உறவுமுறைகளைப் பேணுவதன் அவசியமும் – அதனைப் பேணுவதால் ஏற்படும் சிறப்புகளும் – அதனை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்….
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
2024 ஜூலை மாத தொடர்ச்சி…
தொடர்ந்து அவர் “ஒருவரிடம் ரமழான் மாதம் வந்து சென்றுவிட்டது. ஆனால் (அவர் நோன்பு நோற்காததால்) அவரது பாவம் மன்னிக்கப்படவில்லை. அவரது மூக்கும் மண்ணைக் கவ்வட்டும்‘ என்று கூறி என்னை ஆமீன் சொல்லும்படி சொன்னார். நான் ஆமீன் என்றேன். பின்னர் அவர் “தமது பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ (முதுமைப் பருவத்தில்) அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும், பொருளாலும், ஊழியம் செய்து அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் மூக்கும் மண்ணைக் கவ்வட்டும்‘ என்று கூறி என்னை ஆமீன் சொல்லும்படி சொன்னார். நான் ஆமீன் என்றேன் என்றார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரழி), இப்னு மஸ்ஊத்(ரழி), அம் மார் பின் யாசிர்(ரழி), ஜாபிர் பின் சமூரா(ரழி), திர்மிதி, முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்: 5:222-226) மேலும்;
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், தமது பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ (முதுமைப் பருவத்தில்) அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும், பொருளாலும், ஊழியம் செய்து அதன் மூலம் சொர்க்கம் செல்லாமல்) நரகம் செல்லும் ஒருவரை அல்லாஹ் தனது அருளிலிருந்து விலக்கட்டும்; அவரை நாசமாக்கட்டும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: உபை பின் மாலிக்(ரழி), முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்: 5:222-226) மேலும்;
அபூஹுரைரா(ரழி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள், “மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்!! பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்!!! என்று (மூன்று முறை) கூறினார்கள். “யார் (மூக்கு) அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், “தமது பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் (மூக்குத்தான்)’ என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம்: 4987,4988,2551, முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்: 5:222-226) மேலும்;
அறப்போராக இருந்தாலும் பெற்றோரின் அனுமதியுடனேயே செல்லவேண்டும்:
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரழி) அறிவித்தார்: ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், “நான் (இந்த) அறப்போரில் கலந்துகொள்ளட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், “உனக்குத் தாய், தந்தை இருக்கின்றனரா? என்று கேட்டார்கள். ஆம்! இருக்கிறார்கள் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், “(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு‘ என்றார்கள். (புகாரி:5972,3004) நபித்தோழர் அபூசயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் யமன் நாட்டைத் துறந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தார் அவரிடம் நபியவர்கள் “ஏமனில் உங்களுக்கு யாரேனும் (உறவினர்) உள்ளனரா? என்று கேட்டார்கள். அவர் “எனது பெற்றோர் இருவரும் உள்ளனர்‘ என்றார். “அவர்கள் உங்களுக்கு (ஹிஜ்ரத் செய்ய)அனுமதியளித்தார்களா?’ என்று கேட்க அவர் “இல்லை‘ என்றார். நபி(ஸல்) அவர்கள், உமது பெற்றோரிடம் திரும்பிச் சென்று அனுமதி கோருங்கள். அவர்கள் அனுமதித்தால் நீங்கள் அறப்போரில் கலந்து கொள்ளுங்கள் இல்லையேல் அவர்களுக்கு நன்மை செய்வதில் ஈடுபடுங்கள் என்றார்கள். (புகாரி: 5972, 3004இன் சிறு குறிப்பு மூன்றாவது, அபூதாவூத், முஸ்னத் அஹ்மத்)
முஆவியா பின் ஜாஹிமா(ரழி) அவர்கள் கூறியதாவது: (எனது தந்தை) ஜாஹிமா(ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் போரில் பங்கெடுத்துக் கொள்ள விரும்புகிறேன். அது குறித்து ஆலோசனை செய்யவே உங்களிடம் வந்தேன்‘ என்று கூறினார். அப்போது நபியவர்கள் “உமக்குத் தாய் இருக்கிறாரா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் “ஆம்‘ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் “அவ்வாறாயின் (திரும்பிச் சென்று) அவருடன் இருப்பீராக. ஏனெனில் சொர்க்கம் அவரது பாதத்தின் அருகில் தான் இருக்கிறது‘ என்று கூறினார்கள். (இப்னு மாஜா, நஸயீ, தஃப்சீர் இப்னு கஸீர்: 5:222-226) மேலும்;
தாயைத் தோளில் சுமந்தவாறு கஃஅபாவைச் சுற்றி வந்தாலும் போதாது! போதாது!! போதாது!!!
புரைதா(ரழி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் தமது தாயைச் சுமந்தவாறு (கஃஅபாவைச்) சுற்றி வந்துகொண்டிருந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் “நான் எனது தாய்க்குரிய கடமையை நிறைவேற்றிவிட்டேனா?’ என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் “நீ தாயின் வயிற்றில் இருந்தபோது அவர் வெளியிட்ட ஒரே ஒரு பெருமூச்சுக்குக் கூட இது ஈடாகாது‘ என்று கூறினார்கள். (முஸ்னது அல்பஸ் ஸார், இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹசன்பின் அபீஜ அஃபர் பலவீனமானவர் ஆவார். மஜ்மஉஸ் ஸவாயித், தஃப்சீர் இப்னு கஸீர்: 5:222-226) மேலும்;
உலகில் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதை உள்ளவர்; உமது தாய்! உமது தாய்!! உமது தாய்!!!
அபூ ஹரைரா(ரழி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதை யானவர் யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், “உன் தாய்‘ என்றார்கள். அவர், “பிறகு யார்?’ என்றார். உன் தாய்‘ என்றார்கள். அவர், “பிறகு யார்?’ என்றார். உன் தாய்‘ என்றார்கள். அவர், “பிறகு யார்?’ என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், “பிறகு, உன் தந்தை‘ என்றார்கள். இதே ஹதீத் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (புகாரி: 5971)
ஒருவர் தமது தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும் :
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரழி) அறிவித்தார்: “ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?’ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், “ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். (ஆக, தமது தாய், தந்தையர், ஏசப்பட இவரே காரணமாகிறார்)’ என்றார்கள். (புகாரி: 5973) தமது பெற்றோரைப் பிறர் ஏசுவதற்கு ஒருவர் காரணமாக இருப்பதே பெரும் பாவம் என்றால், அவரே தமது பெற்றோரை நேரடியாக ஏசுவது எவ்வளவு பெரிய பாவம் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?’ (பத்ஹுல் பாரீ: 5973-ன் சிறு குறிப்பு, நான்காவது)
பெற்றோரைப் புண்படுத்துவதும் பெரும் பாவங்களில் ஒன்றாகும் :
அபூபக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரழி) அறிவித்தார்: (ஒருமுறை) இறைத் தூதர்(ஸல்) அவர்கள்,”பெரும் பாவங்களிலேயே மிகப் பெரிய பாவங்களை உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?’ என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்! (தெரிவியுங்கள்). அல்லாஹ்வின் தூதரே‘ என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும் ஆகும்‘ என்றார்கள். (புகாரி: 6273,5975,5977,1477,2408,2663, 2654)
பெற்றோர் இணை வைப்பராக இருந்தாலும் நல்ல முறையில் உறவைப் பேணவேண்டும்: அஸ்மா பின்த் அபூபக்ர்(ரழி) கூறினார்: என்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய சமூகத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணை வைப்பவராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம், “என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரின் உறவைப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்ளட்டுமா?’ என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், “ஆம், நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்துகொள்‘ என்று கூறினார்கள்.
ஆகவே, அஸ்மாவின் தாயார் தொடர்பாக, “மார்க்க (விசய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கிறான்‘ எனும் (திருக்குர்ஆன் 60:8வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்‘ என (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார். (புகாரி: 5978,5979,5980,2620,2681,2941,3183,4553, தஃப்சீர் இப்னு கஸீர்: 4:414-421)
அம்ர் இப்னு ஆஸ்(ரழி) அறிவித்தார்: (இன்னார்) இன்னாரின் தந்தையின் குடும்பத்தார் எனது நேசர்கள் அல்லர்; எனது நேசர்கள் யாரெனில், அல்லாஹ்வும், நல்ல இறை நம்பிக்கையாளர்களும் தாம் என்று நபி(ஸல்) அவர்கள் ஒளிவு மறைவின்றி பகிரங்கமாகவே கூறினார்கள். “முஹம்மத் இப்னு ஜஅஃபர்(ரஹ்) அவர்களின் (மூல நூல்) பிரதி ஒன்றில் “இன்னார்‘ எனும் (சொல் உள்ள) இடம் (நிரப்பப்படாமல்) வெற்றிடமாக உள்ளது‘ என அறிவிப்பாளர் அம்ர் இப்னு அப்பாஸ்(ரஹ்) கூறினார்.
அம்ர் இப்னு ஆஸ்(ரழி) அவர்களின் வழியாக வரும் அன்பஸா இப்னு அப்தில் வாஹித்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், நபி(ஸல்) அவர்கள், “ஆயினும் அவர்களுடன் எனக்கு இரத்த உறவு உண்டு. அதை நான் (காய்ந்து போகவிடாமல்) பசுமையாக்குவேன்‘ என்று கூறினார்கள் என அதிகபட்சமாக இடம் பெற்றுள்ளது. அதாவது, “அவர்களின் உறவைப் பேணி நடந்துகொள்வேன்‘ என்றார்கள். (புகாரி: 5990, முஸ்லிம்: 366)
அபூஹுரைரா(ரழி) அவர்கள் கூறியதாவது: “(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்‘ எனும் இந்த (26:214ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் குறைசியரை (ஓரிடத்திற்கு) அழைத்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினர். அப்போது பொதுவாகவும் தனித் தனியாகவும் பெயர் குறிப்பிட்டு, “கஅப்பின் லுஅய்யின் மக்களே! உங்களை நரக நெருப் பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். முர்ராபின் கஅபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்து சம்சின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்து மனாஃபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஹாசமின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். (என் மகள்) ஃபாத்திமாவே! உன்னை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்! ஏனென்றால், அல்லாஹ்விடமிருந்து வரும் (முடிவாகிவிட்ட சோதனை) எதிலிருந்தும் உங்களைக் காக்க என்னால் இயலாது. ஆயினும், உங்களுடன் எனக்கு இரத்த உறவு உண்டு. அதை நான் (காய்ந்து போகவிடாமல்) பசுமையாக்குவேன் (உங்களுடைய உறவைப் பேணி நடந்துகொள்வேன்)’ என்று கூறினார்கள். இந்த ஹதீத் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (முஸ்லிம்: 348) (இன்ஷா அல்லாஹ் தொடரும்)