புரோகிதத்திற்குக் கூலி நரகமே!
அபூ அப்தில்லாஹ்
மறு பதிப்பு :
எமது பிரசாரத்தின் ஆரம்பத்திலிருந்தே மார்க்கத்தைப் பிழைப்பாக ஆக்கிக் கொண்ட ஹஜ்ரத்(?)களை, மவ்லவிகளை, லெப்பைகளை மிகக் கடுமையாகச் சாடி வருவதாக எம்மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஏதோ சொந்தக் காரணங் கொண்டு அல்லது பொறாமையினால் அவர்களை நாம் வெறுப்பதாகப் பரவலாகப் பேசிக் கொள்கின்றனர். செய்திகள் பரப்பி வருகின்றனர். அல்லாஹ் பாதுகாப்பானாக. அவர்கள் மீது எமக்குச் சொந்த வெறுப்போ, பொறாமையோ அணுவத்தனையும் இல்லை. ஒரு காலத்தில் நாமும் மற்றவர்களைப் போல் அவர்கள் மீது அளவு கடந்த மரியாதை, பக்தி வைத்திருந்தோம் என்பது தான் உண்மையாகும்.
புரோகிதக் கொடுமை :
ஆனால் குர்ஆன், ஹதீத் வெளிச்சத்தில் அந்த இடைத்தரகர்களான புரோகிதர்கள் செய்து வரும் கொடுமையின் அளவை, மக்களை கொஞ்சமும் பொறுப்பில்லாமல் தங்களின் அற்ப சுயநலங்களுக்காக வழிகெடுக்கும் பாங்கை தெளிவாக அறிந்து கொண்ட பின்னரே, அவர்களை அடையாளம் காட்டத் துணிந்தோம். அதுவும் அவர்களிடமே நேரிடையாக குர்ஆன், ஹதீத் ஆதாரங்களைக் கொண்டு எச்சரித்தும் அவர்கள் தங்களின் தவறான போக்கை மாற்றிக்கொள்ள முன்வராததாலேயே மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கத் துணிந்தோம்.
புரோகிதர்கள் செய்துவரும் கொடுமைகளின் அளவை மக்கள் இன்னும் உணரவில்லை. காரணம் இதுவரை யாரும் அதனை உணர்த்தவில்லை. அதை உணர்த்துவதாக இருந்தாலும் அந்த மவ்லவிகள் தானே உணர்த்த வேண்டும். பொதுமக்களுக்குத்தான் குர்ஆன், ஹதீதை நேரடியாகத் திறந்து பார்க்கும் தைரியமில்லையே. அந்த அளவு பொதுமக்களை ஏமாற்றி வைத் திருக்கிறார்களே. தங்களின் வண்டவாளங்களை மக்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகத்தானே மக்களை குர்ஆன், ஹதீதின் பக்கம் நெருங்கவிடாமல் தடுத்து வைத்துள்ளனர். இந்த நிலையில் தங்களின் கொடூர முகத்தை, தங்களின் அட்டூழியங்களை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் உபதேசம் செய்வதற்கு அவர்கள் பைத்தியக்காரர்களா? விபரம் புரியாதவர்களா? ஏமாளிகளா?
எனவே மார்க்கத்தைப் பிழைப்பாக ஆக்கிக் கொள்வதில் கெடுதிகள் பற்றியும், அது பற்றிய கடுமையான தடைகளையும் அவர்கள் மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்ப தில்லை. ஆயினும் அதைவிடக் குறைவாகவே கண்டிக்கப்பட்டிருக்கும் பன்றிக்கறி, அநாதைகளின் சொத்து, வட்டி, மற்றும் தடுக்கப்பட்டவற்றை சொல்லியிருப்பதைக் காட்டிலும் கடுமையாகவே எச்சரிக்கின் றனர். உபதேசம் செய்கின்றனர். இவை எல்லாம் இந்த மவ்லவிகளின் கண்ணில் படும்போது மார்க்கத்தைப் பிழைப்பாக ஆக்கிக் கொள்வது பற்றி எச்சரிக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கைகள் அவர்களின் கண்ணில் எப்படிப் படாமல் இருக்க முடியும்?
