம்மில் யாருமே மறுக்க மாட்டோம். அதேபோல் 1948ல் அரசு ஒரு சட்டம் இயற்றி இருக்கும்; இன்று அந்த சட்டத்தை மாற்றி புதிய சட்டத்தை (புதுeஐdதுeஐமி) ஏற்படுத்தியிருக்கும். இப்போது அமுலில் இருப்பது புதிய சட்டமா? பழைய சட்டமா? பழைய சட்டம் செல்லாது; புதிய சட்டமே அமுலுக்குரியது என்று நாம் சட்டென பதில் சொல்லி விடுவோம்.
இப்போது நிதானமாகச் சிந்திப்போம். இவ்வுலகைப் படைத்து விண்ணைப் படைத்து, அனைத்து கோளங்களையும் படைத்து விண்ணிலும், மண்ணிலுமுள்ளஅனைத்தையும் படைத்து மனிதனையும் படைத்து ஆட்சி செய்யும் ஆட்சியாளனாகிய இறைவன் நம்மை ஆளும் ஆட்சியாளர்களுக்கெல்லாம் மாபெரும் ஆட்சியாளனாக இருக்கிறான். அந்த மாபெரும் ஆட்சியாளனுக்கு முன்னால் இவ்வுலக ஆட்சியாளர்கள் எல்லாம் கால்தூசி பெறமாட்டார்கள். அப்படியானால் சாதாரண இவ்வுலக ஆட்சியாளர்களின் மாற்றப்பட்ட சட்டங்களை (புதுeஐdதுeஐமிவி) மதித்து நடக்கும் மனிதன் ஆட்சியாளர் களுக்கெல்லாம் மாபெரும் ஆட்சியாளனாகிய இறைவனின் மாற்றப்பட்ட இறுதி நெறிநூலை புறக்கணித்து மாற்றப்பட்ட வேதங்களைத் தூக்கிப்பிடித்து நடப்பது எவ்வளவு பெரிய மாபாதகச் செயல் என்பதை மனிதர்கள் உணர வேண்டும். இறைவனால் கொடுக்கப்பட்ட முந்தைய வேதங்கள் அனைத்தும் இந்த இறுதி நெறிநூலால் மாற்றப்பட்டுவிட்டன. அவற்றை அமுல்படுத்த முடியாது. அமுல்படுத்த தகுதி பெற்ற நடைமுறைக்கான உறுதியான சட்டங்கள் இறைவனின் இறுதி நெறி நூலான அல்குர்ஆனிலேயே இருக்கின்றன.
இந்த இறுதி நெறிநூலில் அனைத்து மக்களின் இறைவன் கூறுவதைப் பாருங்கள்;
“உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும், வாழ்க்கையையும் படைத்தான்‘ (அதாவது இவ்வுலகில் மனித னைப் படைத்தான்). அல்குர்ஆன் 67:2
ஆக, மனிதனை இறைவன் இவ்வுலகில் நற்செயல்கள் செய்வதற்காகப் படைத்துள்ள தாக அறிவிக்கிறான். நற்செயல்களின் வரையறை என்ன? மனித அறிவில் நற்செயல்களாகப்படுபவை எல்லாம் நற்செயல்கள் ஆகிவிடுமா? அதுதான் இல்லை. இறைவன் எவற்றை எல்லாம் நற்செயல்கள் என்று தனது இறுதி நெறிநூலில் வரையறுத்திருக்கிறானோ அவை மட்டும் நற்செயல்கள். அவற்றில் மகா பிரதானமானது இறைவனால் படைக்கப்பட்ட மனிதன் அந்த இறைவனை மட்டுமே வணங்கவேண்டும். அவனுக்கு யாரையும், எந்த மேதையையும், எந்த மஹானையும், எந்த மூதாதையரையும் வணக்கத்திற்குரியவர்களாக ஆக்கி இணையாளர்கள் ஆக்கக் கூடாது. இச்செயலை இறைவன் ஏற்றுக்கொள்வதே இல்லை. ஒரு கணவன் தனது மனைவி தன்னிடம் எவ்வளவு அன்பாக இருந்தாலும், உயிரையே வைத்திருந்தாலும், இரவு, பகல் பணிவிடை செய்வதிலும், இன்பம் அளிப்பதிலும் அதிக அக்கறை யுடையவளாக இருந்தாலும் தனது ஆப்த நண்பனுடன் சோரம் போனால், அதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளமாட்டானோ அதேபோல் இறைவன் தனக்கு மிகவும் நெருக்கமான மஹானாக இருந்தாலும் இறைவனை விட்டு அவரை வணங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டான். அந்த இணை வைக்கும் குற்றத்தை நான் மன்னிக்கவேமாட்டேன் என்று இறைவன் தனது இறுதி வேதத்தில் தெளிவாகப் பிரகடனப்படுத்தியுள்ளான். (பார்க்க அல்குர்ஆன் 4:116)
