முஸ்லிம்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்வார்களா?
அபூ அப்தில்லாஹ்
இன்று உலகம் முழுவதும் முஸ்லிம்கள் வீழ்ச்சிக்கு மேல் வீழ்ச்சியை சந்திக்கிறார்கள். மற்ற சமுதாயங்கள் அனைத்திற்கும் இளிச்சவாயர்களாக முஸ்லிம்களே தெரிகின்றனர். மற்ற எந்த சமுதாயத்தினரும் அல்லது மதத்தினரும் அவர்கள் சார்ந்துள்ள சமுதாயத்தின் பெயராலோ மதத்தின் பெயராலோ தீவிரவாதி என்று பட்டமளிக்கப்பட்டு மீடியாக்களில் அறிவிக்கப்படுவதில்லை. ஆனால் முஸ்லிம் சமுதாய மக்களோ முஸ்லிம் தீவிரவாதி, இஸ்லாமிய தீவிரவாதி என்ற பட்டம் சூட்டி அழைக்கப்படு கிறார்கள். அந்த அளவுக்கு முஸ்லிம் சமுதாயம் மற்றவர்களுக்கு இளக்காரமாகப் போய் விட்டார்கள்.
குஜராத்தில் முஸ்லிம்களை நரபலி கொண்டு அவர்களின் சொத்து சுகங்களை சூரையாடியவர்களே மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ளார்கள். அமெரிக்க அரசு உலகிற்கே நானே ஆட்சியாளன் என்ற மமதை யில் அனைத்துலக மக்களின் எதிர்ப்புக் குரலையும் மதியாமல் ஈராக் மீது போர் தொடுத்து அங்குள்ள அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளது. அன்று ஆப்கானிஸ் தான், இன்று ஈராக், நாளை சிரியா, அடுத்து ஈரான் என்று முஸ்லிம்களை கொன்று குவித்து முஸ்லிம் நாடுகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில், தனது அடிமைகளாக ஆக்கத் திட்டம் தீட்டி முன்னேறி வருகிறது.
முஸ்லிம்களுக்குச் சொந்தமான பாலஸ்தீன நாட்டில், உலக நாடுகள் சதி செய்து “இஸ்ரேல்‘ என்ற நாட்டை உருவாக்கி அவர்கள் பாலஸ்தீனியர்களை கொன்று குவித்து வருகிறார்கள். சுட்டுப் பொசுக்கி வருகிறார்கள். இப்படி முஸ்லிம்களின் அவல நிலையை, பரிதாப நிலையை, கையாளாகாத நிலையை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆயினும் முஸ்லிம்களில் ஜனத்தொகைக்கும், முஸ்லிம் நாடுகளின் எண்ணிக்கைக்கும் பஞ்சமே இல்லை. இது ஒரு பக்கம், மறுபக்கம் முஸ்லிம்கள் பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்.
“எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள், கவலையும் கொள்ளாதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.’ (அல்குர்ஆன் 3:130)
மேலும் அல்லாஹ் முஃமின்களிடம் அருள் பொழிபவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 3:152)
நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கிறான். (அல்குர்ஆன் 3:164)
மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 3:68)
மேலும் முஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும். (அல்குர்ஆன் 30:47)
இறைவனின் இறுதி நெறிநூலான அல்குர்ஆனில் காணப்படும் இந்த இறைவாக்குகளை இன்னொரு முறை மீண்டும் ஒருமுறை என்று உங்களுக்குள் அவற்றின் சாரமும் சத்தும் இறங்கிவிடும் வரை படித்துக் கொண்டேயிருங்கள். சாரமும் சத்தும் உங்கள் நெஞ்சங்களில் இறங்கிவிட்டதா? இப்போது சிந்தியுங்கள்.
இவை யாருடைய வாக்குகள்? உத்திர வாதங்கள்? உறுதிமொழிகள்? என்னையும், உங்களையும், மானிட வர்க்கத்தையும் மட்டுமல்ல, மனிதனுக்குத் தேவையான அனைத்தையும் இன்னும் சர்வ உலகங்களையும், கோள்களையும் மற்றும் படைப்பினங்கள் அனைத்தையும் படைத்தும் பரிபாலித்து வருகின்ற சர்வவல்லமை மிக்க ஏகன் இறைவனின் வாக்குகள், உறுதிமொழிகள், உத்திரவாதங்கள்.
