புத்தாண்டின் பத்தாம் நாள் (ஆஷீரா)
அபூ முஹம்மத்
முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷீரா என்று கூறப்படுகின்றது. அந்த நாளை நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர். அதன் சரித்திரப் பின்னணியை நாம் காண்போம்.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷீரா தினத்தில் நோன்பு நோற்று வந்ததைக் கண்டனர். அதுபற்றி நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் வினவியபோது “மூஸா(அலை) அவர்களையும், இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரியிடமிருந்து (பிர்அவ்ன்) அல்லாஹ் காப்பாற்றிய சிறந்த நாளாகும்” என்று யூதர்கள் காரணம் கூறினர். உங்களை விட மூஸா (அலை) அவர்களுக்கு நான்தான் அதிக உரிமை உள்ளவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி அன்று நோன்பு வைக்குமாறும் உத்தரவிட்டனர். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்.
இந்த நபிமொழி மூலம் ஆஷீரா தினத்தில் நோன்பு நோற்பது கடமை என்று தெரிந்தாலும் ஆஷீரா நோன்பு கட்டாயக் கடமை அல்ல. காரணம் நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது –ரமழான் நோன்பு கடமையாக்கப்படாத நேரத்தில் இந்த நோன்பைக் கடமையாக ஆக்கி இருந்தனர். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் இந்த ஆஷீரா நோன்பைக் கட்டாயம் நோற்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தவில்லை.
“நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது ஆஷீரா தினத்தில் நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டிருந்தனர். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின், “விரும்பியவர்கள் இந்த ஆஷீரா தினத்தில் நோன்பு நோற்கட்டும்! விரும்பியவர்கள் விட்டுவிடலாம்.” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னா ஆயிஷா(ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்.
இந்த கருத்தை முஆவியா(ரழி) அவர்களும் அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)
“ஆஷீரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றனர்” என்று நபி(ஸல்) அவர்களிடம் சில நபித் தோழர்கள் கூறிய போது, “அடுத்த ஆண்டு நான் உயிரோடு இருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்.” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு இந்த தினத்திற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகி விட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி), நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது
மேற்கூறிய நபிமொழிகள் மூலம் முஹர்ரம் மாதம் ஒன்பதாம் நாளும், பத்தாம் நாளும், நோன்பு நோற்பது ஸுன்னத் என்பதை நாம் உணரலாம். இதுதான் ஆஷீரா நாளின் சிறப்பு. நோன்பு வைப்பவர்கள் பிறை 9ம், 10ம் வைக்க வேண்டும். பத்திலும் பதினொன்றிலும் வைக்க எந்த ஆதாரமில்லை.
ஜூலை 15, பிறை 9 திங்கட்கிழமையும், ஜூலை 16, பிறை 10 செவ்வாய்க்கிழமையும் ஆஷீரா நோன்பு நாட்களாகும்.
எனவே நோன்பு நோற்று இறைவனின் அருளை பெறுவோம்.