தலையங்கம் :
தி(க)ணிப்பும்–தீர்ப்பும் (SECOND WINNER)
பொதுவாக அரசியலிலும் சரி, போரிலும் சரி வெற்றிப் பெற்றவர்களே மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதை கொண்டாடவும் செய்வார்கள். ஆனால் நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற 2024ம் ஆண்டிற்கான தேர்தலில் வெற்றிப் பெற்றவர்கள் N.D.A. கூட்டணி மகிழ்ச்சியாக இல்லை. குறிப்பாக N.D.A. கூட்டணிக்கு தலைமை தாங்கிய BJP மகிழ்ச்சியாக இல்லை. மாறாக இரண்டாவது இடத்திற்கு வந்த (Second Winner) I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் மற்றும் மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். இது நடைமுறைக்கு மாற்றமான வினோதமானது. எப்படி என்றால்; கருத்து கணிப்பு ஒரு மாதிரியும் மக்கள் தீர்ப்பு வேறுயயாரு மாதிரியும் இருந்ததே காரணம்.
இதே போன்று ஒரு சம்பவம் இஸ்லா மிய வரலாற்றிலும் நடந்துள்ளது. அது என்னவென்றால் “ஹுதைபியா‘ ஒப்பந்தமாகும். ஹுதைபியா ஒப்பந்தமானது முழுமையாக முஸ்லிம்களுக்கு பாதகமாக இருந்தது. எப்படி I.N.D.I.A. கூட்டணிக்கு ஆட்சி அமைக்க முடியாத ஒரு பாதகமான தீர்ப்பாக உள்ளதோ, அதுபோல,
இன்னும் தெளிவாக சொல்வதாக இருந்தால் உமர்(ரழி) அவர்கள் தலைமையில் சில சஹாபாக்களும் அந்த ஒப்பந்தத்தை மறுக்கவே செய்தனர். அந்த அளவிற்கு அந்த ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு பாதகமாக இருந்தது. ஆனால் அந்த ஒப்பந்தத்திற்கு சம்மதித்து நபி(ஸல்) அவர்கள் கை எழுத்து (முத்திரை) இட்டார்கள்.
(இந்த விரிவான வரலாற்று சம்பவம் எல்லாம் அந்நஜாத் வாசகர்கள் நன்கு அறிந்ததே என்பதால் அதைப் பற்றி விரிவாக எழுதாமல் தவிர்த்துள்ளோம்)
2024ம் ஆண்டு தேர்தலில் அதிக இடத்தில் வெற்றிப் பெற்று N.D.A. கூட்டணி ஆட்சி அமைத்தாலும் இரண்டாம் இடத்திற்கு வந்த I.N.D.I.A. கூட்டணிக்கே இது மாபெரும் வெற்றியாகும். எப்படி ஹுதைபியா ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு பாதகமாக தெரிந்தாலும் இறுதியில் நன்மையாக முடிந்ததோ அதுபோல இந்த தேர்தலில் I.N.D.I.A.கூட்டணி ஆட்சி அமைக்காவிட்டாலும் மக்களுக்கு இறைவன் நாடினால் நன்மையாக இருக்கும்.
எனவேதான் இறைவன் இறைநூலில் கீழ்கண்டவாறு கூறியுள்ளான்.
“இறை நம்பிக்கையாளர்களே! உங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுங்கள்! நீங்கள் நேர்வழியில் இருந்தால் மற்றவர்களால் உங்களுக்கு எந்த தீங்கையும் செய்திட முடியாது. அல்லாஹ்விடமே நீங்கள் (நாம் அனைவரும்) திரும்பிச் செல்ல வேண்டியுள்ளோம். பின்னர் நீங்கள் (நாம்) செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு (நமக்கு) அறிவித்துவிடுவான்” (அ.கு.5:105)
மேலும் இறைவன் மற்றொரு வசனத்தில் கீழ்கண்டவாறு கூறுகிறான்.
“உலகில் வாழும் பெரும்பான்மையினரின் பக்கம் சாய்ந்தால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழிகெடுத்து விடுவார்கள். அவர்களோ வெறும் யூகங்களையே பின்பற்றுகின்றார்கள். மேலும் கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்கின்றார்கள்.” (அல்குர்ஆன் 6:116)
இறுதியாக நாம் செய்யவேண்டிய துஆ:
“…எங்கள் இறைவனே! எங்களுக்கும், எங்களுக்கு எதிரான சமுதாயத்தாருக்கு மிடையில் சரியாகத் தீர்ப்பளிப்பாயாக! நீயே சிறப்பாகத் தீர்ப்பு வழங்குபவனாய் இருக்கின்றாய்”. (அல்குர்ஆன் 7:89)