மிகக் கொடிய ஒரு விசயத்தை, மிகக் கடுமையான ஹராமை இந்த மவ்லவிகள் தங்களின் அற்ப உலக வாழ்வின் நலன் கருதி மக்களுக்குத் தெரிவுபடுத்துவதில்லை. உண்மையில் குர்ஆன், ஹதீத் வெளிச்சத்தில் ஆராயும்போது மார்க்கத்தைக் கொண்டு சாப்பிடுவதை விடக் கொடிய ஹராம் இருப்பதாகத் தெரியவில்லை. அதைப் புள்ளி விபரங்களுடன் பொது மக்களுக்குத் தெளிவுபடுத்துவதே இந்த ஆக்கத்தின் நோக்கமாகும்.
அல்குர்ஆனில் தடை செய்யப்பட்டவை:
அல்குர்ஆனிலும், ஹதீதிலும் தடை செய்யப்பட்ட விசயங்களை வரிசையாகப் பார்ப்போம். பன்றிக்கறி (அனைத்து உறுப்புக்களும் உட்பட) உண்பதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை 2:173, 5:3, 6:145, 16:115 ஆகிய நான்கு இடங்களில் பார்க்கலாம். இதிலும் குறிப்பாகப் பன்றிக் கறி பற்றி மட்டும் சொல்லப்படாமல் செத்தது, இரத்தம் போன்றவற்றோடு இதனையும் கூறி, அதிலும் பாவம் செய்யும் நோக்கமில்லாமல் நிர்பந்தத்தால் புசித்துவிட்டால் குற்ற மில்லை என்றும் அல்லாஹ் சலுகையும் வழங்கியுள்ளான். ஆனால் இந்த மவ்லவிகளோ பன்றிக்கறியை விடக் கடுமையான ஹராம் வேறொன்றும் இல்லை என்பது போல் பிரசாரம் செய்து மக்களை ஏமாற்றி வைத்துள்ளனர். கிறிஸ்தவ சமுதாயத்தோடு கடும் பகையை வளர்த்து வைத்துள்ளனர்.
பன்றிக்கறி சாப்பிடுவதை விடக் கடுமையான ஹராமாக அநாதைகளின் சொத்தை அநியாயமாகச் சாப்பிடுவதைக் குறிப்பிட்டு அல்லாஹ் எச்சரித்துள்ளான். இதனை 2:220, 4:2, 6:152, 17:34 ஆகிய இறைவாக்குகளைப் பார்த்து விளங்கிக் கொள்ளலாம். இவற்றிற்கு அடுத்து கடுமையான ஹராமாக வட்டியை அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். இதை 2:275, 276, 278, 279, 3:130, 4:161, 30:39 ஆகிய இறைவாக்குகளில் பார்க்கலாம். வட்டியை உண்பவர்கள் ஷைத்தானால் தீண்டப்பட்டு ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறு விதமாய்) எழமாட்டார்கள்; அவர்கள் நரகத்தில் என்றென்றும் தங்கிவிடுவார்கள் என்றும் அல்லாஹ் எச்சரிக்கிறான். அவர்களுக்கெதிராக அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பன்றிக்கறி என்றவுடன் முகம் சுளிப்பவர்களில் பலர், மவ்லவிகளின் இனத்தைச் சார்ந்தவர்களிலும் சிலர் வட்டியின் கடுமையை உணராமல் வட்டியைச் சாப்பிடுவதையும் அறிவோம்.
இவையல்லாமல் திருட்டு பற்றி 5:38, 12:70லும், மது, சூது பற்றி 2:219, 5:90,91லும், விபச்சாரம் பற்றி 4:15,16, 17:32, 24:33, 25:68, 60:12லும், அளத்தல் நிறுத்தல் மோசடி பற்றி 6:152, 7:85, 11:84, 17:35, 55:8,9, 83:1-4லும், கொலை செய்வது பற்றி 2:178,179, 4::92,93, 5:32, 6:140, 17:33லும் அல்லாஹ் எச்சரித்துத் தடை செய்துள்ளான்.
புரோகிதர்கள் எச்சரிக்காதது ஏன்?
