அல்குர்ஆனுக்கு
மொழியாக்கம் – விளக்கம் – சுயவிளக்கம்
அபூ அப்தில்லாஹ்
மறு பதிப்பு :
மே 2024 மாத தொடர்ச்சி…..
பிக்ஹு சட்டங்களை முழுமையாக மண்டையில் ஏற்றிக்கொண்டு வெளிவருவதால், குர்ஆன் மொழி பெயர்ப்புகளும் அவரவர்கள் மத்ஹபு, தரீக்கா, இயக்கக் கொள்கைகளை நிலை நாட்டும் நோக்கில் அமைவதிலும் வியப்பில்லை. தர்கா–சமாதி வழிபாடுகளை மார்க்கமாக்கும் பரேல்வி கொள்கையுடைய மதகுருமார்கள் “மின்தூனில்லாஹ்‘ என்று குர்ஆனில் வரும் இடங்கள் அனைத்திலும் “அல்லாஹ் அல்லாதவைகள்‘ என மொழியாக்கம் செய்துள்ளனர். அஃறிணைப் பொருள்களான கல், சிலைகள், விலங்குகள், பறவைகள் இவற்றிற்கு வழிபாடுகள் செய்வதுதான் சிர்க், இறந்துபோன, உயிரோடுள்ள மனிதர்கள், மலக்குகள், ஜின்கள் போன்றவர்களுக்கு வழிபாடு செய்வது “சிர்க்‘ அல்ல என்று நியாயப்படுத்தவே இந்தத் தந்திரம். ஆனால் “மின் தூனில்லாஹ்‘ என்ற பதம் அல்லாஹ் அல்லாத மலக்கு. ஜின், மனித, இதர படைப்புகள் அனைத்தையும் குறிக்கும்.
இப்படி ஒவ்வொரு வழிகெட்ட கொள்கையில் இருப்பவர்களும் தங்களின் வழிகெட்ட கொள்கையை நியாயப்படுத்தும் வகையில் குர்ஆனுக்கு மொழியாக்கம் செய்துள்ளனர். தமிழில் இதுவரை வெளிவந்துள்ள மொழியாக்கங்களில் எந்த ஒரு மொழியாக்கமும் தெளிவான எளிதான முறையில் மொழி பெயர்க்கப்பட வில்லை. ஆயினும் அரபி மொழி அறவே தெரியாத ஒருவர் 2:186 இறைக் கட்டளைப்படி அல்லாஹ் மீது மட்டுமே முழு நம்பிக்கை வைத்த எந்த மவ்லவியையும் சார்ந்து இல்லாமல் நேரடியாகச் சுயமாக இந்த அரைகுறை மொழியாக்கங்களைப் படித்துச் சிந்தித்தாலும் 29:69, 2:282 இரண்டு இறை வாக்குகளிலுள்ள அல்லாஹ்வின் வாக்குறுதிப்படி நேர்வழியை எளிதாக்குவான். 2:186படி அல்லாஹ்வை முற்றிலும் நம்பாமல், 7:3 இறைவாக்கைப் புறக்கணித்து மவ்லவிகளான இந்த மதகுருமார்களைத் தங்களின் பாதுகாவலர்களாக வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டவர்கள் 33:36 கூறுவது போல் பெரும் பகிரங்க வழிகேட்டிலாகி 33:66,67,68 கூறுவது போல் நாளை நரகில் கிடந்து வெந்து புண்ணாகி இந்த மதகுருமார்களைச் சபிக்கும் கேடுகெட்ட நிலையையே அடைவார்கள்.
