ஆலிம்  எனத்  தனிப்பிரிவு  இஸ்லாத்தில்  உண்டா?

in 2024 ஆகஸ்ட்

ஆலிம்  எனத்  தனிப்பிரிவு  இஸ்லாத்தில்  உண்டா?

அபூ  அப்தில்லாஹ்

ஜூலை  மாத  தொடர்ச்சி

உலகியல் துறைகளில் 5% அவற்றில் கற்றுப் பட்டங்கள் பல பெற்று எஞ்சியுள்ள 95% மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதை இன்று கண் கூடாகக் கண்டு வருகிறோம். சாதாரண சளி, காய்ச்சலுக்காக ஒரு மருத்துவரிடம் சென்றால் ஓரிரு மாத்திரையில் குணப்படுத்த வேண்டியதை அப்படிக் குணப்படுத்த வேண்டியதை அப்படிக் குணப்படுத்தாமல், எத்தனை வகை டெஸ்ட்களுக்கு எழுதிக் கொடுக்கிறார்? ஒருசில மருத்துவர்களுக்கு அப்படி பிரிஸ்கிரிப்சன் எழுதிக் கொடுப்பதில் மட்டுமே அவற்றிற்குரிய கமிசன் மூலம் மாதத்திற்கு ஒரு லட்சத்திற்கு மேல் கிடைக்கிறது என்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.

ஒரு மருத்துவரின் தகுதியையும், திறமையையும் இவ்வுலகில் சொந்த அனுபவத்தில் அறிந்துகொள்ளும் வாய்ப்புள்ள மருத்துவத் துறையிலேயே, முறை தவறி மக்களை ஏமாற்றிச் சம்பாதிக்க முடிகிறது என்றால் ஒரு மவ்லவியின் தகுதியையும், திறமையையும், உண்மை நிலையையும் இவ்வுலகில் அறிந்துகொள்ள வாய்ப்பு அறவே இல்லாத நிலையில் அவர் எந்த அளவு மக்களை ஏமாற்றிப் பணம் பண்ணுவார் என்பதைச்  சிந்தித்துப்  பாருங்கள்.

உலகியல் துறைகளிலாவது 5% மக்கள் அத்துறைகளில் படித்துப் பட்டம் பெற்றால் போதும், எஞ்சியுள்ள 95% மக்களின் அத்துறைகள் பற்றிய விவகாரங்களை தீர்த்து வைக்க முடியும். ஆனால் மார்க்கத்தில் 100% மக்களும்  அறிந்து அதன்படி நடக்கவேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டிருப்பது 2:186,7:3,33:21,36,66,67,68,18:102-106,59:7,67:2 போன்ற குர்ஆன் வசனங்களைப் படித்துப் பார்த்தால் குன்றிலிட்ட தீபமாக விளங்குகிறதே. 100% மக்களும் அறிய வேண்டிய மார்க்கத்தை 95% மக்களைத் தடுத்து வெறும் 5% மவ்லவிகள் மட்டும் கற்று 95% மக்களை ஏமாற்றிப் பிழைப்பதை விடக் கொடுமை உலகில் வேறு இருக்க  முடியுமா?

அல்லாஹ் உலக வாழ்க்கைப் பரீட்சை வாழ்க்கை என்று 5:48,94, 6:165, 11:7, 16:92, 27:40, 67:2 போன்ற பல குர்ஆன் வசனங்களில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதின் பொருள் என்ன? பரீட்சை என்றால் ஒருவனை ஒருவன் காப்பி அடிக்காமல், ஒவ்வொருவரும் தன் தனித்திறமை வெளிப்படுத்தும் பொருட்டே, அதன்மூலம் புள்ளிகள் கொடுத்து வெற்றி தோல்வியை அறிந்து வெற்றியாளர்களைத் தனியாகவும், தோல்வியுற்றவர்களைத் தனியாகவும் பிரித்து அறிவதற்கே பரீட்சை என்பதை அறிய முடியாத மூடர்கள் இருக்க முடியுமா? அந்தப் பரீட்சை முடிவை நாளை மறுமையில் அல்லாஹ்வே அறிவிப்பான் என்றும், அந்தத் தீர்ப்பை அல்லாஹ் நாளை மறுமையில் மட்டுமே இறுதித் தீர்ப்பாக அளிப்பதாகவும், தீர்ப்பை மறுமைக்கென்றே ஒத்தி வைத்திருப்பதை 2:113, 10:19,93, 11:110, 16:124, 22:17, 56, 27:78, 32:25, 39:3, 69:75, 41:45, 42:14,21, 45:17 போன்ற பல குர்ஆன் வசனங்களில் கூறி இருப்பதை ஆலிம்கள் என மார் தட்டும் இந்த மவ்லவிகள்  அறியவில்லையா?

