அலைபாயும் மனதை (நப்ஸை) அடக்க முடியுமா?
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
மனிதனின் மனதில் எது பதிந்து நிற்கிறதோ, அல்லது எது அவனுடைய சிந்தனையை ஆக்கிரமித்திருக்கிறதோ அதுவே அலைபாயும் மனதாக இருக்கிறது.
இத்தகைய அலைபாயும் மனதிற்கு எடுத்துக்காட்டாக இறைவன் தன் வழிகாட்டும் நூலில் (குர்ஆனில்) இரண்டு முக்கியமான சம்பவத்தையும், மற்றும் பல்வேறான நிகழ்ச்சிகளையும் கூறியுள்ளான்.
அவை ஒன்று: ஆதமுடைய இரு மகன்களின் வரலாறு. (பார்க்க. அல்குர்ஆன் 5:27-31)
மற்றொன்று : நபி யூசுப்(அலை) அவர்களின் வரலாறு. (பார்க்க. அல்குர்ஆன் 10:11, 10:18, 10:53, 10:83)
(மேற்கண்ட இரண்டு வரலாற்று சம்பவங்களிலும் யூதர்களால் புனையப்பட்ட பல கற்பனை கதைகளும் இஸ்லாத்தில் பரவியுள்ளன. நாம் அதற்குள் செல்ல விரும்பவில்லை. இந்த இரண்டு வர லாற்று சம்பவத்திற்கு என்ன காரணம் என்பதை இறை நூலின் மூலம் தெரிந்துக் கொண்டால் அலைபாயும் மனதை அடக்கப் போதுமானது.
இறைநூலில் குறிப்பிடப்பட்டுள்ள மேற்கண்ட இரண்டும் சம்பவங்களில் ஒன்று கொலையில் முடிந்தது. மற்றொன்று கொலை முயற்சி செய்யப்பட்டது. ஆனால் கொல்லப்படவில்லை. அதுமட்டுமல்ல இந்த இரண்டு சம்பவங்களும் உடன்பிறந்த சகோதரர்களாலேயே நடந்தவை. என இறைநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய கொலை முயற்சிக்கு என்ன காரணம்? மனம்(நப்ஸ்) தீமையை அழகாக காட்டியதே காரணமாகும்.
இந்த வரலாற்று சம்பவம் முன்பு நடந்தது மட்டுமல்ல, இன்றும் நடக்கின்றது. நம் அனைவரின் வாழ்விலும் நடந்துகொண்டே இருக்கிறது. அதாவது ஆசை, கோபம், களவு கொள்வதால் தீமைகளும், அன்பு, நன்றி, கருணை கொள்வதால் நன்மைகளும் நடக்கிறது.
இந்த வரலாற்று சம்பவத்திற்கு முன்பாக நாம் ரூஹாக(ஆன்மாவாக) இருந்தபோது இரு சம்பவங்கள் நடந்தது.
ஒன்று : பெருமை என்னும் ஆணவம் இப்லீ ஸுக்கு ஏற்பட்டதால் நடந்தது.
மற்றொன்று : இப்லீஸின் ஆசை வார்த்தைக்கு ஆதம் ஹவ்வா இருவரும் மயங்கி செய்த தவறால் நடந்தது.
(மேற்கண்டவைகளை எல்லாம் நஜாத் வாசகர்கள் அனைவரும் நன்கு அறிந்த ஒன்றே ஆகும். எனவே அதைப் பற்றி விரிவாக குறிப்பிட வேண்டியதில்லை என்பதால் தவிர்த்துள்ளோம்)
ஆக மனம் (நப்ஸ்) தவறுவதற்கு என்னென்ன காரணம் என்பதை அறிந்து கொண்டால் அலைபாயும் மனதை அடக்க முடியும்.
அது எவ்வாறு என்பதை இறைநூலும், இறைத்தூதரின் மூலமும் சொல்லிக் காட்டப்பட்டுள்ளது.
இறைநூலில் : “எவர்கள் இறைவனுக்காக ஜிஹாத்(கடும் முயற்சி) செய்கின்றார்களோ அவர்களுக்கு வெற்றி அடையக்கூடிய வழிகளை காண்பிப்போம். ஏன் என்றால் நிச்சயமாக இறைவன் நற்செயல் செய்யக்கூடியவர்களுடன் இருக்கின்றான்”. அல்குர்ஆன் 29:69
இறைநூலில் : “எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை மாற்றிக் கொள்ளாதவரை உண்மையில் இறைவனும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை.’’ அல்குர்ஆன் 13:11
மேற்கண்ட இரண்டு வசனத்தின் மூலம் இறைவன் தனி மனிதனுக்கும், சமூகத்திற்கும் தேவையானவை என்ன என்பதை குறிப்பிட்டுள்ளான். அதாவது இறைவன் மனிதனை படைத்த நோக்கம் மனிதனிடம் நிராசையோ, பேராசையோ தோற்றுவிப்பது அல்ல. மாறாக வாழ்வும் –வீழ்வும் ஏற்படலாம் முயற்சிகள் கூட தோல்வி அடையலாம். ஆனால் முயற்சி தொடர்ந்துக் கொண்டே இருக்குமேயானால் இறைவன் கைவிடமாட்டான்.
இறைதூதர் சொன்னது : “நீங்கள் ஒவ்வொருவரும் கண்காணிப்பாளராகவும் இறைவனிடம் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாகவும் இருக்கிறீர்கள்!
A. ஆட்சித் தலைவர் கண்காணிப்பாளராக இருக்கிறார். அவருடைய குடிமக்கள் விசயத்தில் அவரிடம் கேள்வி கணக்குக் கேட்கப்படும்.
B. ஒவ்வொரு மனிதரும் அவரவருடைய மனைவி மக்களை நிர்வகிப்பவராகவும், பதில் சொல்ல கடமைப்பட்டவராகவும் இருக்கிறார்கள்.
C. மனைவி, அவளது கணவரின் வீட்டைக் கண்காணிப்பவளாகவும், பதில் சொல்ல கடமைப்பட்டவளாகவும் இருக்கிறாள்.
D. ஓர் ஊழியர் அவருடைய முதலாளியின் பொருளைக் கண்காணிப்பவராகவும், கணக்கு கொடுக்க வேண்டிய பொறுப்புடையவராகவும் இருக்கிறார்.
எனவே எச்சரிக்கையாக இருங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளராகவும், பதில் சொல்ல கடமைப்பட்டவராகவும் இருக்கிறீர்கள். (அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரழி) ஆதாரம் : புகாரி.
இறைதூதரின் சொல்லின் மூலம் தெரிய வருவது மனிதன் இரு வகையான பொறுப்புக்களை நிறைவேற்ற கடமைப்பட்டவனாக இருக்கின்றான்.
ஒன்று : இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் மூலம் (ஹீகூகுல்லாஹ்) அலை பாயும் மனதை அடக்க முடியும்.
மற்றொன்று : படைப்பினங்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகள் மூலம் (ஹீகூகுன் நாஸ்) அலை பாயும் மனதை அடக்கமுடியும்.
இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்று, மிக சுருக்கமாக சொல்வதென்றால், இறைவன் ஒருவன் தான் என்று நம்புவதும், தூதர்களை நம்புவதும், வழிகாட்டும் இறை நூலை நம்புவதும், வானவர்களை நம்புவதும் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு மறுமையை நம்பினால் மட்டுமே.
“அலைபாயும் மனதை அடக்க‘ இன்ஷா அல்லாஹ் முடியும்.