தலையங்கம் :
முஸ்லிம்களே! நல்ல ஆட்சியாளர்கள் வேண்டுமா?
“அல்லாஹ் தான் நாடியோருக்கு ஆட்சியை வழங்குகின்றான், அதுபோல் தான் நாடியவர்களிடமிருந்து ஆட்சியை பறித்தும் விடுகின்றான். மேலும் அவன் நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறான். அவன் வசமே அனைத்தும் உள்ளது. அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன்” அல்குர்ஆன் 3:26
மேற்கண்ட திருமறை வசனத்தின்படி அல்லாஹ் யாரை நாடுகிறானோ அவர்களே ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியும் என்பது தெளிவாக தெரிகின்றது.
ஆனால் மனிதர்களின் விருப்பம் என்னவென்றால் நாம் யாரை விரும்புகின் றோமோ, யாருக்கு வாக்களித்தோமோ அவர்கள்தான் ஆட்சியாளராக வரவேண் டும் என்பதாக இருக்கின்றது.
இது சாத்தியமா?
ஆட்சியும், அதிகாரமும் அல்லாஹ் நாடியபடியே என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் மக்களில் பெரும்பான்மை யாரை விரும்புகிறதோ அவர்களுக்கே ஆட்சியும், அதிகாரமும் என்று ஜனநாயகம் கூறுகிறது.
இரண்டும் ஒன்றுக்கு ஒன்று எதிரானது. இன்று பலரும், முஸ்லிம்கள் ஒன்றிணைத்து ஒரே தலைமையில் கீழ் வந்து ஒரே கட்சிக்கு வாக்கு அளித்தால் நாம் விரும்பும் ஆட்சி யாளர்களை ஆட்சியில் அமர்த்திவிடலாம் என்று எண்ணுகிறார்கள்.
அல்லாஹ் மனிதர்கள் மீது அநியாயக்கார ஆட்சியாளர்களை ஏற்படுத்துவதற்கும் உலகமெல்லாம் முஸ்லிம்கள் பல பிரச்சினை களையும், சீர்கேடுகளையும் குழப்பங்களை சந்திக்க காரணம் நாம்தான். இறைவன் அல்ல, இறைவன் நீதமானவன்.
நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன்மீது) நம்பிக்கை கொண்டும் இருந்தால், உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன செய்யப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும் எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கின்றான். (4:147)
முஸ்லிம்கள் ஒருவர் மற்றொருவர் மீது அநியாயம் செய்பவர்களாக, பிறருடைய உரிமைகளிலும், மானத்திலும் அத்துமீறுபவர்களாக ஆகிவிடும்போது அவர்களுக்கு எதிராக அநியாயக்கார ஆட்சியாளர்களை ஏற்படுத்துகிறான்.
அநியாயக்கார ஆட்சியாளர்கள் ஏற்படுவது இறைவனால் ஏற்படுத்தப்படக்கூடிய சோதனை என்பதை மறந்துவிடாதீர்கள். அதற்கு காரணம் நம்முடைய செயல்களும் தான் என்பதையும் மறந்துவிடாதீர்கள். நாம் என்ன நினைக்கிறோம்? அநியாயக்கார அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் மாற்றுவோம் என்பதாக.
அதாவது நம்முடைய பல முயற்சிகளால், ஆர்ப்பாட்டங்களால் போராட்டங்களால் ஒன்றி ணைந்து வாக்களிப்பதால், அரசு, அதிகார பதவியில் அமர்வதால், இப்படியான பலவிதமான கணக்குகளை மக்கள் போடுகிறார்கள். ஆனால் இறைவனிடத்தில் வேறு கணக்கு இருக்கிறது. எதுவரை மக்கள் தங்களுடைய செயல்களை திருத்திக் கொள்ளமாட்டார்களோ அவர்களுக்குள் அவர்கள் நேர்மையானவர்களாக, ஒருவர் ஒருவரை மதிப்பவர்களாக, மற்றவரின் உரிமையை பேணக் கூடியவர்களாக இருக்கமாட்டார்களோ கண்டிப்பாக அவர்கள் மீது ஆதரவு காட்டக் கூடிய மற்றும் நீதமான ஓரு ஆட்சியாளர்களை அவர்கள் எதிர்பார்க்கவே முடியாது. இதுதான் இறைவனுடைய நியதியாகும்.
மக்கள் வழிகேடர்களாக ஆகிவிடும் போது அவர்களுக்கு வழிகேடர்களை ஆட்சியாளர்களாக இறைவன் ஆக்கிவிடுவான்.
