தலையங்கம் :
39-ம் ஆண்டில் அந்நஜாத்!
அல்லாஹ்வின் கிருபையைக் கொண்டு “அந்நஜாத்’தனது 38 ஆண்டுகள் பணியை முடித்துக் கொண்டு இந்த 39ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!
வரலாற்று குறிப்பு :
“அந்நஜாத்தின் ஆசிரியர் அவர்கள் சுமார் 42வயது வரை பல மவ்லவிமார்களுடன் இணைந்து இல்யாஸ் சாஹிபின் தப்லீஃக் பணியில் தீவிரமாக பணியாற்றி வந்தவர்கள்தான். அது மட்டுமல்ல இறைநூலை (குர்ஆனை) தினசரி ஒரு பாகம் அளவிற்கு (ஜுஸ்வு) அரபி மொழியில் மட்டுமே படித்து (ஓதி) வந்தவர்தான். அதுசமயம் கிடைத்த அல்ஹதீஸ் என்ற தமிழ் நூல்களின் மூன்று பாகங்களையும் படிக்க நேர்ந்த அந்நூலின் கருத்துக்களை சிந்தித்து படிக்க ஆரம்பித்த போதுதான் மார்க்கத்தின் உண்மை நிலை அவரது அறிவில் பட்டது. இருப்பினும் ஆசிரியர் (அபூ அப்துல்லாஹ்) அவர்களுக்கு ஏற்பட்ட பல சந்தேகங்களுக்கு மதரஸாக்களுடனும், பிரபல மவ்லவிமார்களுடனும் தொடர்பு கொண்டு கடிதம் வாயிலாக விளக்கம் கேட்டும் எவரிடமிருந்தும் தெளிவான பதில் வரவில்லை.
அதன் பின்னர் “அந்நஜாத்’ஆசிரியரே சிறு, சிறு பிரசுரங்களை வெளியிட்டு குர்ஆன், ஹதீஃத் மொழிபெயர்ப்புக்களை மக்களிடம் கொண்டு சென்றார். ஆசிரியரின் உண்மை நிலையை அறிந்து சில மவ்லவிகள் நாங்களும் குர்ஆன், ஹதீஃத் மட்டுமே விரும்பக்கூடியவர்கள் என்று கூறிக்கொண்டு ஆசிரியரை அணுகினார்கள். அதன் விளைவாக உருவானதே “அந்நஜாத்’மாத இதழ்.
சொந்த குரோதம் எதுவுமில்லை:
சத்தியத்தை சொல்ல முன்வந்து, அதற்கு சில மவ்லவிகளும் துணை புரிந்ததால் அல்லாஹ் வின் கிருபையால் பிரமிக்கத்தக்க வரவேற்பு தமிழ் முஸ்லிம்களிடம் இருந்து வந்தது.
அந்நஜாத்தின் வளர்ச்சியில் மகிழ்ச்சி அடைந்தாலும், இணைந்து பணியாற்றிய சில மவ்லவி மார்களுக்கு ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டது. அது என்னவென்றால் “அந்நஜாத்” வளர்ந்தால் (அதாவது தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் தெளிவடைந்தால்) மவ்லவி வர்க்கம் வளராது என்பதே ஆகும். எனவே அந்நஜாத் மீதும், ஆசிரியர் மீதும் பல அவதூறுகளை அள்ளி வீசி வெளியேற முடிவு செய்து, வெளியேறிவிட்டனர். வெளியேறியது மட்டுமல்ல சத்தியத்தை, உள்ளது உள்ளபடி “அந்நஜாத்”எடுத்துரைப்பதால் அதை ஜீரணிக்க முடியாத மவ்லவிமார் களின் வர்க்கம் கொடுத்த இடையூறுகள், அவதூறுகள் ஏராளம்.
குறிப்பாக இந்த ஒரு விசயத்தில் “அந்நஜாத்தை மக்கள் படிப்பதை விட்டும் தடுப்பதில் அனைத்து மவ்லவி வர்க்கங்களும் ஒன்றுசேர்ந்து எதிர்த்தனர். இன்று வரையும் அதை செய்கின்றனர்.
இது வரலாற்று சுருக்கம்:
இப்போது வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்! இந்த 38 ஆண்டுகளில் “அந்நஜாத்’சாதித்தது என்ன?
சாதனை என்றால் மக்கள் விளங்கி வைத்திருப்பது போல் இத்தனை பாலங்கள் கட்டினோம், இத்தனை தொழிற்சாலைகளை அமைத்தோம். இத்தனை பேருக்கு வேலை வாய்ப்பை கொடுத்தோம் என்பதாக கருதுகிறார்கள். அல்லது பெரும் கூட்டம் சேர்ந்திருக்க வேண்டும். ஆண்டுதோறும் மாநாடு நடத்தி “இந்த படை போதுமா”என்று தம்பட்டம் அடிப்பதையே சாதனையாக கருதுகிறார்கள். ஆனால் “அந்நஜாத்”சாதனையாக இதை கருதவில்லை, “அந்நஜாத்தின் சாதனை என்பது, தான் கொண்ட குர்ஆன், ஹதிஸ் மட்டும்தான் மார்க்கம் என்ற கொள்கையில் மிகத் தெளிவாகவும், உறுதியாகவும் இருப்பது. அதாவது எந்த நிலையிலும் தடம் புரண்டு (குர்ஆன்) இறைநூல் மற்றும் ஹதீத்களுக்கு மாற்றமாக மக்களின் மனோ விருப்பங்களை ஏற்று வழிதவறி செல்ல “அந்நஜாத்”எப்போதும் தயாரில்லை என்பதே ஆகும்.