ஹிஜ்ரி 400க்குப் பிறகு கற்பனை செய்யப்பட்ட பித்அத்தான இந்தப் புரோகித மதரஸாக்களில் சில காலம் செலவிட்டவர்களை ஆலிம்கள் என்றும், மற்றவர்களை அவாம்கள் என்றும் இவ்வுலகிலேயே மேலே எடுத்து எழுதியுள்ள அத்தனை இறைவாக்குகளையும் நிராகரித்துத் தீர்ப்பு அளிக்கின்றனர். இம்மதகுருமார்கள். 42:21 இறைவாக்கு சொல்வது போல் இந்த மவ்லவிகள் அல்லாஹ்வுக்கு இணையாளர்களாகி கொடும் சிர்க்கில்இணை வைப்பில் மூழ்குகின்றார்கள் என்பதில் சந்தேகமுண்டா? 49:16 எச்சரிப்பது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைக் கற்றுக்கொடுக்க முற்பட்டு மேலும் சிர்க்கில்இணைவைப்பின் ஆக அடித்தட்டிற்குப் போகிறார்களா? இல்லையா? (பார்க்க:4:145)

இதற்கெல்லாம் மேலாக இன்னொரு பேருண்மையை ஆலிம்கள் அறிஞர்கள் என மார் தட்டும் இந்த மவ்லவிகள் அறியாதிருக்கிறார்களா? அல்லது 2:146,6:20 குர்ஆன் வசனங்கள் கூறுவது போல் நன்கு அறிந்துகொண்டே  உண்மையை  மறைக்கிறார்களா?

அதாவது உலகியல் கல்வி அனைத்தும் இவர்களைப் போன்ற குர்ஆன் 16:4, 32:7, 35:11, 36:77, 75:37-40, 76:2, 77:20-23, 80:18,19, 86:5-7, 96:2 போன்ற பல வசனங்கள் கூறுவது போல் அற்பப் பொருளிலிருந்து படைக்கப்பட்ட மனிதன், வழிகெடுக்கும் மனிதன் (31:6), அக்கிரமம் செய்யும் மனிதன் (42:42), சர்வமுள்ள மனிதன் (90:4-10,96:6), உலக இன்பங்களில் மூழ்கும் மனிதன் (76:27,87:16), அவசரக்கார மனிதன் (17:11,21:37,70:19), அறியாமை நிறைந்த மனிதன் (33:72), பலஹீனமான மனிதன் (4:28), நன்றிகெட்ட மனிதன் (10:12,11:9,17:67,29:65,66, 30:33,34, 31:32, 39:49, 100:6) தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொள்ளும் மனிதன் (10:44), இவ்வுலகப் பொருட்களை அளவு மீறி நேசிக்கும் மனிதன் (89:20, 100:8), இப்படி எண்ணற்ற குறைபாடுடைய அற்ப அறிவுடைய மனிதன் (17:85) பெரும் ஆய்வு செய்து அவனது அறிவில் பட்டவையே. அவற்றில் பல குறைபாடுகள் இருப்பது இயற்கையே. கால மாறுபாட்டால், அறிவியல் கண்டுபிடிப்புகளால் உலகியல் கல்விகளில் மேலதிக விளக்கம், ஆய்வுகள் அவசியமே. இவர்களைப் போன்ற மனிதர்களே உலகியல் கல்வித் துறைகளில் நூல்கள் இயற்றி அவை பாடமாகக் கற்பிக்கப்படுகின்றன.

