பள்ளிவாசல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை!
அஹமத் இப்ராஹீம்
பள்ளிவாசல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் அல்லாஹ்வை யன்றி வேறு யாரையும் அழைக்காதீர்கள். அல்குர்ஆன் 72:18
உயிரற்ற கட்டிடம் ஒருபோதும் இணை வைக்காது. இப்படி இருக்க ஹனஃபி மத்ஹபு பள்ளி இணைவைக்கக்கூடிய பள்ளி. எனவே அங்கே தொழுவது கூடாது. எங்கள் தவ்ஹீத் பள்ளியில் தொழுங்கள் என சிந்திக்கத் தெரியாத அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தவ்ஹீத் புரோகிதர்கள் வழிகெடுத்து சமுதாயத்தை பல பிரிவுகளாகப் பிரித்து, வசூல் வேட்டை நடத்தி அதன்மூலம் தவ்ஹீத் புரோகிதர்கள் தங்கள் வயிறுகளை வளர்த்து வளமிக்க வாழ்வு வாழ்கின்றனர். உண்மையில் பள்ளி வாசல்கள் இணைவைக்குமா என்பது பற்றி சிறிது ஆராய்வோம். மக்கா வெற்றிக்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் காஃபாவிற்கு உம்ரா செய்வதற்கு நபித்தோழர்களை அனுப்பிய செய்தி ஆதார முள்ளது.
உதாரணமாக ஹுதைபியா உடன்படிக்கை நடந்த சமயத்தில் குறைஷ்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உஃத்மான்(ரழி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைக்கின் றார்கள்.
மக்கா சென்ற உஃத்மான்(ரழி) அவர்கள் உம்ரா செய்கின்றார்கள். கஃபா வளாகத்தில் ஐந்து நேரத் தொழுகையை நபி(ஸல்) அவர்களின் அங்கீகாரத்துடன் தொழுதிருக்கின்றார்கள். காஃபா வளாகத்தில் சிலைகள் இருக்கின்ற காரணத்தினால் நீர் அங்கு தொழவேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் உஃத்மான்(ரழி) அவர்களைத் தடுக்கவில்லை. காரணம் சிலைகளை வணங்கியது காஃபிர்கள்தான் என்ற பூரண அறிவு நபி(ஸல்) அவர்களிடம் தெளிவாக இருந்தது.
ஆனால் பித்தலாட்டக்காரர்களான தவ்ஹீத் புரோகிதர்கள் உயிரற்ற பள்ளிக் கட்டிடம் இணை வைக்கின்றது. எனவே அங்கு தொழாதீர்கள் என சிந்திக்கத் தெரியாத அப்பாவி தம்பிமார்களை தொடர்ந்து ஏமாற்றி, தாங்கள் தனித் தனிப் பிரிவினை தவ்ஹீத் பள்ளிவாசல்களை புதிது புதிதாக மர்கஸ் என்ற பெயரால் கட்டி சமுதாயத்தைப் பிரித்து நாசமாக்கி அதிலும் வசூல் வேட்டை நடத்தி தங்கள் வயிறுகளை நிரப்புகின்றனர். தம்பிமார்களும் அல்குர்ஆனோடு நேரடித் தொடர்பு இல்லாத கார ணத்தினால் தவ்ஹீத் புரோகிதர்களிடம் தங்கள் ஈமானை அடகு வைத்து விட்டனர்.
அடுத்து ஹிஜ்ரத்திற்கு முன்பே மக்காவில் வைத்து தொழுகை கடமையாக்கப்பட்டு விட்டது என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆரம்பத்தில் கிப்லாவாக இருந்த மஸ்ஜிதுல் அக்ஸாவி லிருந்து சிலைகள் இருந்த நிலையில் தான் மக்காவிலுள்ள காஃபாவை கிப்லாவாகவும் தொழுமிடமாகவும் எல்லாம் வல்ல அல்லாஹ் மாற்றினான்.
மக்கா வெற்றிக்குப் பின்பே நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட காஃபாவினுள் வைக்கப்பட்டிருந்த சிலைகளும் கப்ருகளும் உடைக்கப்பட்டது. அதுவரை காஃபாவில் சிலைகள் இருக்கத்தான் செய்தது. அந்த சிலைகள் சூழ இருக்கும் நிலையிலேயே தான் காஃபாவை கிப்லாவாக்கி (நோக்கி) நபி(ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் தொழுது வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்து கேடுகெட்ட மத்ஹபு புரோகிதர்களின் தவறான வழிகாட்டுதலின் பேரில் உருவாக்கப்பட்ட முகைதீன் ஆண்டவர் மற்றும் சில ஆண்டவர் பெயரில் உருவான பள்ளிகளில் யாரும் முகைதீன் ஆண்டவரையோ வேறு ஆண்டவரையோ வணங்கவில்லை. மத்ஹபு முஸ்லிம்கள் அனைவரும் காஃபாவை கிப்லாவாக ஆக்கி எல்லாம் வல்ல அல்லாஹ் வைத்தான் நபி(ஸல்) அவர்களின் வழியில் தொழுகின்றனர். ஆனால் ஹனஃபி, ஷாஃபி என்ற வழிகேட்டை தங்கள் தலையின் மீது அறியாமையால் கொட்டிக் கொள்கின்றனர்.
