பொறுமையாளர்களின் சிறப்புக்கள்!
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
ஆகஸ்ட் மாத தொடர்ச்சி…
இருமுறை நற்கூலி கொடுக்கப்படும் :
இவர்கள் பொறுமையை மேற்கொண்டமைக்காக இருமுறை நற்கூலி அளிக்கப்படுவார்கள்; மேலும், இவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தான தருமங்களில் செலவும் செய்வார்கள். (28:54) அதாவது முந்தைய “தவ்ராத்‘ வேதத்தையும், பிந்தைய “குர்ஆன்‘ வேதத்தையும் நம்பிக்கை கொள்வதெனும் இருவகையான இப்பண்பைப் பெற்ற இவர்களே இருமுறை பிரதிபலன் வழங்கப்படுவர். முந்தைய தூதர் மூஸா(அலை) அவர்கள் பிந்தைய தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் ஆகிய இருவரையும் அவர்கள் நம்பிக்கை கொண்டதே இதற்குக் காரணமாகும்.
இதனாலேயே உயர்ந்தோன் அல்லாஹ் இங்கு அவர்கள் மேற்கொண்டிருந்த பொறுமையின் காரணத்தால் எனக் குறிப்பிடுகின்றான். அதாவது சத்தியத்தைப் பின்பற்றுவதில் அவர்கள் காட்டிய பொறுமையின் காரணத்தால் அவர்களுக்கு இருமுறை பிரதிபலன் வழங்கப்படும். ஏனெனில் இதைப் போன்ற துணிச்சலான முடிவை மேற்கொள்வதானது மனதுக்கு ஒரு சவாலான காரியமாகும். இதனாலேயே; அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்று பேருக்கு அல்லாஹ்விடத்தில் இரட்டை நன்மைகள் கிடைக்கும் என்று; அதாவது :
1. வேதக்காரர்களில் ஒருவர் தமது சமூகத்திற்கு நியமிக்கப்பட்ட இறைத்தூதர் மீதும், இறுதித் தூதரான என்மீதும் நம்பிக்கை கொண்டார். அடுத்தவர்,
2. ஓர் அடிமை அல்லாஹ்வின் கடமைகளையும், தமது உரிமையாளரின் கடமைகளையும் நிறைவேற்றினார். அடுத்து;
3. ஒருவரிடம் அடிமைப் பெண்ணொருத்தி இருந்தாள். அவளுக்கு அவர் ஒழுக்கம் கற்பித்து அதைச் செம்மையாகச் செய்தார். பிறகு அவரே அவளை அடிமைத் தளையிலிருந்து விடுதலை செய்து அவளை அவரே மணந்துகொண்டார். இவருக்கு இரட்டை நன்மைகள் உண்டு என்றார்கள். (அபூமூஸா அல்அஷ்அரீ(ரழி), அபூ உமாமா (ரழி), புகாரி: 97:301, முஸ்லிம்: 241, திர்மிதி: 1035, முஸ்னத் அஹ்மத், தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 6, பக்கம் 791-802)
கணக்கின்றிக் கூலியைப் பெறுவார்கள்:
(நபியே!) நீர் கூறும்: ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயந்து இருங்கள். இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும். அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது. “பொறுமையாளர்கள்‘ தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றி நிறைவாகவே பெறுவார்கள். (39:10) எனும் இத்தொடருக்கு அவ்ஸாஈ(ரஹ்) அவர்கள் விளக்கமளிக்கையில் அவர்களுக்கு நிறுத்தோ, அளந்தோ பிரதிபலன் வழங்கப்படாது மாறாக கணக்கின்றி அள்ளி அள்ளி வழங்கப்படும் என்று தெரிவித்தார்கள். இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நற்செயலுக்கான பிரதிபலன் அந்த நற்செயலைக் கொண்டு மட்டும் கணக்கிடப்படமாட்டாது. மாறாக அதைவிட அதிகமாகவே அவர்களுக்கு வழங்கப் படும். இவ்வாறு அவர்களுக்கு பிரதிபலன் வழங்கப்படுவது சொர்க்கத்தில் நடைபெறும் என்பதாக சுத்தீ (ரஹ்) அவர்கள் தெரிவித்தார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 7, பக்கம் 893, 894)
நற்கூலியையும் பெறுபவர்கள் :