இவை பற்றி எல்லாம் இந்த மவ்லவிகள் மக்களிடம் எச்சரித்துப் பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் மார்க்கத்தைப் பிழைப்பாக ஆக்கிக் கொள்வதைத் தடை செய்தும், அவ்வாறு பிழைப்பாக ஆக்கிக்கொள்வதால் எப்படி மார்க்கத்தைத் திரித்து வளைத்து மறைக்கும் நிலை ஏற்படுகிறது என்பதை யூத, கிறிஸ்தவ சமுதாயங்களை உதாரணம் காட்டி விளக்கியும், அவர்களுக்கு மறுமையில் எப்படிப்பட்ட மிகக் கடுமையான தண்டனைகள் காத்திருக்கின்றன என்பது பற்றியும், அல்லாஹ் அல்குர்ஆனில் விலாவாரியாக விளக்கி எச்சரித்திருந்தும், இவை பற்றி எல்லாம் இந்த மவ்லவிகள் பெரும்பாலும் வாயே திறப்பதில்லை. அப்படியே திறந்தாலும் இவை யூத, கிறிஸ்தவர்களுக்குரிய தண்டனைகள், முஸ்லிம்களுக்கு அல்ல என்று மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
அல்லாஹ் யூத, கிறிஸ்தவர்களுக்கு ஓர் அளவுகோலாகவும், முஸ்லிம்களுக்கு ஓர் அளவுகோலாக வும் நீதத்தில் பாகுபாடு காட்டுவது போல் நாக்கூசாமல் அல்லாஹ் பற்றி குறை கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். யூத, கிறிஸ்தவர்கள் திருடினால், விபச்சாரம் செய்தால் தண்டனையுண்டு! அதே காரியங்களை ஒரு முஸ்லிம் செய்தால் தண்டனை இல்லை என்பது போல் இந்த மவ்லவிகளின் பிரசாரம் இருந்து வருகிறது. என்னே மெளட்டீகம்! இந்த மெளட்டீகத்தை நம்பும் மக்களும் இருக்கிறார்களே? இப்படி, புரோகிதத்திற்குக் கூலி வாங்குவதின் கெடுதிகள் பற்றி இந்த மவ்லவிகள் மக்களுக்குத் தெளிவுபடுத்தாததினால் அவர்களும் இதை உணராமல் இந்தப் போலி முல்லாக்களை புரோகிதர்களை நம்பி அவர்களின் பின்னால் சென்று கொண்டிருக்கிறார்கள்.
மார்க்கத்தைப் பிழைப்பாக்குவது கூடாது:
இப்போது நாம் மார்க்கத்தைப் பிழைப்பாக ஆக்கிக் கொள்வது எவ்வளவு பெரிய ஹராம், அது எத்தனைப் பெரிய வழிகேடுகளை முஸ்லிம் சமுதாயத்தில் உண்டாக்கி வைத்திருக்கிறது என்பதை அல்குர்ஆனைக் கொண்டே ஆராய்வோம். முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்களிலிருந்து இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வரை மானிட சமுதாயத்தின் நேரிய வாழ்க்கை நெறிக்காக அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட நபிமார்கள் அனைவரும் மார்க்கப் பிரசாரத்தை அல்லாஹ்வின் பொருத்தம் நாடி, மறுமையில் கூலியை எதிர்பார்த்துப் பணிபுரியும்படி பணிக்கப்பட்டார்கள்; அது மட்டுமல்ல இது விசயத்தில் மக்களிடையே சிறிதளவுச் சந்தேகமும் வந்துவிடக் கூடாது என்பதற்காக இதனைப் பகிரங்கமாக அறிவிப்புச் செய்யக் கட்டளையிட்டான் அல்லாஹ். நபிமார்களும் இறைவனது கட்டளைக்கிணங்க இந்தப் பிரசார பணிக்குரிய கூலி அல்லாஹ்விடமே இருக்கிறது. உங்களிடம் கூலி கேட்கவில்லை என்று பகிரங்கமாகப் பறை சாற்றினார்கள்.
இதனை 6:90, 10:72, 11:29,51, 23:72, 25:57, 26:109,127,145,164,180, 34:47, 38:86, 42:23 ஆகிய 14 இறைவாக்குகளில் பார்க்கலாம்.
கூறுவீராக! “நான் உங்களிடமிருந்து யாதொரு கூலியையும் கேட்கவில்லை; அது உங்களுக்கே இருக்கட்டும்; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை. அவன் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கின்றான்‘. அல்குர்ஆன் 34:47
36:21 இறைவாக்கில் “உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின் பற்றுங்கள்; இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள்‘ என்று கூறி இருக்கிறான். இந்த இறைவாக்கி லிருந்து மார்க்கப் பிரச்சாரத்திற்கு எவர் கூலி பெறுகிறாரோ அவர் நேர்வழியிலிருந்து தவறிவிட்டார். வழிகேட்டில் சென்றுவிட்டார் என்பது தெளிவாகிறது. அது அல்லாமல் 52:40,68:46 ஆகிய இறைவாக்குகளில், நீர் அவர்களிடம் ஏதாவது கூலி கேட்டு, அவர்கள் கடன் பட்டு சுமையேற்றப்பட்டிருக்கின்றார்களா?’ என்று கேட்பதன் மூலம், மார்க்கப் பிரச்சாரத்திற் குக் கூலி கேட்பது, கொடுப்பது மக்களி டையே தேவையில்லாத சுமைகளையும், அதன் மூலம் மூட நம்பிக்கைகளையும், வழிகேட்டையும் உண்டாக்கும் என்பதை உணர்த்துகின்றது. மார்க்கப் பணிக்கு இந்த முல்லாக்கள் கூலி வாங்குவதால்தான் இன்று முஸ்லிம் சமுதாயம் வழிகேட்டின் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது என்பதில் ஐயமுண்டா?