அல்குர்ஆன் 9:107-108 வசனம் நபி(ஸல்) அவர்களை கொலை செய்வதற்காக நயவஞ்சகர்களால் ஒரு பள்ளிவாசல் (மஸ்ஜிதன் ழிராரன்) கட்டப்பட்டது. அந்தப் பள்ளியில் மட்டுமே நபி(ஸல்) அவர்களை அல்லாஹ் தொழ தடை செய்கின்றான்.
இல்லை இல்லை அத்தகைய தன்மைகள் உள்ள மத்ஹபு பள்ளியிலும் தொழக்கூடாதென தவ்ஹீத் இயக்க முல்லாக்கள் ஃபத்வா கொடுக்கின்றனர்.
ஆனால் உண்மையில் இந்த 9:107-108 வச னங்களில் சொல்லப்பட்ட தன்மைகள் அனைத்தும் இயக்க பள்ளிவாசல்களில் 100 சதவீதம் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏனெனில் இந்த வசனத்தில் கூறும் தீமைகளில் ஒன்றான சமுதாயத்தில் பிரிவினை ஏற்படுத்தும் மிகப் பெரிய தீமையை இயக்கத்தினர் தொடர்ந்து செய்து வருகின்றனர். அப்படி தொழக்கூடாது என தீர்ப்பளித்தால் இயக்க வாதிகளின் பள்ளிகளில்தான் முதலில் தொழக் கூடாதென தீர்ப்பளிக்க வேண்டும்.
அதைத்தான் அல்லாஹ் இந்த வசனத்தில் குறிப்பிடுகின்றான். அத்தகைய பள்ளியை நபி (ஸல்) அவர்களே இடித்துத் தள்ள உத்தரவிட்டனர். காரணம் அது நபி(ஸல்) அவர்களை நஞ்சென வெறுக்கும் முனாஃபிக்கீன்கள் கட்டியது.
தவிர இப்போதுள்ள மத்ஹபை பின்பற்று பவர்கள் அனைவரும் நபி(ஸல்) அவர்களை தங்கள் உயிரை விட அதிகமாக நேசிக்கின்றனர். அந்த அன்பின் காரணமாகவே வழிகெட்ட மவ்லவிகளின் தூண்டுதலின் பெயரால் கேடுகெட்ட மவ்லுது பக்திப் பாடலை பரவசத்துடன் ஓதி வருகின்றனர். எனவே மத்ஹபு பள்ளிகளில் தொழ நமக்கு எந்தத் தடையும் இல்லை. உயிரற்ற கட்டிடம் ஒருபோதும் இணைவைக்காது என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத தவ்ஹீத் மூட முல்லாக்களை கண்மூடிப் பின்பற்றும் அப்பாவித் தம்பிகள் தங்களுடைய இயக்கம் என்ற வழிகேட்டை விட்டும் தவ்பா செய்து நேரடியாக அல்குர்ஆன் நபிமொழிகளை சுயமாகப் படித்து சிந்தித்து அதன்படி நடந்து இம்மை மறுமை வெற்றியடைய அன்போடு அழைக்கின்றோம்.
நம்முடைய தொழுகையைத் தொழுது, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பதைப் புசித்து வருகிறவர்தாம் முஸ்லிம் அப்படிப்பட்டவர் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் பொறுப்பில் இருக்கிறார். எனவே அவரின் பொறுப்பு விசயத்தில் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை முறிக்காதீர்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரழி) அறிவித்தார். புகாரி:391, அத்தியாயம்:8, தொழுகை.
எனவே மேற்கண்ட நபிமொழியின்படி இந்த மூன்று தன்மைகள் உள்ள எவருமே முஸ்லிம் தான். இவர்கள் எத்தகைய இணை வைப்பில் இருந்தாலும் சரி, தங்களைத் தாங்களே முஸ்லிம்தான் என்று கூறும் எவரையும் பின்பற்றி ஜமாஅத்தாகத் தொழலாம். அவருடைய பாவம் நம்மை ஒருபோதும் அண்டாது.
எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர்வழியில் செல்கிறான். எவன் வழிகேட்டில் செல்கின்றானோ, அவன் தனக்கே கேடு செய்துகொண்டான்; (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை. (அல்குர்ஆன் 17:15)
மேற்கண்ட அல்குர்ஆன் வசனத்தின்படி இமாமாக தொழுகை நடத்துபவர் இணை வைக்கக் கூடியவராக இருந்தாலும் அவரது தீமையை பிறர் சுமக்கப் போவதில்லை. நாம் அவரைப் பின்பற்றி தொழும் தொழுகைக்கு அவரால் எந்தக் குறைபாடும் ஏற்படப் போவதில்லை.
இதோ ஆதாரம் :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இமாமாக நியமிக்கப்படுகின்ற) அவர்கள் உங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள். அவர்கள் சரியாகத் தொழுவார்களானால் உங்களுக்கும் அதன் நன்மை கிடைக்கும். அவர்கள் தவறு செய்பவர்களானால் அதற்குரிய தீமை அவர்களுக்கு உண்டு. உங்களுக்கு நீங்கள் செய்ததற்குரிய நன்மை கிடைக்கும் என அபூ ஹுரைரா(ரழி) அறிவித்தார். புகாரி:694, அத்தியாயம் : 10 பாங்கு.