இந்த உத்திரவாதங்கள், உறுதிமொழிகள் போலியாக முடியுமா? பொய்த்துப் போக முடியுமா? முடியாது. ஒருபோதும் முடியாது. அப்படியானால்…
இன்று, முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் அருள் ஏன் கிடைக்கவில்லை?
முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் உதவி ஏன் கிடைக்கவில்லை? முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் பாதுகாவல் ஏன் கிடைக்கவில்லை?
முஸ்லிம்கள் தைரியத்தை இழந்தவர்களாக, கவலையைச் சுமந்தவர்களாக இருக்கிறார்களே ஏன்? முஸ்லிம்கள் உன்னத நிலைக்கு மாறாக வீழ்ச்சியின் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறார்களே ஏன்?
முஸ்லிம்களும், முஸ்லிம் அறிவு ஜீவிகளும், முஸ்லிம் முல்லா புரோகிதர்களும் என்றாவது சிந்தித்ததுண்டா?
அல்லாஹ் வாக்கு மாறிவிட்டானா? அல்லது முஸ்லிம்கள் முஃமின்கள் என்ற நிலையில் இல்லையா? எது உண்மை? நிச்சயமாக அல்லாஹ் வாக்கு மாறமாட்டான். அப்படியானால் முஸ்லிம்கள் உண்மை முஸ்லிம்களாக முஃமின்களாக இல்லை என்பதே அப்பட்டமான உண்மையாகும்.
ஏன் உண்மை முஸ்லிம்களாக இல்லை?
அல்லாஹ் தெளிவாக அல்குர்ஆனில் 7:3ல் அறிவித்துள்ளபடி அல்குர்ஆனின் நேரடி போதனைப்படியும், 4:59 கட்டளைப்படி அவனது இறுதித் தூதரின் நடைமுறைகளின் படியும் ஓரணியில் ஒரே தலைமையில் ஒன்றுபட்டிருக்கக் கடமைப்பட்ட வர்கள். மார்க்கத்தைப் பிழைப்பாக்கிக் கொண்ட புரோகித முல்லாக்களின் தலைமைகளை ஏற்று பல அணிகளில் பிளவுண்டு கிடக்கின்றனர்.
“பின்னொரு காலம் வரும்: மக்கள் அறிவீனர்களை தலைவர்களாக்கிக் கொள்வர், அவர்கள் அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள்‘ என்ற நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கை இந்த புரோகித முல்லாக்களுக்கே முழுக்க முழுக்கப் பொருந்தும். குர்ஆன், ஹதீதை விளங்கி அதிலுள்ளபடி தீர்ப்பு வழங்குபவர்களே ஆலிம்கள். அறிஞர்கள், முன் சென்றவர்களின், இப்போதிருப்பவர்களின் கற்பனைகளை, கட்டுக்கதைகளை மார்க்கமாகச் சொல்பவர்கள் அறிவீனர்கள்தானே.
“மனிதர்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழிகெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார் கள்) இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனையுண்டு. (31:6) மேலும் (பார்க்க:6:116)
ஆம்! முகலில்லிது மவ்லவி புரோகிதர்கள் முன்னோர்களின் கற்பனைகளையும், யூகங்களையும் மார்க்கமாகச் சொல்வார்கள். தவ்ஹீத் மவ்லவி புரோகிதர்கள் தங்களின் சொந்த கற்பனைகளையும், யூகங்களையும் மார்க்கமாகச் சொல்வார்கள். ஆக புரோகிதர்கள் அனைவருமே அறிவீனர்களே! அறிவிருந்தால் அல்லாஹ்வின் தெள்ளத் தெளிவான நேரடியான கட்டளைக்குப் புறம்பாக மார்க்கத்தை வயிறு வளர்க்கும் பிழைப்பாகக் கொள்வார்களா? (பார்க்க:36:21)
முகல்லிது மவ்லவி புரோகிதர்கள் 7:3,55,205, 33:21,36,66,67,68 அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளுக்கு முரணாக முன்னோர்களின் கற்பனைகளையும், யூகங்களையும் கூறி முஸ்லிம்களை வழிகெடுக்கிறார்கள்.
