நமது மார்க்கம் இஸ்லாம்! நாம் முஸ்லிம்கள்!
இஸ்லாத்தில் தூய்மை! இஸ்லாத்தின் தூய்மை!
முஹிப்புல் இஸ்லாம்
மறுபதிப்பு :
அல்லாஹ், அல்லாஹ்வின் மார்க்கம் :
படைப்பினங்களின் வாழ்வை நெறிப்படுத்தும் அல்லாஹ் அருளிய வாழ்வியல் வழிகாட்டல்தான் இஸ்லாம். மற்ற படைப் பினங்கள் இஸ்லாத்தை வாழ்விலேற்று ஒழுகும் இயல்பிலேயே படைக்கப்பட்டுள் ளன. காண்க: அல்குர்ஆன் 4:38, 3:83 அல்லாஹ் மஹா பரிசுத்தமானவன்: காண்க : அல்குர்ஆன் 12:108, 16:1 அவன் அருளிய மார்க்கமும் பரிசுத்தமானதே!
அல்லாஹ்வின் அடிமைகளாகிய படைப்பினங்கள் அல்லாஹ்வின் பரிசுத்தத் தன்மையால் அல்லாஹ்வை ஒருமைப் படுத்தக் கடமைப்பட்டுள்ளன. அதற்காக அல்லாஹ் அருளிய நேரிய நெறி வழிகாட்டல் இஸ்லாம்.
அல்லாஹ் பரிசுத்தமானவன், தூயவன், அல்லாஹ்வின் ஒருமை தூய்மை யானது: காண்க : அல்குர்ஆன் 112:1-4
அல்லாஹ்வின் ஒருமை தூய்மையானது: அல்லாஹ்வின் ஒருமையை வாழ்வியல் நெறியாக்கி வாழ்வு முழுவதும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்தும் வாழ்வியல் அறநெறி இஸ்லாம் தூய்மையானது. காண்க : அல்குர்ஆன் 10:22
- அல்லாஹ் தூயவன்
- அல்லாஹ்வின் ஒருமையும் தூய்மை யானது.
- அல்லாஹ் அருளிய மார்க்கம் இஸ்லாம் தூய்மையானது.
ஏன்? அல்லாஹ்வின் ஒருமையை வாழ்வியல் நெறியாகக் கொண்டுள்ளது.
மனித அறிவுக்கும் கற்பனைக்கும் எட் டாத விதமான எல்லா கோணங்களிலும் மானுடத்துக்கு அல்லாஹ் தூய்மையைப் படம் பிடித்துக் காட்டுகிறான். தூய்மையின் விரிவான விரிவுரையாக அல்குர்ஆன் திகழ்கிறது.
தூய்மையின் கோணங்கள் இம் மட்டோ? இதற்கு மேலும் உண்டா? வியப் பில் ஆழ்த்துகிறது. தூய்மைக் காத்த அல்லாஹ் மானுடத்தின் மீது விதியாக்கியுள்ளான்.
முக்கியத்துவம் : தூய்மை, தூய்மை… தூய்மை…. எங்கும் தூய்மை, எதிலும் தூய்மை, இஸ்லாம் தூய்மைக்குக் கொடுத்துள்ள முக்கியத்துவத்தை வேறு எவரும், எதுவும் கொடுக்கவில்லை.
இஸ்லாம் புறத் தூய்மைக்குக் கொடுத்துள்ள முக்கியத்துவம் குறிப்பாக மருத்துவ அறிவியல் உலகை அதிசயத்தில் ஆழ்த்திவருகிறது.
புறத் தூய்மை அதிசயவைக்கிறதென்றால், இஸ்லாம் காட்டும் அகத் தூய்மை அதிசயங்களுக்கெல்லாம் அதிசயமாய் அதிசயிக்க வைக்கிறது. முழு மனித வாழ்விலும் அல்லாஹ்வுக்கு அகத்தாலும், புறத்தாலும் அஞ்சுவதன் வழி அகத்தை தூயதாக்கிக் கொள்ளும் வழிகாட்டல்தான் தக்வா?
காண்க : அல்குர்ஆன் 21:49,36:11,67:12
சுத்தம் பற்றிக் கவலையில்லாத அசுத்தவாதி யார்? ஈமானில் பாதியை விழுங்கியவன். அவன் ஈமான் முழுமையானதல்ல, அறைகுறையானதே! “சுத்தம் ஈமானில் பாதி‘ என்று சுத்தத்தைக் கண்ணுங் கருத்துமாய்க் காக்கப் பணிந்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் இந்த நிலை, அந்த நிலை என்றில்லாமல் எல்லா நிலைகளிலும் சுத்தம் கருதி சுத்தமாய்ப் பேணப்பட வேண்டும். இது இஸ்லாத்தின் உன்னத மரபு.
- உடல் சுத்தம்
- உடை சுத்தம்
- இருப்பிடச் சுத்தம்….
தொடர்ந்து சுற்றுப்புறச் சூழல் மாசு படுவதைத் தடுப்பதும் இஸ்லாம் மட்டுமே! இவை புறச் சுத்தம்.
புறச் சுத்தமே அகத் தூய்மையின் அடித்தளம். புறச் சுத்தம் அகத்தைத் தூய்மைப்படுத்த அடிகோல்கிறது. புறச் சுத்தம் அடுத்தவருக்குப் பளிச்சென்று வெளிச்சமாகி விடும். ஆனால் அகத் தூய்மை அப்படியல்ல. அல்லாஹ்வும், சம்மந்தப்பட்டவர்களும் அறிந்த பரம இரகசியம்.
புறச் சுத்தத்தின் பலன் உடன் இம்மையில் கை மேல் கிடைத்துவிடும். அகத்தைத் தூயதாய் வைத்துக் கொண்ட முத்தகீன், தக்வாதாரர்களுக்கு மறுமையில் அல்லாஹ் மகத்தான நற்பலனை வாரி வாரி வழங்குவதாய் வாக்களித்துள்ளான்.
“தக்வா‘ அல்லாஹ்வை அஞ்சி ஆதரவு வைத்தல் :
உள்ள அசுத்தங்களை “தக்வா‘ அல்லாஹ்வை அஞ்சி ஆதரவு வைப்பதால் மட்டுமே களைந்தெறிய முடியும். அதற்கான அல்லாஹ்வின் வழிகாட்டுதல்தான் இஸ்லாம்.
புறச் சுத்தத்திற்காக காட்டப்படும் ஆர்வம், அக்கறை மலை அளவு என்றால் அதில் கடுகளவாவது அகச் சுத்தத்திற்குக் காட்டப்படுகிறதா? இல்லை என்பதே வேதனையாக விரிகிறது. அல்லாஹ்வை அஞ்சுவதில் காட்டப்படும் அலட்சியம் அகத்தை மட்டுமின்றி வாழ்வை மாசு படியச் செய்து விடுகிறது. உஷார், உஷார், உஷார்…!
அல்லாஹ்வின் அச்சமே உள்ளத்தில் அல்லாஹ்வின் நினைவை நிரந்தரமாய்க் குடியேற்றும். அல்லாஹ்வை அஞ்சுவதால் உள்ளத்தில் படியும் மாசுகளைத் துடைத்தெறித்துக் கொண்டேயிருப்பவர் தான் இம்மை மறுமையில் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பரிசாகப் பெறப்போகும், தக்வா தாரி, முத்தக்கீன்.
எண்ணங்களில் படியும் களையப்படாத மாசுகளே எண்ணங்களைக் களங்கப்படுத்தும் கலப்படம்.
புற அசுத்தங்களால் புறம் கலப்படமாகி தூய்மை இழந்திடலாகாது. அகத்தில் படியும் மாசுகளால் அகம் தூய்மை இழந்திட லாகாது. புறமும், அகமும் தூய்மைப்படுத்த வழிகாட்டும் வாழ்வியல் நெறி– இஸ்லாம் மட்டுமே!
அதிசயப் பல்கலைக் கழகம் :
தூய்மைகளின் அனைத்துத் துறைகளையும் தன்னகத்தே கொண்ட அதிசயப் பல்கலைக் கழகம் இஸ்லாம்! எல்லாத் தூய்மைகளுக்கும் மேலாய் அல்லாஹ் அருளிய வாழும் வாழ்வியல் நெறி இஸ்லாம் அன்றும் இன்றும் இனி என்றென்றும் தூயதாய் இருப்பது வியப்பையே வியப்பில் ஆழ்த்தி விடுகிறது.