மதரஸா சென்று அரபி மொழி கற்றுக்கொள்ளாத நாமே எமது 42 வயதுக்குப் பிறகு அல்லாஹ் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த அரைகுறை தமிழ் மொழியாக்கங்களைப் பார்த்துவிடாது முயற்சி செய்ததால் இந்த மவ்லவிகளின் தில்லுமுல்லுகளையும், பித்த லாட்டங்களையும், ஈவிரக்கமின்றி பெருங்கொண்ட மக்களை நாளை நரகில் தள்ளி நரகை நிரப்ப ஷைத்தானுக்குத் துணை போவதையும் தெளிவாகச் சந்தேகமற அறிய முடிந்தது. இதற்கு நல்லதொரு முன்மாதிரியாகும், உதாரணமாகும். ஆக முறையான தெளிவான நேரடியான எளிதான குர்ஆன் மொழியாக்கம் இதுவரை வெளிவரவில்லை. அப்படி ஒரு முறையான மொழியாக்கம் (ProperTranslation) வெளிவர முயற்சிகள் எடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.
குர்ஆன் விளக்கம் (Explanation) :
குர்ஆன் முறையாகவும், தெளிவாகவும், நேரடியாகவும், எளிமையாகவும் மொழியாக்கம் செய்யப்பட்டால் எழுதப் படிக்கத் தெரியாத பாமரனும், பிறர் படிப்பதைக்காதால் கேட்ட மாத்திரத்தில் தெளிவாக விளங்க முடியும். யாருடைய மேலதிக விளக்கமும் தேவையே இல்லை. ஆனால் இன்று அந்த நிலை இல்லை. குர்ஆன் வசனங்களுக்கு சம்மந்தமில் லாத விளக்கங்களைக் கொடுத்து அர்த்தங்களை அநர்த்தமாக்கி வைத்திருக்கும் நிலையே காணப்படுகிறது. எனவே இந்த மதகுருமார்கள் புகுத்தியிருக்கும் தவறான விளக்கங்களை யும், கருத்துக்களையும், மக்களுக்குப் புரிய வைக்கும் கட்டாயம் ஏற்படுகிறது.
ஒரு குர்ஆன் வசனம் கூறும் அதே கருத்தை வலியுறுத்தி எத்தனைத் தொகுப்பு எழுதினா லும் தவறில்லை. ஆனால் அவ்வசனம் நேரடியாகக் கூறும் கருத்தை சுய விளக்கம் மூலம் மாற்றி 2:159 இறைவாக்கு சொல்வது போல் மறைப்பது அல்லாஹ். மலக்குகள், மனிதர்கள் அனைவரின் சாபத்திற்குரிய குற்றமாகும்.
உதாரணமாக 7:55 இறைவாக்கு துஆ பணி வாகவும், அந்தரங்கமாகவும் இருக்க வேண்டும் என்று கட்டளையிடுவதோடு வரம்பு மீறுகிறவர்களை அல்லாஹ் நேசிக்கமாட்டான் என்கிறது. இந்நேரடிக் கருத்தை வலியுறுத்தி எத்தனை பாகங்கள் விளக்கமாக எழுதலாம். அதற்கு மாற்றமாக கூட்டு துஆவை நியாயப்படுத்தி, வலியுறுத்தி விளக்கம் கொடுப்பது அதே 2:159 இறைவாக்குப்படி குற்றமாகும். அதேபோல் 3:103,105, 6:153,159, 30:32, 42:13,14 இறை வாக்குகள் கூறும் பிரிவுகள் கூடாது என வலியுறுத்தி எவ்வளவு விளக்கமும் எழுதலாம். ஆனால் மத்ஹபுகள், தரீக்காக்கள் போன்ற இப்படிப்பட்ட பிரிவுகள்தான் கூடாது.