எனவே உலகில் பிறந்து இறைத்தூதர்களாக, மஹான்களாக வாழ்ந்து மறைந்த எந்த மஹான்களையும் சிலைகளாகவோ, சமாதிகளாகவோ வேறு எந்த ரூபத்திலும் வணங்குவது கூடாது. மீறி வணங்கினால் அது இறைவனுக்கு இணை வைக்கும் மாபெரும் குற்றம். ஒரு பெண் தன் கணவன் அல்லாத பிரிதொரு ஆடவனுக்கு தனது கணவனின் ஸ்தானத்தைக் கொடுக்கும் குற்றத்தைவிட பெருங்குற்றமாகும். இதை இறைவன் மன்னிக்கவே மாட்டான். அதேபோல் உயிரோடு இருந்து கொண்டு அவர்கள் இவ்வுலக மக்கள் அனை வருக்கும் செழிப்பாக வாழ வழியமைத்துக் கொடுத்தாலும் அவர்களை வாழ வைக்கும் தெய்வம் என்றோ, நடமாடும் தெய்வம் என்றோ, கூறுவது படைத்த இறைவனைக் கோபப்படுத்தும் செயலாகும். இந்த குற்றத்தையும் இறைவன் மன்னிக்கமாட்டான்.
இப்படிப்பட்ட செயல்களை மனிதன் தன் அறிவுப்படி நற்செயல்களாகக் கருதினாலும் படைத்த இறைவன் தனது இறுதி வேதத்தில் இவை அனைத்தும் தனக்கு இணைக் கற்பிக்கும் துர்ச் செயல்கள் என்றே வரையறுத் துள்ளான். எனவே இச்செயல்களைச் செய்வோர் உலக மக்களின் பொருத்தத்தைப் பெற்றுக் கொண்டாலும், படைத்த இறைவனின் பொருத்தம் பெறவே முடியாது. ஆக மனிதனின் நற்செயல்களிலேயே மிகப் பிரதானமான நற்செயல் தன்னைப் படைத்த அந்த ஒரே இறைவனுக்கு அவனல்லாத யாரையும் எதையும் இணையாக்காமல் அவனை மட்டுமே வணங்கி வழிபடுவதாகும். அந்த இறைவனிடம் பரிந்துரைப்பவர்களாக யாரை ஆக்கிக் கொண்டாலும் அதுவும் இறைவன் நிராகரிக்கின்ற துர்ச்செயலேயாகும். (பார்க்க. அல்குர்ஆன் 10:18, 39:3)
ஆனால் கைசேதம் இன்று மனிதர்களில் மிகப் பெரும்பான்மையினர் படைத்த இறை வனின் இந்த கட்டளைக்கு மாறாக அவனால் படைக்கப்பட்டவர்களையே தெய்வமாக்கி வணங்கி வழிபட்டு இறைவனுக்கு இணை வைக்கின்றனர். ஒரு மனைவி தனது கணவனின் ஸ்தானத்தை மற்ற மனிதர்களுக்கும் கொடுத்து தன் கணவனுக்குத் துரோகம் செய்வதை விட மாபெரும் துரோகம், படைத்த இறைவனது ஸ்தானத்தில் அவனால் படைக்கப்பட்டவர்களை ஆக்கி அவர்களை வணங்கி வழிபடுவது என்பதை விளங்காதவர்களாக இருக்கின்றனர். இந்த துர்ச்செயலை விட்டு அறிவுடையோர் நிச்சயமாக விலகி இறைவனிடம் மன்னிப்புக் கேட்பார்கள். ஆக மனிதர்களில் மிகப் பெரும்பான்மையினர் நற்செயலாகக் கருதி படைத்த இறைவன் அல்லாதவர்களை வணங்கி வழிபடுவது துர்ச்செயலே அல்லாமல் நற்செயலாக படைத்த இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படாது.
