முதுமை என்னும் முனகல்!
அபூ அஹமது இப்ராஹிம், ஒரத்தநாடு
நீ எல்லாம் இருந்து என்ன பயன்?
பெற்ற பிள்ளையே சனியனே! என்று கூறுவது!
கட்டிய மனைவி சலிப்படைந்து வெறுப்பது!
உறவுகள் கூடி கைத்தட்டி சிரிப்பது!
உடல் நிலை பாதிக்கப்பட்ட நேரத்தில் இந்த இம்சை எப்போ போய் சேரும் என அவர் காதுபட பேசுவது.
இல்லை என்று சொல்லாமல் உணவைக் கொடுத்து தின்னு தொலை என்பது.
மேற்கண்ட வார்த்தைகளை முதுமையானவர்கள் குடும்பத்தார், உறவினர் மூலம் பேசுவதை கேட்டதால் மனம் நொந்து போய் மரணம் வந்துவிட வேண்டும் என்ற மனநிலைக்கு பல முதியவர்கள் தள்ளப்படுகிறார்கள். இன்னும் சிலர் இஸ்லாத்தில் ஹராமான செயலான தற்கொலை கூட செய்து கொள்கிறார்கள். (ஆனால் முஸ்லிம்கள் தற்கொலை செய்து கொள்வது மிக குறைவு)
முதுமை என்பது பலர் நினைப்பது போல வயதை பொருத்து அல்ல. மனநிலையை பொருத்ததே.
உதாரணமாக:
ஜப்பான் நாட்டில் முதுமை என்பது 80 வயதிற்கு மேல் என கருதப்படுகிறது.
சீனாவில் கிட்டத்தட்ட முதுமை என்பது 90 வயது என கருதப்படுகிறது.
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் 70-80க்கும் இடைப்பட்ட காலம் முதுமை என கருதப்படுகிறது.
அரபி நாடுகளில் முதுமையில்தான் சுமார் 50-60 வயதிற்கு மேல் பல திருமணங்கள் இரண்டாவதாக, மூன்றாவதாக நடைபெறுகிறது.
ஆனால் அலோபதி மருந்துகள் தயார் செய்யும் கார்ப்பரேட் கம்பெனிகளின் சூழ்ச்சியால் நமது இந்திய நாட்டில் மட்டும் 40 வயதை கடந்தவர்களை நோயாளி என முத்திரை குத்தப்படுகிறது. அதன் காரணமாக,
“குஞ்சு மிதித்து முடமான கோழிகள் உயிர் வாழும் இடம்” அதிகமாக பெருகி உள்ளது .
அதாவது “முதியோர் இல்லம்” இங்கு பெருகி வருகிறது. இது இஸ்லாமிய வழி அல்ல.
பொதுவாக மனிதர்களில் பலர் பருவம் அடையும்போது பெற்றோரின் மகத்துவத்தை உணராதவர்களாக இருக்கிறார்கள். தாய் அவனைக் கஷ்டப்பட்டு சுமந்ததையும், பெற்றெடுத்ததையும் அவர்கள் நினைப்பதில்லை.
அதுவே அவன் பெற்ற பிள்ளைகள் பருவ வயதை அடைந்து அவனையே எதிர்த்துப் பேசும்போதுதான் நாம்தான் பெற்றோரை மதிக்காமல் இருந்தோம் என்ற உணர்வு அவனுக்கு வருகிறது. எனவேதான் இறைவன் தன் இறை நூலில் (குர்ஆனில்) அல்அஹ்காஃப் 46வது அத்தியாயத்தில் 15ம் வசனத்தில் பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு கட்டளை இட்டுள்ளான். மேலும் கருவில் சுமந்தபோது தாய் பட்ட கஷ்டத்தையும் சுட்டி காட்டுகிறான். அது மட்டுமல்ல இறைவனே ஒரு முக்கியமான துஆவையும் (பிரார்த்தனையையும்) கற்றுக்கொடுத்துள்ளான்.
“என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், உனக்கு விருப்பமான நற்செயல்களை நான் செய்யவும், நீ எனக்கு அருள் புரிவாயாக! மேலும் என் சந்ததிகளை (வாரிசுகளை) நல்லவர்களாக ஆக்குவாயாக. மேலும் நான் உனக்கு கீழ்ப்படிந்த முஸ்லிம்களில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன் என்று துஆ செய்ய இறைவன் கற்றுக்கொடுத்துள்ளான். அ.கு.46:15
எனவே இந்த துஆவை சிறு வயதிலேயே பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள். தொடர்ந்து கேட்குமாறு பழக்குங்கள். அப்பொழுதுதான் பிள்ளைகள் வழி தவறாதவர்களாகவும், இயக்கவாதிகளின் பிடியில் விழாமல் நேர்வழிபெற்ற முஸ்லிம்களாக இருப்பார்கள்.
முதியோர்களே!
எந்த வயதிலும் புதிது, புதிதாக அன்பைக் கண்டறியுங்கள்!
எந்த வயதிலும் இளமையாக உணருங்கள்.
எந்த வயதிலும் படியுங்கள், எழுதுங்கள்.
எந்த வயதிலும் தொழிலை அல்லது வேலைகளை செய்ய முடியும் என நம்புங்கள்.
ஏனென்றால்,
நீங்கள் இறக்கும் வரை உங்கள் இளமை சாகவில்லை, உடல் உழைப்பு உள்ளவரை நீங்கள் இளைஞரே.
இளைஞர்களே!
வாழ்க்கை ஒரு வட்டம்(சக்கரம்) யாருக்கு எப்போது என்ன நடக்கும் என்றே தெரியாது. எப்போது வேண்டுமானாலும் மேலே இருப்பவன் கீழே வரலாம், கீழே இருப்பவன் மேலே உயரலாம். இது இறைவனின் ஏற்பாடு நன்மையும், தீமையும் மாறி மாறி வருவது.
நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்து மாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்க ளுக்கு கொடுப்பதைக் கொண்டும் உங்களை ஏவுகிறான். அன்றியும் மானக் கேடான காரியங்கள், தீமை, வரம்பு மீறுதல் ஆகியவற்றை விட்டும் (உங்களைத்) தடுக் கின்றான்; நீங்கள் நினைவில் வைத்துக் கொள்வதற்காக அவன் உங்களுக்கு உபதேசம் செய்கின்றான். (16:90)