நாங்கள் உண்டாக்கி இருக்கும் முஜாஹித், ஜாக். ததஜ போன்ற இயக்கப் பிரிவுகள், மேற்படி இறைவாக்குகள் கூறும் பிரிவுகள், மேற்படி இறைவாக்குகள் கூறும் பிரிவுகளே இல்லை என்று விளக்கம் கூறுவது 2:159 இறை எச்சரிக்கைப்படி நேர்வழியை அத்தாட்சிகளை மறைத்து அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரதும் சாபத்திற்கு ஆளாகி நரகம் புக வைக்கும். ஆம்! குர்ஆனின் செயல்பாட்டிற்குரிய முஹ்க்கமாத் வசனங்களின் நேரடிக் கருத்தை வலியுறுத்திக் கூறுவது அனுமதிக்கப்பட்ட விளக்கமாகும். நேரடிக் கருத்தை இருட்டிப்புச் செய்து கூறும் விளக்கம் அனுமதிக்கப்பட்டதல்ல; நரகில் கொண்டு சேர்க்கும்.
“பித்அத்(புதியவை) அனைத்தும் வழிகேடுகள்; வழிகேடுகள் அனைத்தும் நரகில் கொண்டு சேர்க்கும்‘ இது ஒரு பிரபலமான ஹதீஃத், அஹ்லஹதீஃத்கள் முஜாஹித்கள், ஜாக், ததஜ போன்ற குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்கம் என வாய் கிழியப் பேசுகிறார்கள், தங்களின் உரையை ஆரம்பிக்கும் முன்னர் அரபியில் ஓதுபவற்றில் அவசியம் இந்த ஹதீஃத் இடம் பெறும்.
5:3, 3:19,85 இறைவாக்குகள் மற்றும் இந்த ஹதீஃத் எந்தவிதச் சந்தேகத்திற்கும் இடமின்றி மார்க்கத்தில் நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அணுவளவல்ல. அணுவின் முனை அளவும் கூட்டவோ, குறைக்கவோ முடியாது என்று நெற்றிப்பொட்டில் அடிப்பது போல் உரைக்கின்றன. ஆனால் மதகுருமார்களில் எந்தப் பிரிவினராவது, இந்த இறைக் கட்டளைகளுக்கும், இந்த ஹதீஃதுக்கும் உட்பட்டு அல்லாஹ்வுக்கு அடிபணிந்து நடக்கிறார்களா? அல்லது இவற்றை நிராகரித்து ஷைத்தானுக்கு அடிபணிந்து நடக்கிறார்களா? நடுநிலையோடு சிந்தியுங்கள்.
குர்ஆன், ஹதீத், இஜ்மா, கியாஸ் ஆகிய நான்கும் மார்க்கமே என்று கூறும் தர்கா, தரீக்கா, மத்ஹபு பிரிவினர் பித்அத்தில் இரண்டு வகையுண்டு. அவற்றில் பித்அத் ஸய்யியா–கெட்ட பித்அத்துதான் கூடாது; பித்அத் ஹஸனா–நல்ல பித்அத் கூடும் என அவர்களாகச் சுயவிளக்கம் கொடுத்து இஜ்மா, கியாஸ், தர்கா சடங்குகள், தரீக்கா, மத்ஹபுகள், குருகுல மதரஸாக்கள் போன்ற பித்அத்களை நியாயப்படுத்துகின்றனர். குர்ஆன், ஹதீத் மட்டுமே மார்க்கம் என வாய் கிழியப் பேசும் அஹ்ல ஹதீத், முஜாஹித், ஜாக், ததஜ போன்ற பிரிவினர் எந்த முகத்தோடு, எந்த குர்ஆன், ஹதீத் ஆதாரத்தோடு வைத்து தங்களின் பித்அத்களை மார்க்கமாக்குகின்றனர்? விளக்குவார்களா?
ஆக மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள் என, அல்லாஹ்வை மறந்து ஆணவம் பேசும் மதகுருமார்கள் அனைத்துப் பிரிவினரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே, மக்களைக் கொண்டு நரகத்தை நிரப்ப ஷைத்தானுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்பவர்களே தாஃகூத்களே என்பது குர்ஆன், ஹதீஃத் எடுத்தியம்பும் உண்மையாகும்.
