புகை பிடிப்பதை இஸ்லாம் தடை செய்கிறதா?

in 2024 ஆகஸ்ட்

புகை பிடிப்பதை இஸ்லாம் தடை செய்கிறதா?

ஜி. ஜலாலுதீன், பாண்டிச்சேரி

மறு பதிப்பு :

புகை  பிடிப்பதை  இஸ்லாம்  தடை செய்கிறதா?

புகை பிடிப்பது வெறுப்பிற்கு உரியது என்று ஒப்புக்கொண்டாலும், அதை இஸ்லாம் தடை செய்யவில்லை என்று முஸ்லிம்கள் பலர் கருதுகின்றனர். ஆனால், எல்லாவற்றுக்கும் இறைவனாகிய அல்லாஹ், மனிதனுக்கு அளித்த இறுதி வழிகாட்டுதலாகிய குர்ஆன் கூறும் கட்டளைகளின் அடிப்படையில் பார்க்கும்போது புகை பிடிப்பது ஹராம் (தடை செய்யப்பட்டது) என்று இஸ்லாம் கட்டளையிடுவது  தெளிவாக  விளங்கும்.

புகையிலை  எனும்  விசம் :

புகையிலையில் 4000 இரசாயன பொருள்கள் இருக்கின்றன. அவற்றில் 200 இரசாயனங்கள் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. இதில் 30 இரசாயனங்கள் புற்றுநோய் (கேன்சர்) விளைவிக்கக் கூடியவை. இவ்வளவு நச்சுத்தன்மை வாய்ந்த புகையிலையைக் கொண்டு தயாராகும் சிகரெட், பீடி, சுருட்டு போன்றவற்றில் இருந்து வெளியாகும் புகையும், புகையிலை, குட்கா (பான்பராக்) போன்றவற்றை மெல்லுவதால் வரும் புகையிலைச் சாறும் மனித  உடலைப்  பாதிக்கிறது.

புகையிலையால்  வரும்  நோய்கள்:

1. ஆண்மை  இழப்பு

2. இதயநோய்

3. புற்று நோய் மூக்கு, வாய், தொண்டை, உணவுக்குழாய், நுரையீரல், சிறுநீரகம், சிறுநீர்ப்பை.

புகை பிறருக்குப் பகை!

தங்களுடைய சிகரெட் (பீடி, சுருட்டு) வெளிப்படுத்தும் புகையில் வெறும் 15 சதவிகிதம் மட்டுமே புகை பிடிப்பவர்கள் உள்ளிழுக்கின்றனர். மீதம் 85 சதவிகிதம் புகை காற்றில் கலந்துவிடுகிறது. இதனால் புகை பிடிப்பவருக்கு அருகில் இருப்பவர்கள் அவரை விட அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, புகை பிடிக்கும் ஒரு குடும்பத் தலைவர் தன்னுடைய மனைவி, பிள்ளைகள் ஆகியோரின் உடல்நலக் கேடிற்கும், சில நேரங்களில் அவர்களுடைய மரணத்திற்குக் கூட காரணம் ஆகிறார். ஒரு பெண் தன்னுடைய கர்ப்ப காலத்தில் புகையிலை உபயோகப்படுத்தினால், அவளுக்கு ஊனத்துடன் குழந்தை பிறக்கும் வாய்ப்பு  உள்ளது.

புகையிலை  எனும்  கொலையாளி!

உலகில் ஒவ்வொரு எட்டு வினாடிக்கு ஒரு மனிதர் புகையிலையினால் வந்த நோயின்  காரணமாக உயிர் இழக்கிறார்.

புகையிலை காரணமாக உலகில் ஒவ்வொரு வருடமும் நாற்பது இலட்சம் மனிதர்கள் மரணம் அடைகிறார்கள். இதில் இந்தியாவில் மட்டும் வருடத்திற்கு எட்டு இலட்சம் மனிதர்கள் மரணம் அடைகிறார்கள் என்பது கவனத்திற்கு உரியது.

இஸ்லாத்தின் பார்வையில் புகையிலை பழக்கம்! அனைத்திற்கும் அதிபதியாகிய அல்லாஹ்  கூறுகிறான்.

அவர் (தூதர் முஹம்மத்) நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களில் இருந்து விலக்குவார். நல்லவற்றையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்துவிடுவார்  (அல்குர்ஆன் 7:157)

மேற்கண்ட திருமறை வசனம் மூலம் நன்மை தரக்கூடியவையே மனிதர்களுக்கு அனுமதிக்கப்பட்டது (ஹலால்), தீமை தரக்கூடியவையே மனிதர்களுக்கு தடுக்கப்பட்டது (ஹராம்) என்பது நன்கு விளங்குகிறது.

