மார்க்கப் பணிக்கு கூலி வாங்கும் தவ்ஹீத் மற்றும் மத்ஹபு இமாம்கள்!
அஹமத் இப்ராஹிம்
காசுக்காக தாயீக்களாக (மார்க்க அழைப்பாளர்களாக) மாறும் இத்தகைய புரோகிதர்களை பற்றிதான் எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு இவ்வாறு எச்சரிக்கின்றான்.
“உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்; இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள்‘ (என்றும் அவர் கூறினார்) (அல்குர்ஆன்36:21)
அதாவது ஒரு குதிரையின் மீது கம்பீரமாக அமர்ந்து வந்து ஒருவர் யாசகம் கேட்டாலும் அவருக்கு கூட தானம் வழங்கு வதை மார்க்கம் அனுமதிக்கின்றது.
ஆனால் மார்க்கப் பணிக்கு அதாவது தாயீன் என்று சொல்லி, தொழவைத்து, பிரச்சாரம் செய்து அதற்காக கூலி வாங்குவது அதற்காகவே அலையும் அழைப்பாளர்களுக்கு காசு கொடுப்பதை மார்க்கம் கடுமையாகத் தடுக்கின்றது.
மறுமையில் நடக்க இருக்கும் நிகழ்வை அல்லாஹ் இப்படிக் கூறுகின்றான்:
அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக் கியவையாக இருக்கும் நிலையில் இழிவு அவர்களை மூடிக் கொள்ளும்; அவர்களோ (உலகில்) திடமாக இருந்தபோது, ஸுஜூது செய்யுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டு தானிருந்தனர். (ஆனால் அப்போது அலட்சி யமாக இருந்தனர்) (அல்குர்ஆன் 68:43)
இவ்வுலகில் தொழுகைக்காக அழைக்கப்பட்ட முஸ்லிம்கள் தொழுவதற்கு பள்ளிக்குச் செல்லாமல் அதில் அலட்சியம் செய்பவர்களுக்கு கிடைக்கும் தண்டனை பற்றி குறிப்பிடும் அல்லாஹ்,
அவ்வாறு தொழச் செல்லாததன் காரணத்தையும் மறுமையில் கேள்வி கேட்பதாக எல்லாம் வல்ல அல்லாஹ் கீழ்க்கண்டவாறு கூறுகின்றான்:
நீர் அவர்களிடம் ஏதாவது கூலி கேட்டு, அதனால் அவர்களுக்கு கடன் சுமை ஏற்பட்டு விட்டதா? (அல்குர்ஆன் 68:46)
தொழவைத்து அதற்காக ஏதாவது கூலி கேட்டீரா?
அதனால்தான் அவர்கள் கடன் பட்டு அந்த மன உளைச்சல் அதன் காரணமாக பள்ளிவாசலுக்கு தொழ வர அஞ்சுகின்றனரா? என எல்லாம் வல்ல அல்லாஹ் கேட்கின்றான், கேட்பான்.
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உட்பட எல்லா நபிமார்களும் தங்களின் பிரச்சாரப் பணிகளுக்கு கூலி வாங்கியதாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை!
மேலும் பார்க்க : ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள். (அல்குர்ஆன் 26:108)
இதற்காக, நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்கவில்லை. நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடம் இருக்கிறது. (அல்குர்ஆன் 26:109) என நபி நூஹ் (அலை) அவர்கள் கூறியதாகவும்;
அடுத்து அல்குர்ஆன் 26:124 வசனத்தில் நபி ஹூத் (அலை) அவர்களும்; அதற் கடுத்து 26:145 வசனத்தில் நபி ஸாலிஹ் (அலை) அவர்களும்;
மேலும் 26:164 வசனத்தில் நபி லூத் (அலை) அவர்களும்; மற்றும் பல நபிமார்களும் இதே வார்த்தையைக் கூறியதாக எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகிறான்!
அதனால்தான் மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில்தான் மார்க்கப் பணிக்கு மத்ஹபு மற்றும் தவ்ஹீத் மவ்லவிகளில் எவர்கள் கூலி வாங்குகின்றார்களோ அத்தகைய தாயீக்கள் நேர்வழியில் இல்லை என்பதை எல்லாம் வல்ல அல்லாஹ் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றான்.