குர்ஆன் சுயவிளக்கம் (Interpretation) :
இறைவனின் இறுதி வாழ்க்கை வழிகாட்டி நெறிநூல் அல்குர்ஆனுக்கு முறையான தெளி வான சரியான மொழி பெயர்ப்பு (Proper Translation) விளக்கம் (Explanation) அனுமதிக்கப் பட்டவை என்ற விபரங்களைப் பார்த்தோம். அடுத்து அல்குர்ஆனுக்கு சுயவிளக்கம் (Interpretation) அனுமதிக்கப்பட்டதா என்று பார்ப்போம். அப்படி குர்ஆன் வசனங்களுக்கு மேல்விளக்கம் கொடுக்கும் அதிகாரம் அல்லாஹ்வின் தூதருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது என்பதை 2:213, 16:44,64, 59:7 போன்ற இறைவாக்குகளை உறுதிப் படுத்துவதோடு, ஒரே கருத்தை மட்டுமே தரும் செயல் பாட்டுக்குரிய முஹ்க்கமாத் வசனங்களுக்கு சுய விளக்கம் (Interpretation) கொடுக்கும் அதிகாரம் இறுதி தூதருக்குப் பிறகு வேறு யாருக்குமே இல்லை என்பதை 7:3, 33:36, 18:102-106 இறைவாக்குகள் நெற்றிப் பொட்டில் ஓங்கி அறைவது போல் கூறுகின்றன.
மேல் விளக்கம் கொடுக்கும் அதிகாரம் பெற்ற நபி(ஸல்) அவர்களே அல்குர்ஆனில் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு ஒரு சில வசனங்களுக்கு மட்டுமே மேல் விளக்கம் கொடுத்துள்ளார்கள். எஞ்சிய மிகப் பெரும்பான்மை இறைவாக்குகள் சுயமாகத் தெள்ளத் தெளிவான விளக்கத்துடனேயே இருக்கின்றன என்பதை ஆதாரபூர்வமான ஹதீத்களைச் சுய சிந்தனையுடன் ஆராய்கிறவர்கள் அறிய முடியும்.
குர்ஆனுக்கு தஃப்ஸீர் என்ற பெயரால் இம்மதகுருமார்கள் ஒரு வசனம் கூட விடாமல் 6236 வசனங்களுக்கும் மேல் விளக்கம் கொடுத் துள்ளதில் ஒருசில நீங்களாக மிகப் பெரும் பாலானவை இவர்களின் கைச்சரக்காக இருக்கும். அல்லது முன்னைய மதங்களைக் கற்பித்த மதகுருமார்களின் கைச்சரக்காக இருக்கும் (இஸ்ராயிலியத்) இவை அனைத்தும் இறைவனுக்கு இணை வைக்கச் செய்யும் (சிர்க்) கற்பனைகளாக மட்டுமே இருக்கும்.
இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களின் தஃப்ஸீர் என்று கூறி இம்மதகுருமார்கள் அறிமுகப்படுத் தும் தஃப்ஸீர் இவர்களின் கற்பனையே அல்லாமல் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கொடுத்த மேல்விளக்கம் (தஃப்ஸீர்) என்பதற்கு உருப்படியான ஏற்கத்தக்க எந்த ஆதாரத்தையும் இந்த மதகுருமார்கள் தரமுடியாது.
மேல் விளக்கம் (Interpretation) என்றால் அதன் அசலான பொருள், உண்மையில் அந்த முஹ்க்கமாத் வசனங்கள் கூறாத தவறான பொருள்களை அவற்றின் உட்பொருளாகக் கூறி அவற்றைப் பெரும் ஆய்வுக்குப் பிறகு வெளிப்படுத்துவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வஞ்சிப்பதாகும்.
