அல்குர்ஆன் வழியில் அறிவியல்….
விண்ணையும் மண்ணையும் பிரித்தவன் யாரு?…
K.S.H. ஹழரத் அலி
மறு பதிப்பு :
இஸ்லாம், அறிவியல் உண்மைகள அரவணைத்துச் செல்லும் அற்புத மார்க்கம்; இயற்கையோடு இணைந்து செல்லும் இணையற்ற மார்க்கம். இந்த இயற்கை மார்க்கத்தின் இறுதி நெறிநூலான அல்குர்ஆனோ, இப்பிரபஞ்சத்தைப் பற்றிய பரிபூரண அறிவை உள்ளடக்கிய உயர் ஆய்வு நூலாக, அறிவியல் பெட்டகமாக, ஆய்வுக் கூடமாக, வாழும் அற்புதமாக நம்முன் காட்சியளிக்கிறது. படைப்புகளை விளக்கிக் கூறி படைத்தவனை நினைவூட்டுகிறது. மனிதனை சிந்திக்கச் சொல்லி சீர்திருத்தி, நேர்வழியில் அழைத்துச் செல்கிறது. அறி வுள்ள மனிதனுக்கு அல்குர்ஆன் கூறும் சில சான்றுகள்.
இப்பிரபஞ்சம் எப்போது எவ்வாறு படைக்கப்பட்டது என்பதை அல்குர்ஆன் மிகத் துல்லியமாக, அறியாமை இருள் மூடி யிருந்த ஆறாம் நூற்றாண்டிலேயே கூறி விட்டது.
“பிறகு வானம் புகையாக இருந்த போது (அதனை) படைக்க நாடினான். அவன், அதற்கும் பூமிக்கும், நீங்கள் விருப்புடனா யினும், வெறுப்புடனாயினும் வாருங்கள் என்று கூறினான். நாங்கள் விருப்புடனே வருகிறோம்” என்று கூறியது. அல்குர்ஆன் 41:11
“”நிச்சயமாக வானங்களும் பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதனையும் இவற்றை நாமே பிரித்தமைத்தோம் என்பதையும் நிராகரிப்பவர்கள் பார்க்கவில்லையா?”
அல்குர்ஆன் 21:30
அல்குர்ஆனின் அடிச்சுவட்டை அணு வளவும் அடிபிறளாமல் ஆய்ந்தறிந்த ஆய்வாளர்களின் கூற்று, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது!
கி.பி. 1778ல் இம்மானுவேல் காந்த் எனும் ஜெர்மானிய வானியல் ஆய்வாளர், “சூரியனை சுற்றி வந்த நெபுலா வளிமண்டலங்கள் உறைந்து திரண்டு பூமியும் பிற கிரகங்களும் உருவாயின” என்ற கருத்தை வெளியிட்டார்.
ஒரு நூற்றாண்டுகளுக்கு பின்பு கி.பி. 1943ல் வான் வீசாக் செர் எனும் மற்றொரு ஜெர்மானிய வானாய்வாளர், நெபுலா கருதுகோலின் மற்றொரு பரிணாமத்தை வெளியிட்டார். அதாவது, “600 கோடி வருடங்களுக்கு முன்பு வளிமும் தூசியுமாய் சுழன்றடித்த புகை மேகத் திரள்களிலிருந்து தோன்றியதே சூரிய மண்டலம்” என்ற உண்மையை கண்டுபிடித்தார்.
தற்போது நமது பூமியின் வயது சுமார் 460 கோடி ஆண்டுகள். பூமியில் காணப்படும் பாறைகளில் மிகப் பழமையானதாகக் கருதப்படுபவைகளில் ஒன்று மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ளது. இப்பாறையின் வயது சுமார்430 கோடி ஆண்டுகள் எனக் கணக்கிட்டுள்ளார்கள்.
இம்மாபெரும் பிரபஞ்சம் தோன்றி சுமார் 10-20 பில்லியன் வருடங்கள் ஆகின்றன. ஆக அல்குர்ஆன் கூறும் உண்மைகளை அறிவியல் உலகம் தொடர்ந்து நிரூபித்து வருகிறது.
விரியும் விண்வெளியில் விரையும் விண்மீன்கள் :
அல்லாஹ் கூறுகிறான்: “மேலும் நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம். நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையோராம்.” அல்குர்ஆன் 51:47
இவ்வசனத்தின் மூலம் வானம் எனும் விண்வெளி விரிந்து கொண்டிருப்பதாக அல்லாஹ் கூறுகிறன். அறிவியல் உலகம் என்ன கூறுகிறது?
