குர்ஆன் வேதமா?
நஜ்முதீன்
குர்ஆன் இறைவேதம்தான் என்று உலகமே நம்புகின்றபோது இது என்ன கேள்வி? இறை மறுப்பாளர்கள் (நாத்திகவாதிகள்) சொல்வது போல் அல்லவா இருக்கின்றது. குர்ஆன் இறை வேதம் என்பதில் என்ன சந்தேகம் இருக்கமுடியும்?
பொதுவாக மனிதனின் உள்ளத்தில், அல்லது பழக்க வழக்கத்தில் ஒரு விசயம் அல்லது ஒரு பெயர் ஆரம்பத்தில் எப்படி பதிந்துள்ளதோ, அதை மாற்றுவது என்பது சாதாரண காரியமில்லை. இது படித்தவர்கள் முதல், படிக்காதவர்கள் வரை அனைவரிடமும் காணப்படும் இயல்பு. அதிலும் குறிப்பாக படிக்காதவர்களை விட படித்தவர்கள் தான் புதிய கருத்தை அல்லது கொள்கையை ஏற்றுக்கொள்ள தயங்கி கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஏற்றுக்கொள்ள தயங்கவும் செய்வார்கள். இது அறிவியலாக இருந்தாலும் சரி, ஆன்மீகமாக இருந்தாலும் சரி, இதுதான் நிலமை.
உதாரணமாக உலக மக்களில் பெரும்பா லோரின் மனதில் அமெரிக்காத்தான் வல்லரசு நாடு என மனதில் பதிந்துள்ளது. இது 100% சதவீதம் உண்மையா என்றால் இல்லை! ஆனாலும் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அதுபோல் தமிழ்நாட்டில் எடுத்துக்கொண்டால் செய்திதாள் என்றால் அது தினத்தந்தி தான் என்ற மனநிலை அதுபோல பதிந்துவிட்ட ஒரு சொல் தான் குர்ஆன் வேதம் என்பதும்,
குர்ஆனை வேதம் என்று அல்லாஹ் எங்குமே சொல்லவில்லை. ஏனெனில் வேதம் என்றால் அதன் நிலமை என்னவாகும் என்பது அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். அப்படியானால் குர்ஆன் என்ன?
அதற்கு முன்பாக “வேதம்‘ என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டால் குர்ஆன் வேதமா? இல்லையா? என்பது நன்கு தெரிந்துவிடும்.
வேதம் என்றால் அதற்கு வேதாந்தியர்கள் தேவைப்படுவார்கள். ஏன் என்றால் வேதம் என்பது தெளிவாகப் புரியாது.
எதுவொன்று சித்தாந்தமாக இருக்கிறதோ அதற்கு வேதாந்தியர்கள் தேவையில்லை.
அதாவது ஒரு கவிஞர் சொன்னது போல் “தெளிவாக தெரிந்தாலே அது சித்தாந்தம், தெளிவாக தெரியாமல் போனாலே அது வேதாந்தம்‘
பின்பு ஏன் குர்ஆனை வேதம் என்று சொல்கின்றார்கள்? எழுதுகின்றார்கள்?
அவை புரிதலுக்காக சொல்லப்பட்ட வழக்கத்திலுள்ள வார்த்தையே, குர்ஆனை வேதம் இல்லை என்று சொன்னால் குர்ஆனின் புகழுக்கு இழுக்கோ நஷ்டமோ ஏற்படப் போவது இல்லை.
ஆனால் குர்ஆனை வேதம் என்று சொல்வதால் நஷ்டம் மனித சமுதாயத்திற்கே!
இது புரோகிதர்கள் (இப்லீஸின் வாரிசுகள்) செய்த திட்டமிட்ட சதி.
பொதுவாக வேதத்தைப் பற்றி மக்கள் புரிந்து வைத்துள்ள கருத்து என்னவென்றால் வேதநூல்கள் என்பதை மடத்திலோ அல்லது மதரஸாவிலோ சென்று படித்தால்தான் புரிந்து கொள்ள முடியும் என்பதாகும். எனவே குர்ஆன் நமக்கு புரியாது என்று மக்களில் பெரும்பாலோர் விலகி செல்கின்றார்கள்.