நிச்சயமாக அவர்கள் “பொறுமையாய்‘ இருந்ததற்காக அவர்களுக்கு நான் (அதற்குரிய) நற்கூலியைக் கொடுத்திருக்கின்றேன் நிச்சயமாக அவர்களே வெற்றியாளர்கள்! (23:111) அதாவது நீங்கள் அவர்களுக்குச் செய்த தொல்லைகளையும், ஏளனங்களையும் சகித்துக் கொண்டதன் காரணமாக நற்பலன் வழங்கினேன். நிச்சயமாக அவர்களே வெற்றியாளர்கள் ஆவர். அதாவது அவர்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்க்கத்தையும், நிம்மதியையும் நற்பேற்றையும் வழங்கி அவர்களை வெற்றியாளர்களாக ஆக்குவேன். (தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் :6, பக்கம் 235-238)
மன்னிப்பும், மகத்தான நற்கூலியும் கொடுக்கப்படும் :
ஆனால் துன்பங்களைப் “பொறுமையுடன்‘ சகித்துக்கொண்டவராக எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான நற்கூலியும் உண்டு (11:11) அதாவது யார் கஷ்டங்களை யும், சிரமங்களையும் சகித்துக் கொண்டார்களோ செல்வ வளமும், உடல் நலமும் இருந்த காலத்தில் நல்லறங்கள் புரிந்தார்களோ அவர்களைத் தவிர அவர்களுக்கே பாவமன்னிப்பும் பெரும் பிரதிபலனும் உள்ளது. அதாவது அவர்களுக்கு நேர்ந்த துன்பங்களுக்குப் பகரமாகப் பாவமன்னிப்பும், வளமாக வாழ்ந்த நேரத்தில் அவர்கள் ஆற்றிய நல்லறங்களுக்கு ஈடாகப் பெரும் பிரதிபலனும் அவர்களுக்கு கிடைக்கும்.
இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது ஆணையாக! ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. (அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி), அபூ ஹுரைரா(ரழி), ஆயிஷா(ரழி), புகாரி: 5640, 5641, 5642, முஸ்லிம் : 5030, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 4, பக்கம் 594-596)
நிச்சயமாக முஸ்லிம்களான ஆண் களும், பெண்களும், நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், இறை வழிபாடுள்ள ஆண்களும், பெண்களும், உண்மையே பேசும் ஆண்களும், பெண் களும், பொறுமையுள்ள ஆண்களும், பொறுமையுள்ள பெண்களும், அல்லாஹ்விடம் உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண் களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண் களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தங்கள் வெட்கத் தலங்களை(கற்பை)க் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான். (33:35) மகத்தான நற்கூலி என்பது சொர்க்கமாகும். (தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 7, பக்கம் 336)
எனினும், (நபியே!) அவர்களில் கல்வி யில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், பொறுமையுடையோ ரும் உமக்கு அருளப்பட்ட இவ்வழிகாட்டி நூல் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட வேதங்கள் மீதும் ஈமான் கொள்கிறார்களோ. இன்னும், தொழுகையை நிலை நிறுத்துவோராகவும், ஜகாத் முறையாகக் கொடுப்போராகவும் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக எவர்கள் இருக்கிறார்களோ. அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப் போம். (4:162)
மிகவும் அழகான கூலி கொடுக்கப்படும் :
உங்களிடம் இருப்பவை எல்லாம் தீர்ந்துவிடும். அல்லாஹ்விடம் இருப்பதே அழியாது என்றென்றும் நிலைத்திருக்கும். எவர்கள் பொறுமையுடன் கஷ்டங்களைச் சகித்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம், (16:96) என்பதாக ஆணையிட்டு அறுதியிட்டு உயர்ந்தோன் அல்லாஹ் தெரிவிக்கின்றான். நிச்சயமாக நாம் வழங்குவோம் என்பதைக் குறிக்க “ல நஜ்ஸியன்ன‘ எனும் சொற்றொடர் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இதிலுள்ள “லாம்‘ எனும் இடைச்சொல் இந்த உறுதியைப் பிரதிபலிக்கிறது. அதாவது பொறுமையாளர்களுக்கு அவர்கள் ஆற்றிய நற்செயலுக்கான பிரதிபலனை அல்லாஹ் நிச்சயமாக வழங்குவான். அவர் கள் செய்த தீமைகளை மன்னித்து விடுவான் என்பது உறுதி. (தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 6, பக்.109-111)