தவ்ஹீது மவ்லவி புரோகிதர்கள் 2:213, 6:159, 21:92,93, 30:32, 45:17 அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளுக்கு முரணாக அவர்களின் சொந்த கற்பனைகளையும், யூகங்களை யும் கூறி முஸ்லிம்களை வழிகெடுக்கிறார்கள்.
ஆக ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் இந்தப் புரோகித முல்லாக்களின் பின்னால் செல்லும்போது, அவர்கள் எப்படி நேர்வழியில் இருக்க முடியும்? உண்மை முஸ்லிம் களாக –முஃமின்களாக எப்படி இருக்க முடியும்? அதனால்தான் 3:139, 3:152, 3:164, 3:68,30:47 இறைவாக்குகளில் காணப்படும் அல்லாஹ்வின் வாக்குறுதிகள் முஸ்லிம்களுக்குக் கிடைப்பதாக இல்லை.
இந்தப் புரோகித முல்லாக்கள் முஸ்லிம்களை வழிகேட்டிலாக்கி அல்லாஹ்வின் அருளிலிருந்தும், உதவிகளிலிருந்தும், பாதுகாப்பிலிருந்தும் தூரமாக்கி வைத்திருக் கிறார்கள். அதனால் முஸ்லிம்கள் இவ்வுலக வாழ்க்கையில் இழிவையும், கேவலத்தை யும், தோல்விகளையும் தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள். எனவே முஸ்லிம்களின் கோபப் பார்வை தங்கள் மீது திரும்பி விடா திருக்கத் தந்திரமாக, அவர்களுக்கு இன உணர்வைத் தூண்டி ஜிஹாதின் பெயரால் தற்கொலைப் படைகள், கொரில்லாத் தாக்குதல்கள், வன்முறைச் செயல்கள், தற் காப்பு முயற்சி என்ற பெயரால் தவறான செயல்பாடுகள். எதிரி நாட்டு மக்களுடன் வியாபார கொடுக்கல் வாங்கல் கூடாது என்ற முட்டள்தனமான ஃபத்வாக்கள் என மனித நேயத்தைக் கொன்றொழித்து மாற்று மதத்தினருடன், மற்ற நாட்டினருடன் விரோத குரோதத்தை மேலும் மேலும் வளரச் செய்கின்றனர். பொதுவாக மனித இனம் அவசரக்காரனாகவும் (17:11, 21:37, 70:19) கர்வமுடையவனாகவும் (96:6) உலக இன்பங்களில் மூழ்கிறவனாகவும் (76:27, 87:16) பலகீனமானவனாகவும் (4:28) தன் இழிவான செயல்கள் மூலம் இழிவிலும் இழிவானவனாகவும் (95:5) அநியாயக்கார னாகவும், அறியாமை நிறைந்தவனாகவும் (33:72) படைக்கப்பட்டிருப்பதை இந்தப் புரோகித மவ்லவி வர்க்கம் தங்களுக்கு சாத கமாகப் பயன்படுத்தி, அவனை அழிவுப் பாதையில், நரகை நோக்கி இட்டுச் செல்கி றார்கள். மனித இனமும் இந்தப் புரோகித பண்டாரங்கள் பின்னால் கண்மூடிச் செல்பவர்களாகவே இருக்கிறார்கள்.
இந்த நிலையில் முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் திருப்தியும், பொருத்தமும், உதவியும், பாதுகாப்பும் எப்படிக் கிடைக் கும்? எப்படி மனித இனத்திற்கு வழிகாட்டி களாகவும், முன்னோடிகளாகவும், உயர்ந் தவர்களாகவும் ஆகமுடியும்? இழிவும், கேவலமும், துன்பங்களும் தான் தொடரும்.
இந்த நிலையில் முஸ்லிம்கள் தங்களின் இழிநிலையை அல்லாஹ்வை மறந்த போக்கை, ஆளுக்கொரு இயக்கம், நாளுக் கொரு கொள்கை என்று பல்வேறு பிரிவினர் களாக பிரிந்து கிடக்கும். அதனால் கோழை களாகி தைரியமிழந்து இருக்கும் நிலையை மாற்றி, முஸ்லிம்கள் அல்லாஹ்வின் கட்ட ளைப்படி ஓரணியில் ஒரே தலைமையில் ஒரே உம்மத்தாக ஒன்றுபட பாடுபட வேண்டிய அறிவுஜீவிகளும் இந்தப் புரோகித மவ்லவிகளுக்கு அடிமைப்பட்டு அவர்களின் வழிகேட்டு உபதேசங்களையே வேதவாக்காகக் கொண்டு செயல்படுகின் றனர்.