கெடுதி விளைவிக்கக் கூடியவை ஹராம் என்பதால், தனக்கும் பிறருக்கும் கேடு விளைவிக்கக் கூடிய புகையிலையும் ஹராம். எனவே புகையிலை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது என்பது நன்கு விளங்குகிறது.

மேலும்  ஆதாரங்கள்,

புகையிலை  =  தற்கொலை  =  ஹராம்

புகை பிடிப்பதாலும், புகையிலை மெல்லுவதாலும் ஒரு மனிதர்  தன்னுடைய உயிரைப் போக்கக் கூடிய நோய்களை இதய நோய், புற்றுநோய் ஆகியவற்றை தானே வரவழைத்துக் கொள்கிறார். தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்று நன்கறிந்தும் அவர் தொடர்ந்து இந்த பழக்கத்தில் ஈடுபடுவது தற்கொலை முயற்சியே ஆகும். ஆனால்,

விசுவாசிகளே! உங்களை நீங்களே கொலை  செய்து  கொள்ளாதீர்கள்’(அல்குர்ஆன் 4:29)

உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்‘. (அல்குர்ஆன் 2:195)

என்று அல்லாஹ் கட்டளை இடுகிறான். இதன் மூலம் தன்னுடைய உடலிற்கும் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடிய புகையிலை ஹராம் என்பது தெளிவாகிறது.

புகையிலை  =  கொலை  =  ஹராம்

புகை பிடிப்பதால் எவ்வாறு நம்மைச் சுற்றி இருப்பவர்கள், நமது நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோர் உயிரைக் கொல் லும் நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நாம் படித்தும். இதைப்பற்றி இஸ்லாம்  கூறுவது  என்ன?

எவனொருவன் மற்றொரு ஆத்மாவை கொலைக்குப் பிரதியாகவோ, அல்லது பூமியில் குழப்பத்தைத் தடை செய்வதற்காகவோ அன்றி (அநியாயமாக) கொலை செய்கிறானோ, அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை  செய்தவன் போலாவான்.’ (அல்குர்ஆன் 5:32)

தவறாக அன்றி, யாதொரு விசுவாசியைக் கொலை செய்வது, எந்த விசுவாசிக்கும்  ஆகுமானதல்ல…’  (அல்குர்ஆன் 4:92)

எவனேனும் யாதொரு முஸ்லிமை (நன்கறிந்து) வேண்டுமென்றே கொலைச் செய்தால், அவனுக்குரிய தண்டனை நரகம் தான்…’ (அல்குர்ஆன் 4:93)

மேற்கண்ட இறை சட்டங்கள் மூலம் கொலை செய்வது ஹராம்; அதற்குத் தண்டனை நரகம்தான் என்பது தெளிவாக விளங்குகிறது. இதன் மூலம், பிறருடைய உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் புகை பிடிக்கும் பழக்கம் ஹராம் என்பது தெளிவாகிறது.

புகை  =  வீண்  விரயம்  =  ஹராம்

அல்லாஹ் கூறுகிறான்: “மிதமிஞ்சி செலவு செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ, தன் இறைவனுக்கு நன்றி செலுத்தா(துமாறு செய்)தவன்‘. (அல்குர்ஆன் 17:26,27)

பணத்தை பலனற்ற வீண் செலவு செய்யும் முஸ்லிம்கள் இந்த வசனத்தை சிந்தித்துப் பார்க்கவேண்டும். இனியும் நீங்கள் ஷைத்தானின் சகோதரர்களாகவே தொடர விரும்புகிறீர்களா?

புகை நாற்றம் = தொழுகையில் தடங்கல்:

புகை பிடிப்பவருடைய உடல், உடை, வீடு ஆகிய அனைத்திலும், புகை நாற்றம் படர்ந்து கிடக்கிறது. புகை பிடிக்கும் ஒருவர் பள்ளிவாசலில் பலரோடு சேர்ந்து தொழும்போது, அவரிடம் இருந்து எழும் துர்நாற்றம் உடன் தொழுவோரின் சுவனத்தைச் சிதற வைக்கிறது. இதனால் புகை பிடிப்போர் தொழுகையாளிகளுடைய தொழுகையைக் கெடுத்த  பாவத்திற்கு  ஆளாகிறார்.

