நமது சமுதாயம் ஒரே சமுதாயமாக விரும்பும் மாற்றுமத சகோதரர்!
அஹமது இப்ராஹீம்
சிவகுமார் என்ற சகோதரர் பல இயக்கங்களாகவும், மத்ஹபுகளாகவும் தரீக்காக் களாகவும் சிதறிக் கிடக்கும் நமது சமுதாயம் ஒரே சமுதாயமாக அதாவது முஸ்லிம் ஜமாஅத் என்று ஒன்றுபடவேண்டும் என்று உண்மையாக ஆசைப்படுகிறார். அவருக்காகவும் நமது இஸ்லாமிய சமுதாயத்திற்காகவும் இந்தப் பதிவு.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கட்டளையான அல்குர்ஆன் 23:52/8:46 வசனத்திற்கே முஸ்லிம் சமுதாயம் கட்டுப்படவில்லை. சுப்ரமணியசாமி என்ற சங்கி இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு சம உரிமை கொடுக்க முடியாது என்று திமிராக சொன்னார். எமது முஸ்லிம் சமுதாயத்தின்பால் தாங்கள் கொண்டிருக்கின்ற அன்பின் காரணமாக உரிமையோடு இந்திய அளவில் மட்டுமல்ல உலகளாவிய அளவில் நீங்கள் ஒற்றுமையாக ஒரே ஜமாஅத்தாக ஆகி விடுங்கள் என எடுத்து வைக்கும் உங்களுடைய நல் ஆலோசனைக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்!
ஆனால் எங்கள் சமுதாயம் இதை ஒருபோதும் ஏற்காத மனநிலையில் உள்ளது.
நிச்சயமாக நாங்கள் பயங்கரவாத பாஜகவினரால் மேலும் மேலும் சீரழியாத வரை நாங்கள் ஒன்றுபடமாட்டோம். மேற்கண்ட எங்கள் பிரிவு இயக்கங்களின் தலைவர்களின் பின்னால் கண்மூடிப் பின்பற்றி அலையும் சமுதாயத்தினர் இருக்கும் வரையும், கேடுகெட்ட சுயநலமுள்ள பிரிவு இயக்கங்களையும் விடவும் மாட்டோம்.
மேலும், மேலும் இன்னமும் பல இயக்கங்களை உருவாக்குவோம். இதன் காரணமாக எல்லாம் வல்ல அல்லாஹ்வின் வேதனை இறை மறுப்பாளர்கள் மூலம் எங்களுக்கு இறங்கி நாங்கள் அனைவரும் அகதிகள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டு அதன் பின்னர் நாங்கள் சீரழிந்து சின்னாபின்னமாகிப் போனபின்பே எங்களுக்கு புத்தி வந்தாலும் வரலாம். அப்போது புத்தி வந்து எங்களுக்குப் பலன் என்ன என்பதைப் பற்றி நமது சமுதாயம் சிந்திக்குமா?
இதோ அந்த அல்குர்ஆன் வசனங்கள் :
இன்னும், நிச்சயமாக உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன். எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்(என்றும் கூறினோம்)
ஆனால், அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு, தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர். எனவே, அவர்களை ஒரு காலம் வரை தம் அறியாமையிலேயே ஆழ்ந்திருக்க விட்டுவிடுவீராக.
அவர்களுக்கு நாம் செல்வத்தையும், சந்ததிகளையும்அதிகமாகக்கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்?
அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழக்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல. அவர்கள் (இதை) உணர்வதில்லை. அல்குர்ஆன் 23:52-56
இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள். உங்கள் பலம் குன்றிவிடும். (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடயவர்களுடன் இருக்கின்றான். அல்குர்ஆன் 8:46
(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவுகளை உண்டுபண்ணிக்கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள். அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அல்குர்ஆன் 3:105
எனவே அருமைச் சகோதரர் சிவகுமார் அவர்களே!
மேற்கண்ட அல்குர்ஆனின் வசனங்களை கவனித்தீர்களா?
எங்கள் சமுதாய சீரழிவுக்கான காரணத்தை எல்லாம்வல்ல அல்லாஹ் அக்கு வேறு ஆணி வேறாக விளக்குகின்றான்.
எங்கள் சமுதாயத்தின் மீது தாங்கள் கொண்டிருக்கும் அக்கறைக்கு மீண்டும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆனாலும் எங்கள் சமுதாயம் உலகளவில் வெறிகொண்ட யூதர்கள் மற்றும் இந்திய அளவில் இந்துத்துவா வெறி கொண்ட சங்க பிரிவினரின் கொடுமைகளுக்கு ஆளாகி இருந்தும் இஸ்லாமியப் பெயர் தாங்கிய பிரிவினை இயக்கங்களின் தலைவர்களும் திருந்துவதாக இல்லை.
அவர்களைக் கண்மூடிப் பின்பற்றும் அப்பாவி முஸ்லிம்களும் திருந்துவதாக இல்லை.
எனவே கீழ்க்கண்ட அல்குர்ஆன் வசனத்திற்கு ஏற்ப எங்கள் சமுதாயம் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் வேதனையில் மாட்டிக் கொண்டுவிட்டது.
நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள். அது உங்களில் அநியாயம் செய்த வர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை. நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள். அல்குர்ஆன் 8:25
இந்திய முஸ்லிம்கள் அல்லாஹ்வின் கட்டளையும், அவனது தூதர்(ஸல்) அவர் களது கட்டளையுமான ஒன்றுபட்ட அல்முஸ்லிமீன் (ஆதாரம்: அல்குர்ஆன் 22:78) சமுதாயமாக மாறத் தயாராக இல்லை.
எனவே அல்லாஹ்விடமிருந்து வரும் வேதனையை நாங்கள் அனுபவித்தே ஆகவேண்டும் என்பது விதியாகிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது!
என்ன செய்வது!! இந்தியாவைப் பொறுத்தவரை இனி முஸ்லிம்களாகிய எங்களுக்கு நிம்மதியான வாழ்வு என்பது கிடையாது போல் தெரிகிறது.
இந்துத்துவா அரசும், இந்துத்துவா சிந்தனை கொண்ட அதிகாரிகளும் இனி எங்களை நிம்மதியாக வாழவிட கூடாது என நினைக்கிறார்கள்.
இதற்கு ஒரே தீர்வு :
மார்க்கத்திற்கு முரணாக நடக்கும் அனைத்து இஸ்லாமியப் பிரிவு இயக்கங்களின் தலைவர்களை நமது சமுதாய இளைஞர்கள் முற்றிலுமாகப் புறக்கணிப்பது கொண்டு மட்டுமே எங்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவி வரும் என்பதில் அணுவளவேனும் ஐயமில்லை!!
இந்த உபதேசம் பலனளிக்குமா என்பது சந்தேகமே!!
என்றாலும் மேற்கண்ட அல்குர்ஆன் வசனங்களை சிந்தித்து முஸ்லிம்கள் அனைவரும் உலகளாவிய அளவில் ஒன்றுபட்டு ஒரே ஜமாஅத்தாக மாற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!