மரணம் உங்களை அடைந்தே தீரும்!
N. அலி, கல்லிடைக்குறிச்சி
உலகில் உள்ள மற்ற நெறி நூல்களைக் காட்டிலும் அல்குர்ஆன் மரணம் குறித்து அதிகமாகவும் மிகத் தெளிவாகவும் பேசுகிறது. மனிதர்களுக்கு மரணம் ஏற்படுத்தப் பட்டதற்கான நோக்கம் மனிதர்கள் அழகிய செயலுடையவர்களாக ஆகவேண்டும் என்பதற்காகவே என்று அல்குர்ஆன் சொல் கிறது. (அல்குர்ஆன் 67:2) மரணத்தை விட் டும் எந்த மனிதரும் விதிவிலக்கு பெற முடியாது என்று சொல்கிறது (அல்குர்ஆன் 29:57) படைத்தவனின் அனுமதி கொண்டே படைப்பினங்கள் மரணிக்கின்றன. (அல்குர் ஆன் : 3:145) என்று சொல்கிறது. மனிதர்களாகிய நாம் தினமும் உறங்கி விழிப்பதும் ஒருவித மரண ஒத்திகையே என்கிறது அல்குர்ஆன் 39:42. மரணத்தின் பிடியிலிருந்து மனிதர்கள் தப்பமுடியாது என்று கூறும் அல்குர்ஆனின் வசனம் அது “நீங்கள் எங்கிருந்த போதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும் உறுதிமிக்க கோட்டை களில் இருந்தாலும் சரியே” (அல்குர்ஆன் 4:78)
தமிழில் வெளிவந்துள்ள எல்லா மொழிப் பெயர்ப்புகளிலும் இவ்வாறு தான் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒன்றுக்கு பலமுறை இதை வாசித்துப் பார்த்தால் இந்த மொழியாக்கத்தில் தவறு இருப்பதை நம்மால் உணரமுடிகிறது. “நீங்கள் எங்கிருந்த போதிலும்” என்ற வார்த்தை யானது அதிக அழுத்தமும் வலிமையும் கொண்ட வார்த்தையாகும் இதைப் புரிந்து கொள்வதற்கு இரண்டு குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம்.
நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடன் இருக்கின்றான். (57:4) நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். (2:148)
“நீங்கள் எங்கிருந்த போதிலும்” என்று பூமியில் வசிக்கும் மனிதர்களை நோக்கி பேசுவதால் பூமியின் எல்லா இடங்களையும் அது உள்ளடக்கிவிடும். குறிப்பாக “உறுதிமிக்க கோட்டை களும்” அந்த வார்த் தைக்குள்ளேயே வந்துவிடும். இந்நிலையில் “உறுதிமிக்க” கோட்டை களில் இருந்தாலும் சரியே என்ற அடுத்த வாசகம் அர்த்தமில்லாமல் போய்விடுகிறது. இந்த வாசகத்தில் இடம் பெறும் “”இருந்தாலும்” என்ற வார்த்தையானது விசயத்தை அழுத்தமாகச் சொல்வதற்கு பயன்படுத்தும் விதிவிலக்கு வார்த்தையாகும். இந்த வார்த்தை இடம் பெறும் வாசகம் அழுத்தமான அர்த்தத்தை தரவேண்டும். அதற்கு பதிலாக அர்த்தமில்லாமல் போகிறது என்று சொன்னால் மொழியாக்கத்தில் தவறு இருப்பதை இது உணர்த்துகிறது “இருந்தாலும்” என்பதற்கு அரபியில் (வவ்) (வலவ்) என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்துகிறான். இதை புரிந்து கொள்வதற்காக ஒரு குர்ஆன் வசனத்தைப் பார்ப்போம்.
மலையின் மீது இந்த குர்ஆனை “இறக்கியிருந்தால்” அது அல்லாஹ்வின் பயத்தால் ஒடுங்கி பிளந்து போவதை நிச்சயமாக நீங்கள் காண்பீர்கள். (அல்குர்ஆன் 59:21) மேலும் பார்க்க 17:74, 12:24)
அல்குர்ஆன் மனிதர்களுக்குத்தான் இறக்கப்பட்டது. (அல்குர்ஆன் 39:41) என்றும் மனிதர்களுக்கு மாற்றாக மலையின் மீது இறக்கியிருந்தால் அது அஞ்சி நடுங்கி பிளந்து போயிருக்கும். ஆனால் பலஹீனமான மனிதனோ அல்குர்ஆனைப் பெற்றுக் கொண்டு அஞ்சி அடிபணிந்து உருகாமல் கடின கல்நெஞ்சக்காரனாக அலட்சியமாக இருக்கின்றான் என்பதை (லவ்) என்ற வார்த் தையைப் பயன்படுத்தி அழுத்தமாக பதிவு செய்கிறான் அல்லாஹ் இதைப் போன்றே 4:78 வசனத்திலும் “நீங்கள் எங்கிருந்த போதிலும்” என்பதற்கு மாற்றாக (வலவ்) என்ற வார்த்தையை பயன்படுத்துகிறான். இதன்மூலம் பூமியே அல்லாத ஒரு இடத்தை குறிப்பதற்குத்தான் பயன்படுத்தப்படுகிறது.