தில்லுமுல்லுகள்:
மார்க்கப் பிரசாரத்திற்கு மக்களிடம் கூலி வாங்கக்கூடாது என்ற இறைவனது தெளிவான கட்டளைக்கு முரணாக, முந்தைய நபிமார்களின் போதனைகளை எடுத்துச் சொல்வதாக நடித்த புரோகிதர்கள், கூலி வாங்கியதன் காரணமாக அவர்கள் மார்க்கத்தில் எப்படி எல்லாம் தில்லு முல்லு செய்தார்கள் என்பதையும் அல்லாஹ் பல இறைவாக்குகளில் தெளிவுபடுத்தியுள் ளான். உதாரணமாக 2:41,79, 3:78,187,188, 4:44,46, 5:41,62,63, 6:21, 25,26, 9:9,10,34, 11:18, 19, 31:6, 6:21,25,26, 9:1,10,34, 11:18,19, 31:6 ஆகிய இறைவாக்குகளை நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால் இந்த உண்மை தெளிவாகப் புரியும்.
அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை யைச் சொல்பவனைவிடப் பெரும் அநியாயக் காரன் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன் முன் நிறுத்தப்படுவார்கள்; “இவர்கள் தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்‘ என்று சாட்சி கூறுவோர் சொல் வார்கள்; இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும்.
அவர்கள் (மனிதர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கின்றார்கள்; மேலும் அதில் கோணலையும் உண்டுபண்ண விரும் புகிறார்கள்; இவர்கள்தாம் மறுமையை நிராக ரிப்பவர்கள் ஆவார்கள். (அல்குர்ஆன் 11:18,19)
அது மட்டுமல்ல மார்க்கத்தைப் பிழைப் பாக்கிக் கொண்ட இந்தப் புரோகிதர்கள் தெரிந்த நிலையில்தான் இந்த தில்லுமுல்லுகளைச் செய்கின்றனர் என்பதையும் அல் லாஹ் 2:75,78,79,109,146, 6:20 ஆகிய இறைவாக்குகளில் உறுதிப்படுத்தியுள்ளான்.
மார்க்கத்தைப் பிழைப்பாக ஆக்கிக் கொண்ட இந்தப் புரோகிதர்கள் துணிந்து தில்லுமுல்லு களையும், பொய்ப் பித்தலாட் டங்களையும், சதித் திட்டங்களையும் செய்வதற்கு அல்லாஹ் அவர்களைச் சபித்ததும், அவர்களின் உள்ளங்களை இறுகச் செய்ததும்தான் காரணம் என்பதை 5:13 இறைவாக்கு உறுதிப்படுத்துகின்றது. அவர்கள் தங்கள் வயிறுகளில் நரக நெருப்பையே கொட்டிக்கொள்கின்றனர் என்பதை 2:174 இறைவாக்கு உறுதிப்படுத்துகின்றது. மார்க்கத்தை வியாபாரமாக்கிய புரோகிதர்கள் அல்லாஹ்வாலும், சபிப்பதற்கு உரிமை பெற்றவர்களாலும், மலக்குகளாலும், மனிதர்களாலும் சபிக்கப்படுகின்றனர் என் பதை 2:159,161,162 இறைவாக்கு கள் உறுதிப்படுத்துகின்றன. மேலும் அவர்கள் அச்சாபத்திலேயே என்றென்றும் இருப்பார் கள். அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படமாட்டாது, மேலும் மன்னிப்புக் கோர அவர்களுக்கு அவகாசமும் கொடுக்கப்படமாட்டாது என்பதையும் மேற்படி இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.
மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்ட வேறு எந்த விசயமாவது இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பற்பல கோணங்களில் பலவிதமாக எச்சரித்துக் கண்டிக்கப்பட்டு அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதாக யாராலும் காட்ட முடியுமா? அப்படியானால் மற்றவை பற்றியயல்லாம் வாய் கிழியப் பேசும் இந்தப் புரோகிதர்கள், தாங்கள் குர்ஆன், ஹதீத் போதனைக்கு மாற்றமாக வாங்கிக் கொண்டிருக்கும் கூலி பற்றி வாய் திறப்பதில்லையே ஏன்? அவர்களின் பக்தர்கள் இந்த கெடுதிகளைப் பற்றி சிறிதளவாவது விளங்கி வைத்திருக்கிறார் களா? இல்லையே?
இன்னொரு வகையிலும் ஹராம்:
மார்க்கப் பிரச்சாரத்தை வியாபாரமாக்கக் கூடாது. அதற்குக் கூலி வாங்கக் கூடாது என்பதற்குரிய நேரடித் தடைகளை இறைவாக்குகள் கொண்டு ஆராய்ந்தோம். வேறொரு வகையிலும் இந்தப் புரோகிதர்கள் குற்றவாளியாகிறார்கள். இவர்களது மார்க்கப் பணிக்கு கூலி மறுமையில் அல்லாஹ்விடம் உண்டு என்பது தெளிவான வியமாகும். இந்த நிலையில் அதே பணிக்கு மக்களிடம் கூலி வாங்குவது – லஞ்சம் வாங்கும் குற்றத்திற்கும் இவர்களை ஆளாக்கி விடுகிறது. 2:188 இறைவாக்கிற்கு எதிராக, மக்களின் பொருளைத் தவறான முறையில் இந்தப் புரோகிதர்கள் சாப்பிடும் குற்றத்திற்கும் ஆளாகிறார்கள். 9:34 இறைவாக்கில் கிறிஸ்தவப் புரோகிதர்கள் செய்த இதே தவறு பற்றி எச்சரித்து அறிவு புகட்டி இருக்கிறான் அல்லாஹ். இந்த போதனையைத் தூக்கி முதுகுக்குப் பின்னால் எறிந்துவிட்டு, முஸ்லிம் புரோகிதர்களும் மக்களின் பொரு ளைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள். அதற்காகவே அல்லாஹ்வின் பாதையை விட்டு இவர்களும் மக்களைத் தடுக்கவே செய்கிறார்கள். இதனை இன்று நிதர்சனமாகவே பார்க்கிறோம்.
குர்ஆன், ஹதீதில் உள்ளதை உள்ளபடி சரியாகப் பிரசாரம் செய்வதற்கு, தொழ வைப்பதற்கு, பாங்கு சொல்வதற்கு, குர்ஆன் ஓதிக் கொடுப்பதற்கு, மார்க்கம் கற் றுக் கொடுப்பதற்கு இவர்கள் வாங்கும் கூலி எதற்கு ஒப்பனது என்றால், அரசாங்க அதிகாரி ஒருவர் தான் அரசால் அமர்த்தப் பட்டிருக்கும் பணியில் செய்யவேண்டிய வேலையை மக்களுக்குச் செய்து கொடுத்துவிட்டு, அதற்கென அரசாங்கத்திடம் முறையாக வாங்கும் சம்பளம் போக, மேலதிகமாக மக்களிடம் முறைதவறி வாங்கும் லஞ்சத்திற்கு ஒப்பாகும். காரணம் இந்தப் பணிகளுக்குரிய கூலியை அல்லாஹ் தருவதாக வாக்களித்துள்ளான். இது சாதாரண அளவிலான லஞ்சமாகும்.
அதே அதிகாரி மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளை மீறி மேலதிகமாக அரசையும், மேலதிகாரிகளையும் ஏமாற்றி முறைகேடான வழியில் செய்து கொடுத்துவிட்டு, அதிகமான லஞ்சத்தை மக்களிடமிருந்து பெற்றுக் கொள்வது இரண்டாவது வகை. இது முன்னையதை விட கடுமையான லஞ்சமாகும். தனக்குச் செய்து தர சாத்தியமில்லா, தன் அதிகாரத்தை மீறிய காரியத்தைச் செய்து தருவதாகப் பொய்யாக வாக்களித்து மக்களை ஏமாற்றி அவர்களிடம் மோசடியாகப் பணம் பெறுவது. இது கடுமையான லஞ்சம் மட்டுமல்ல, பெரும் மோசடி யுமாகும். (இன்ஷா அல்லாஹ் தொடரும்)