இதுபோல் மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலும் நற்செயலா? அல்லது துர்ச் செயலா? என்பதை படைத்த இறைவனின் இறுதி வேதத்தில் பார்க்கவேண்டுமே அல்லாது வேறு எங்கும் பார்க்கக் கூடாது. மனிதர்களாகப் பார்த்து நற்செயல்கள் என்று கூறிக் கொள்வதும் நற்செயலாக இறைவனிடம் ஏற்கப்படாது.
மனிதனுக்கு இவ்வுலக வாழ்க்கை நிரந்தரமல்ல. பிறந்த மனிதன் இறப்பது சர்வ நிச்சயம். இறந்த மனிதன் மீண்டும் இவ்வுலகில் பிறப்பதில்லை. மறுபிறப்பு உண்டு என்பது மனிதனின் கற்பனையே அல்லாமல் படைத்த இறைவன் தனது இறுதி வேதத்தில் அவ்வாறு கூறவில்லை. கறந்த பால் எப்படி மீண்டும் மடிக்குள் நுழையாதோ, பிறந்த மனிதன் எப்படி மீண்டும் தாயின் கருவறைக்குள் நுழைய முடியாதோ அதேபோல் இறந்த மனிதன் மீண்டும் மறு பிறப்பு எடுத்து இவ்வுலகத் திற்கு வரமுடியாது. மனிதன் இவ்வுலகிற்கு ஒரு வழிப்போக்கனாக வந்துள்ளான். இங்கிருந்து சென்று விடுவான். மீண்டும் இங்கு வரமாட்டான். மனிதன் தாயின் வயிற்றில் 10 மாதம் இருந்துவிட்டு இவ்வுலகிற்கு வந்துள்ளான். மனிதனின் இவ்வுலக பிரயாணத்திற்குத் தேவையான அவனது உடல், உடல் உறுப்புக்கள் அனைத்தும் தாயின் வயிற்றிலேயே உற்பத்தியாயின. ஆனால் தாயின் வயிற்றில் இந்த மனிதனுக்கு உடலோ, உடல் உறுப்புக்களோ தேவையாக இருக்கவில்லை. கண்காது, மூக்கு, வாய், கைகள், கால்கள் மற்றும் உடல் உள், வெளி உறுப்புகள் எதுவுமே தாயின் வயிற்றில் தேவையாக இருக்கவில்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால் தாயின் வயிற்றிலிருக்கும்போது இந்த உறுப்புக்கள் அனைத்தும் மனிதனுக்கு இடஞ்சலாக, சுமையாகத் தான் இருந்தன. ஆயினும் அந்த உறுப்புக்கள் அனைத்தும் தாயின் வயிற்றில்தான் தயாராகும் கட்டாயம் இருந்தது. அந்த உறுப்புக்களில் ஏதாவதொன்றில் குறைபாடு இருந்திருக்குமானால் அது அந்த மனிதனுக்கு தாயின் வயிற்றில் எந்தச் சிரமத்தையும் கொடுத்திருக்காது. காரணம் அது அங்கு தேவைப்பட வில்லை.
ஆனால் அக்குழந்தை, இவ்வுலகிற்கு வந்த பின்னர் உடல் உறுப்புக்கள் அனைத்தும் செயல்பட ஆரம்பிக்கின்றன. அப்போது தான் உடல் உறுப்புக்கள் முறையாக சரியாக உருவாகவில்லை என்றால் இந்த உலகிற்கு வந்த பின்னர் முழு வாழ்க்கையிலும் 50,75,100 என்று எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அந்த உடல் உறுப்புக்களின் குறை பாட்டினால் ஏற்படும் சிரமத்தை அனுபவித்தே ஆகவேண்டும். பிறப்பினால் ஏற்படும் உடல் உறுப்புக்களின் குறைபாட்டை உலகில் எந்த வைத்தியனாலும் நிவர்த்தி செய்ய முடியாது. ஆக வழிப்போக்கனாக வந்த மனிதனின் இரண்டாவது தற்காலிகமாகத் தங்கும் இடமாக இவ்வுலகம் இருக்கிறது. தாயின் வயிற்றில் 10 மாதம் ஆனவுடன் எப்படி நிர்ப்பந்தமாக வெளியேற்றப்படுகிறானோ அதேபோல் அவனது இவ்வுலக வாழ்நாள் தீர்ந்து விட்டால் இங்கிருந்தும் பலவந்தமாக வெளியேற்றப்படுவான். இதை இறைவனை மறுக்கும் நாஸ்திகனும் மறுக்க முடியாது.
தாயின் வயிற்றில் மனிதன் இருப்பதற்கு தக்கதொரு காரணம் இருக்கிறது. அந்தக் காரணம் என்ன? அந்த மனிதன் இந்த உலகில் நல்ல முறையில் சிறப்பாகத் சீருடன் வாழ அவனுக்கு அத்தியாவசியத் தேவையான உடலும் அதன் உள், வெளி உறுப்புக்களும் அங்கு தான் தாயின் வயிற்றில்தான் உருவாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த தயாரிப்பில் நிறைவு இருந்தால் நிறைவான இவ்வுலக வாழ்க்கை; அதில் குறை இருந்தால் இவ்வுலகில் குறைவான சிரமமான வாழ்க்கை. இதையும் நாஸ்திகனும் மறுக்கமுடியாது. இது போலவே இவ்வுலகில் மனிதன் இருப்பதற்கும் தக்கதொரு காரணம் இருக்கவே செய்கிறது. அந்த காரணத்தை மனிதன் சரியாக விளங்கிக் கொண்டால், அதன்படி நடக்க ஆரம்பித்துவிட்டால் அவன்தான் உண்மை யான சாதனையாளன் ஆவான். ஆம்! மனிதனின் ஆன்மாவின் அசலான உறுப்புக்கள் இந்த உலகில்தான் தயாராக வேண்டிய கட்டாயத்தில் மனிதன் இருக்கிறான். ஆனால் ஒரு வித்தியாசம்; தாயின் வயிற்றில் அவனது உடலும், உறுப்புக்களும் தயாராவ தற்கு அவன் காரணமுமல்ல; அதற்கு பொறுப் புதாரியுமல்ல. ஆனால் மனிதனின் ஆன்மாவின் உறுப்புக்கள் முறையாகத் தயாராவதும் அல்லது குறைகளுடன் தயாராவதும் அல்லது முற்றிலுமே தயாராகாமல் போவதும் மனிதனின் கையில்தான் இருக்கிறது. இதையே மனிதனைப் படைத்த இறைவன் தனது இறுதி வேதத்தில் “மனிதன் இவ்வுலகில் சோதனைக் காகப் படைக்கப்பட்டுள்ளான். பரீட்சை வாழ்க்கை வாழ்கிறான்‘ என்று தெளிவுபடுத்துகிறான். (பார்க்க 67:2)
பரீட்சை என்றால் என்ன? பரீட்சையை நடத்துபவர் கேட்கும் கேள்விக்கு உரிய பதிலையே எழுதவேண்டும். உதாரணமாக பரீட்சை எழுதும் ஒரு மாணவனுக்கு சரித்திரத்தில் ஒரு கேள்வி: இந்தியாவை ஆண்ட முன்னால் பாரதப் பிரதமர் சாஸ்திரியைப் பற்றி எழுது, மாணவன் கேள்வியை முழுமையாகப் படிக்கவில்லை. பாரதப் பிரதமர் என்றவுடன் நேருதான் அவனது சிந்தனையில் வந்தார். அவரது சரித்திரத்தை நன்றாகவே படித்தும் இருக்கிறான். விருவிருவென்று நேருவின் சரித்திரத்தை வரைந்து தள்ளிவிட்டான். உண்மையில் கேள்வி நேருவைப் பற்றி இருந்தால் நிச்சயம் அவனுக்கு நூற்றுக்கு நூறு புள்ளிகள் கிடைத்திருக்கும். ஆனால் கேள்வியோ சாஸ்திரியைப் பற்றி. அவனுக்கு எவ்வளவு மார்க் கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்? கேள்விக்குரிய பதிலாக இல்லை என்பதால் 0 புள்ளிதான் கிடைக்கும். அவ்வளவு பிரமாதமாக எழுதி இருக்கிறானே என்று பாஸ் மார்க் கூட கிடைக்காது. இதுதான் உண்மை.