மேற்கண்ட ஆதாரங்களில் மூலம் புகை பிடிப்பதிலும், புகையிலை மெல்லுவதும் தீங்கு விளைவிக்கக் கூடியவைதான் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. இதன் மூலம் அவை ஹராம் (தடுக்கப்பட்டவை, விலக்கப்பட்டவை) என்பதும் நிரூபிக்கப்பட்டுவிட்டது.

புகை பிடிப்பது மனதை அனுமதிக்கப்படுத்துகிறதா?

புகை பிடிப்பதால் மன அழுத்தம் (டென்சன்) குறைகிறது. மனம் அமைதி அடைகிறது என்ற கூற்றை மருத்துவ இயல் வல்லுநர்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கின்றனர்.

ஆனால், “மெய்யாகவே அல்லாஹ்வை நினைவுகூர்வதன் மூலமாக இதயங்கள் அமைதி பெறுகின்றன.’ (அல்குர்ஆன் 13:28)

உண்மையான மன அமைதியை நாடுபவர்கள் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறக் கூடிய செயல்களான குர்ஆன் ஓதுதல், குர்ஆனை விளங்குதல், அல்லாஹ் குர்ஆனில் கூறும் கட்டளைகளைச் செயல்படுத்துதல் ஆகிய செயல்கள் மூலமாக மன அமைதியைப்  பெற்றுக் கொள்வார்கள்.

புகை  பிடிக்கும்  எண்ணம்  எழும்போது :

இனி புகை பிடிக்க வேண்டும் என்ற தீய எண்ணம் எழும்போது, இறைவன் கூறிய இந்த வசனத்தை நினைவு கூறுங்கள்.

எவர்கள் நம்முடைய வழியில் (செல்ல) முயற்சிக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நம்முடைய (நேரான) வழியில் செலுத்துகிறோம்‘. (அல்குர்ஆன் 29:69)

விசுவாசிகளே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் சித்தியடையும் பொருட்டு) பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன்  இருக்கின்றான்‘. (அல்குர்ஆன் 2:153)

ஆதலால், தொழுகையைக் கடைபிடித்த மனோ இச்சையை எதிர்த்து விடாமுயற்சியுடன்.

நீங்கள் செய்ய வேண்டியவை:                                                 

1. எஞ்சியுள்ள சிகரெட்டுகள் (பீடி, சுருட்டு) அனைத்தையும் உடனே தூக்கி  எறியுங்கள்.

2. புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களோடு தொடர்புகளை, சந்திப்புகளைக் குறையுங்கள். யார் உங்களுக்கு சிகரெட்டு (பீடி, சுருட்டு) வழக்கினாலும்  வாங்காதீர்கள்.

3. டீ, காபி போன்ற நரம்புகளை உற்சாக முட்டக்கூடிய பானங்களைக் குடிப்பதைத்  தவிருங்கள்.

4. புகை பிடிப்பதை நிறுத்தும்போது அதிகமாக நீர் அருந்துங்கள். நாவறட்சி புகை பிடிப்பதை நிறுத்தும்போது ஏற்படும் அறிகுறிகளில்  ஒன்றாகும்.

5. புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் போது நீங்கள் உங்கள் கைகளால் செய்யக்கூடிய வேளைகளில் ஈடுபடுங்கள், சிகரெட்டைப் பிடிக்கும் கரங்களை வேறு வேலைகளில் ஈடுபடுத்துங்கள்.

நமக்கும் பிறருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய, இறைவனின் சட்டங்களால் தடை செய்யப்பட்ட புகை பிடிக்கும் பழக்கத்தை முஸ்லிம்களும், பிற மக்கள் அனைவரும்  உடனடியாக நிறுத்த வேண்டும்.

அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ள கொள்கைகளையும் சட்டங்களையும்  அவனுடைய இறுதித் தூதர் முஹம்மது (அவர்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அமைதியும் உண்டாகட்டும்) அவர்கள் காட்டிய வழியில் பின்பற்றி நிரந்தர வெற்றியும்  நிலையான அமைதியும் பெற உலக மக்கள் அனைவரையும்  அன்புடன்  அழைக்கிறோம்.

அனைவரும் நன்மை பெற அல்லாஹ்விடம் (மட்டுமே) இறைஞ்சுகிறோம். எல்லாரையும் இரட்சிக்கும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

Previous post:

Next post: