நீங்கள் தான் வழிகெடுத்தீர்களா? அல்லது அவர்களே வழிகெட்டுப் போனார்களா?
S.H. அப்துர் ரஹ்மான்
தன்னுடைய அடியார் மீது (சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும்) இந்த இறைநூலை இறக்கி வைத்தவன். பெரும் பாக்கியம் நிறைந்தவனாக இருக்கின்றான். அகிலத்தார் அனைவருக்கும் (அவர்) எச்சரிக்கை செய்யக் கூடியவராக திகழவேண்டும் என்பதற்காக!
அவன் எத்தகையவனெனில், வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிக்கு அவனே அதிபதி. மேலும் அவன் யாரையும் மகனாக ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுடன் பங்கு உடையோர் எவரும் இல்லை. மேலும், அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்து, பிறகு அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதியை நிர்ணயித்தான்.
ஆனால், மக்கள் அவனை விடுத்து எத்தகைய கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்றால், அந்தக் கடவுள்கள் எந்தப் பொருளையும் படைப்பதில்லை. ஏன், அவர்களே படைக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். மேலும், தங்களுக்குக் கூட எத்தகைய இலாபத்தையும், நஷ்டத்தையும் அளிக்கும் அதிகாரத்தை அவர்கள் பெற்றிருக்கவில்லை. மேலும், மரணிக்கச் செய்யவும், உயிர் கொடுக்கவும் (இறந்தவர்களை) மீண்டும் எழுப்பவும் அவர்களால் இயலாது!
எவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தார்களோ அவர்கள் கூறுகின்றார்கள்: “இந்த இறைநூல் புனைந்து உரைக்கப்பட்ட ஒன்றேயாகும்; இதனை இவரே இயற்றிக் கொண்டார். மேலும், (இது விசயத்தில்) வேறு சில மனிதர்கள் இவருக்கு உதவியுள்ளார்கள்!’ இத்தகைய பெரும் கொடுமை புரியும் அளவிற்கும், கடும் பொய்யைக் கூறும் அளவிற்கும் அவர்கள் இறங்கி வந்துவிட்டார்கள்.
மேலும், இவர்கள் கூறுகின்றார்கள்: “இவை பழங்காலத்து மக்களால் எழுதப்பட்டவை யாகும். இவர் அவற்றை நகல் எடுக்கச் செய்கின்றார். அவை, காலையிலும், மாலையிலும் இவருக்கு வாசித்து காட்டப்படுகின்றன.’
(தூதரே!) இவர்களிடம் நீர் கூறும். “பூமி மற்றும் வானங்களில் உள்ள இரகசியங்களை அறிகின்றவன்தான் இதனை இறக்கி அருளினான். திண்ணமாக, அவன் அதிகம் மன்னிப்பவனாகவும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
மேலும், கூறுகின்றார்கள். “இவர் எத்தகைய இறைத்தூதர்! உணவு உண்ணுகிறாரே; கடைவீதிகளில் நடமாடுகின்றாரே! இவரிடம் ஒரு வானவர் அனுப்பப்பட்டிருக்கக் கூடாதா? அவர், இவருடன் சேர்ந்த(ஏற்றுக்கொள்ளாதவர்களை) எச்சரிக்கை செய்வதற்காக!
அல்லது அவருக்கு ஏதேனுமொரு கருவூலமாவது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது (நிம்மதியாக) உணவு பெறுவதற்குரிய ஏதேனும் தோட்டமாயினும் இவருக்கு இருந்திருக்கக் கூடாதா? மேலும், இவ்வக்கிரமக்காரர்கள் கூறுகின்றார்கள்: “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரின் பின்னால்தான் நீங்கள் சென்று கொண்டிருக்கின்றார்கள்!’
பாருங்கள்! உம் விசயத்தில் எத்தகைய விந்தையான வாதங்களை இவர்கள் உம்முன் எடுத்துரைக்கின்றார்கள்! எந்த அளவுக்கு இவர்கள் வழிதவறிப் போய் விட்டார்களெனில் உறுதியாக நிற்பதற்கான எந்த விசயமும் அவர்களுக்குப் புலப்படுவதில்லை.