அனைத்தை விட்டு உயர்ந்தும், அனைத்தை விட்டுத் தனித்தும், படைப்புக்கள் அனைத்தின் குறைகளிலிருந்து முற்றிலும் நீக்கம் பெற்ற நிறைகளின் ஒரே உரிமையாளன், தூயவன், அனைத்தும் அறிந்தோன் வல்லவன் அல்லாஹ். இஸ்லாத்தைத் தூய்மையாய் அருளியுள்ளான். மட்டுமின்றி இஸ் லாத்தின் தூய்மை கெடாமல் பாதுகாத்தும் வருகிறான் அல்ஹம்துலில்லாஹ்.
கோட்பாடு – செயல்பாடு :
அல்லாஹ் தூயவன் என்று அல்லாஹ்வின் தூய்மையை ஒருமைப்படுத்துதல், அல்லாஹ்வின் ஒருமையை ஏற்றோரின் கடமை! அதுபோல் அல்லாஹ்வின் ஒருமையைக் கோட்பாடாகக் கொண்ட அல்லாஹ் அரு ளிய இஸ்லாமிய மார்க்கம் தூய்மையானது என்று அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதும் கட்டாயக் கடமையாகும்.
இஸ்லாம் எப்படி நபிமார்களுக்கு அருளப்பட்டதோ, அது மார்க்கக் கோட்பாட்டின் தூய்மை. அதற்கு அல்லாஹ்வின் மேற்பார்வையில் நபிமார்கள் கடைபிடித்த வாழ்வியல் வடிவம், செயல்பாட்டுத் தூய்மை, கோட்பாடு, செயல்பாடுகளில் இஸ்லாத்தின் தூய்மை கெடாமல் வாழ்வியலாக்குவது இஸ்லாத்தின் தூய்மைக் காத்தல்.
எல்லாக் காலங்களிலும் இஸ்லாத்தைத் தூய வடிவில் வாழ்வியலாக்கியவர்கள் இஸ்லாத்தின் தூய்மைக் காத்த உத்தமர்கள், அவர்களில் முன்னணி வகிப்பவர்கள் நபிமார்கள், நபிமார்களைப் பின்தொடர்ந்து மற்றவர்களும் எல்லாக் காலங்களிலும் எண்ணிக்கையில் குறைவானவர்களே! இன் றைய நம் காலத்திலும் இதை நாம் நிதர்சனமாய்த் தரிசிக்க முடிகிறது. விளைவு, இஸ்லாத்தின் தூய்மைப் பற்றி அக்கறை உள்ளோர் எங்கே என்று தேட வேண்டியுள்ளது?
இஸ்லாத்தை ஏற்றதோடு ஏற்றோர் பொறுப்பு முடிந்து விடுவதில்லை. இஸ்லாத்தைத் தூய்மையாய் வைத்திருத்தல், இஸ்லாத்தின் தூய்மைக் காத்தல் ஏற்றோர் மீது அல்லாஹ் விதியாக்கியுள்ள கடமை! ஆனால் இப்படியயாரு கடமை இருப்பதை அறியாத அறிவிலிகளாய் ஏற்றோர் மிகப் பெரும்பாலோர் துச்சமாய் அலட்சியப்படுத்தி வருகிறார்கள். அந்தோ பரிதாபம்!
அசுத்தத்தால் அசிங்கம் :
இத்தகையோர் அவர்களை அவர்களாய் அசுத்தப்படுத்திக் கொண்டு அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அற்ப உலக சுகங்களுக்காக இஸ்லாத்தின் மீது சேற்றை வாரி இறைப்போரும் இவர்களே. குளிக்கச் சென்று சாக்கடையை அப்பிக் கொண்டு வந்தக் கேடு கெட்டவர்களும் இவர்களே!
நரகின் அடித்தட்டில் போடப்படும் இழிந்தவர்கள் தான் இந்த “முனாஃபிக்‘ நயவஞ்சகர்கள் என்று 4:145ல் அல்லாஹ் இவர்களைக் கடுமையாக எச்சரித்துள்ளான். கலப்படம் செய்து மார்க்கத்தின் தூய்மை கெடச்செய்யும் இந்த கொடிய முனாஃபிகளையும் அல்லாஹ் மன்னிக்கக் காத்திருக்கிறான். எப்போது? எப்படி?
எவர்கள் (தங்களது நயவஞ்சகத் தனத்திற்காக) வருந்தி (அதிலிருந்து) மீண்டு கொண்டும் (மார்க்கக் கலப்படம் செய்வதிலிருந்து விடுபட்டு தங்களை) ஒழுங்கு செய்து கொண்டும் அல்லாஹ்வி(ன் கட்டளையி)னைப் பற்றிப் பிடித்தும், தங்களுடைய மார்க்கத்தை அல்லாஹ்விற்காக தூய்மையாக்கியும் கொள்கிறார்களோ அவர்களைத் தவிர,
எனவே இத்தகையோர் உண்மையான ஈமான் கொண்டவர்களுடன் (சுவனத்தில்) இருப்பர்.
இத்தகைய ஈமான் உள்ளோர்க்கு விரைவில் அல்லாஹ் மகத்தான(நற்கூலி) வழங்குவான். அல்குர்ஆன் 4:146
மார்க்கத்தின் தூய்மைக் காத்தல், மார்க்கத்தோடு கலப்படமாகியுள்ள கலப்படம் களைதல் உண்மை ஈமானின் அடையாளம்… மாறாக மார்க்கத்தில் கலப்படம் செய்து மார்க்கத்தை வியாபாரமாக்குவோர் பச்சை முனாஃபிக்குகள், இம்மையில் பொருள், புகழ் ஏன்? வேண்டியதெல்லாம் ஈட்டிக் கொள்ளலாம். இம்மையில் ஈமானைப் பறிகொடுத்து மறுமையில் நரகின் அடித்தட்டில் போடப்படும் கேடுகெட்டவர்கள். இப்படிப்பட்ட இழிந்தவர்களையே மக்கள் அறிஞர்களாய்க் கொண்டாடி வருகிறார்கள். எத்தனை முறை எடுத்துக் காட்டியும் இவர்கள் மீது (அபூ அப்தில்லாஹ்க்கள், ஹலரத் அலிகள்) அடக்க முடியாத சீற்றத்தோடு சீறிப்பாய்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
கலப்பட வியாபாரிகள் :
உண்மை மார்க்கம் அறிய விழையும் சாதாரண சாமான்யர்கள், உண்மை அறியாத நிலையில் கலப்படங்கள் இனங்காட்டும் போது மிரள்கிறார்கள், ஏற்க மறுக்கிறார்கள், இனங்காட்டியவர் களைத் திட்டித் தீர்த்து விடுகிறார்கள். நிலை குலைந்து செய்வதறியாது அல்லாடுகிறார்கள்.
சற்று தாமதமாயினும் பதட்டம் நீங்கி நின்று நிதானித்துக் கொஞ்சம் கொஞ்சமாய் உண்மையைத் தரிசிக்கத் தயாராகிவிடுகிறார்கள். இவர்களின் மனம் மாறி அல்லாஹ்வுக்காக திருந்தி, அல்லாஹ்விற்காக மார்க்கத்தின் தூய்மைக் காக்க உறுதியோடு இருப்பவர்கள் விரல் விடும் அளவினரே!
உண்மை உணர முன்வரும் மற்ற சிலரை யும் கலப்படக்காரர்கள் தடுத்து விடுகிறார்கள். அபூ அப்தில்லாஹ்க்கள், ஹலரத் அலிகள் கொதிக்கின்ற எண்ணையில் குதிக்கின்ற பனியாரமாகி விடுகிறார்கள். மார்க்கக் கலப்படம் செய்து வியாபாரத்தை வெற்றிகரமாய் நடத்தி வருவோர் அறிஞர் களாய் மக்களால் மதிக்கப்படுவதால், அவர்களை மார்க்கக் கலப்படக்கார முனாஃபிக்களாய் இனங்கான மக்களால் முடியவில்லை. இனங்காட்டுவதும் கல்லில் நார் உரிப்பது காட்டிலும் கடினமானதே!
அரிதிலும் முயன்று சாதாரண சாமான்யர் எவராவது, எங்காவது, எப்படியாவது அதை அறிந்து கொண்டால், உலக ஆசைக் காட்டி கலப்படக்காரர்கள் அவர்களையும் வலையில் சிக்க வைத்து விடுகிறார்கள். போகப் போக அந்த சாதாரண சாமான்ய ரும் கலப்படக்காரர்களுடன் இணைந்து கலப்பட வியாபாரத்தை வெற்றிகரமாய்ச் செய்து வருகிறார்கள்.
கலப்படமா மார்க்கம் ?
அல்லாஹ்வின் மார்க்கத்தில் செய்யப்படும் கலப்படம் மார்க்கத் தூய்மையைக் கெடச் செய்வதோடு பல வேண்டாத விபரீதங்களை விளைவித்து வருகிறது. ஏற்றோரும் இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள். கலப்படம் செய்யும் அறிஞர்கள், அவர்களோடு அவர்களுக்கு உறுதுணையாகும் சாதாரண சாமான்யர்களும் அடையும் உலக ஆதாயம் ஹராம்.
லெளகீக வாழ்வில் கடின உழைப்பால் நேர்வழியில் ஈட்டப்படும் தூய பொருளால் பெறப்படும் வளத்தால் துய்க்கும் இன்பமே ஹலால், போதிக்க எளிமையானது. ஆலிம் ஸாக்களே! மவ்லானாக்களே! மவ்லவி களே! அதனால் தான் அதை மற்றவர்களுக் குப் போதிப்பதோடு நிறுத்திவிட்டீர்களா? நீங்கள் மட்டும் ஹலாலாய்ப் பொருளீட்டுவதைப் புறந்தள்ளி விட்டீர்களா?
ஹராமைச் சாப்பிடுவது அசுத்தம்… ஹராமை அனுபவிப்பதும் அசுத்தம்… உண்பதும் அசுத்தம், உடுத்துவதும் அசுத்தம், அசுத்தம் அனுபவிப்பதும் சர்வசாதாரண ஹலாலாக உங்கள் வழக்கத்துக்கு வந்துவிட்டது. அதனால் மார்க்கத்தை அசுத்தப்படுத்தும் கலப்படங்களைத் துணிந்து மார்க்கமாய் அரங்கேற்றி அப்பாவி மக்களை மட்டுமல்ல; அறிவு ஜீவிகளையும் ஏமாற்றி வருவது மிக சுலபமாய் கைவந்து விட்டது.
விளைவு, ஏற்றோர் கூட இஸ்லாத்தின் தூய வடிவை அறியும் வாய்ப்பு முற்றாகத் தடுக்கப்பட்டுவிட்டதே! இது எந்த வகையில் நியாயம்? மார்க்கம் எல்லாக் காலங்களிலும் எல்லா மக்களிடமும் அதன் தூய வடிவில் சேர்ந்துள்ளது. எந்த அளவிற்கெனில், இறை நிராகரிப்பாளர், இறை விரோதி, இறை மறுப்பாளர், இறைக்கிணையாக்கு வோர்… அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்துள்ளது. அவர்கள் ஒருசிலரின் ஒப்புதல் வாக்குமூலங்கள் இதை மெய்ப்பிக் கும் உறுதிமிக்க சான்று. அதன் அசைக்க முடியாத அத்தாட்சிதான் அல்குர்ஆன் காட்டும் நபிமார்கள் வாழ்வின் வரலாற்றுப் பிழிவு. எல்லா நிலைகளிலும், எல்லாக் கால மக்கள் வாழ்வுக்குப் பாடமும், படிப்பினையும் குவியல் குவியலாய் குவிக்கப்பட்டுள்ளன. ஏற்றோரே! தேவைப்படுவதைத் தேவைக்கேற்ப அள்ளி எடுத்துக்கொள்க.
அள்ளிக் கொள்க :
அந்த அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரத்திலிருந்து அள்ளிக்கொள்ள வேண்டியது யாதெனில்,
- இஸ்லாத்தைத் தூய வடிவில் அறிதல்
- இஸ்லாத்தைத் தூய வடிவில் நிலைநாட்டுதல்.
- இஸ்லாத்தை தூய வடிவில் வாழ்வில் பிரதிபலித்தல்.
முயற்சி செய்க, கடினமாக உழைத்திடுக. அல்லாஹ் வெற்றி அருள்வானாக. மனமுருகி அல்லாஹ்விடம் இறைஞ்சுக. (இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம், சீர்பெறுவோம்)