ஆரம்பத்தில் சாதனையாளர்கள் என்று பட்டியலிட்டோமே அவர்களில் யாருமே உண்மையில் சாதனையாளர்கள் இல்லை. காரணம் அவர்களில் யாருமே கேள்விக்குரிய பதிலைத் தருபவர்களாக இல்லை. அவர்களாக ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து அதில் பாடுபட்டு முன்னுக்கு வந்து மக்களிடம் பேரும் புகழும் பெற்றிருக்கிறார்கள். அவ்வளவுதான். மற்றபடி அவர்களைப் படைத்த இறைவன் அவர்களிடம் எழுப்பியுள்ள கேள்விக்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை. இது தான் உண்மை நிலை. சரித்திரப் பாடத்தில் பாடதிட்டத்திலுள்ள இன்னொரு பாரத பிரதமரைப் பற்றி எழுதுவதையே ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், பாடத்திட்டத்தில் இல்லாத ஒன்றுக்கு விடை எழுதினால் எப்படி இருக்கும்? அதுபோல் இன்றைய பெரும்பான்மை மனிதர்கள் இறைவன் தங்களை எதற்காக இந்த உலகத்தில் படைத்திருக்கிறான் என்பதை விளங்காமல், அவர்கள் மனதில் பட்டதை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் படைத்த இறைவனிடம் வாழ்க்கைப் பரீட்சையில் வெற்றிபெற முடியுமா? சிந்தியுங்கள். ஆக மிகப் பெரும் பான்மை மக்கள் (97%) எவ்வித குறிக்கோளுமில்லாமல் வாழ்வது ஒருபுறம்; மறுபுறம் ஏதோ குறிக்கோளுடன் வாழும் அந்த சிலரும் (3%) தாங்களாக ஒரு குறிக்கோளை ஆக்கிக் கொண்டார்களே அல்லாமல் படைத்த இறைவன் இவ்வுலக வாழ்க்கையின் அசல் குறிக்கோளாகக் கொடுத்துள்ளது எது என்பதை அறியாது உழைத்துக் கொண்டிருக் கிறார்கள்.
இவ்வாறு நாம் எழுதுவதால் இவ்வுலகைத் துறந்து துறவியாகி காட்டிற்குச் சென்று இறைவனைப் பற்றிய சிந்தனையிலேயே சதா மூழ்கி விடவேண்டும் என்று நாம் சொல்லவும் இல்லை. அப்படிச் சொல்லும் அதிகாரமும் நமக்கு இல்லை. காரணம் படைத்த இறைவன் அப்படிப்பட்ட ஒரு துறவு வாழ்க்கையை இந்த மனிதனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இறைவனுக்கு விருப்பமானது முக்திதரக் கூடியது துறவு வாழ்க்கை என்றால் உண்மையில் இந்த உலகமே ஸ்தம்பித்துவிடும் ஏன்? துறவு மூலம் முக்தி பெற ஒருவர் எண்ணினால் அதே எண்ணத்தை அவரது தகப்பன் நடைமுறைப்படுத்தி இருந்தால் இவர் முக்திபெற இவ்வுலகில் பிறந்திருக்க முடியுமா?
எனவே உலகைத் துறந்து வாழும் வாழ்க்கையை இறைவன் நம்மிடமிருந்து எதிர் பார்க்கவில்லை. அப்படியானால் இறைவன் நம்மிடமிருந்து எதை எதிர்பார்க்கிறான்? எதை உண்மையான சாதனை என்கிறான்? ஆம்! இறைவன் தனது இறுதி வேதத்தில் மனிதன் இவ்வுலகில் எப்படி வாழ வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறானோ? எதை எதைச் செய்ய வேண்டும் என்று கட்டளை இட்டிருக்கிறானோ? எதை, எதைச் செய்யக் கூடாது என்று கட்டளை இட்டிருக்கிறானோ? அவனது தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமுதாய வாழ்க்கை இவை அனைத்தும் எப்படி இருக்கவேண்டும் என்று கட்டளை இட்டிருக்கிறானோ? அவை அனைத்தையும் அப்படியே அமைத்துக் கொள்வதே உண்மையில் சாதனை வாழ்க்கையாகும். இவை எவற்றிலாவது நமக்கு உடன் பாடில்லை, நமது கருத்து ஒன்றாகவும் இறைவனது கட்டளை வேறாகவும் இருக்கிறது. இந்த இடத்தில் நமது கருத்திற்கு ஏற்றவாறு இறைவனின் கட்டளைக்கு சுயவிளக்கம் கொடுப்பதோ அல்லது அதை நிராகரிப்பதோ கூடாது. இது மனோ இச்சைப்படி நடப்பதாகும். இது நற்செயலில் இடம் பெறாது. துர்ச்செயலில் இடம் பெறும். இவ்வாறு நடப்பவன் சாதனையாளனாக மாட்டான் இவ்வுலகில் பேர், புகழ் பெற்றாலும் மக்களில் பெருங் கூட்டம் அவனைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினாலும் படைத்த இறைவனது பார்வையில் இவன் தோல்வியாளனே! சாதனையாளன் அல்ல.
அழிந்து போகக் கூடிய அற்ப இவ்வுலக வாழ்க்கையை நிரந்தர மறு உலக வாழ்க்கையோடு ஒப்பிட்டால் இவ்வுலக வாழ்க்கை ஒன்றுமே இல்லை. குப்பைத் தொட்டி ஓரத்தில் 3,4 பிச்சைக்காரர்கள் நின்றுகொண்டு மண்டபத்திலிருந்து கொண்டுவந்து போடும் எச்சில் இலைக்காக நான், நீ என்று முண்டியடிப்பதை பலரும் பார்த்திருப்போம். அதிலுள்ள பலசாலி மற்றவர்களை தள்ளிவிட்டு முன்னால் போய் எச்சில் இலையிலுள்ள மிச்சப்பட்டதை எடுத்துச் சாப்பிடுவான். அவனது அகராதியில் அவன் சாதனையாளன். ஏன் என்றால் மற்றவர்களை வீழ்த்திவிட்டு தான் நினைத்ததைச் சாதித்துக் கொண்டான் அல்லவா? ஆனால் நம்முடைய பார்வையில் அவனது நிலை? பிச்சைக்காரன் தானே! இதே போல் அசலான மறு உலக வாழ்க்கையை மறந்து இவ்வுலகைத் தேடுவதையே முழு மூச்சாகக் கொண்டு செயல்படுகிறவனும், உண்மையான சாதனையாளர்களுடைய பார்வையில் பிச்சைக்காரனே! முன்னய பிச்சைக்காரன் முண்டியடித்து மற்றவர்களை வீழ்த்திவிட்டு எச்சில் இலைகளை நெருங்கி சாப்பிட்டுவிட்டு, எஞ்சியதை தூக்கிக் கொண்டு போகிறானா? அப்படியே தூக்கிச் சென்றாலும் இரவு வரைதான் தாக்குப் பிடிக்கும். அதன் பின்னர் தூக்கி எறிய வேண்டியதுதான். அதேபோல் இவ்வுலகே சதம் என்று இங்கு வாரிக் கொட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டு பாடுபட்டுச் சேர்த்து குவித்தவர்கள் அவர்களது வாழ்நாள் முடிந்ததும் அவற்றைத் தூக்கி எறிந்து விட்டு வெறுங்கையினராகத்தான் செல்லுகின்றனர் என்பதை உண்மையான சாதனையாளர்கள் தான் விளங்கிக் கொள்ள முடியும்.
உலகைத் தேடுவதில் ஈடுபடவேண்டும்; ஆனால் மறுமையைப் பாழ்படுத்திக் கொண்டு, படைத்த இறைவனின் கட்டளைகளுக்கு மாறாக உலகைத் தேட முற்படக்கூடாது. உலக வாழ்க்கையில் மற்றவர்களிடம் தேவை இல்லாமல் இருக்க, ஏழை எளியவர் களுக்கு கொடுத்து உபகாரம் செய்ய, ஒரு கண்ணிய மான வாழ்க்கை வாழத் தேவை யானதை ஆகுமான வழியில் தேடிக்கொள்வதும் இறைவன் நம்மீது விதித்துள்ள கட்டளையே. அதையும் நிறைவேற்றியே தீரவேண்டும்.