முஸ்லிம்களிடையே காணப்படும் குற்றம் குறைகளை, பிளவுகளை, பிரிவு களை அப்படியே மூடி மறைத்துவிட்டு, பூசி முழுகிவிட்டு, மாற்று மதத்தினரின், மாற்று நாட்டினரின் அடாத அட்டூழிய செயல்களை விலாவாரியாக படங்களுடன் விவ ரிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். முஸ்லிம்களும் நாம் முன்னர் விவரித்துள்ள பலகீனங்கள் அனைத்திற்கும் உள்ளானவர் களாக இருப்பதால், இன உணர்வுக்கு– வெறிக்கு ஆளாகி அப்படிப்பட்ட செய்திகளைத் தாங்கி வரும் இதழ்களையே விரும்பி வாங்கி, விழுந்து விழுந்து படித்து, அதன் மூலம் மேலும் மேலும் இனவெறியை வளர்த்துக் கொள்கின்றனர். மார்க்க முரணான, தற்கொலைப்படை, கொரில்லா தாக்குதல், வன்முறைச் செயல்கள், தீவிரவாதம், கட்டிடங்களுக்கு, வாகனங்களுக்குக் குண்டு வைத்தல், சம்பந்தமில்லாத அப்பாவி மக்களுக்கு துன் பத்தைக் கொடுக்கும் சாலை மறியல், பந்த், வெற்றுக் கோசங்கள் (பார்க்க 29:29,31:19) இவற்றை மேற்கொள்கிறார்கள்.
இவை மூலம் சில்லரை விவகாரங்கள் வெற்றிகரமாக முடிவது போல் ஷைத்தான் காட்டினாலும், அவற்றால் பேரழிவுகளே ஏற்படுகின்றன. கோவில்களிலும், சர்ச்சுகளி லும், தர்க்காக்களிலும் கூட நல்லவை நடப்பது போல் ஷைத்தான் காட்டத்தான் செய்கிறான். அப்படிக் காட்டி அவர்களைப் பேரழிவில் மூழ்கச் செய்கிறான்.
“எய்தவன் இருக்க அம்பை நோவானேன்‘ என்று சொல்வது போல், முஸ்லிம்கள் உண்மையான முஸ்லிம்களாக இல்லாத தால், அவர்கள் கரங்கள் தேடிக்கொண்ட வற்றின் கேடுகளை அனுபவிக்கும் நிலையில் மற்றவர்கள் மீது பாய்வதில் என்ன லாபம் கிடைக்கப் போகிறது. (பார்க்க : 2:95, 3:182, 4:62, 8:51, 28:47, 30:41, 42:30,48, 30:36, 62:07)
மேலும் மேலும் இழிவையும் கேவலத்தையுமே முஸ்லிம்கள் சந்திக்க நேரிடும். காரணம் இவர்கள் மாற்று மதத்தினரையோ, மாற்று நாட்டினரையோ எதிர்க்கவில்லை. அல்லாஹ்வை எதிர்க்கிறார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும். அல்லாஹ்வை எதிர்த்து இவர்கள் வெற்றி பெற முடியுமா? முஸ்லிம்கள் தங்களின் இந்த இழிநிலையை குர்ஆன், ஹதீத் நேரடிப் போதனைகளைப் புறக்கணித்துவிட்டு, புரோகித மவ்லவிகளான அறிவீனர்களின் பின்னால் கண்மூடிச் செல்லும் இழிநிலையை மாற்றிக் கொண்டு, 3:103ல் அல்லாஹ் கட்டளையிடுவது போல் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு அல்லாஹ் வின் கயிறான அல்குர்ஆனை பற்றிப் பிடித்து அதன்படி செயல்படாதவரை, அல்லாஹ் முஸ்லிம்களின் இந்த இழிநிலையை மாற்றப் போவதில்லை.
