உறவுமுறைகளைப் பேணுவதன் அவசியமும் –
அதனைப் பேணுவதால் ஏற்படும் சிறப்புகளும் –
அதனை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்….
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
அல்லாஹ்வையே வழிபடுங்கள், அவனுக்கு எதனையும் இணை கற்பிக்காதீர்கள், மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும்,(பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 4:36) என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்.
முஆத் இப்னு ஜபல்(ரழி)அவர்கள் அறிவித்துள்ளதாவது; நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) இருந்து கொண்டிருந்தேன. எனக்கும் அவர்களுக்குமிடையே (ஒட்டகச்) சேணத்துடன் இணைந்த சாய்வுக் கட்டை தான் இருந் தது. (அவ்வளவு நெருக்கத்தில் வந்து கொண்டிருந்தேன்) அப்போது நபி(ஸல்) அவர்கள் “முஆதே!’ என்று அழைத்தார்கள். நான், இறைத்தூதர் அவர்களே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்) என்றேன். பிறகு சிறிது தூரம் சென்றபின், “முஆதே!’ என்று (மீண்டும்) அழைத்தார்கள். நான், இறைத்தூதர் அவர்களே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்) என்றேன். சிறிது தூரம் சென்றபின் (மீண்டும்) “முஆதே!’ என்றார்கள். (அப்போதும்) நான் இறைத்தூதர் அவர்களே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்) என்றேன்.
நபி(ஸல்)அவர்கள், மக்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா? என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், மக்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனையே வணங்கிட வேண்டும். அவனுக்கு எதனையும் (எவரையும்) இணை கற்பிக்கக் கூடாது என்பதாகும் என்றார்கள். இன்னும் சிறிது தூரம் சென்ற பின் “முஆத் இப்னு ஜபலே‘ என்று அழைத்தார்கள். நான், இறைத்தூதர் அவர்களே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (சொல்லுங்கள்) என்று பதில் கூறினேன். அவர்கள், அவ்வாறு (அல்லாஹ்வையே வணங்கி அவனுக்கு இணை வைக்காமல்) செயல்பட்டுவரும் மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா? என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்‘ என்றேன். நபி(ஸல்) அவர்கள், (இத்தகைய) மக்களை அவன் (மறுமையில்) வேதனைப்படுத்தாமல் இருப்பது தான் மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமையாகும் என்று கூறினார்கள். (புகாரி: 5967,6500,7373,2856, முஸ்லிம்:48, திர்மிதி, இப்னுமாஜா, முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்: 2:515-523)
பெற்றோர்களுக்கு அன்புடன் உபகாரம் செய்தல் :
“அல்லாஹ்வையே‘ வழிபடுங்கள்; அவனுக்கு எதனையும் இணை கற்பிக்காதீர்கள் என்று சொன்ன அல்லாஹ் அடுத்து இரண்டாவதாக இந்த வசனத்தில், பெற்றோருக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறுகின்றான். ஏனெனில் நீங்கள் உலகில் பிறப்பதற்கு அவர்களையே அல்லாஹ் காரணமாக ஆக்கினான். இதுபோலவே அல்குர்ஆனில் அதிகமான இடங்களில் அல்லாஹ்வை வழிபடுவதையும் தாய், தந்தைக்கு நன்மை செய்வதையும் சேர்த்தே அல்லாஹ் கூறியுள்ளான்.
தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் அறிவுறுத்தியுள்ளோம். அவனுடைய தாய் பலவீனத்திற்கு மேல் பலவீனமடைந்து அவனைச் சுமந்தாள் அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகளாகின்றன (எனவே மனிதா!) எனக்கும் உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்து! என்னிடமே நீ திரும்பி வர வேண்டியுள்ளது. (31:14, 29:8) மற்றுமோர் வசனத்திலும்;
தன்னையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வழிபடக்கூடாது என்றும் தாய் தந்தையருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்.(17:23) இவற்றில்;
பெற்றோரைக் கவனி! படைத்த வனை நம்பு!
பெற்றோர் தான் மனிதனின் பிறப்புக்குக் காரணம். அவனுக்கு அவர்கள் உயர்ந்த பட்ச கருணை காட்டியுள்ளனர். தந்தை செலவுகள் செய்தும், தாய் பாசத்தைக் கொட்டியும் வளர்த்துள்ளனர். இதனாலேயே இது குறித்து பல வசனங்களில் அல்லாஹ் வலியுறுத்தியுள்ளான்.