இவ்வுலக வாழ்க்கையில் மனிதன் உண வுண்டு, கழிவுகளைக் கழிக்கும் கட்டாயத் திலேயே இருக்கிறான். ஒரு தனவந்தர் வீட்டில் விருந்து; இவனுக்கும் அழைப்பு உண்டு. உணவுகள் தயாரிப்பின் வாசம் கமகம என்று தெருவெல்லாம் வீசுகிறது. ஆவலுடன் விருந்துண்ண சென்றவனின் வயிற்றில் திடீரென்று கோளாறு; வயிற்றைக் கலக்கி வேட்டியோடு போய்விடும் போல் தெரிகிறது. இப்பொழுது அவனின் எண்ணமெல்லாம் அறுசுவை விருந் தில் இருக்குமா? அல்லது நாற்றமெடுக்கும் மலக் கூடத்தில் இருக்குமா? எங்கு விரைந்து செல்வான்? சிந்தியுங்கள். சரி! அப்படி மலக் கூடம் நோக்கி விரைந்து சென்றவன் அங் கேயே நாள் முழுவதும் தங்கி விடுவானா? நிச்சயமாக இல்லை. போன வேலை முடிந்தவுடன் திரும்பி விடுவான். ஆம்! உண்மையான சாதனையாளனின் இவ்வுலக வாழ்க்கை முயற்சி இவ்வாறு தான் இருக்கும். இவ்வுல கத் தேவைகளின் அவசியம் கருதி படைத்த இறைவனின் கட்டளையின் அவசியத்தை உணர்ந்து தனக்காகவும், தனது குடும்பத்திற்காகவும், தான தர்மத்திற்காகவும் இவ்வுலகச் செல் வங்களை தேடத்தான் செய்வான். அதே சமயம் இவ்வுலக செல்வங்களைத் தேடுவது காரணமாக அசலான தனது மறு உலக வாழ்க் கைக்குத் தேவையான அதாவது தனது ஆன் மாவின் உறுப்புக்களைச் செவ்வனே உருவாக்குவதில் சிறிதும் குறைவு செய்யமாட்டான். எப்படி தாயின் வயிற்றிலிருக்கும் போது உடல் உறுப்புக்களின் குறைபாடு தெரியாதிருந்து இவ்வுலகில் பிறந்தவுடன் தெரிய வருகிறதோ, அதே போல் ஆன்மாவின் உறுப்புக்கள் இவ்வுலகில் தயாராவதில் குறைபாடிருந் தாலும் இங்கு தெரியாது; ஆனால் மரணத்திற்குப் பின் நிச்சயம் தெரிய வரும் என்பதை தனது தெளிவான சிந்தனையில் கொண்டு சுதாரிப்பாகச் செயல்படுவான்.
ஆக வழிப்போக்கனான மனிதன் தனது அசலான நிரந்தரமான இடத்திற்குச் செல்லும் வழியில் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்; போகும் இடத்தை மறந்து, நடை பாதையான இவ்வுலக வாழ்க்கையில் சாதிப்பதைப் பெரிய சாதனையாகக் கொண்டால் அது சாதனையே அல்ல; மாறாக தான் யார்? எங்கிருந்து வந்தோம்? எங்கே போகப் போகி றோம்? தனது இறுதி இருப்பிடம் எது? தன்னைப் படைத்தவன் யார்? தன்னை ஏன் படைத்திருக்கிறான்! படைத்த இறைவன் தன்னிடமிருந்து எதை எதிர்பார்க்கிறான்? அவனது கட்டளைகள் என்ன? ஏவல்கள் என்ன? விலக்கல்கள் என்ன? இவை அனைத் தையும் முறையாக ஒழுங்காகச் சிந்தித்து அதனடிப்படையில் இவனாக ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்காமல், தன்னைப் படைத்தவன் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழக் கட்டளை இட்டிருக்கிறானோ அந்த வாழ்க்கையை அவனது இறுதி வேதமான அல்குர்ஆனிலிருந்தும், அந்த குர்ஆன்படி வாழ்ந்து காட்டிய இறைவனது இறுதித் தூதர் அவர்களின் வாழ்க்கை முறைகளிலிருந்து ஆய்ந்தறிந்து அதன்படி வாழ்ந்து மரிப்பவனே உண்மையான சாதனையாளன். மற்றபடி இவ்வுலக மக்கள் சாதனையாளர்களாகக் கணிப்பவர்கள் அனைவரும் உண்மையான சாதனையாளர்கள் அல்லர் என்பதை உணர்வோமாக. படைத்த இறைவனது சந்நிதானத்தில் உண்மையான சாதனையாளர்களாக ஆக முழு முயற்சிகள் செய்வோமாக.