அல்குர்ஆன் 13:11ல்
… எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சய மாக மாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடி னால், அதைத் தடுப்பவர் ஒருவருமில்லை. அவர்களுக்கு அவனைத் தவிர துணை செய் வோர் எவரும் இல்லை.
(அல்குர்ஆன் 13:11)
அல்லாஹ்வின் இந்த மிகக் கடுமையான எச்சரிக்கையை உணர்ந்து முஸ்லிம்கள் உடனடியாக புரோகித மவ்லவிகள் பின்னால் செல்வதைக் கைவிட்டு, அல்குர்ஆனைப் பற்றிப் பிடிக்க முன்வர வேண்டும். முஸ்லிம் சமுதாயத்தின் உயர்வுக்கு இது அல்லாத வேறுவழி இல்லவே இல்லை.
**********************
இது மனித குலத்துக்குச் சென்றடைய வேண்டிய செய்தி ஆகும்!
S.H. அப்துர் ரஹ்மான்
உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டா கட்டும்!
(படைத்த) அந்த ஒரே இறைவன் பெயரால்…
அநியாயக்காரர்கள் செய்து கொண்டிருப்பவற்றை அந்த இறைவன் கவனிக்காதவன் என்று எண்ணிவிடாதீர்! பார்வைகள் நிலைகுத்தி நிற்கும் ஒரு நாளுக்காகவே அவர்களை அந்த இறைவன் தாமதப்படுத்தியிருக்கிறான்.(அந்நாளில்) தமது தலைகளை உயர்த்தியோ ராக தறிகெட்டு ஓடுவார்கள். (நிலை குத்திய) அவர்களின் பார்வை பழைய நிலைக்குத் திரும்பாது. அவர்களின் உள்ளங்களும் செயலற்று விடும்.
மனிதர்களை வேதனைப்படுத்தும் நாளைப் பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! (அந்நாளில்) “எங்கள் இறைவா! குறைந்த காலம் எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக! உனது அழைப்பை ஏற்றுக் கொள்கிறோம். தூதர்களைப் பின் பற்றுகிறோம்‘ என்று அநீதி இழைத் தோர் கூறுவார்கள். எங்களுக்கு அழிவே இல்லை என்று இதற்கு முன் நீங்கள் சத்தியம் செய்து கூறிக் கொண்டிருக்கவில்லையா?
தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டோரின் குடியிருப்புகளில் நீங்களும் குடியிருந்தீர் கள். அவர்களை எவ்வாறு நடத்தினோம் என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. பல (முன்) உதாரணங்களையும் உங்களுக்கு எடுத்துக் கூறினோம்.
அவர்கள் கடும் சூழ்ச்சி செய்தனர். அவர்களின் சூழ்ச்சி மலைகளைப் புரட்டுவதாக இருந்தபோதும் அந்த சூழ்ச்சி (வெல்வது) அந்த இறைவனிடமே உள்ளது. தனது தூதர்களுக்கு அளித்த வாக்குறுதியை அந்த இறைவன் மீறுபவன் என்று நீர் எண்ணாதீர்! அந்த இறைவன் மிகைத்தவன்; தண்டிப்பவன். அந்நாளில் பூமி வேறு பூமியாகவும், வேறு வானங்களாகவும் மாற்றப்படும். ஏகனாகிய அடக்கியாளும் அந்த இறைவனிடம் திரளுவார்கள்.
அந்நாளில் குற்றவாளிகள் சங்கிலிகளால் பிணைத்துக் கட்டப்பட்டிருப்பதை நீர் காண்பீர்.
அவர்களின் சட்டைகள் தாரினால் தயாரிக்கப்பட்டவை. அவர்களின் முகங்களை நெருப்பு மூடிக் கொள்ளும். ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்பட்ட தற்கேற்ப அந்த இறைவன் கூலி கொடுப்பான். அந்த இறைவன் விரைவாக விசாரிப்பவன்.
இது மனித குலத்துக்குச் சென்றடைய வேண்டியது ஆகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படவும், அடிபணிவதற்குரியவன் ஒரே ஒருவனே இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்துகொள்வதற்காகவும், அறிவுடையோர் சிந்திப்பதற்காகவும் தான். இறைநூல்:14:42-52