தலையங்கம் :
பாபர் மஸ்ஜித்தும்! இராமர் கோவிலும்!!
இராமர் கோவில்…
மஸ்ஜித் இடித்த இடத்தில் கோவில் கட்டவும், திறப்பு விழா காணவும் இந்தியா வில் உள்ள பெரும்பான்மை இந்துக்கள் ஒற்றுமையாக இருந்தார்கள். அதற்காக முயற்சியும், செலவும் செய்தார்கள்.
பாபர் மஸ்ஜித்….
அதை இடித்ததிலிருந்து முஸ்லிம் மத இயக்கவாதிகள் தங்கள் இயக்கங்களை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து முஸ்லிம்களிடம் வசூல் செய்து வந்தார்கள். தங்கள் பிரிவு இயக்க பள்ளிவாசல்களை கட்டி இந்த சமுதாயத்தின் ஒற்றுமையை குலைத்து ஒரு எம்.பி. சீட்டுக்காக மற்ற கட்சிக்காரர்களிடம் கெஞ்சிகொண்டு இருக்கிறார்கள்.
இந்த இருவரில் ஒற்றுமையில் வெற்றி பெற்றவர் யார்?
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் (அல்லது) பங்காளதேஷ் என்று பிளவுபடாது இந்தியாவில் பெரும்பான்மை சமுதாயமாக இருந்த இந்த முஸ்லிம் சமுதாயத்தை திட்டமிட்டு சிறுபான்மை சமுதாயமாக மாற்றியவர்கள் காவி பயங்கரவாதிகள். அந்த சிறுபான்மை சமுதாயத்தையும் ஒற்றுமை இன்றி பல பிரிவாக பிரித்து அடிமை சமுதாயமாக மாற்ற துடிக்கிறார்கள் கேடுகெட்ட முஸ்லிம் இயக்க வியாபாரிகள்.
இதை எப்போது உணர்வார்கள் அப்பாவி முஸ்லிம் மக்கள்?
பாபர் மஸ்ஜித்தை அல்லாஹ்வின் பள்ளிவாசலாக நினைத்து இருந்தால் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து அதனை மீட்க முயற்சித்திருப்பார்கள்.
அது ஒரு மத்ஹப் கொள்கை கொண்ட பள்ளிவாசல் அதனால்தான் அதனை மீட்க முயற்சிக்காமல் அதனை வைத்து இயக்கங்களை வளர்த்துக் கொண்டார்கள் இயக்க மதவாதிகள்…
இஸ்லாமிய பிரிவினைவாதிகளின் சுயநலத்தால் பாபர் மஸ்ஜித் இடம் இராமர் கோவிலுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.
பாபர் மஸ்ஜித், இராமர் கோவில் பற்றி பேச எந்த இஸ்லாமிய பிரிவினை மதவாதிகளுக்கும் தகுதி இல்லை. இப்போதும் பாபர் மஸ்ஜித், இராமர் கோவிலை வைத்து வயிறு வளர்ப்பவர்கள், இந்த சமுதாயத்தை மேலும் ஆபத்தில் தள்ள துடிக்கக்கூடியவர்கள். அதன் மூலம் தங்கள் இயக்கத்தை வளர்க்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இந்த இயக்க தலைவர்கள் இருக்கிறார்கள்.
இஸ்லாமியர்களுக்கு அல்லாஹ்வின் உதவி விரைவில் கிடைக்க இருக்கிறது என்று பல முஸ்லிம் பிரிவினை வெறியர்கள், மற்றும் பல முஸ்லிம் பிரிவினை இயக்க வெறியர்கள் பதிவு போடுகிறார்கள்.
அல்லாஹ்வின் உதவி, ஒற்றுமையாகவும் தொழுகையை கொண்டும், பொறுமையை கொண்டும் உதவி தேடும் முஸ்லிம்களுக்கு மட்டுமே கிடைக்கும். தலைவர்களை கண் மூடி பின்பற்றும் முஸ்லிம்களுக்கு அல்ல.
இதோ தலைவர்களை கண்மூடி பின்பற்றும் முஸ்லிம்களுக்கு இறைநூலின் எச்சரிக்கை:
நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கைசேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே! என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 33:66)
எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர் களுக்கும் வழிப்பட்டோம், அவர்கள் எங்களை வழிகெடுத்துவிட்டார்கள் என்றும் அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 33:67)
எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களைப் பெருஞ்சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக! (என்பர்) (அல்குர்ஆன் 33:68)
முஸ்லிம்களே! இயக்க தலைவர்களின் பிடியில் இருந்து வெளியேறி இறைவன் கூறிய ஒரே அமீரின் கீழ் ஒற்றுமையாக எப்போது ஆகப் போகிறீர்கள்! அவ்வாறு ஆகாதவரை அல்லாஹ்வின் உதவி வெகு தூரம்தான்.