அப்பொழுதுதான் அதற்குரிய அழுத்தமும் சரியான அர்த்தமும் கிடைக்கும். இப்பொழுது “உறுதிமிக்க கோட்டை” என்பதற்கு அரபியில் என்ன வார்த்தை இடம் பெற்றிருக்கிறது அதற்கு வேறு பொருள் இருக்கிறதா? என்பதைப் பார்ப்போம். “புரு ஜிம் முஸய்யதா” என்பதற்குத்தான் “உறுதி மிக்க கோட்டை” என்று மொழியாக்கம் செய்யப்படுகிறது.
இதில் “முஸய்யதா” என்பதற்கு உயர மான, வலுவான பொருள் என்று இப்னு கஸீர் தமிழ் மொழிப் பெயர்ப்பு 3-4 அத்தியாயம் விளக்கவுரை பக்கம் 623ல் அடிக் குறிப்பு எண் 333ல் விளக்கம் தரப்படுகிறது.
இன்னும் 22:45ல் இதே பொருள் தரக்கூடிய “மஸீதா” என்ற சொல் இடம் பெற்றிருப்பதையும் சுட்டி காட்டியிருக்கிறார்கள். அதேசமயம் “புருஜ்” என்பதற்கு விளக்கம் தரப்படவில்லை. இப்பொழுது “புருஜ்” என்ற சொல் குர்ஆனில் வேறு எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை பார்ப்போம். அல்குர்ஆனில் முறையே 15:16, 25:61, 85:1 ஆகிய மூன்று வசனங்களில் “புருஜ்” என்ற சொல் இடம் பெறுகிறது.
இங்கெல்லாம் கிரகங்கள், கோள்கள் வான்மண்டலம் செயற்கை கோள்கள் என்று பொருள் செய்யப்படுகிறது. இதன் மூலம் “புருஜ்” என்பதற்கு கோள்கள் என்ற பொருள் இருப்பதை நம்மால் அறிய முடிகிறது. இந்த வசனங்களில் “புருஜ்” என்ற சொல்லுக்கு முன்பாக வானம் என்ற அரபி வார்த்தையும் சேர்ந்து வருவதால் கோள்கள் என்று சரியாக மொழியாக்கம் செய்துவிட்டார்கள். ஆனால் 4:78ல் “புருஜ்” மட்டும் தனியா இடம் பெறுவதால் “கோட்டை” என்று மொழியாக்கம் செய்துவிட்டார்கள். “நீங்கள் எங்கிருந்த போதிலும்” என்பதற்கு மாற்றாக விதிவிலக்காக “புருஜ்” என்ற சொல் இடம் பெறுவதால் அதற்கு கோள்கள் என்ற பொருள் தான் மிகச் சரியானதாக இருக்கமுடியும். இப்பொழுது கோள்கள் என்று மொழிப் பெயர்ப்போம்.
நீங்கள் எங்கிருந்த போதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். (பூமியை விட வேறு) வலுவான கோள்களில் இருந்தாலும் சரியே! இப்பொழுது “இருந்தாலும்” என்பதற்குரிய அழுத்தமும் சரியான அர்த்தமும் கிடைக்கும். நம்முடைய கருத்தை வலுப்படுத்தும் விதமாக இப்னு கஸீரில் அதே பக்கம் 623ல் ஒரு அரபுக் கவிதை இடம் பெறுகிறது.
மரண பாதை அஞ்சி
வான்படி ஏறினாலும்
மரணம் வந்தே தீரும்.
இக்கவியின் மூலம் அரபுகள் 4:78ன் வசனத்தின் கருத்தை சரியாக புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஒரு வேளை நம்மவர்கள் (தமிழ் மொழிப் பெயர்ப்பாளர்கள்) உறுதிமிக்க கோட்டை தான் என்று உறுதியாக இருந்தால் அதில் ஏற்படும் தவறை களைவதற்கு மாற்று மொழி நடை ஒன்றும் இருக்கிறது. அது இதுதான் உறுதிமிக்க கோட்டைகளில் இருந்தாலும் நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். (4:78) இதற்கு அரபி வாசக அமைப்பு இடம் தருமா? என்பது சந்தேகமே! முடிவாக 4:78ன் இறுதி வரிகளை நினைவூட்டுகிறோம்.
இவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது எந்த விசயத்தையும் சரியாக விளங்குவதற்கு அணுகுவதில்லையே! (4:78)
இந்த இறுதி வரிகள் இன்றைய முஸ்லிம் சமுதாயத்திற்கு மிக பொருத்தமாக இருக்கிறது. அல்குர்ஆனை சரியாக விளங்குவதற்கு முயற்சி செய்தால் நிச்சயமாக அல்லாஹ் அதற்குரிய கல்வி ஞானத்தை வழங்குவான். அளப்பெரிய நன்மைகளையும் சேர்த்தே வழங்குவான். (அல்குர்ஆன் 2:269) அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக.
என் இரட்சகனே கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக. (அல்குர்ஆன் 20:114)