இஸ்லாமிய இறை ஒருமை இயல் அல்லாஹ்வின் ஒருமை:
தெய்வங்கள் உற்பத்தியாளர்களா மனிதர்கள்?
– முஹிப்புல் இஸ்லாம்
அல்லாஹ்வின் ஒருமை:
அல்லாஹ்வின் அருள் மார்க்கம் இஸ்லாம் மக்கள் சமுதாயத்துக்கு அல்லாஹ் அருளிய அருட்கொடை எவராலும் எதனாலும் அசைக்க முடியாத இஸ்லாத்தின் அடித்தளம்; இஸ்லாத்தின் இறைக் கோட்பாடு.
இறைக் கோட்பாட்டின் தனித்துவம் இறை ஒருமை! இறைவன் ஒருவன்! அந்த ஒரே இறைவன்தான் அல்லாஹ்! அவன் அல்லாத எவரும் எதுவும் இறைவன் அல்லன்.
அல்லாஹ் அல்லாத எதுவும் இறைவனாக, கடவுளாக, தெய்வமாக ஆண்டவனாக முடியாது. அதற்குரிய அவசியம் எதையும் அல்லாஹ் ஏற்படுத்தவில்லை.
லாயிலாஹ இல்லல்லாஹ் :
“லாயிலாஹ இல்லல்லாஹ் “லா‘ இல்லை” “இலாஹ்‘ இறைவன், “இல்லல்லாஹ்‘ அல்லாஹ்வைத் தவிர,
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதே இஸ்லாத்தின் இறை ஒருமைக் கோட்பாடு; இறை ஒருமைக் கோட்பாட்டை அருளியது யார்? ஒரே இறைவனாகிய அல்லாஹ் தான். வஇலாஹு(க்)கும் இலாஹுவ்வாஹித்; மேலும் உங்கள் இறைவன் ஒரே இறைவன் தான்.
லாயிலாஹ இல்லாஹுவ: அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை.
(அல்குர் ஆன் 2:163)
அவன் எனும் அந்த ஒரே இறைவன் யார்?
“அல்லாஹு லாயிலாஹ இல்லா ஹுவ‘ : அல்லாஹ் அவனின்றி வேறு இறைவன் இல்லை. (அல்குர்ஆன் 2:255, 3:18, 4:87, 6:106, 7:59,85, 59:23)
படைப்புக்கள் அனைத்தின் படைப்பாளன் அல்லாஹ்:
அல்லாஹ் மட்டுமே ஒரே இறைவன் ஏன்?
“தாலிக்குமுல்லாஹு ரப்பஹும்‘ அவன் தான் உங்களைப் படைத்து பரிபாலிப்பவனாகிய அல்லாஹ்; லாயிலாஹ இல்லாஹுவ‘ அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை.
“ஹாலிக்கு குல்லி ஷைகின்‘ எல்லா (ஒவ்வொரு) பொருளையும் படைத்தவன் அவனே. (அல்குர்ஆன் 6:102) அல்லாஹ் ஒரே இறைவன் என்பது எதனால்? அல்லாஹ்தான் அனைத்தின் படைப்பாளன். (அல்குர்ஆன் 6:107) அதனால் தான் அந்த அல்லாஹ் மட்டுமே ஒரே இறைவன்.
அல்லாஹ்வின் தனித்துவம் :
அல்லாஹ் அல்லாத அனைத்தும் அல்லாஹ்வின் படைப்பினங்கள். இதிலிருந்து அல்லாஹ் எவர்க்கும், எதற்கும் விதிவிலக்கு அளிக்கவில்லை. அதனால்தான் அல்லாஹ் படைப்பினங் கள் அனைத்திலிருந்தும் தனித்தவன் ஆவான். படைப்பினங்கள் அனைத்திலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட அல்லாஹ்வின் தனித்துவம் இதுதான்.
படைப்பினங்கள் அனைத்திலிருந்தும் தனித்து நிற்கும் அல்லாஹ்வின் தனித்த இயல்பே அல்லாஹ்வின் ஒருமையைக் கோடிட்டுக் காட்டும் தனித்துவம் ஆகும்.
அல்லாஹ்வின் படைப்பாற்றல் பற்றி அல்குர்ஆன் விரிவாய் விரித்துரைக்கிறது மட்டுமின்றி, அல்லாஹ்வோடு தொடர்புடைய அனைத்தையும் தெளிவாகவும், விளக்கமாகவும் ஐயத்திற்கிடமின்றியும் அல்லாஹ் எடுத்துக் காட்டி விரிவாய் விவரித்துள்ளான்.
அல்லாஹ் பற்றி மானுடம் அறிய வேண்டிய, மானுடம் அறிய விழையும் அனைத்தும் மேலதிக விளக்கங்களுடன் அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.
அல்லாஹ்வின் ஒருமையிலும் சரி, அல்லாஹ்வோடு தொடர்புடைய எதுவாயினும் சரி, அல்லாஹ் மட்டுமே அவைகளைத் தெளிவுபடுத்த முடியும். அப்படிப்பட்டவைகளை அல்லாஹ் மட்டும் தெளிவுபடுத்தவும் வேண்டும். காரியங்கள் அனைத்தையும் மிக மிகச் சரியாக செய்பவன் எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ் தான். இதையும் மிகச் சிறப்பாக அல்குர் ஆனில் பதிவு செய்துள்ளான். அல்ஹம்து லில்லாஹ். இதில் அல்லாஹ் அல்லாத எவரும் குறுக்கிடவும் முடியாது. குறுக்கிடவும் கூடாது. காரணம் அல்லாஹ் மட்டுமே அல்லாஹ்வை அல்லாஹ்வாக, ஒரே இறைவனாகக் காட்டமுடியும். அல்லாஹ்வின் இந்த விதி மீறப்பட்டபோது அல்லாஹ்வின் படைப்புகளில் ஜின்களும், மனிதர்களும் கடவுள்களாச் செதுக்கவும், சித்தரிக்கவும் முற்பட்டார்கள். படைத்தவனாகிய ஏக இறைவனைப் படைப்புக்கள் உருவாக்கும் வேதனையின் விளிம்புக்கு இட்டுச் செல்லும் வினோதம்.
தெய்வப் பெருக்கம் :
மனிதக் கற்பனையில் கட்டுக்குள் அடங்காமல் கடவுள்கள் பெருக்கெடுத்தனர். இறைக் கோட்பாடு மனிதக் குறைமதிக்கு இரையானது. இறை ஒருமைக் கோட்பாடு பல தெய்வ வழிகேடாய் உருமாற்றம் அடைந்தது. புதுக் கவிதைகள் திறனாய்வாளர் சா.அந்தோணி டேவிட் நாதன் மனிதர்கள் கடவுள்களை எப்படி உற்பத்தி செய்தார்கள் என்பதற்கு இப்படி விளக்கமளிக்கிறார்.
“தன்னை மீறிய ஏதோ ஒரு சக்தி இந்த உலகை ஆட்டுவிக்கிறது என்று ஆதிமனிதன் கருதினான். அதற்குக் கடவுள் என்று பெயரிட்டான். நாளடைவில் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு கடவுள் உண்டென நம்பினான். கடவுளரின் செயல்பாடுகளை வரையறுத்து மதத்தை தோற்றுவித்தான். (நூல்: புதுக்கவிதையில் மனிதன், சா.அந்தோணி டேவிட்நாதன், பக். 55, செரூபி பதிப்பகம் (2000) ஜெயங்கொண்டம்)
மனிதர்கள் உற்பத்தியில் கடவுள்கள்:
ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு கடவுள் என மனிதர்கள் கடவுள்களை உற்பத்திச் செய்யத் தொடங்கினர். விளைவு அன்று முதல் இன்றளவும் கடவுள்களைக் கட்டிக் கொண்டும் பெருக்கிக் கொண்டும் மானுடத்தைச் சீரழிவிற்கும் அழிவிற்குள் ளாக்குவதும் முற்றுப் பெறாத தொடர் கதையாகி விட்டது. கால்குலேட்டர் எண்ணிக்கைக்குள் அடங்காமல் பாரதத்தில் கடவுள்கள் பெருக்கெடுத்துக் கொண்டிருப்பதை எவராலும் எதனாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
உண்மையில் மனிதர்கள் மட்டுமின்றி படைப்பினங்கள் அனைத்தின் வாழ்வு நெறிகளை வரையறுப்பவன் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவன்தான். ஏக இறைவனின் தனித்தன்மையை நிலைநிறுத்தும் முக்கிய அங்கங்களில் பிரதானமானது இது. மாறாக கடவுள்களின் செயல்பாடு களை மனிதர்கள் வரையறை செய்வதால் விளையும் விபரிக்க முடியாத விபரீதங்களை மனித சமுதாயம் இன்றளவும் எதிர்கொண்டு வருவது வேதனைக்குரிய கசக்கும் உண்மை.
சா.அந்தோணி டேவிட்நாதனின் வேதனை விம்மல் இதோ:
மனிதனைப் பண்படுத்தும் பரிவோடு, அரவணைத்து அருள் நெறியில் வசப்படுத்துவதும் தான் மதத்தின் நோக்கம். ஆனால் தொடக்கத்திலிருந்தே அந்நெறிகள் மீறப்பட்டு வந்துள்ளன. கடவுள் மதம் என்னும் பெயர்களால் கண்மூடிததனமாகப் போலிக் கோட்பாடு. (வழிகேடுகள்) தோற்றுவிக்கப்பட்டு மனிதத்தைப் புண்படுத்தும் பணிகள் தொடங்கின.
மனிதாபிமானச் செயல்கள் மறைந்து மனிதாபிமான (வெறிச்) செயல்கள் மேலோங்கின. மானுடத்தை மகத்துவப்படுத்த தோன்றிய மதங்கள் திசைமாறி, வணிக நோக்கோடு மனித இனத்தைச் சிதைத்தன. (நூல்: புதுக் கவிதையில் மனிதம், சா.அந்தோணி டேவிட் நாதன் பக். 55,56)
உள்ளம் உள்ளோரின் இரத்தக் கண்ணீர்:
மனிதர்கள் உற்பத்தி செய்த செய்யும் கடவுள்கள் அந்தக் கடவுள்கள் அடிஒட்டி உருவான மதங்கள் அந்த மதங்களால் மானுடமும், மனிதமும் சந்திக்கும் சீரழிவுகள், சிதைவுகள் இழப்புகள், அழிவுகள், இதுகண்டு உண்மையில் உள்ளம் உள்ளோர் எவரும் இரத்தக் கண்ணீரால் இரணமாகாமல் இருக்க முடியும்?
எல்லாம் வல்ல ஏகனாகிய அல்லாஹ் இவைகளை எல்லாம் கண்டுங்காணாமல் விட்டு விடுவானா?
இறை ஒருமைக் கோட்பாட்டை அடித்தளமாக்கிய இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக மானுடத்துக்கு அல்லாஹ் அருள் செய்துள்ளான். மனிதர்கள் உற்பத்தி செய்யும் கணக்கற்ற கடவுள்களுக்கு நிரந்தர முற்றுப் புள்ளியே இஸ்லாமிய இறை ஒருமைக் கோட்பாடு.
தெய்வங்களில் உற்பத்திச் சாலைகளா?
மனித கற்பனையின் புனைந்துரை கடவுள்களைத் தாங்கியுள்ள மதங்களுக்கும் நிரந்தர முற்றுப்புள்ளியே இஸ்லாமிய வாழ்க்கை நெறி.
மனித உற்பத்தியில் உருவானவர்கள் கடவுள்களே அல்லர். அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மனிதர்கள் தெய்வங்களின் உற்பத்தி சாலைகளா? அரிச்சுவடி அறியாதோரும் ஏற்க முடியாதே! கற்றோரே, உங்கள் அறிவை எங்கே எதனிடம் அடகு வைத்தீர்? கட்டுக்குள் கொணர முடியாத தெய்வப் பெருக்கத்தால் இந்திய தேசம் தத்தளிப்பதை ஏன் இன்னும் உணரவில்லை?
காலங்காலமாய் கடைபிடிக்கப்படுவதால் மாபாதகம், மாபெரும் புண்ணியமாகி விடுமா? இதோ படைத்த அல்லாஹ்வின் ‘கடுங்‘ கண்டனம்;
எப்பொருளையும் படைக்க முடியாதவற்றையா அவனுக்கு இணையாக்குகின்றார்கள்? இன்னும் அவர்களும் அல்லாஹ்வால் படைக்கப்பட்டவர்களன்றோ! (அல்குர்ஆன் 7:191)
அல்லாஹ்வால் படைக்கப்பட்டவர்கள் அல்லாஹ்வுக்கு இணையாளர்களாக முடியுமா? அஸ்தஃபிருல்லாஹ். அல்லாஹ் காத்தருள்வானாக.
எக்காலமாயினும், எக்காரணமாயினும், எங்கேயாயினும், எந்நிலையேயாயினும் எவரும், எதுவும் அல்லாஹ்வுக்கு இணையாக முடியாது. இருந்தும் இறைவனுக்கு இணையாளர்களை உற்பத்தி செய்தல் மனிதர்களின் அன்றாட வாடிக்கையாகி விட்டது. அதனால் கடுங் கண்டனங் களைத் தொடுப்பதும் அல்லாஹ்வின் தவிர்க்க இயலாத நியதியாகி விட்டது.
மேலும், அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்து, பிறகு அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதியை நிர்ணயித்தான். ஆனால் மக்கள் அவனை விடுத்து எத்தகைய கடவுள்களை ஏற்படுத்திக் (உற்பத்தி செய்து) கொண்டார்கள் என்றால், அந்தக் கடவுள்கள் எந்தப் பொருளையும் படைப்பதில்லை, ஏன்?
அவர்களே படைக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள்? (அல்குர்ஆன் 25:2,3)
ஏக இறைவனாகிய அல்லாஹ் மட்டுமே மனிதர்கள் உட்பட அனைத்தின் படைப்பாளன்.
போலித் தெய்வங்கள் தயாரிப்பாளர்கள்:
மனிதர்கள் பொருள்களுக்குப் போலிகள் தயாரிப்பது போல் அல்லாஹ்வுக்குப் போட்டியாக போலித் தெய்வங்களைத் தயாரித்து வருகிறார்கள்.
அல்லாஹ்வுக்கு போட்டியாக போலித் தெய்வங்களை உருவாக்குவதா?
அந்த போலிகளுக்குக் கடவுள் அந்தஸ்துக் கொடுப்பதா?
அப்படிப்பட்ட போலிகளைக் கடவுள்களாக்குவதா?
அந்த போலிகளைக் கடவுளாய் நம்பி மக்களில் பெரும்பான்மை ஏமாறுவதா? அல்லது ஏமாற்றப்படுவதா?
மக்களே! இதைவிட ஏக இறைவனுக்குச் செய்யும் மாபாதகம் வேறெதுவும் உண்டா?
போலித் தெய்வங்களால் அல்லது அவை பெயரால் பெரும்பான்மை மக்கள் வழிகெட்டுப் போவதை வழிக்கெடுக்கப்படுவதை இன்னுமா உணரமுடியவில்லை?
நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட போலிக் கடவுள்களுள் படைப்புகளை முதன் முறையாக படைத்து பின்னர் மறுமுறையும் அவற்றைப் படைக்கக் கூடியவர் எவரும் உள்ளனரா? என்று நபியே நீர் கேளும்.
(அவர்களிடம் பதில் இருக்காது அதற்கு நபியே நீர் பதில் அளிப்பீராக)
அல்லாஹ்தான் படைப்புக்களை முதன் முறையும் படைக்கின்றான். பின்னர் மறு முறையும் படைக்கின்றான்.
இதன் பிறகும் நீங்கள் எவ்வாறு வழிமாற்ற (வழிகெடுக்க)ப்படுகின்றீர்கள்.
(அல்குர்ஆன் 10:34)
நேர்வழி காட்டுபவன் யார்?
மனிதர்கள் உற்பத்திச் செய்த போலக் கடவுள்கள் நேர்வழி காட்டும் ஆற்றல் அற்றவை. அல்லாஹ் ஒருவன் மட்டுமே சத்தியத்தின்பால் நேர்வழி காட்டுபவன்.
இவர்களிடம் நபியே நீர் கேளும்: உங்களால் உருவாக்கப்பட்ட கடவுள்களில் சத்தியத்தின் பக்கம் வழிகாட்டக் கூடியவர் எவரே னும் உண்டா? (நிச்சயம் எவரும் இல்லை)
அல்லாஹ்வே சத்தியத்தின் பக்கம் வழி காட்டுகின்றான்.
