சிந்தனை செய் மனமே!
எம். அபூ நஜ்மி, நெல்லை, ஏர்வாடி
சிந்தனை ஏன் செய்யவேண்டும்? சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது என்று சிந்தனை செய் மனமே.
அன்றியும் “சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது; நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்” என்று (நபியே!) கூறுவீராக. அல்குர்ஆன் 17:81
அல்லாஹு ரப்புல் ஆலமீன் திருமறை குர்ஆனில் சத்தியம் வந்துவிட்டது. அசத்தியம் அழிந்துவிட்டது என்று கூறுகிறான். ஆனால் நாமோ சத்தியத்தை மறந்து அசத்தியத்தில் வீழ்ந்து கிடக்கிறோம்; நாம் ஏன் அசத்தியத்தில் இருக்கிறோம்? என்பதை நடுநிலையோடு சிந்தித்தால் பகிரங்கமான வழிகேடான “தக்லீதில்”இருந்து கொண்டு இருக்கிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அல்லாஹ் நம் அனைவர்களையும், வழிகேடு என்கின்ற தக்லீதில் இருந்து பாதுகாப்பானாக ஆமீன். அதிகப்பிரசங்கி யார் என்றால்? குர்ஆன் ஹதீதுக்கு மாற்றமான கருத்துக்களை சொல்பவர்களே. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. குர்ஆன், ஹதீத் எதைக் காட்டுகிறதோ அதுதான் மார்க்கம். இந்த முல்லாக்கள் குர்ஆன், ஹதீதுக்கு சுயவிளக்கம் கொடுப்பதெல்லாம் மார்க்கமாகாது.
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டுவிட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் (சுயமாக) வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு, விசுவாசியான எந்த ஆணுக்கும் எந்த பெண்ணுக்கும் உரிமையில்லை. (அதில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் எவர்கள் மாறு செய்கிறார்களோ அவர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 33:36)
மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்தை மீண்டும் படித்துப் பாருங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளை இந்த முல்லாக்கள் எந்த அளவுக்கு அலட்சியப்படுத்துகிறார்கள் என்பது சிந்திப்பவர்களுக்குப் புரியும். ஏழு வருடங்கள் தாருந்நத்வாவில் கல்வி கற்று சாதாரண பிரிண்டட் பேப்பரில் மறுமையில் அல்லாஹ்வின் முன் செல்லாத (ஸனது) பட்டம் வாங்கி கொண்டு, நாங்கள்தான் மெளலானா, மெளலவிகள் என்று பீற்றிகொள்ளும் இவர்கள் அல்லாஹ்வின் பிடியில் இருந்து மறுமையில் தப்ப முடியாது என்று உணர்ந்தால், அல்லாஹ் நம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்பதை நினைத்து அஞ்சினால் மார்க்கத்தில் தெளிவு கிடைத்துவிடும். ஆனால் இந்த முல்லாக்களுக்கு அல்லாஹ்வுடைய அச்சம் என்பதே கிடையாது. ஏன் என்றால் இவர்கள் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த சத்தியமார்க்கத்தில் இல்லை. மாறாக இவர்களாக ஏற்படுத்திக் கொண்ட இன்றைய தாருந்நத்வாவில் பயின்றவர்கள் தானே!
இஸ்லாமிய மார்க்கத்தைக் களங்கப்படுத்துவதில் மக்கா காஃபிர்களால் அதுவும் அபூ ஜஹீல் என்ற அறிவற்றவனின் தலைமையில் நடந்த தாருந்நத்வாவை விட மோசமாக மார்க்கத்தை தங்களது பிழைப்புக்காகத் திரித்து, வளைத்து மக்களை வழிகேட்டில் இட்டுச் செல்லும் இவர்கள் மார்க்க அறிஞர்களா? நிச்சயமா இல்லவே இல்லை. அல்லாஹ்வுக்கு முற்றிலும் அஞ்சுபவர்களே அறிஞர்கள். அல்லாஹ் தன் திருமறை குர்ஆனில் “அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரே ஆலிம்கள் நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன் மிக மன்னிப்பவன்”என்றே கூறியுள்ளான். ( அல்குர்ஆன் 35:28)
இந்த திருகுர்ஆன் வசனத்தை மீண்டும் ஒருமுறை கவனத்துடன் படித்து சிந்தனை செய்து பாருங்கள். மெளலானா, மெளலவிகளையோ, அப்சலுல் உலமா பட்டம் பெற்றவர்களையோ அறிஞர்கள் (ஆலிம்கள்) என்று அல்லாஹ் சொல்லவில்லை. மாறாக அல்லாஹ்வுக்கு அஞ்சுவோரே ஆலிம்கள் என்று அல்லாஹ் நமக்கு திருகுர்ஆன் வழியாக அறிவித்துத் தருகிறான். ஸனது பட்டம் வாங்கிய இந்த முல்லாக்களைப் பார்த்து அல்லாஹ் ஆலிம்கள் என்று சொல்லவே இல்லை.
அல்லாஹ், அல்குர்ஆன் 35:28 வசனத்தில் சொல்லும் ஆலிம்களே உண்மையான அறிஞர்கள், அல்லாஹ் சொல்லும் உலமாக்கள் இந்த உலகத்தில் மெளலானா, மெளலவிகள் பட்டத்தைச் சுமப்பவர்கள் அல்ல; மாறாக அல்லாஹ்வுக்கு அஞ்சுபவர்களே. இன்னும் சொல்லப்போனால், மெளலானா, மெளலவி பட்டம், இஸ்லாத்தில் இல்லாததே!, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இப்படிப்பட்ட பட்டம் இல்லை. உத்தம ஸஹாபாக்களுக்கோ, கண்ணியமிக்க இமாம்களுக்கோ, இந்த பட்டம் இல்லை. ஏன் இன்றும் சவூதி அரேபியாவில் இந்த முல்லாக்களைப் போல் கற்றறிந்தவர்கள் தம் பெயருக்கு முன் மெளலானா, மெளலவி என்ற பட்ட பெயர் போட்டு எழுதுவதே இல்லை.
இந்த முல்லாக்களாகிய மெளலானாக்கள் நம் யாரையும் இம்மையிலும், மறுமையிலும் நிச்சயமாக பாதுகாக்கவே இயலாது. நம்மை இம்மையிலும், மறுமையிலும் பாதுகாப்பவன் உண்மையான மெளலாவாகிய அல்லாஹ் ஒருவனே. அவர்கள் புறக்கணித்துவிட்டாலோ, நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய பாதுகாவலன் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். பாதுகாவலரில் அவன் மிக நல்லவன்; இன்னும் அவன் உதவி செய்பவரிலும் மிக நல்லவன். (அல்குர்ஆன் 8:40)
இந்த பட்டத்து மெளலானா, மெளலவிகளும் நாமும், ரப்பாகிய உண்மையான மெளலானாவின் பக்கம் திரும்பக் கூடியவர்களே என்பதை உணர்ந்து, அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காட்டித் தந்த மார்க்கத்தை பட்டம் பெற்ற, மார்க்கத்தைப் பிளவுபடுத்திக் கொண்டு இருக்கும் முல்லாக்கள் தான் சொல்லனும் என்றில்லாமல், நாமும் இந்த முல்லாக்களுக்கு அஞ்சாமல் மனம் தளராமல் இஸ்லாமிய மார்க்கத்தை எல்லோருக்கும் பிரசாரம் செய்ய மற்றவர்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்வோம். நம்மைப் பாதுகாக்க அல்லாஹ்வே போதுமானவன், என்று சிந்தனை செய் மனமே!