காலம் பொன் போன்றதா?
A.N. Trichy
காலத்தின் சிறப்புப் பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். அதனால்தான் “காலத்தை பொன் போன்றது‘ என்று சொல்லுவார்கள்.
ஆனால் காலத்தை பொன் போன்று கருதுகின்றோமா? என்றால் இல்லை? பள்ளி பருவத்திலிருந்து பாயோடு பாயாக படுத்து காலத்தை வீணாக்குவது போல் வேறு எதையும் நாம் அதிகமாக வீணாக்குவது கிடையாது.
காலம் அவ்வளவு முக்கியமானதா?
நிச்சயமாக! உலக வாழ்க்கையிலும் சரி, மறுமை வாழ்க்கைக்கும் சரி, காலமே (நேரமே) எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது, மனிதர்களின் பிறப்பும், இறப்பும் கூட காலத்தைக் கொண்டே தீர்மானிக்கிறது.
எனவே தான் அல்லாஹ் தன் வழிகாட்டும் நூலில் (குர்ஆனில்) சத்தியம் செய்து சுமார் 50க்கு மேற்பட்ட சில முக்கியமான விசயங்களை சொன்னபோது அதில் காலத்தையும் (நேரத்தையும்) ஒன்றாக குறிப்பிட்டுள்ளான்.
“காலத்தின் மீது சத்தியமாக‘ குர்ஆன் 103:1
அடுத்து 3 முக்கிய கடமைகளிலும் காலத்தை மையமாக வைத்தே செயல்படுத்த வேண்டும் என கட்டளை இடுகிறான்.
1. தொழுகையை பற்றி அல்லாஹ் கூறும்பொழுது :
“தொழுகைக்கான நேரம் (காலம்) குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது” குர்ஆன் 4:103
“பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதியிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! தொழுகையானது தீமைகளை அழித்துவிடும், படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரை‘. அல்குர்ஆன் 11:114
“சூரியன் உதிப்பதற்கு முன்பும், அது மறைவதற்கு முன்பும், இரவு நேரங்களிலும் உமது இறைவனைப் போற்றி புகழ்வீராக! பகலின் ஓரங்களிலும் தொழுவீராக! இது திருப்தியளிக்கும்‘. அல்குர்ஆன் 20:130
“சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள்கள் சூழும் வரையில்‘ அல்குர்ஆன் 17:78,79
2. நோன்புக்குரிய காலத்தை (நேரத்தை) கூறும்பொழுது:
.வைகறை என்னும் வெள்ளை கயிறு தெளிவாகும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் (ஸஹர் நேரம்) பின்னர் இரவின் ஆரம்பம் வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்…’ அல்குர்ஆன் 2:187
3. ஹஜ்ஜைப் பற்றி கூறும்பொழுது :
துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்கள்தான் ஹஜ்ஜுக்குரிய முக்கிய நாட்களாகும் (காலமாகும்) புத்தகம்: 8, புகாரி: 969
4. இத்தா பற்றி அல்லாஹ் கூறியிருப்பதாவது:
“உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் (130 நாட்கள்) மறுமணம் செய்யாமல் அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 2:234)
5. கடனைப் பற்றி கூறியிருப்பது :
“நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட காலக்கெடு விதித்து ஒருவருக்கொருவர் கடன் கொடுத்தால் அதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.’ அல்குர்ஆன் 2:282
6. பாலூட்டும் காலம் பற்றி :
“பாலருந்தும் காலம் இரண்டு ஆண்டுகள்..’ அல்குர்ஆன் 31:14
7. இது மட்டுமல்ல உலக முடிவு நாள் :
இறுதி காலத்தையும் அல்லாஹ் முடிவு செய்து வைத்துள்ளான். அது முந்தவும் செய்யாது, பிந்தவும் செய்யாது என்பதாக பல இடங்களில் கூறுகிறான். பார்க்க அல்குர்ஆன் 7:187, 20:15, 31:34, 33:63
உலக வாழ்க்கையிலும் காலம்தான் முக்கியமாக கருதப்படுகிறது.
மிக உயர்ந்த பதவியில் உள்ளவர்களுக்கு 24 மணி நேரம் என்பது பற்றாக்குறையாக உள்ளது. அதுவே ஒரு வேளையும் செய்யாது சும்மா இருப்பவர்களுக்கு 24 மணி நேரம் என்பது ஒரு யுகம் போல் இருக்கிறது.
ஒரு நாள் என்பது அரபு ஷேக்குக்கும், அமெரிக்கா அதிபருக்கும், நமக்கும் 24 மணி நேரம் தான். இந்த 24 மணி நேரத்தை (காலத்தை) நாம் எவ்வாறு பயன்படுத்து கின்றோம் என்பதில் தான் நம்முடைய வாழ்வும், தாழ்வும் அடங்கியிருக்கிறது.
எனவேதான் அல்லாஹ் தன் வழிகாட்டும் நூலில் (குர்ஆனில்)
“காலத்தை மதிக்காதவர்கள் நஷ்டத்தில் இருப்பதாக கூறுகிறான். அல்குர்ஆன் 103:2
ஆனால் நம்பிக்கை கொண்டு (காலத்தை பயன்படுத்தி) “நற்செயலும், ஒருவருக்கொருவர் உபதேசமும் செய்து பொறுமையாகவும் இருந்தார்களோ அவர்களை தவிர‘
அல்குர்ஆன் 103:4,5
மனிதர்கள் எப்படி காலத்தை பயன்படுத்திக் கொள்கிறார்களோ, அவ்வாறே காலம் இம்மைக்கும், மறுமைக்கும் பயனளிக்கும்.