சத்தியம் நிலைக்கும்! அசத்தியம் அழியும்!
அல்லாஹ்வின் ஒளியைத் (இறைவாக்கான குர்ஆனை) தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். மறுப்போர் வெறுத்தாலும் இறைவன் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விடமாட்டான். (இறைநூல் 9:32)
மேற்கண்ட இறைவசனப்படி “அந்நஜாத்”சத்தியத்தை (குர்ஆன், ஹதீத்) மட்டுமே மக்களிடையே எடுத்து வைப்பதால் இறைவனின் கிருபையால் இன்றளவும் அதன் பணி தொடர்கிறது. ஆயினும் முஸ்லிம்களில் பெரும்பான்மையினரின் மார்க்க வழிகாட்டிகளாக மதித்து கண்ணியப்படுத்தும் மவ்லவிகளை “அந்நஜாத்” மிகவும் இழிவாகவும், அவமதித்தும் தொடர்ந்து எழுதி வருவதால் “அந்நஜாத்”சாதிக்க போவதென்ன? பெரும்பான்மையான முஸ்லிம்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்காது. மாறாக அவர்களின் (மவ்லவிகளின்) வெறுப்புக்கும், கோபத்திற்கும் ஆளானதாகவே இருக்கிறது. இதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது முஸ்லிம்களின் கோரிக்கை.
பல கடவுள்கள் என்ற வழிகெட்டப் போதனையை வழியுறுத்தி வரும் பூசாரிகளையும் இந்துக்கள் தங்கள் வழிகாட்டிகளாக ஏற்றிருப்பது போல், முக்கடவுள் என்ற வழிகெட்ட கொள்கையை வலியுறுத்தி வரும் பாதிரியார்களை, கிருஸ்தவர்கள் தங்கள் வழிகாட்டிகளாக ஏற்றிருப்பது போல், நாம் ஏன் வழிகாட்டியாக மவ்லவிமார்களை ஏற்கக்கூடாது என்றும் அவர்களை வழிகாட்டிகளாக ஏற்கவேண்டும் என்றும் கூறுகிறார்கள். இந்த கோரிக்கை நியாயமானதாக கூட பலருக்கு தோன்றலாம். மாற்றிக் கொள்வது நல்லதுதானே, “அந்நஜாத்” மக்களிடையே இன்னும் பரவலாக சென்று அடையுமே என்ற எண்ணத்தில் இதை விரும்புகிறார்கள்.
பல கடவுள்கள் கொள்கையும், முக்கடவுள்கள் கொள்கையும் எப்படி இஸ்லாத்திற்கு எதிரானதோ அதுபோல இறைவனுக்கு இடைத்தரகர்களாக மவ்லவிமார்களை வைப்பதும் இஸ்லாத்திற்கு எதிரானதே. “ஏக இறைவன் இதை மன்னிக்கவே மாட்டான்”என்பதை இறைநூலில் காணலாம். எனவேதான் “அந்நஜாத்”இறைவனுக்கு இடைத்தரகர்களாக இருக்கும் மவ்லவிகளை எதிர்க்கிறது. எந்தவொரு மவ்லவிகளையும் தனிப்பட்ட சொந்த விருப்பு, வெறுப்பு காரணமாக இதுவரை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ இல்லை என்பதுதான் உண்மை. அவ்வாறிருக்க ஏன் “அந்நஜாத்”எதிர்க்கிறது என்பதை வாசகர்களும், கட்டுரையாளர் களும், உண்மையை அறிந்த முஸ்லிம்களும் நன்கு அறிவார்கள். இன்னும் தெளிவாக சொல்வதாக இருந்தால் இந்த உண்மை அந்த மவ்லவிகளுக்கும் நன்கு தெரியும்.
நமது சமுதாயத்தினரை வழிகேட்டிற்கு அழைத்து சென்று பெரும்பான்மையானவர்களை கவர்ந்து நரகில் விழ செய்ய எத்தனையோ இதழ்கள் வெளிவருகின்றன. உலக ஆதாயத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு பாடுபடுவோர் அதிகமாகவே இருக்கிறார்கள். ஏனென்றால் உலக ஆதாயத்தை நோக்கமாகக் கொள்பவர்கள் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றுத்தான் ஆகவேண்டும். ஆனால் மறுமை வெற்றியை மையமாக கொண்டு “அந்நஜாத்” செயல்படுவதால் பெரும்பான்மை மக்களின் ஆதரவு கிடைக்கவில்லையே என கடுகளவும் கவலைப்படுவதில்லை. பல (நபிமார்கள்) இறைத்தூதர்கள் தன்னந்தனியாக பின்பற்றுபவர்கள் இல்லாமல் சுவர்க்கம் புகுவார்கள் என்பது இறுதி இறைத்தூதர் சொல் மூலம் கிடைத்த செய்தியாகும்.
ஆசிரியர் (மர்ஹும்) அபூ அப்தில்லாஹ் என்ற மனிதரால் பல தெளிவுக்கு பிறகே “அந்நஜாத்” 1986, ஏப்ரல் முதல் இதழ் ஆரம்பிக்கப்பட்டு “அந்நஜாத்”வெளிவரத் தொடங்கியது. இறைவன் கிருபையால் இன்றும், என்றும் “பாதை மாறா பயணம்”தொடரும். இன்ஷா அல்லாஹ்!