சாபம் இடலாமா?
M. சையது முபாரக், நாகை.
அன்பாகக் கொஞ்சுவதாக நினைத்து கோபமாகவோ திட்டுவதில் மிகைத்து நிற்ப வர்கள் பெண்கள். அதனால்தான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“….பெண்கள் சமூகமே! தான தருமங்கள் செய்யுங்கள். காரணம் நரகவாசிகளில் அதிகமாக இருப்பது நீங்கள்தான் என எனக்குக் காண்பிக்கப்பட்டது” என்று “அல்லாஹ்வின் தூதரே அது ஏன்?” என்று அப்பெண்கள் கேட்டனர். அதற்கு “நீங்கள் அதிகமாகச் சாப்பிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர் களாக இருந்துகொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றிவிடக் கூடிய வர்களாக உங்களை விட யாரையும் நான் காணவில்லை.” (புகாரி: 304)
தாய்மார்கள் தம் குழந்தைகளைக் கொஞ்சும்போது “கண்ணே! மணியே!! முத்தே!!! என்று சொல்வார்கள். நல்ல வார்த்தைகளைச் சொல்வது நல்லதே. ஆனால், பெரும்பாலான பெண்கள் மற்றவர்களைத் திட்டும்போது சொல்லும் சொற்களையே தம் பிள்ளைகளை திட்டும் “கழிச்சலாய்ப் போறவளே!” (கழிச்சலா–வயிற்றுப் போக்கு) “கச்சடாச் செருக்கி!” (கச்சடா–அசுத்தமான குப்பைக் கூளம், சாக்கடை) போன்ற வார்த்தைகளைச் சர்வ சாதாரணமாகச் சொல்வார்கள் பெண்கள். பள்ளி, கல்லூரி மாணவிகள் ஏன்? அரபிக் கல்லூரி மாணவிகள் கூட தனது சக தோழிகளை சேர்த்தே பேசுவார்கள் சிறு பிள்ளைகள் கேம்ஸ் விளையாடி யதைப் பற்றி மற்ற சிறுவர்களிடம் கூறும்போது, நான் அவனை 4 தடவை சாவடித்தேன் (கொன்றேன்), நான் 2 தடவை செத்தேன் (தற்கொலை செய்து கொண்டேன்)என்று சொல்லி புளங்காகிதம் அடைகின்றனர்.
இவர்கள் எல்லாம் யதார்த்தம் புரியாமல் வார்த்தைகளை விடுகின்றனர். இப்படிப்பட்ட வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தோ அர்த்தம் புரியாமலோ கூறி மகிழ்ச்சி அடைகின்றனர்.
இந்தச் சொற்கள் எல்லாம் சாபத்தை ஏற்படுத்தக் கூடியச் சொற்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை. நாம் வேண்டுமென்றோ, விளையாட்டுத்தனமாகவோ சொல்கின்ற தவறான வார்த்தைகள் யாரை நோக்கிச் சொல்கின்றறோமோ அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் அல்லது சொன்னவர்களுக்கே திரும்ப வந்து பாதிப்பை ஏற்படுத்தும். அதை உணர்த்தும் இரு ஹதீத்களை இங்கு பார்ப்போம்.
1. (பனூ இஸ்ராயீல் காலத்தில்) ஒரு பெண் ஆசிரமம் ஒன்றில் இருந்த தம் மகனை “ஜுரைஜ்‘ என்றழைத்தார். “இறைவா! நான் தொழுதுகொண்டிருக்க என் தாய் என்னை அழைக்கிறாரே‘ என்று (மனதிற்குள்) கூறினார். அப்போது அவள் “இறைவா! விபச்சாரியின் முகத்தில் விழிக்கமல் ஜுரைஜ் மரணிக்கக்கூடாது‘ எனத் துஆ செய்தார். ஜுரைஜ் ஆசிரமத்திற்கு வந்து செல்லும் ஆடு மேய்க்கும் பெண் ணொருத்திக் குழந்தைப் பெற்றாள். “இது யாருக்குப் பிறந்தது?’ என்று அவளிடம் கேட்டபோது, “ஜுரைஜ்க்குத்தான். அவர் ஆசிரமத்திலிருந்து இறங்கி வந்து இவ்வாறு செய்துவிட்டார்‘ என்றாள். தனது குழந்தையை நோக்கி, “குழந்தாய்! உன் தந்தை யார்?’ எனக் கேட்டார்.அதற்கு அக் குழந்தை பிறந்து சில நாட்களே ஆன குழந்தை “ஆடு மேய்க்கும் இன்னார்‘ என்றது. (புகாரி : 1206)
சாபம் பழிக்குமா?
இதில் தாயின் சாபத்திற்கு ஏற்ப ஜுரைஜ் விபச்சாரியிடம் மாட்டினார். இதிலிருந்து நமது வார்த்தைகளை கவனமாகக் கையாள வேண்டும். அது மட்டுமின்றி இதில் வேறொரு பாதகமும் இருக்கிறது.
2. ஒரு மனிதன் அடுத்தவனை நிந்தனைச் செய்தால் அந்த நிந்தனை (சாபம்) உயிரோ டெழுந்து வானத்திற்குச் செல்கிறது. வானத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதால் பூமிக்குத் திரும்பி வருகிறது. இங்கும் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதால் வலப்புறமும் இடப்புறமும் சுற்றித் திரிகின்றது. எங்கேயும் அதற்கொரு இடம் கிடைக்காவிடில் நிந்திக்கப்பட்டவரிடம் அது வந்து சேரும். ஆனால், அவர் அந்த நிந்தனைக்குத் தகுதியானவராக இல்லாவிடில் அந்த நிந்தனை யைச் சொன்னவரிடமே அது திரும்பி வந்துவிடும். (அபூதாவூத் 4905)
“ஒருவர் மற்றவரை ஃபாஸிக்(பாவி) என்றோ, காஃபிர் (இறை மறுப்பாளன்) என்றோ அழைத்தால், அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, இறை மறுப்பாள ராக) இல்லாவிடில் அவர் சொன்ன சொல் சொன்னவரை நோக்கித் திரும்பிவிடும்‘ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 6045)
“குட்டையான ஸபிய்யா(ரழி) அவர்களே தங்களுக்குப் போதுமானவர்‘ என்று நான் (ஆயிஷா(ரழி))நபி(ஸல்) அவர்களிடம் கூறிறேன். “நீர் கூறிய வார்த்தையை கடல் நீரில் கலக்கச் செய்தால் அந்த வார்த்தையின் கசப்பு கடல் நீரின் உப்புச் சுவையையும் மாற்றி விடும்‘ என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத் : 4875)
“எவர் பிறரை இழிவுப்படுத்துவதற்காக அவரிடம் இல்லாத குறையைக் கூறுவாரோ அந்தக் குறையை அவர் நிரூபிக்கும்வரை (நிரூபிக்கமுடியாது) அவரை அல்லாஹ் நரக நெருப்பில் கைது செய்து வைத்திருப்பான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். (தபரானி)
நாம் திட்டக்கூடிய சாபமிடக்கூடியச் சொல்லுக்கு அவர் உரியவராக அந்தப் பண்புக்குச் சொந்தக்காரராக அவர் இருந்தால் அது அவரிடம் சேரும். இல்லை என்றால் அது நம்மிடமே திரும்ப வந்து அந்தச் சொல் லுக்குரியவராக நம்மை மாற்றிவிடும்.
இறை நம்பிக்கைக் கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாத குற்றத்தைச் சுமத்தி, நோவினைக் கொடுக்கிறார்களோ, அவர்கள் தம் தலையில் மிகப் பெரும் அவதூரையும் பெருங் குற்றத்தையும் சுமந்து கொள்கிறார்கள். (அல்குர்ஆன் 33:58)
“ஒரு முஃமின் குத்திக்காட்டுபவராகவோ, சபிப்பவராகவோ, மூடத்தனமான செயலை செய்பவராகவோ ஆபாசமாக பேசுபவராகவோ இருக்கமாட்டார்‘ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, அல்அதபுல் முஃப்ரத்)
ஆகவே, நாம் சொல்லும் வார்த்தைகளில் கவனம் கொண்டு, நாவடக்கம் பேணி நல்லவற்றையே பேசுவோம். திட்டுதலை, சாபமிடுதலை தவிர்த்து கொள்வோம்.