(சுயமே நேர்வழி காட்ட முடியாதவன் பின்பற்றத் தகுந்தவன் அல்லன்)
ஆகவே சத்தியத்தின் பக்கம் வழிகாட்டுபவன் பின்பற்றத் தகுந்தவனா?
அல்லது பிறர் வழிகாட்டுதலின்றி தானாக நேர்வழியைப் பெற முடியாதவன் பின்பற்றத் தகுந்தவனா?
(மனித உற்பத்திக் கடவுள்களைக் கண்மூடித்தனமாய்ப் பின்தொடர்வோர் தவறான முடிவில் இருப்போரே)
உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நீங்கள் எப்படி எல்லாம் (தவறான) முடிவுகளை எடுக்கின்றீர்கள்? (அல்குர்ஆன் 10:35)
அல்லாஹ்வின் வழிகாட்டல் இன்றி நேர்வழி பெறமுடியாத மனிதர்கள் உற்பத்தி செய்த போலித் தெய்வங்கள், இணையற்ற இறைவனுக்கு இணையாளர்களாக முடியுமா? ஒருக் காலும் முடியாது.
இணையாக்கப்படுவோரும், அந்த இணையாளர்களைக் கண்மூடித்தனமாய்ப் பின்பற்று வோரும் அல்லாஹ்வின் நேர்வழி தவறிய வழிக்கெட்டவர்களே. இத்தகையோர் மனிதர்களில் பெரும்பான்மையினராய் இருப்பதால் இவர்கள் கண்மூடித்தனமாய் பின்பற்றுவதெல்லாம் ஆதாரமற்ற வெறும் யூகங்களே:
ஆனால் அவர்களின் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை.
நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எந்த ஒரு பயனும் தர இயலாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை எல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 10:36)
துணிவுக்குத் துணிவூட்டும் துடிப்பான இளைஞர்கள்:
ஏக இறைவனுக்கு இணையாக்கப்படும் போலித் தெய்வங்கள் மனிதர்களின் பொய் கற்பனையே; இவை சத்தியத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. இறைவனுக்குப் போட்டியான போலித் தெய்வங்களை இறைக்கு இணைகளாய், இணையாளர்களாய் ஏற்படுத்துவோருக்கு எவ்வித ஆதாரமுமில்லை.
இந்த நம்முடைய சமுதாயத்தினர் பேரண்டத்தின் அதிபதியை(அல்லாஹ்வை) விடுத்து பிறவற்றைத் தெய்வங்களாக்கி உள்ளார்கள். அவை தெய்வங்கள்தாம் என்பதற்கு ஏதேனும் தெளிவான சான்றினை இவர்கள் ஏன் கொண்டு வருவதில்லை?
அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனை விட பெரும் கொடுமைக்காரன் வேறு யார்? (குர்ஆன் 18:15)
இறைக்கு இணையாக்குதலுக்கு எதிரான வீர முழக்கம்! (18:15) முழங்கியோர்? குகையிலிருந்து கல்வெட்டில் பதியப்பட்டவர்கள், துணிவதற்குத் துணிவூட்டும் துடிப்பான இளைஞர்கள். இறைக்கு இணையாக்கும் கொடுங்கோல் அரசர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரவர்க்கக் கொடுமைக்காரர்கள், அக்கிரமக்கார மக்கள் கூட்டம் யாராக இருப்பினும் சரி சிர்க்கின் கேடுகள் அவர்களுக்கும் உணர்த்தப்பட வேண்டும். இது அல்லாஹ்வின் ஒருமை; அதன் அருமை அறிந்து உணர்ந்து அதை வாழ்வில் பிரதிபலிப்போரின் கட்டாயக் கடமை.
அல்லாஹ்வின் ஒருமை நிலைநாட்டப்பட நபிமார்கள் போராடினார்கள். சொல்லொனா துன்பங்களால் துயருற்றார்கள். உயிரையும் பணயம் வைத்தார்கள். உயிரையும் நீத்தார்கள். சாதாரண மக்கள் அப்படிச் செய்ய முடியுமா? இப்படி எல்லாம் கேட்டு சாதுர்யமாய்த் தப்பிக்க நினைப்போர்க்கு.
கொடுங்கோலனிடமும் அக்கிரமக்காரர்களிடமும் சிக்கிப் போராடிப் போராடி துன்பங்களுக்கு மேல் துன்பம் சுமந்து துரத்தித் துரத்தி அடிக்கப்பட்டுக் குகைக்குள் தஞ்சமடைந்து கல்வெட்டில் பதிவான இளைஞர்களின் தீராதி தீரம் தான் பதிலடி.
காலங்கள் தோறும் இஸ்லாத்தை ஏற்ற சாதாரண சாமான்யர்களும் “சிர்க்கிற்கு‘ எதிரான போராட்டங்களில் நபிமார்களுக்குத் தோள் கொடுத்தனர். நபிமார்கள் அனுபவித்த துன்பங்களுக்குச் சற்றும் குறைவில்லாத இன்னல்களால் அலைக்கழிக்கப்பட்டனர். அப்படிப்பட்ட உத்தமர்களை அல்லாஹ் அல்குர்ஆனில் ஆங்காங்கே இனங்காட்டி நமக்கு உற்சாகமூட்டுகிறான். அந்தப் பட்டியலில் குறிக்கத்தக்க இடம் வகிப்போர் தான் மேல் சாட்டப்பட்ட குகையில் தஞ்சமடைந்து கல்வெட்டில் பதிவான இளைஞர்கள், நம் போன்ற சாதாரண சாமான்யர்களுக்கு முன் உதாரணங்கள்.
சிர்க் எதிர்ப்பு, முடிந்தால் சிர்க் ஒழிப்பு அல்லாஹ்வின் ஒருமையை நிலைநாட்டுவதில் முக்கியத்துவம் பெறுகிறது. இதை அந்த இளைஞர்கள் வெகு சிறப்பாக (18:15) செய்துள்ளனர். அல்லாஹ்வின் ஒரு மையை அந்த இளைஞர்கள் துணிவோடு எடுத்துக்காட்டுவது அக்காலத்தவர்க்கு மட்டுமின்றி எல்லா காலத்தவர்க்கும் எடுத்துக்காட்டுவதாய் அமைகிறது.
அவர்கள் (அரசனின் முன்னர்) எழுந்து நின்ற பொழுது அவர்களுடைய உள்ளங்களின் மீது நாம் உறுதியை உண்டாக்கி விட்டோம்.
அப்பொழுது அவர்கள், எங்களுடைய இரட்சகன் வானங்களுடையவும், பூமியுடையவும் இரட்சகனாக இருக்கின்றான். அவனையன்றி (வேறு யாரையும்) தெய்வமாக நாங்கள் ஒருபோதும் அழைக்க மாட்டோம்.
அப்(படி நாங்கள் அழைக்கும்) பொழுது, தகாத வார்த்தைகளைக் கூறிவிட்டோம் என்பதாகும் என மொழிந்தார்கள். (குர்ஆன் 18:14)
அல்லாஹ்வின் ஒருமைதான் சிர்க்கின் எதிர்வினை, சிர்க்கின் எதிர்வினை தான் அல்லாஹ்வின் ஒருமை. அல்லாஹ்வின் ஒருமை அதன் அருமை அறிந்து உணர்ந்து வாழ்வியலாக்க உறுதி கொண்ட முஸ்லிம்கள், முதற்கண் சிர்க்கிலிருந்து முற்றாக விடுபடுதல் அவசியம்.
மிகப் பெரும்பான்மை முஸ்லிம்கள் வாழ்வோடு பிரித்தெடுக்க முடியாதவாறு “சிர்க்‘ இரண்டறக் கலந்துவிட்டது. அதிலிருந்து விடுபட தன் முனைப்போடு சுயமே போராட முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் முன்வருதல் காலத்தின் கட்டாயம். இதுவே குகையில் தஞ்சம் அடைந்து கல்வெட்டில் பதிவான வீர இளைஞர்களின் இறை ஒருமை முழக்கம் (18:14) அடுத்து அந்த துணிவுமிகு இளைஞர்களின் சிர்க்கிற்கு எதிரான போராட்டம் (18:15) இவை இன்றைய, நாளைய முஸ்லிம்களுக்கு பாடமும் படிப்பினையும் ஆகும். படிப்பினைப் பெற முன் வருக. அல்லாஹ் அருள் செய்வானாக! ஆமீன். வஸ்ஸலாம்.