மக்களிடம் நயவஞ்சகம் வந்துவிடும் போது ஆட்சி செய்பபவர்களும் நயவஞ்சகர்களாக இருப்பார்கள். ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்களும் பணம் தரும் அரசியல் வாதிகளும் இருக்கும் அரசியல் சாக்கடையில் இறங்கி முஸ்லிம்களை சாக்கடையாக ஆகாமல் இஸ்லாமிய அடிப்படையில் நேர்மையாக குர்ஆன், ஹதீத் அடிப்படையில் இறைவனுக்கு அடிபணிந்து வாழ்ந்தால் கொடுக்கல் வாங்கலில் மோசடி செய்யாமல் ஒற்றுமையாக வாழ்ந்தால் இறைவனின் சோதனை நீங்கலாம்.
மக்கள் தங்களுக்கு மத்தியில் நிறுவையில், அளவையில் மோசடி செய்தார்கள் என்றால் கண்டிப்பாக இறைவன் அவர்களை பஞ்சத்தைக் கொண்டு பிடிப்பான். அவர்களுடைய பொருளில் விலைவாசிகள் அதிகமாகி விடும். மேலும் அநியாயக்கார அரசனை கொண்டு இறைவன் சோதிப்பான். இப்னுமாஜா: 4019
இதுபோன்ற ஹதீத்கள் மூலம் இறைவன் முஸ்லிம்கள் நேர்மையான வாழ்க்கையில் இருந்து தவறினால் இதுபோன்ற சோதனையை உங்கள் எதிரிகள் மூலம் ஏற்பட்டே தீரும் என்று கூறுகிறான்.
ஒரு காலத்தில் முஸ்லிம்கள் என்றால் நம்பிக்கையாளர்கள், வாக்கை பேணக்கூடியவர்கள்; ஏமாற்றமாட்டார்கள் என்று மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டு வந்த சமுதாயம்; இன்று மாறி போய் உள்ளது.
வட்டி, ஏமாற்றுதல், பொய் சொல்லுதல், விபச்சாரம், மது, பிறருக்கு தொல்லை தருதல் என்று அனைத்து தவறுகளுடன் ஹராம், ஹலால் சிந்தனை இன்றி உள்ளனர். இறைவனைப் பற்றிய அச்சம் இன்மை ஐவேளை தொழுகை இன்மை, இறைவனின் கட்டளைகளுக்கு அடிபணி யாமை, போட்டி பொறாமை அதனால் ஒற்றுமை இன்மை என்று அனைத்து தீய பண்புகளுடன் இருக்கிறார்கள்.
அதனால் அநியாயக்கார ஆட்சியாளர்கள் உங்கள் மீது சாட்டப்பட்ட அல்லாஹ்வின் வேதனையாக இருக்கிறது. அநீதமான ஆட்சி அல்லாஹ்வின் வேதனையை உங்களுடைய அரசியல் கரங்களால் தடுக்க முயற்சிக்காதீர்கள்.
உங்களுடைய அரசியல் போராட்டங்களால், உங்களுடைய சாமர்த்தியத்தால், கிளர்ச்சிகளால், தந்திரங்களால், ஒன்றினைந்து வாக்களிப்பதால் தடுக்க முடியும் என்று நினைக்காதீர்கள்.
அல்லாஹ்வுடைய தண்டனையிலிருந்து நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் அல்லாஹ்விற்கு முன்னால் பணிந்து ஐவேளை தொழுது அவனி டத்தில் கெஞ்சி கதறி கேளுங்கள். யா அல்லாஹ்! உன்னுடைய வேதனையில் இருந்து எங்களை பாதுகாப்பாயாக என்று!
எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு பின்னர், விரைவில் மன்னிப்புத் தேடிக் கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு; அல்லாஹ் அவர்களை மன்னிப்பான்; இன்னும், அல்லாஹ் நன்கறிந்தோனும் ஞானம் உடையோனுமாக இருக்கிறான். குர்ஆன்: 4:17
இறைதூதர் வாழ்வில் நடந்தது :
பத்ரு போரின் போது பலகீனமான நிலையில் இருந்த போதும் அல்லாஹ்வின் தூதருக்கு கட்டுப்பட்டதால் அல்லாஹ்வின் உதவி கிடைத்தது.
அதுவே அல்லாஹ்வின் தூதருக்கு கட்டுப்படாமல் உஹதுப் போரின்போது நடந்து கொண்டதால் தோல்வி கிடைத்தது.
மேலும் ஹுனைன் போரின்போது மமதையில் இருக்கும்போது தோல்வியும் மாறாக அகழ் போரின்போது எதிரிப் படையினரை கண்டு அஞ்சாமல் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டபோது வெற்றியும் கிடைத்தது.
நல்லாட்சி அமைய முஸ்லிம்கள் ஒன்றி ணைந்து வாக்கு அளிப்பதை விட ஒன்றிணைந்து இறைவனிடம் பணிந்து தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு திருந்துவதுதான் சரியான தீர்வு ஆகும். இறைவனே அனைத்தையும் அறிந்தவன்.