அனஸ்(ரழி) அறிவித்தார்: ஹாரிஸா இப்னு சுராகா(ரழி) அவர்களின் தாயாரான உம்மு ருபைய்யிஉ பின்த்து பராஉ(ரழி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, இறைத்தூதர் அவர்களே! ஹாரிஸாவைப் பற்றி தாங்கள் எனக்குச் செய்தி அறிவிக்கமாட்டீர்களா? அவர் பத்ருப் போரன்று கொல்லப்பட்டிருந்தார். அவரின் மீது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று பாய்ந்து விட்டிருந்தது. அவர் சொர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமையைக் கைக்கொள்வேன், அவர் வேறெந்த (துன்ப) நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன் என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் “ஹாரிஸாவின் தாயே! சொர்க்கத்தில் பல படித்தரங்கள் கொண்ட தோட்டங்கள் உள்ளன. உனது மகன் (அவற்றில்) மிக உயர்ந்த ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத் தோட்டத்தைத் தனது உயிர்த் தியாகத்திற்கான பிரதி பலனாகப் பெற்றார் என்று பதிலளித்தார்கள். (புகாரி: 2809)
இவ்வுலகிலும் மணமான தூய வாழ்க்கை வாழச் செய்யப்படும் :
ஆணாயினும், பெண்ணாயினும், இறை நம்பிக்கை கொண்டு முஃமினாகப் பொறுமையுடன் இருந்து யார் சன்மார்க்கத்திற்கு இணக்கமான நற்செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை இவ்வுலகில் இனிதான மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம். இன் னும் மறுமையில் அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். (16:97) அதாவது இறைவேதத்தை யும் இறைத்தூதரின் வழியையும் பின்பற்றிப் பொறுமையுடன் நடந்து வந்தால் அவரை அல்லாஹ் இவ்வுலகில் இனிதான மணமான வாழ்க்கையை வாழச் செய்வான். அவர் பொறுமை கொண்டவராக செய்த நற்செயலுக்காக பிரதி பலனை மறு உலகில் அவருக்கு வழங்குவான் என்பதே அந்த வாக்குறுதியாகும்.
இனிதான வாழ்க்கை “ஹயாத்துன் தய்யிபா‘ என்பதில் உலக வாழ்க்கையின் எல்லா வகையான சுகங்களும் அடங்கும். இப்னு அப்பாஸ்(ரழி) உட்பட்ட நபித் தோழர்களின் ஒரு குழுவினர், இனிதான வாழ்க்கை என்பதற்கு, தூய்மையான, அனுமதிக்கப் பெற்ற வாழ்வாதாரம் என்று விளக்கமளித்திருப்பதாக அறிவிக்கப்பட் டுள்ளது. இதில், இருப்பதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளல் என்பதாக அலீ பின் அபீதாலிப்(ரழி) அவர்களும், நற்பேற்றைக் குறிக்கும் என்பதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும், ஹலாலான வாழ்வாதாரமும் இம்மையில் வழிபாடு செய்வதும் தான் “இனிதான வாழ்க்கை ஆகும்” என்பதாக ளஹ்ஹாக்(ரஹ்) அவர்களும், இனிதான வாழ்க்கை என்பது சொர்க்கத்தில்தான் அமையும் என்பதாக ஹஸன் அல்பஸ்ரி (ரஹ்), கத்தாதா(ரஹ்), முஜாஹித்(ரஹ்) ஆகியோரும் கூறியுள்ளார்கள். ஆனாலும் இனிதான வாழ்க்கை என்பது இவை அனைத்துக்கும் பொருந்தும் என்பதே சரியான கருத்தாகும் என்பதாகக் கூறி இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் பின்வரும் ஹதீத்களைக் கொண்டு வருகின்றார்கள். (தஃப்ஸீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம், தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 5, பக்கம் 111-113) (இன்ஷா அல்லாஹ் தொடரும்)