ஏன் முடியாது?

in 2024 ஆகஸ்ட்

ஏன் முடியாது?

அய்யம்பேட்டை A. நஜ்முதீன்

ஏன் முடியாது? எப்படி முடியும்? என ஏளனத்தோடும் கேட்பவர்களும், எரிச்சலோடு கேட்பவர்களும் முன்பும் இருந்தார்கள். அது என்ன?

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தையும், யூனியன் பிரதேசங்களையும் எப்படி ஒன்று சேர்த்து ஒரே நாடாக கொண்டுவர முடியும் என்று அன்று கேட்டார்கள். அப்படியே ஒன்றாக ஆனாலும் ஒன்றுபட்டு இருக்குமா? அது நிலைக்குமா? என்றெல்லாம் கேட்டார்கள். ஆனால் அன்றைய தலைவர்களிடம் இருந்த தேசபக்தியின் காரணமாக எல்லாவிதமான பிரச்சனைகளையும் ஓரம் கட்டிவிட்டு ஒற்றுமையே முக்கியம் என முன்னுரிமை கொடுத்தார்கள். அதன் விளைவு ஒன்றுபட்ட நாடாக இன்றுவரை 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் ஒன்றாக சேர்ந்து இந்தியா ஒரே நாடாக  இருக்கிறது.

பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரம், பல்வேறான உணவு பழக்கம், பல்வேறான தட்பவெப்பநிலை மேற்கண்ட அனைத்திலும், வேறுபட்டிருந்தாலும் இந்தியா வலிமையான நாடாக இருக்க எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து ஒன்றுபட்டார்கள்.

எப்படி உலக விடயத்தில் ஒற்றுமையாக இருப்பதே நமக்கு வலிமை என்பதை உணர்ந்தார்களோ. அதுபோல் நான்கு மத்ஹபுகளும் (ஹனஃபி, சஃபி, மாலிக்கி, ஹம்ளி) ஒன்று சேர்ந்து குர்ஆன்சுன்னா அடிப்படையில் ஒன்றுபட முடியாதா? எப்படி முடியும்? என்று கேட்கின்றார்கள்.

இப்படி கேட்போரில் இரண்டு வகையினர் உண்டு. 

ஒன்று : இது சாத்தியமா? என்றும் இது சாத்தியப்பட்டால் நன்றாக இருக்கும் என ஆசைப்படுபவர்கள்.

மற்றொன்று: இவைகள் ஒற்றுமையானால் வயிற்று பிழைப்பு கெட்டு போய்விடும், தலைமை தனமும் பரிபோய்விடும் என்ற வயிற்றெரிச்சலில் வாய்க்கு வந்த வார்த்தைகளை வாரியிறைக்கும் கூட்டத்தினர்கள். இரண்டாவது ரகத்தினருக்கு பதில் தர முயல்வது பயன்படாது. இவர்கள் முயலுக்கு மூன்று கால்கள் தான் என்று விதண்டாவாதம்  பேசுபவர்கள்.

இந்த ஒற்றுமை பல பலன்களையும், பயனும்  தரும்  என்பது  தெளிவான  ஒன்று.

ஏன் என்றால் : இஸ்லாமிய கல்வி என்றாலே அது அரபி மதரஸாவில் அல்லது அரபு கல்லூரியில் படித்தவர்களுக்கு உரியது. ஏனைய முஸ்லிம்களான பாமர மக்களுக்கு அதில் எந்த தொடர்பும் இல்லை என்னும்தடுப்பு சுவர்‘ (இரும்பு சுவர்) போடப்பட்டு முஸ்லிம் சமூகத்தில் பிரிவு நிலவி வருகிறது. இதனால் ஏற்பட்ட விபரீதங்களில் முதலானதாக இருப்பது ஆலிம்அவாம் என இரு பிரிவுகள். 

மேலும் ஏனைய விளைவுகளைப் பற்றி எழுத தொடங்கினால் எண்ணிக்கையில் அடங்காது. அது மட்டுமல்ல இந்த பிரிவுகள் கூடாது என்று எழுதக்கூடிய, சொல்லக் கூடிய நபர்கள் மீது ஒருசில முத்திரைக் குத்தப்பட்டு இவர்கள் சமுதாயத்திற்கும், இஸ்லாமிய கல்விக்கும் எதிரானவர்கள் என விமர்சிக்கப்படுகிறது. இந்த நிலைக்கு காரணம் இஸ்லாமிய கல்வியை அனைவரும்  படிக்க  முன் வராததே  ஆகும்.

எந்தவொரு சின்ன, சின்ன சந்தேகங்களுக்கும்போய் ஹஜ்ரத்திடம் கேளுஎன்பதுதான் பல பெற்றோர்களின் நிலைமை. அதற்கு காரணம், பல பெற்றோர்களுக்கே மார்க்க கல்வி தெரியாததே. ஒரு சில அந்தரங்க செயல்பாடுகளின் சந்தேகங்களைப் பற்றி எல்லாம் ஹஜ்ரத்திடம் எப்படி கேட்பது என்ற தயக்கம் நிலவுவதால் அதைப் பற்றியான தெளிவு இல்லாமலேயே காலம் காலமாக வாழ்ந்தும், மடிந்தும் கொண்டிருக்கின்றார்கள்  முஸ்லிம்  சமுதாயத்தினர்.

இது எந்த அளவிற்கு வேதனைக்குரியது என்பதை உணராத சமுதாயமாக முஸ்லிம் சமூகம் இருக்கிறது. மேலும் யாரேனும் கூச்சத்தை விட்டு ஏதேனும் ஒரு மார்க்க விசயத்தைப் பற்றி சந்தேகம் கேட்டால் அவரவர்கள் சார்ந்த மத்ஹபு நூலின்படியே பதில்  சொல்லப்படுகிறது.