ஜார்ஜ் லெமாய்த்திர் எனும் பெல்ஜிய வானவியல் அறிஞர், “பிரபஞ்சம் விரிவடைதல்‘ நிகழ்ச்சியை விளக்க “மகாவெடிக் கொள்கை‘யை வெளியிட்டார்.
“13-20 பில்லியன் கோடி ஆண்டுகளுக்கு முன்பு மிகை அடர்த்தி கொண்ட புகை மண்டலமாக இருந்த இப்பிரபஞ்சம் இறுக்கம் தாளாமல் வெடித்துச் சிதறியது. அந்தப் பெரு வெடிப்பில் தெறித்த துண்டங்களே இன்றும் நொடிக்குப் பல்லாயிரக் கணக்கான கிலோ மீட்டர் வேகத்தில் விரைந்து கொண்டிருக்கின்றன. இந்த பிரபஞ்ச துண்டுகளிலிருந்துதான். கலாக்ஸி எனப்படும் உருமண்டலங்களும் விண்மீனும் உருவெடுத்தன.”
நமது சூரிய குடும்பத்தை உள்ளடக்கிய பால்வீதி உருமண்டலம் நொடிக்கு 600லுனி வேகத்தில் விரைகிறது. இதை அல்குர்ஆன் அன்றே கூறியது.
“சூரியனும் அதற்குரிய தங்குமிடத்தின் பால் அது சென்று கொண்டிருக்கிறது. இது யாவரையும் மிகைத்தவன் நன்கறிந்தவன் ஏற்படுத்தியதாகும்” அல்குர்ஆன் 36:38
கி.பி. 1925-ல் எட்வின் பி.ஹப்பின் (1889-1953) எனும் அமெரிக்க வானவியல் அறிஞர், பிரபஞ்சத்தில் நமது பால்வீதி மண் டலம் தவிர பல இலட்சம் கலாக்ஸி உருமண்டலங்கள் அடங்கியுள்ளன என்றும், மேலும் அவை அனைத்தும் ஓரிடத்தில் நிலையாக நிற்காமல் அதிவேகத்தில் பறந்து விலகிச் செல்கின்றன என்றும், தொலைதூரம் செல்லச் செல்ல அவற்றின் வேகமும் அதிகரிப்பதாக தம் ஆய்வில் கண்டுபிடித்தார்.
உருமண்டலங்களின் “டாப்ளர் புலப் பெயர்ச்சி‘யினால் பிரபஞசம் அதிவேகத்தில் விரிவடைந்து வருகிறது எனும் உண்மை தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இப்பிரபஞ்சத்தில் மிக, மிக தொலைதூரத்தில் ஒளிரும் பொருளான “குவாஸர்” பூமியிலிருந்து சுமார் 13,100 மில்லியன் ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. பூமியிலிருந்து சுமார் 2100 மில்லியன் ஒளி ஆண்டு தொலைவில் இருக்கும் எனும் பெயரிடப்பட்ட ஒரு குவாஸரானது நொடிக்கு 50,000 வேகத்தில் விரைந்து விரிந்து செல்கிறது” என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆக இப்பிரபஞ்ச பெருவெளியில் சுழன்று மிதக்கும் கொள்களும் விண்மீன்களும், உருமண்டலங்களும், குவாஸர்களும் அதனதன் எதிர் திசையில் விரைந்து சென்று கொண்டிருக்கின்றன. இன்று ஆய்வாளர்கள் ஆய்ந்தறிந்த விரியும் விண்வெளியை 6ஆம் நூற்றாண்டில் அறி வித்த அல்குர்ஆனை மனிதர்கள் நிராகரிக்க முடியுமா? மனிதர்கள் விரும்பினாலும் வெறுத்தாலும் அல்குர்ஆனை இறக்கிய அல்லாஹ்(ஜல)வை ஆன்மீக வழியிலோ, இல்லை அறிவியல் வழியிலோ ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். இது காலத்தின் கட்டாயம். இதை நாம் சொல்லவில்லை. படைத்தவன் கூறுகின்றான்.
“இணை வைத்து வணங்குவோர் (இதனை) வெறுத்த போதிலும் (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் அந்தச் சத்திய மார்க்கம் (இஸ்லாம்) வெற்றி பெற்றே தீரும்” அல்குர்ஆன் 9:33
அல்லாஹ் விண்வெளியை விரிவாக்கு கின்றான் என்ற உண்மையை வானவியல் ஆய்வாளர்கள் தங்கள் அறிவின் மூலம் ஆராய்ந்து ஒப்புக்கொண்டதைப் பார்த்தோம். அதேசமயம் விண்ணை மட்டும் நான் விரிக்கவில்லை; மண்ணையும் விரித்தேன் என்றல்லவா அல்லாஹ் தொடர்ந்து கூறுகிறான்.