இந்த தஃப்ஸீர் கலை உருவானதே மத்ஹபுகள் கற்பனை செய்யப்பட்ட பின்னரே; மத குருமார்கள் ஒவ்வொரு குர்ஆன் வசனத்திற்கும் வெளிப்பொருள் (ழாஹிர்) உட்பொருள் (பாத்தின்) என இரு பொருள்கள் இருப்பதாகப் பொய்யாகக் கதை அளந்த பின்னரே, இப் பொய்க் கூற்றை அடிப்படையாக வைத்து மதகுருமார்களால் கற்பனையாகப் புனையப் பட்டவையே தஃப்ஸீர்கள், இந்த தஃப்ஸீர் நூல்களில் குர்ஆன் வசனங்களும், சில உண்மைச் செய்திகளும், தகவல்களும் இருப்பதோடு பெரும்பாலானவை இம்மதகுருமார் களால் கற்பனையாகப் புனையப்பட்டவையே நிறைந்து காணப்படும்.
7:3, 2:186 இறைக் கட்டளைகள்படி அல்லாஹ்வை மட்டுமே முற்றிலுமாக நம்பி நேர்வழி நடக்க விரும்பும் ஒரு முஸ்லிம் இந்த தஃப்ஸீர்களில் செலவிடும் நேரத்தை முழுமை யாக அல்குர்ஆனில் அதுவும் தனக்குத் தெரிந்த மொழியாக்கத்தில் பயன்படுத்தினால் உரிய பலனை அடைய முடியும். பெரும்பாலான தஃப்ஸீர்கள் மக்களை வழிகேட்டில் இட்டுச் செல்பவையாகவே இருக்கின்றன.
இலங்கையிலிருந்து வெளிவரும் “நேர்வழி‘ என்ற இதழில் சில குர்ஆன் வசனங்களுக்கு வேறு சில குர்ஆன் வசனங்களைக் கொண்டும், சிலவற்றில் நபி(ஸல்) அவர்கள் மேல் விளக்கம் கொடுத்தும் புரிய வைத்ததை ஆதாரமாகக் காட்டி, நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு வந்தவர்கள் கற்பனை செய்த தஃப்ஸீர் கலையை நியாயப்படுத்தியுள்ளனர். இது பெருந் தவறாகும்.
இறுதித் தூதர்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் கண்காணிப்பில் இருந்தார்கள். (52:48). வஹியின் தொடர்புடன் இருந்தார்கள். அவர்கள் மார்க்கமாகக் கூறியவையும் வஹியே (53:1, 2,3,4). தவறு ஏற்பட்டால் உடனடியாக வஹி மூலம் திருத்தப்பட்டார்கள் (6:52-54, 66:1-3, 80:1-12) அதற்கு மாறாக நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னர் யாருமே அல்லாஹ்வின் நேரடிக் கண்காணிப்பில் இல்லை. அவர்கள் செய்யும் தவறுகள் வஹீ மூலம் திருத்தப்படவில்லை. நபி(ஸல்) அவர்கள் இறந்த சமயத்தில் உமர்(ரழி) அவர்கள் இறுதி இறைத்தூதர் இறக்கவில்லை என்று கூறி வாளைத் தூக்கிக் கொண்டு நின்றபோது, அவர்களின் தவறான கூற்று வஹி மூலம் திருத்தப்படவில்லை. 3:144, 39:30 இறை வாக்குகள் கொண்டே திருத்தப்பட்டது.
இந்த நிலையில் பின்னால் வந்தவர்கள் தஃப்ஸீர் என்ற பெயரால் மேல் விளக்கம் கொடுக்க அனுமதி இருக்க முடியுமா? அதுவும் 7:3, 33:36, 18:102-106, 59:7 இறைவாக்குகள் நேரடியாக மறுத்துக் கொண்டிருக்கும் நிலையில் மனிதக் கற்பனைகள் நிறைந்த மேல் விளக்கங்களுக்கு (தஃப்ஸீர்) மார்க்கத்தில் அனுமதி இருக்குமா? அல்லாஹ் ஏற்பானா? என்பதை நடுநிலையுடன் சிந்தியுங்கள். அல்லாஹ் தெளிவைத் தருவான்.