இந்த சிக்கலுக்கு தீர்வு காண வேண்டுமானால் எளிய வகையில் இஸ்லாமிய கல்வி நூல்கள் பரவலாக்கப்பட வேண்டும். அதாவது அரபி கல்லூரியில் படித்தால் தான் தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலை மாற வேண்டும்.

ஆனால், நமக்கு தெரிந்தவரை எங்கு தேடிப் பார்த்தாலும் குர்ஆன்சுன்னா அடிப்படையில்  முழுமையான (எல்லோருக்கும் பொதுவான) ஒரு நூல் கூட இது வரை வரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையும் கூட, வெளி வரும் நூல்களும் இது ஹனஃபி, ஷாஃபி, ஹம்ளி, மாலிக்கி மார்க்க நூல்கள் என்றும் மற்றும் ஒருசில இயக்கவாதிகளால் உருவாக்கப்பட்ட அமைப்புகளுக்கு ஏற்ப குர்ஆன், ஹதீத் என்ற பெயரில்  நூல்களாக  வெளிவருகின்றன.

தமிழ் பேசும் முஸ்லிம்களிடம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாக இதற்கான முயற்சி கள் இருந்தது. அதுபோல் ஏனைய மொழி பேசுபவர்களிடமிருந்து வரவில்லை. ஆனால் இந்த ஆசை ஏனைய மொழிகள் பேசும் பல மக்களிடமும்  இருப்பதும்  உண்மையே.

இந்த முயற்சிஏன் வேண்டும்?’ என்பது நமது ஆசை மட்டும் அல்ல. இறைவனின் கட்டளையுமாகும். (பார்க்க வசனம் : 3:103, 3:105, 6:159, 8:46, 30:32, 42:14)

மேற்படி வசனங்களிலிருந்து முஸ்லிம் சமுதாயம் வெற்றி பெற ஒரே வழி ஒற்றுமை தான் என்பதை இறைவன் தன் வழிகாட்டி நூலில் (அல்குர்ஆனில்) கூறியுள்ளான். மாற்று வழி ஏதேனும் இருந்தால் அதையும் இறைவன் கூறியிருப்பான். மாற்று வழி இல்லை என்பது தெளிவாக  தெரிகிறது.

இதனால்  என்ன  பலன் :

1. பிரிவு  நீங்கும்

2. பல்வேறு கருத்துக்களை உடைய நூல்கள் தேவை இல்லை. ஒரே நூல் போதும்.

3. இஸ்லாமிய கல்வி பாமரர்களுக்கும் இலகுவாக  புரியும்.

4. சமுதாய  முன்னேற்றம்

5. இம்மையிலும், மறுமையிலும் வெற்றி, போதாதா?  இன்னும்  பல  உள்ளன.

இந்த ஒற்றுமையை விரும்பாதவர்கள் கேட்கும் கேள்வி, மத்ஹபை விட்டு பிரிந்து போகத்தானே  விரும்புகிறார்கள்.

ஆமாம்!   நிச்சயமாக!

ஏன்?  தெரியுமா?

1. மத்ஹபு சமுதாய ஒற்றுமையை பிரிக்கிறது. முன்னேற்றத்திற்கு தடையாக  இருக்கிறது.

2. தனித்தனி சட்ட நூல்கள், இதனால் குழப்பவாதிகள் தான் குளிர் காய்கின்றார்கள்.

3. பெருநாளைக் கூட ஒற்றுமையாக ஒரே நாளில் நிறைவேற்ற முடியாத நம்மை பார்த்து ஏனைய பிற மத சகோதரர்கள் எள்ளி  நகையாடுகின்றார்கள்.

இன்னும் பல, மக்களிலேயே சிறப்பு வாய்ந்த சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் இருந்தது.  இது  வரலாற்று  உண்மையும்  கூட,

எனவே யாரெல்லாம் ஒற்றுமைக்கு தடையாக இருக்கின்றார்களோ அவர்கள் அனைவரும் மறுமையில் நஷ்டவாளிகளாகத்தான்  இருப்பார்கள்.

(இதை நாம் சொல்லவில்லை, முன்பே நாம் குறிப்பிடப்பட்ட இறை வசனத்தில் இது சொல்லப்பட்டுள்ளது)

முஸ்லிம்களே! சமுதாயமே!! தெரிந்து கொள்ளுங்கள்.

நம்மை பிரிப்பதில் முதன்மையாக இருப்பது இந்த மத்ஹபு நூல்களும் இயக்கங்களும் தான்.

எனவே,

A. வரதட்சணையை ஒழித்தால் வெற்றி பெற்றுவிட முடியுமா? என்றால் முடியாது.

B. பித்அத்தை ஒழித்தால் ஒழித்தால் வெற்றி பெற்றுவிட முடியுமா? என்றால் முடியாது.

C. நபி வழியில் பெருநாள் தொழுகை வெற்றி பெற்றுவிட முடியுமா? முடியாது. மழை தொழுகை திடலில் தொழுதால் மட்டும் வெற்றி பெற்று விட முடியுமா? ஒருபோதும் முடியாது.

D. அனாசாரங்களை மேடையில் தோறும்/ டி.வி. மூலமும் பேசினால்  மட்டும் வெற்றி பெற்றுவிட  முடியாது. 

(இவைகள் ஒழிய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை)

மாறாக இவை எல்லாவற்றுக்கும் மேலாக பிரிவினையை ஒழித்தால்தான் வெற்றி பெற முடியும்.

ஏக இறைவன் ஒருவன்தான் என நம்பிக்கை கொண்ட மாபெரும் இனம் ஒன்றாகி, ஒற்றுமையாக  வாழ  முடியாதா?

எப்படி  முடியும்? 

Previous post:

Next post: