இறைவனிடம் கையேந்த வேண்டுமா?
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
இறைவனும், இறைத்தூதரும் சொல் லியபடி செய்ததுபடி இறைவனிடம் மட் டுமே கேட்கவேண்டும். இடைதரகர்கள் மூலமோ, இறந்தவர்கள் மூலமோ கேட்பதற்கு இடமில்லை என்பதை ஆணித் தரமாக சொல்லி வந்த பல இஸ்லாமிய பத்திரிக்கைகளில் ‘அந்நஜாத்‘தும் ஒன்று என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
அவ்வாறு இருக்க “இறைவனிடம் கையேந்த வேண்டுமா‘ என்ற தலைப்பு “அந்நஜாத்‘தில் இடம் பெற்றிருப்பது மிக வும் ஆச்சரியமான ஒன்றாக இருக்கலாம். இறைவனிடம் மட்டுமே கேட்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் “அந்நஜாத்‘திற்கு இருந்தது இல்லை. ஆனால் கையேந்திதான் கேட்க வேண்டுமா? என்ப தில் ஏற்பட்ட கேள்வியின் விளைவாக உருவானதே இக்கட்டுரை.
மனிதன் என்பவன் இறைவனின் அடிமை. எனவே அடிமை எஜமானாகிய இறைவனிடம் மட்டுமே தன் தேவைகளை கேட்கவேண்டும். இறைவனும் அதைதான் விரும்புகிறான்.
இறுதிநூலான இறைநூலில் (குர்ஆனில்) சுமார் 70க்கும் மேற்பட்ட துஆக்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் மிகவும் முக்கிய மானதும் அல்லாஹ்வே கற்றுக் கொடுத்தது. “அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமின்‘ என்று குர்ஆனில் துவக்கமாக இடம்பெற்றுள்ள முதல் அத்தியாயத்தின் 2வது சரி ஆகும். இதை மூன்று நேர தொழுகையில் சத்தமாகவும், இரண்டு நேர தொழுகையில் சத்தம் குறைவாகவும் கேட்கிறோம்.
(இந்த அத்தியாயத்தை ஒரு மிக முக்கியமான வேண்டுதலின் வடிவத்தில் அடியான் தன்னிடம் கேட்க வேண்டும் என்பதை இறைவன் கற்றுக் கொடுத்துள் ளான்)
இறைநூலில் இடம் பெற்றுள்ள சுமார் 70 துஆக்களில் சில நபிமார்கள் கேட்டதும் இடம் பெற்றுள்ளது. சில பொதுவான துஆக்களும் இடம் பெற்றுள்ளது. அவ்வாறு இருக்க தன்னிடம் எவ்வாறு துஆ கேட்க வேண்டும் என்று இறைவன் கூறியிருக் கின்றான்.
“உங்கள் அதிபதியிடம் பணிந்தும், மெதுவாகவும் நீங்கள் கேளுங்கள்! நிச்சயமாக அவன் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை.
மேலும் பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பிறகு அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள். அச்சத்துடனும் ஆவலுடனும் என்னை அழையுங்கள்! நிச்சயமாக இறைவனின் அருள் நன்னடத்தையன மக்களுக்கு மிக அருகில் இருக்கிறது. அல்குர்ஆன்7:55,56
மேற்கண்ட முதல் வசனத்தை “பணி வாகவும், மறைமுகமாகவும் நீங்கள் கேளுங்கள்‘ என்றும் பொருள் கொள்ளலாம்.
அதாவது வெளிப்படையான பிரார்த் தனையை (துஆவை) பணிவு இல்லாமலும், யாரிடம் கேட்கிறோம் என்ற உணர்வு இல்லாமலும் பெரும்பாலான முஸ்லிம்கள் சடங்காக செய்கின்றனர்.
உதாரணமாக :கூட்டு துஆ:
அடுத்து மறைமுகமான (இரகசியமான) பிரார்த்தனையில் பணிவை இறைவன் நிபந்தனையாக ஆக்கவில்லை. ஏனென்றால் மறைமுகமான பிரார்த்தனை (துஆச்) செய்பவர் பணிவாகவே செய்வார்.
அதாவது ஒவ்வொருவருக்கும் தனித்தனித் தேவைகள் உள்ளன. அவரவர்கள் தத்தமது தேவைகளை தனது தாய்மொழியில் உள் அச்சத்துடன் கேட்க வேண்டும் என்பது மிக முக்கியமாகும்.
ஒருவருக்கு “ஸலாம்‘ சொல்வது முதல் அவருக்காக “ஜனஸா‘ (இறுதி) தொழுவது வரை எல்லாமே துஆதான். அது மட்டுமல்ல காலை எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை பல துஆக்கள் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள் ளது. எல்லா சந்தர்ப்பங்களிலும் நாம் கையேந்தி துஆ கேட்பதில்லை.
அதுவே “பர்ளான‘(கடமையான) தொழுகை முடித்து விட்டு கையேந்தி துஆ கேட்கிறோம். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் செய்தார்களா என்பது தெரிந்து கொள்வது அவசியம்.
மழை வேண்டி துஆ செய்யுங்கள் என்று நபி தோழர் கூறியபொழுதும், வேறு சில நபிதோழர்கள் தனிப்பட்ட காரணத் திற்காக துஆ செய்யுங்கள் என்று நபி(ஸல்) அவர்களிடம் சொன்னபோது தனது இரு கைகளின் அக்குளின் வெண்மை தெரிவது வரை கைகளை உயர்த்தி துஆ செய்ததாக ஹதீதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹதீத் எண்: புகாரி: 1014 மற்றும் துஆச் சம்பந்தமாக இடம்பெற்ற ஹதீத்கள். 4722, 4723, 6327, 7525, 7526, 7527, முஸ்லிம்: 5195
மேற்கண்ட ஹதீத்களில் இருந்து நமக்கு தெரிய வருவது என்னவென்றால் பர்ளான தொழுகை முடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் தனியாக கையேந்தி துஆ கேட்டதாக ஹதீதில் எதுவும் இல்லை.
இப்போது நம்மிடையே உள்ள கேள்வி: பர்ளான, சுன்னத்தான தொழுகைக்கு பிறகு கையேந்தி தான் கேட்க வேண்டுமா? அல்லது கையேந்தி கேட்டால் தவறா? என்பதாகும்.
இக்கட்டுரையின் வாயிலாக “அந்நஜாத்‘ வாசகர்களுக்கு அன்பு வேண்டுகோள்.
நபி(ஸல்) அவர்கள் எந்த சந்தர்ப்பத்திலாவது பர்ளான/நஃபிலான தொழு கையை முடித்தவுடன் இரு கரம் ஏந்தி துஆ செய்துள்ளார்கள் என்று ஹதீதில் இடம் பெற்று இருக்குமேயானால் அறிய தாருங்கள். (ஹதீத் நூலின் பெயர் மற்றும் எண்களுடன்) அதை பரிசீலனை செய்து அடுத்த மாத இதழில் இன்ஷா அல்லாஹ்! பிரசுரிப்போம்!