ஆலிம் எனத் தனிப்பிரிவு இஸ்லாத்தில் உண்டா?
அபூ அப்தில்லாஹ்
மறுபதிப்பு :
ஹிஜ்ரி 400க்குப் பிறகு மத்ஹபுகளின் பெயரால் “தக்லீது” என்ற கண்மூடிப் பின்பற்றல், முஸ்லிம்களிடையே நுழைந்த யூத மதகுருமார்களால் தோற்றுவிக்கப்பட்ட பின் “ஆலிம்” என ஒரு தனிப் பிரிவினர் தோன்றி தாங்கள்தான் மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள்; மதகுருமார்கள் எனக் கடந்த ஆயிரம் (1000) வருடங்களாக முஸ்லிம் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக 6:50, 13:16, 58:11, 35:19,28, 39:9, 35:19,22, 40:58 குர் ஆன் வசனங்களை எடுத்து வைக்கின்றனர்.
ஆனால் நடுநிலையுடன் இவ்வசனங்களின் கருத்தைப் படித்துச் சிந்திப்பவர்கள் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் மார்க்கத்தைக் கற்று உயர்வடைய வேண்டும். இவ்வுலகிலும் மறுமையி லும் வெற்றி அடைய வேண்டும் என்று ஊக்கப்படுத்துகின்றனவே அல்லாமல், சமுதாயத்தை ஆலிம்–அவாம் எனக் கூறுபோட அனுமதிக்கவில்லை என்பதை எளிதாக விளங்கமுடிகிறது.
“சுவர்க்கவாசிகளும், நரகவாசிகளும் சமமாவார்களா?” என்ற 59:20 குர்ஆன் வசனத்தைக் காட்டி இவ்வுலகிலேயே முஸ்லிம்களை சுவர்க்கவாசி, நரகவாசி என இரு பிரிவினராகப் பிரிப்பது எப்படிப்பட்ட கொடூர குற்றமோ அதே போல் மேற்படி வசனங்களைக் காட்டி முஸ்லிம்களை ஆலிம்–அவாம் எனப் பிரிப்பதும் மிகக் கொடூர கொடிய குற்றம் என்பதை விளங்க முடியாதவர்கள் ஆலிம்களாக இருக்க முடியுமா?
இந்த மவ்லவிகள் இவ்வசனங்கள் சமுதாயத்தில் ஆலிம் என தனிப் பிரிவுக்கு அனுமதி கொடுக்கிறது என்று கூறுவது உண்மையானால் அதை முதலில் ஏற்படுத்திக் காட்ட கடமைப் பட்டவர் யார்? 2:213, 16:44,64 குர்ஆன் வசனங்கள்படி இறுதித் தூதர் அவர்கள் அப்படி யயாரு ஆலிம் பிரிவை ஏற்படுத்தி வழிகாட்டி இருக்க வேண்டுமே! காட்டினார்களா? இல்லையே!
குறைந்தபட்சம் அடுகிடை படுகிடை என நபியின் பள்ளிக்கு அருகில் இருந்த திண்ணையில் பட்டினியாகக் கிடந்து மார்க்கம் கற்றவர்களான “அஸ்ஹாஃபுஸ் ஸுஃப்பாக்கள்” என அழைக்கப்பட்ட திண்ணைத் தோழர்களுக்கு “ஆலிம்” என்ற பட்டத்தைக் கொடுத்து, இவர்களே மார்க்கத்தை முறையாகக் கற்றவர்கள்; பட்டம் பெற்றவர்கள், மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள், மற்றவர்கள் மார்க்கம் பற்றி அவர்களிடம் கேட்டு அவர்களின் வழிகாட்டல் படியே நடக்கவேண்டும் என வழிகாட்டி இருக்கிறார்களா? அப்படி ஒரு ஆதாரம் இந்த மவ்லவிகளிடம் இருக்கிறதா? நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத ஒரு வழி மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா? பித்அத்தா? சொல்லுங்கள்!
21:92 23:52 குர்ஆன் வசனங்கள் ஒன்றுபட்ட ஒரே சமுதாயம் என்று வலியுறுத்திச் சொல்வதற்கு மாறாக சமுதாயத்தை ஆலிம்–அவாம் எனக் கூறுபோடுவது 2:39குர்ஆன் வசனப்படி இறை நிராகரிப்பா? இல்லையா? இறை நிராகரிப்புத்தான் என்பதை 23:53,54,55,56 குர்ஆன் வசனங்கள் கூறும் கடும் எச்சரிக்கையை உணர முடியாத அறிவிலிகளா இந்த மவ்லவிகள்?
எவரொருவருக்கு அல்லாஹ் நன்மையை நாடிவிட்டானோ அவரை, மார்க்கத்தில் அறிவாளியாக ஆக்கிவிடுகிறான் என்று புகாரியில் காணப்படும் ஹதீதும், மனிதர்களே! கல்வி என் பது கற்பது கொண்டுதான் உண்டாகும். விளக்கம் என்பது தேடி விளங்கினாலே கிடைக்கும் என்று தப்ரானியில் காணப்படும் ஹதீதும் மனிதர்கள் என்ற ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய அறிவுரையா? அல்லது வசதியற்ற ஏழை வீட்டு பிள்ளைகளுக்கும் உலகக் கல்வி ஏறாத மக்கு மாணவர்களுக்கும் மட்டுமே உரிய அறிவுரையா? மவ்லவிகளே சொல்லுங்கள்!
இறுதித் தூதருக்கு முன்னால் வந்த அனைத்து நபிமார்களின் சமுதாயங்களிலும் இந்த இடைத்தரகர்களான மதகுருமார்கள் திருட்டுத்தனமாகப் புகுந்துகொண்டு, குருகுல கல்வியை நடைமுறைப்படுத்தி வந்தது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாதா? ஏன்? மக்காவிலேயே கஃபத்துல்லாஹ்வுக்கு அருகிலேயே நபியின் ஆறு தலைமுறை முப்பட்டனார் குசை கி.பி.440ல் உருவாக்கிய தாருந்நத்வா குருகுல கல்வி மடமான மதரஸா இருக்கத்தானே செய்தது. நபி(ஸல்) அதை ஏன் இடித்துத் தரைமட்டமாக்கி அதன் ஆலிம்களை ஜாஹில் என முஸ்லிம்களுக்கு அடையாளம் காட்டினார்கள்?
சரி! மதரஸா நடத்தி மவ்லவி–ஆலிம் பட்டம் கொடுக்கிறீர்கள். அங்கு மார்க்க ஆதாரங்களான குர்ஆன், ஹதீதை மட்டும் போதிக்கிறீர்களா? ஹிஜ்ரி 400க்குப் பிறகு மனிதர்களால் கற்பனை செய்யப்பட்டவற்றை இஜ்மா, கியாஸ், என்றும், லாஜிக், பாலிஸி என்றும் போதிக்கிறீர்களா? நீங்கள் முறையாக குர்ஆன், ஹதீதை கற்றுக்கொடுத்தால் குர்ஆனில் பல வசனங்கள் மிகக் கடுமையாகக் கண்டிக்கும் நபிமார்கள் செய்த கடமையான மார்க்கப் பணிக்கு கூலி – சம்பளம் அறவே கூடாது. தங்கள் கைகளால் உழைத்துச் சாப்பிடுவதே மிகவும் ஹலாலான செயல் என்பதைப் புறக்கணித்து முதுகுக்குப் பின்னால் போட்டுவிட்டு அற்ப கிரயமான கூலி–சம்பளத்திற்கு மார்க்கப்பணி புரிவார்களா? (பார்க்க 2:78,79, 3:187, 9:9,10,34
கடமையான மார்க்கப் பணிக்கு கூலி–சம்பளம் பெற குர்ஆனிலும், ஹதீதிலும் அறவே ஆதாரம் இல்லை என்ற ஆனவுடன், மற்ற மதங்களிலுள்ள மதகுருமார்கள் அவர்களின் மதங்களை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருப்பது போல் முஸ்லிம் மதகுருமார்களாகிய நாங்களும் மதத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருக்கிறோம் என வாதிடுகிறீர்களே! மற்ற மதங்களின் மதகுருமார்கள் அவர்களுக்காக அனுப்பப்பட்ட நபிமார்கள் இறைவனிடமிருந்து வஹீ மூலம் பெற்ற நேர்வழியை கோணல் வழிகளாக்கி, மார்க்கத்தை மதமாக்கி மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளுவது போல், முஸ்லிம் மதகுருமார்களான மவ்லவிகளும் அல்லாஹ் இறுதித் தூதருக்கு வஹீ மூலம் கொடுத்தருளிய நேர்வழியை கோணல் வழிகளாக்கி, மார்க்கத்தை மதமாக்கி மக்களை நரகில் தள்ளுவது கொண்டு அற்ப உலக ஆதாயங்களை அடைய மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருக்கிறீர்களா? சொல்லுங்கள்!
இறுதியாக நீங்கள் வைக்கும் கவர்ச்சியான, வார்த்தை ஜாலமான வாதம்–வார்த்தை ஜாலம் (6:112) என்ன தெரியுமா? உலகியல் துறைகளான மருத்துவம், பொறியியல், அறிவியல், வழக்கறிஞர், கணக்காளர் போன்ற அனைத்துத் துறைகளுக்கும், அனைத்து வகை கல்வி களுக்கும் அவற்றைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்–குரு இருப்பது போல் மார்க்கத் துறைக்கும் குரு இருப்பது அவசியம் என்ற வாதத்தை வைக்கிறீர்கள்.
உலகிலுள்ள அனைத்துத் துறைகளிலும் படித்துப் பட்டம் பெற்று அவற்றைப் பிழைப்பாகக் கொண்டிருக்கும் அனைத்து வகை அறிஞர்களும், அறிவு ஜீவிகளும், விஞ்ஞானிகளும் உங்களின் இந்த வாதத்தைச் சரிகண்டு ஏற்கின்றனர்.முஸ்லிம்களிலுள்ள இந்த அனைத்துத் துறைகளில் படித்துப் பட்டம் பெற்றுப் பேரறிஞர்களாகி, உலகில் வசதி வாய்ப்புகளுடன் வாழ்பவர்களும் உங்களின் இந்த மயக்கும் பேச்சில் மயங்கி, மார்க்க விசயத்தில் உங்களின் தீர்ப்பே இறுதியானது. உறுதியானது என நம்பிச் செயல்படுகின்றனர். நேரடி குர்ஆன் வசனங்களுக்கும், ஆதாரபூர்வமான ஹதீத்களுக்கும் முரணாக மவ்லவிகளாகிய உங்களின் தீர்ப்பு இருந்தாலும், நீங்கள் மவ்லவிகள்–ஆலிம்கள் மார்க்கத்தில் படித்துப் பட்டங்கள் பல பெற்ற பேரறிஞர்கள்; எனவே நீங்கள் சொல்வதுதான் சரி! நேர்வழி என நம்பி மோசம் போகிறார்கள்; வழிகேட்டில் செல்கிறார்கள்.
அல்குர்ஆன் 7:3, 33:36,66,67,68, 18:102,103, 104,105,106 இறைவாக்குகள் நேரடியாகக் கூறும் எச்சரிக்கையை இந்த உலகில் அறிஞர்கள் பொருட்படுத்துவதாக இல்லை. இறைவனின் நேரடி வாக்கான இந்த வசனங்கள் கூறுவதை விட, அவற்றிற்கு இந்த மவ்லவிகள் சொல்லும் சுய விளக்கங்களே மிகமிகச் சரி என நம்பி ஏமாறுகின்றனர். 2:159-162 கூறுவதுபோல் அல்லாஹ் தெளிவாகச் சிறிதும் சந்தேகத்திற்கு இடமின்றி நேரடியாகச் சொல்லி இருப்பதை இந்த மவ்லவிகள் தங்களின் சுய அற்ப உலக ஆதாயத்திற்காகத் திரித்து வளைத்து, மறைத்து நேர்வழியைக் கோணல் வழியாக ஆக்கி மக்களை நரகிற்கு இட்டுச் செல்கிறார்கள் என்ற உண்மையை உணரத் தயாரில்லை. இந்த உண்மையை 33:66-68 இறைவாக்குகள் நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் சம்மட்டி அடியாகக் கூறுவதை இந்த உலகியல் மேதாவிகள் உணர்வதாக இல்லை.
இப்போது உலகியல் கல்விகளுக்கும் மார்க்கக் கல்விக்குமிடையேயுள்ள மலைக்கும் மடு வுக்குமிடையேயுள்ள பெருத்த வேறுபாடு போல் காணப்படும் வேறுபாடுகளை அடுக்கடுக்காகப் பார்ப்போம்.
உலகியல் கல்விகளில் எந்தத் துறைக் கல்வியாக இருந்தாலும் அதனை ஆதத்தின் சந்ததிகள் நூற்றுக்கு நூறு அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலை இல்லை. அவர்களில் 5 சதவிகிதத்தினர் கற்றுக் கொண்டால் எஞ்சியுள்ள 95 சதவிகிதத்தினரின் அத்துறை சம்பந்தப்பட்ட விவகாரங்களைத் தீர்த்து வைக்க முடியும். உதாரணமாக 5 சதவிகிதத்தினர் மருத்து வத் துறையில் படித்துப் பட்டம் பெற்றுவிட்டால் எஞ்சியுள்ள 95 சதவிகிதத்தினரின் நோய்களைத் தீர்க்க முடியும். இப்படி பொறிஞர், வழக்குரைஞர், நீதிபதிகள், ஆடிட்டர், ஆசிரியர் என அனைத்து உலகியல் துறைகளிலும் 5% அறிஞர்கள் 95% பொது மக்களின் விவகாரங்களைத் தீர்த்து வைக்க முடியும்.
ஆனால் அதற்கு மாறாக மார்க்கத்தை 5% அல்ல. நூற்றுக்கு நூறு அனைத்து மக்களும் கற்கும் கட்டாயம் இருக்கிறது. இதை இந்த மவ்லவிகள் மறுப்பார்களா?
அடுத்து ஒருவர் ஒரு துறையில் படித்துப் பல பட்டங்கள் பெற்றிருந்தாலும், அவர் தனது பெயருக்குப் பின்னால் பல பட்டங்களைப் போட்டிருந்தாலும், அவரது அத்துறை சம்பந்தப்பட்ட ஞானத்தை மற்றவர்கள் இவ்வுலகிலேயே சொந்த அனுபவத்தில் அறிந்துகொள்ள முடியும். ஒரு மருத்துவரிடம் பலமுறை சென்று மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை என்றால் அம்மருத்துவர் தகுதியற்றவர் என்பதை மற்றவர்கள் சொந்த அனுபவத்திலேயே இவ்வுலகிலேயே அறிந்துகொள்ள முடியும். இதுபோல் உலகியல் அனைத்துத் துறைகளிலும் படித்துப் பட்டங்கள் பல பெற்றிருந்தாலும் உலகில் கண்கூடாக அவரது தகுதியையும் திறமையையும் அறிந்துகொள்ள முடியும்.
ஆனால் அதற்கு மாறாக மார்க்கத்தில் ஒரு மவ்லவியின் தகுதியையும், திறமையையும் உண்மை நிலையையும் இவ்வுலகில் சொந்த அனுபவத்தில் ஒருபோதும் எவரும் அறிய முடியாது. ஒரு மவ்லவி படித்துப் பல பட்டங்களைத் தனது பெயருக்குப் பின்னால் போட்டுக்கொண்டு, இறந்து அடக்கம் செய்யப்பட்டுள்ள ஒருவரின் சமாதியில் போய் அவரிடம் கையேந்தி பிரார்த்தித்தால், அவர் நாளை மறுமையில் நம்மை சுவர்க்கம் கொண்டு போய் சேர்த்துவிடுவார் என புருடா விடுகிறார் என்றால், அதை நம்பும் ஒருவர் அவர் இவ்வுலகியல் துறையில் மாபெரும் மேதாவியாக இருந்தாலும் இவ்வுலகிலேயே தனது சொந்த அனுபவத்தில் அந்த மவ்லவியின் தகுதியை, திறமையை, உண்மை நிலையை அறிய முடியுமா? ஒருபோதும் முடியாது. நாளை மறுமையில் இறைவனின் முன் ஆஜரான பின்னரே அது தெரியவரும்.
உலகியல் கல்விகளில் ஒன்றை ஒருவன் கற்று அதைத் தொழிலாகக் கொண்டு பிழைப்பு நடத்தலாம். காரணம் அத்துறையில் 5% மட்டுமே கற்றுப் பட்டம் பெற்றிருப்பர். ஆனால் மார்க் கத்தை 100% கற்று, மார்க்கத்தை அறிந்து நடப்பது கட்டாயக் கடமையாக இருப்பதால், மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்வது மக்களை ஏமாற்றிப் பிழைக்கவே வழி வகுக்கும். எஞ்சியுள்ள 95% மார்க்கத்தை அறிந்துகொள்ள விடாமல் தடுக்கவும், மக்களை ஏமாற்றிப் பிழைக்கவுமே அது வழி வகுக்கும்.