இன்றும் குர்ஆன் விளங்காது என்று ஒரு கூட்டம் (இப்லீஸின் வாரிசுகள்) சொல்லிக் கொண்டேயிருக்கிறது.
இஸ்லாமிய சமுதாயம் வீழ்ச்சி அடைந்ததற்கு குர்ஆனை வேதம் என்றும், விளங்காது என்றும் நினைத்து மொழி பெயர்ப்புடன் படிக்காமல் விலகி சென்றதே முக்கிய காரணம்.
இதுவே குர்ஆனை வழிகாட்டும் நூல் என்று சொல்லியிருந்தால் புரோகித கூட்டம் வந்திருக்காது, வளர்ந்திருக்காது.
1. குர்ஆன் (நேர்வழி காட்டக்கூடிய) வழி காட்டும் நூல் ஆகும். (2:2)
2. குர்ஆன் நேர்வழி காட்டக்கூடியது. சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியது. (2:185)
3. குர்ஆன் மக்களுக்கு ஒரு தெளிவான விளக்கத்தை கூறுவதாகவும், நேர்வழி காட்டக் கூடியதாகவும், அறிவுரையாகவும் இருக்கின்றது. (3:138)
4. அனைத்து உலக மக்களுக்கும் இது ஓர் வழிகாட்டியாகும். (6:90)
5. அல்லாஹ்விடமிருந்து வந்த அறிவுரை, உள்ளங்களில் உள்ள தீய எண்ணங்களை நீக்கு கிறது. நேர்வழி காட்டக்கூடியது. ஓர் அருட் கொடையாகவும் இருக்கிறது. (10:57)
6. அனைத்தையும் தெள்ளத்தெளிவாக விளக்க கூடியது; நேர்வழி காட்டக்கூடியதாகவும், அருளாகவும், நற்செய்தியை கூறுவதாகவும் இருக்கிறது. (16:89)
7. குர்ஆன் தெளிவானதாக இருக்கின்றது. (27:2)
8. குர்ஆனை தெள்ளத் தெளிவாக விசயங்களை விவரிக்கக் கூடியதாகவும், யார் உயிருடன் இருக்கிறாரோ அவர்களுக்கு முற்றிலும் அறிவுரையாகவும் இருக்கிறது. (36:69,70)
9. குர்ஆனில் விதவிதமான எடுத்துக்காட்டுகள் விவரிக்கப்பட்டுள்ளன; மக்கள் அறிவுரை பெற்று நேர்வழியில் நடக்க வேண்டும் என்பதற்காக! இந்த குர்ஆனில் எவ்வித கோணலும் (தவறும்) இல்லை. (39:27,28)
10. அனைத்து மக்களுக்கும் தேவையாக வும், அறிவார்ந்த விசயங்களை கூறுவதாகவும், வழிகாட்டியாகவும், அருட்கொடையுமாகும். (45:20)
11. இந்த குர்ஆனில் வாழ்க்கை சம்பந்தமாக காண்பிக்கின்ற சரியான பாதையை கூறுவது போல் வேறு எந்த நூலிலும் கூறப்படவில்லை. (28:49,50)
12. அறிவுக் கூர்மை உள்ளவர்கள் இது வழிகாட்டும் நூல்தான் என்று நம்பிக்கை வைப்பார்கள். (4:162)
13. அல்லாஹ்வினால் இறக்கியருளப்பட்ட இந்த குர்ஆனின் அடிப்படையில் வாழுங்கள். அதை தவிர வேறு எதையும் பின்பற்றாதீர்கள். (7:3)
14. இறை நம்பிக்கையுள்ளவர்களுக்கு இந்த குர்ஆன் ஒரு வழிகாட்டியாகவும், அருளாகவும் இருக்கிறது. (16:64)