மனிதனை நரகத்திற்கு கொண்டு செல்லும் மூன்று தன்மைகள்!
அஹமது இப்ராகீம், புளியங்குடி
1. ஆணவம்
2. மோசடி
3. கடன்
ஆகிய இந்த மூன்றும் நீங்கிய நிலையில் ஒரு மனிதரின் உயிர் பிரிந்தால் அவர் சுவனத்தில் இருப்பார்! என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: ஸவ்பான்(ரழி) அவர்கள், (ஆதார நூல்கள் : திர்மிதி : 1497, அஹ்மத்: 2356)
அடுத்ததாக ஆணவத்திற்கு அடையாளங்களாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி) அவர்கள் கூறியதாவது :
நபி(ஸல்) அவர்கள் “யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும் தான்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீத் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. முஸ்லிம்: 147, அத்தியாயம்: 1 இறை நம்பிக்கை.
முன்னோர்களையும், மவ்லவிகளையும் கண்மூடிப் பின்பற்றாதீர்கள், அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை மட்டுமே பின்பற்றுங்கள். (அல்குர்ஆன் 5:104)
“அல்லாஹ் இறக்கியருளிய (வேதத்)தின் பக்கமும், இத்தூதரின் பக்கமும் வாருங்கள்‘ என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்களுடைய தந்தையர் (மூதாதையர்(களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது‘ என்று அவர்கள் கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்கள்) ஒன்றும் அறியாதவர்களாகவும், நேர்வழியில் நடக்காதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்) (அல்குர்ஆன் 5:104)
நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும். அந்நாளில், “ஆ கைசேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே! இத்தூதருக்கும் நாங்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே!’ என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் : 33:66)
“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 33:67)
“எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக! அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக” என்பர். (அல்குர்ஆன் : 33:68)
அல்குர்ஆன் 33:66,67,68, போன்ற வசனங்களை எடுத்துக்காட்டி மவ்லவிகளையும், முன்னோர் களையும் கண் மூடிப் பின்பற்றக்கூடாது என்று நாம் கூறினால் அப்படிப்பட்ட சத்தியத்தை கூறும்போது அதை மறுப்பதும், மத்ஹபு மதரசாவில் ஏழு ஆண்டுகள் மற்றும் தவ்ஹீத் மதரசாவில் 5 ஆண்டுகள் தங்கி அரபி மொழி கற்ற மவ்லவிகளுக்குத் தெரியாததா அரபிமொழி அறியாத உனக்கா தெரிந்துவிடப் போகிறது? என்று கூறி நம்மைத் தாக்கவும் எத்தனிக்கின்றார்கள்.
இது ஒரு அப்பட்டமான ஆணவப் போக்கேயாகும்!
அடுத்து அரபி மொழி தெரியாதவர்களை இழிவாகப் பார்த்து அதைக் கொண்டு பெருமையடிக்கும் மத்ஹபு மற்றும் தவ்ஹீத் மவ்லவிகளும் இத்தகைய ஆணவப் போக்கு உடையவர்களே!
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகமும், சொர்க்கமும் வாக்குவாதம் செய்துகொண்டன. நரகம், “பெருமையடிப்பவர்களுக் காகவும், அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்” என்று சொன்னது சொர்க்கம். “எனக்கு என்ன நேர்ந்ததோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ்நிலையினரும் இயலாதவர்களுமே (அதிகமாக) என்னுள் நுழைவார்கள்” என்று கூறியது.
அப்போது அல்லாஹ் சொர்க்கத்திடம், “நீ எனது பேரருள். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகிறேன்” என்று கூறினான். நரகத்திடம், “நீ எனது வேதனை. உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன்” என்று கூறினான். பிறகு (அவ்விரண்டையும் நோக்கி), “உங்களில் ஒவ்வொருவருக்கும் நிரம்பத் தரப்படும்” என்று சொன்னான்.
ஆனால், நரகமோ இறைவன் தனது பாதத்தை அதன் மீது வைக்காதவரை (வயிறு) நிரம்பாது. இறைவன் தனது பாதத்தை வைக்கும்போது, நரகம் “போதும், போதும்” என்று கூறும். அப்போதுதான் அதற்கு வயிறு நிரம்பும், மேலும், நரகத்தின் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். இதை அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மேற்கண்ட ஹதீஃத் அபூஹுரைரா(ரழி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் (“வாக்குவாதம் செய்து கொண்டன என்பதைக் குறிக்க “தஹாஜ்ஜத்” என்பதற்குப் பகரமாக) “இஹ்தஜ்ஜத்” எனும் சொல் இடம் பெற்றுள்ளது. மற்றவை மேற்கண்ட ஹதீஃதில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.” முஸ்லிம் : 5470, அத்தியாயம் : 51, மறுமை சுவர்க்கம் நரகம்.
எனவே அன்பானவர்களே! சொல்வது யாரென்று பார்க்காமல் சொல்லப்படும் விசயங்கள் உண்மையானவையா? என்று அல்குர்ஆன் ஆதாரப்பூர்வமான ஹதீத் ஆகியவற்றை உரைக்கற்களாகக் கொண்டு ஆய்வு செய்து அதன்பின் அந்த சத்தியத்தை பின்பற்றும் அந்த நல்லோர்களுடன் நம் அனைவரையும் எல்லாம் வல்ல அல்லாஹ் சேர்த்தருள்வானாகவும்! ஆமீன்!!