பெரும் பாக்கியம் நிறைந்தவனாவான் அவன் தான் நாடினால், இவர்கள் சொன்னவற்றை எல்லாம் விட மிகச் சிறந்ததை உமக்கு வழங்கிட முடியும் (ஒன்றல்ல) கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் பல தோப்புகளையும், பெரும் பெரும் மாளிகைகளையும் (அவனால் வழங்கிட முடியும்)
உண்மை யாதெனில், இவர்கள் அந்த நேரத்தைப் பொய்யன்று வாதாடினர். யார் அந்த நேரத்தைப் பொய் என்று வாதாடினார்களோ அவர்களுக்குக் கொழுந்து விட்டெரியும் நெருப்பை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.
அது தொலைவான இடத்திலிருந்து இவர்களைப் பார்க்குமாயின், அதன் ஆவேசம் மற்றும் சீற்றத்தின் இரைச்சல்களை இவர்கள் கேட்பார்கள்.
மேலும், கை, கால்கள் விலங்கிடப்பட்டு அதன் நெருக்கடியான ஓர் இடத்தில் அவர்கள் வீசி எறியப்படுவார்கள். அங்கே அவர்கள் மரணத்தை அழைக்கத் தொடங்குவார்கள்.
(அப்போது அவர்களிடம் கூறப்படும்🙂 “இன்று ஒரு மரணத்தையல்ல, பல மரணங்களை அழையுங்கள்!’
இவர்களிடம் கேளுங்கள்: “இந்த முடிவு சிறந்ததா? அல்லது இறையச்சம் கொண்ட தூய்மையாளர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நிலையான சுவனம் சிறந்ததா? அது எத்தகையது எனில், அவர்களின் (செயல்களுக்குக்) கூலியாகவும் (அவர்களுடைய பயணத்தின்) இறுதி இடமாகவும் இருக்கும்.
அதில் அவர்களுடைய விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இதனை வழங்குவது உம் இறைவனின் பொறுப்பில் உள்ள நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வாக்குறுதியாகும்.
மேலும், அந்நாளிலேயே (உம் இறைவன்) இவர்களையும் ஒன்று திரட்டுவான். (இன்று) அந்த இறைவனை விடுத்து இவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் தெய்வங்களையும் கூப்பிடுவான். பிறகு, அவன் அவர்களிடம் கேட்பான்: “என்னுடைய இந்த அடிமைகளை நீங்கள் தாம் வழிகெடுத்தீர்களா? அல்லது அவர்களே வழிகெட்டுப் போனார்களா?’
அதற்கு அவர்கள் பணிந்து கூறுவார்கள்: “நீ தூய்மையானவன்! உன்னைத் தவிர வேறு யாரையும் எங்களுடைய பாதுகாவலர்களாக்கிக் கொள்வதற்கு எங்களுக்குத் துணிவு ஏது? ஆயினும், நீ இவர்களுக்கும் இவர்களுடைய மூதாதையர்களுக்கும் வாழ்க்கை வசதிகளை தாராளமாக வழங்கியிருந்தாய்: இறுதியில் இவர்கள் இந்தப் படிப்பினையை மறந்து விட்டனர். கடும் நாசத்திற்குரியவராகிவிட்டனர்!’
இவ்வாறு அவர்கள் (உங்களுடைய தெய்வங்கள்) பொய்யயனக் கூறிவிடுவார்கள். இன்று நீங்கள் வாதித்துக் கொண்டிருக்கும் உங்களுடைய விசயங்களை! பிறகு (உங்களுக்கு ஏற்படும் நாசத்தை) உங்களால் தடுக்கவும் இயலாது; எங்கிருந்தும் உதவியைப் பெறவும் இயலாது. மேலும், உங்களில் எவரேனும் கொடுமை புரிந்தால் அவருக்குக் கடுமையான வேதனையை நாம் சுவைக்கக் கொடுப்போம்.
மேலும் (தூதரே!) உமக்கு முன்பு நாம் அனுப்பி வைத்திருந்த தூதர்கள் அனைவரும் உணவு உண்பவர்களாயும் கடைவீதிகளில் நடமாடுபவர்களாகவும் தாம் இருந்தார்கள். உண்மையில் நாம் உங்களில் ஒரு சிலரை மற்றும் சிலருக்குச் சோதனையாக ஆக்கிவைத்துள்ளோம். நீங்கள் பொறுமையை மேற்கொள்வீர்களா? உம் இறைவன் அனைத்தையும் பார்ப்பவனாய் இருக்கின்றான். (25:1-20)