வலீத் இப்னு அய்ஸார்(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரழி) அவர்களின் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அபூ அம்ர் அஷ்ஷைபானீ(ரஹ்), இதோ!) இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) எனக்குத் தெரிவித்தார்கள் என்று கூறினார்கள். நான் நபி(ஸல்) அவர்களிடம் “கண்ணி யமும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானசெயல்(அமல்) எது?’ என்று கேட்டேன். அவர்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது என்றார்கள். “பிறகு எது?’ என்று கேட் டேன். “தாய் தந்தையர்க்கு நன்மை செய் வது‘ என்றார்கள். (நான் தொடர்ந்து) “பிறகு எது?’ என்றேன். அவர்கள், “இறை வழியில் அறப் போரிடுதல்‘ என்று பதிலளித்தார்கள். இவற்றை (மட்டுமே) என்னிடம் நபி(ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் அவர்களிடம் கேட்டிருந்தால் எனக்கு இன்னும் நிறைய பதிலளித்திருப்பார்கள். (புகாரி: 5970, 527, 2782, 7534)
நலிவுக்கு மேல் நலிவுற்ற தாய்:
இதில் “அவனுடைய தாய் பலவீனத்திற்கு மேல் பலவீனமடைந்து அவனைச் சுமந்தாள்‘ என்பது குழந்தையால் ஏற்படும் பலவீனத்தைக் குறிக்கும் என்பதாக முஜாஹித்(ரஹ்) அவர்களும், சிரமத்திற்கு மேல் சிரமம் என்பதாக கத்தாதா(ரஹ்) அவர்களும், “நலிவுக்கு மேல் நலிவுற்ற தாய்‘ என்பதாக அதாஉ அல்குராசானீ(ரஹ்) அவர்களும் விளக்கமளிக்கிறார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர்:7:177, 182) மேலும்,
(நபியே!) தன்னைத் தவிர (வேறு) எவரையும் நீங்கள் வழிபடக் கூடாது என்றும் தாய் தந்தையருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உம்முடைய இறைவன், கட்டளையிடுகின்றான். அந்த இருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையடைந்த நிலையில் உம்மிடம் இருந்தால் அவர்களை நோக்கி “ச்சீ‘ என்று (கூடச்) சொல்லிவிடாதீர்; அவர்களை விரட்டாதீர் அவர்களிடம் கண்ணியமான சொல்லையே சொல்வீராக. (17:23) இங்கு;
உயர்ந்தோன் அல்லாஹ் மனிதன் ஆற்றவேண்டிய இரு வேறு கடமைகளைக் குறிப்பிடு கின்றான். 1.படைத்தவனுக்கு நன்றி செலுத்துதல், பெற்றவர்களுக்கும் நன்றி செலுத்துதல், இதில் படைத்தவனை மட்டுமே வழிபடுவது தான் அவனுக்கு மனிதன் செய்ய வேண்டிய நன்றியாகும். பெற்றவர்களுக்கு உதவுவதும், அவர்கள் முதுமை அடையும்போது அவர்களைக் கண்ணியமாக நடத்துவதுமே, பெற்றோருக்கு மனிதன் செய்யும் நன்றியாகும். (தஃப்சீர் இப்னு கஸீர்: 5:222-226) அடுத்து;
அதாவது, மனம் நோகும்படியான எந்தச் சொல்லையும் உம்மிடமிருந்து பெற்றோர் கேட்டுவிடக்கூடாது மனதை நோகச் செய்யும் சொற்களில் ஆகக் குறைந்தது தான் “ச்சீ‘ என்பதைக் கூட அவர்களை நோக்கிச் சொல்லிவிடாதீர் என்பதாகும். அடுத்து;
“அவர்களை விரட்டாதீர்‘ என்று கட்டளையிடுகின்றது அதாவது; அருவருக்கத்தக்க செயல் எதுவும் உம்மிடமிருந்து அவர்கள் முன் தோன்றிவிடக் கூடாது. இதற்கு, ‘அவர்கள் மீது உமது கையை உதற வேண்டாம்‘ என்று அதாஉ (ரஹ்) அவர்கள் விளக்கமளித்தார்கள். அருவருப்பான சொல் அருவருப்பான செயல் எதையும் பெற்றோருக்கு எதிராக செய்யக்கூடாது. எனத் தடை செய்த அல்லாஹ் அடுத்த தொடரில், “அவர்களிடம் கண்ணியமான சொல்லையே சொல்வீராக‘ என்று ஆணையிடுகின்றான். அதாவது, இதமான, மென்மையான, அழகான, சொல்லையே ஒழுக்கத்தோடும், கண்ணியத்தோடும், கெளரவத்தோடும், பெற்றோரிடம் சொல்ல வேண்டும். (தஃப்சீர் இப்னு கஸீர் 5:222-226) அடுத்து;
பணிவு எனும் சிறகைக் கனிவுடன் அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக!
பணிவு எனும் சிறகைக் கனிவுடன் அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக!’ மேலும் ‘இறைவா! நான் சிறுவனாக இருந்த போது அவர்கள் என்னைப் பராமரித்ததைப் போன்று அவர்களுக்கு நீ கருணை காட்டுவாயாக‘ என்று பிரார்த்தனை செய்வீராக. (17:24) என்று அல்லாஹ் கூறுகின்றான். அதாவது; உமது செயலில் அவர்களிடம் பணிவைக் காட்டுவீராக. அடுத்த தொடரில்; “இறைவா! நான் சிறுவனாக இருந்தபோது அவர்கள் என்னைப் பராமரிப்பதைப் போன்று அவர்களுக்கு நீ கருணை காட்டுவாயாக!’ என்று பிரார்த்தனை செய்வீராக. என அல்லாஹ் கட்டளையிடுகின்றான். அதாவது; அவர்களின் முதுமையிலும், அவர்கள் இறக்கும் தருவாயிலும், கருணை காட்டுவாயாக. (தஃப்சீர் இப்னு கஸீர் 5:222-226) அடுத்து; இது தொடர் பான நபிமொழிகள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை மீது ஏறினார்கள். அப்போது ஆமீன்! ஆமீன்! ஆமீன்! என (மூன்று முறை) கூறினார்கள். அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! எதற்காக ஆமீன் கூறினீர்கள்? என்று வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் என்னிடம் வந்து முஹம்மதே ஒருவரிடம் உங்களது பெயர் சொல்லப்பட்டும் அவர் உங்கள் மீது ஸலவாத்துச் சொல்லவில்லை எனில் அவரது மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறி என்னை ஆமீன் சொல்லும்படி சொன்னார். நான் ஆமீன் என்றேன்.