எனவே உலகியல் துறைக் கல்வியைக் கற்பிக்க மேலதிக விளக்கம் கொடுக்க ஆசிரியர், குரு அவசியமே. எந்தத் துறையும் இதில் விதிவிலக்குப் பெறமுடியாது. அதற்கு மாறாக மார்க்கத்தைக் கொடுத்து அதைத் தெள்ளத் தெளிவாக நேரடியாக விளக்கியவன் சர்வ வல்லமை மிக்க, சர்வ ஞானம் உள்ள, அண்ட சராசங்களையும் மனிதனையும் படைத்த ஏகனாகிய இறைவன். மார்க்கம் அவனுக்கு மட்டுமே சொந்தம். அதில் மனிதர்களில் யாரும் தங்கள் மூக்கை நுழைக்க முடியாது.

முக்காலமும் அறிந்த சர்வ சக்தனான இறைவன் வடிவமைத்துக் கொடுத்த மார்க்கம் ஆதலால், அதில் அற்ப அறிவையுடைய மனிதனின் மேலதிக ஆய்வோ, விளக்கமோ அணுவளவு கூட இருக்கக்கூடாது. இதைத்தான் அல்லாஹ் 49:16ல் நீங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக்கொடுக்க முற்படுகிறீர்களா? எனக் கடிந்து கேட்கிறான். அப்படிப் பட்டவர்கள் அல்லாஹ்வுக்கு இணையாளர்களாக முற்படுவதாக 42:21ல்  கண்டிக்கின்றான்.

ஆம்! உண்மைதானே. அல்லாஹ்வே மார்க்கத்தைத் தெள்ளத் தெளிவாக, விளக்கமாக சந்தேகத்திற்கிடமின்றி நேரடியாக விளங்கி இருப்பதை எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் கூறிக் கொண்டிருக்க, அவை அனைத்தையும் நிராகரித்து குஃப்ரிலாகி, மார்க்கத்திற்கு மேல் விளக்கம் கொடுக்கும் பேர்வழிகள் என இந்த மவ்லவிகள் கிளம்பினால் இவர்கள் வரம்பு மீறும் தாஃகூத்கள், மனித ஷைத்தான்கள் என்பதில் சந்தேகமுண்டா? அற்ப உலக ஆதாயங்களைக் குறிக்கோளாகக் கொண்டு ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளாகச் செயல்படுகிறார்கள் என்பதில் சந்தேகமுண்டா?

உலகியல் துறைகளில் ஆசிரியர்களைக் கொண்டு, குருமார்களைக் கொண்டு கல்வி கற்றுப் பட்டங்கள் பல பெற்று பெரும் மேதைகளாக, அறிஞர்களாகத் திகழ்வது போல், அவை கொண்டு பிழைப்பு நடத்திப் பணம் ஈட்டுவது போல், மார்க்கத் துறையிலும் ஆசிரியர்களைக் கொண்டு, மதகுருமார்களைக் கொண்டு குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் மேல் விளக்கம் பெற்றே மார்க்கத்தை விளங்க முடியும். மார்க்கத் துறையிலும் ஆலிம்கள், மவ்லவிகள் என ஒரு தனிப் பிரிவு உண்டு; அவர்கள் அதைத் தங்களின் வயிற்றுப் பிழைப்பாகக் கொள்ளலாம் எனத்  தப்புக்  கணக்குப்  போடாதீர்கள்.

உங்களில் உலகியல் துறைகளோடு, மார்க்கத்தை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். மார்க்கத் துறைக்கும் உலகியல் துறைகளுக்கும், மடுவுக்கும் மலைக்குமுள்ள பெருத்த வேறுபாடு உண்டு. உலகியல் துறைகள் உங்களைப் போன்ற அற்ப அறிவுடைய மனிதர்களின் கண்டுபிடிப்பே. மார்க்கத்துறை அகிலங்களையும், மனிதனையும் படைத்த முக்காலமும் அறிந்த சர்வ ஞானமிக்க ஏகனான இறைவனின் அருட்கொடை; அதில் அற்ப அறிவுள்ள மனிதன் தன் மூக்கை ஆலிம், அல்லாமா, மவ்லவி, மார்க்க மேதை போன்ற பெயர் களால் நுழைக்க முடியவே முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு ஈடேற்றத்தைப் பெற்றுத் தரும். அல்லாஹ்  அருள்  புரிவானாக!

Previous post:

Next post: