தலையங்கம் :
மதுவும்! சூதும்!!
பொதுவாக மது, சூது இவைகள் இரண்டும் தீமையானது என்பது எல்லோரும் அறிந்தே ஒன்று. அவ்வாறுயிருந்தும் அரசாங்கம் மதுவையும், சூதையும் முற்றிலுமாக தடை செய்ய மறுக்கிறது. அதாவது “மதுவினாலும், சூதுவினாலும் கிடைக்கக் கூடிய வருமானத்தால்‘ அரசே அதை நடத்தவும் செய்கிறது. ஆனாலும் பெயர் அளவிற்கு, “குடி குடியைக் கெடுக்கும்‘ “குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்‘ என்றும் கூறுகிறது. அது மட்டுமல்ல;
“மது நாட்டுக்கும் கேடு; வீட்டுக்கும் கேடு‘ என்றும் விளம்பரமும் செய்கிறது.
அதுவும் அவன் அருந்தும் மது பாட்டிலிலேயே இதை செய்கிறது. வினோதமான செயலில் இதுவும் ஒன்று. மது, சூது இரண்டும் தடைச் செய்யப்பட்ட நாடுகள் பல உண்டு.
மதுவும், சூதும் தான் பல பாவமான செயல்களுக்கு மூலக் காரணமாக இருக் கிறது என்பதில் கடுகளவும் சந்தேகம் இல்லை. எனவேதான் இறைவன் மது, சூதுவைப் பற்றி 4 வசனங்கள் மூலம் அதைப் பற்றி தெளிவாக கூறியுள்ளான். அவை:
இறைநூலில் மது மற்றும் சூதுவைப் பற்றி அருளப்பட்ட வசனங்கள் நான்கு உள்ளன.
அவற்றில் முதலாவதாக அருளப்பட்டது. “பேரீச்சை, திராட்சைப் பழங்களிலிருந்து போதை தரும் மதுவையும், பயனளிக்கும் உணவையும் நீங்கள் உண்டாக்குகிறீர்கள். நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சியாக இருக்கிறது‘. (அல்குர்ஆன்: 16:67)
அடுத்து அருளப்பட்ட வசனம்:
“நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் போதையில் இருக்கும்போது நீங்கள் ஓதுவது இன்னது என்றும் அறியாத நிலையில் தொழுகைக்கு நெருங்காதீர்கள்…’ (அல்குர்ஆன் 4:43)
இதை அடுத்து மூன்றாவதாக அருளப்பட்ட வசனம் :
“மதுவைப் பற்றியும், சூதைப் பற்றியும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் (நபியே!) கூறும். அவ்விரண்டிலும் பெரும் தீமையிருக்கிறது. அவற்றில் சில பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் தீமையே பலனை விடப் பெரிது’(அல்குர்ஆன் 2:219)
மது மற்றும் சூதுவைப் பற்றி இறுதியாக எச்சரிக்கையாக அருளப்பட்ட வசனம்:
“நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், சிலை (வழிபாடு)கள், குறி பார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் செயலுமே ஆகும். எனவே நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, அவற்றிலிருந்து விலகி கொள்ளுங்கள்‘. (அல்குர்ஆன் 5:90)
அதை அடுத்து அதன் (மது, சூதின்) பாதிப்பையும் நமக்கு இறைவன் கூறுகிறான்.
“மது, சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி மற்றும் அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகி கொள்ள மாட்டீர்களா? (அல்குர்ஆன் 5:91)
நிச்சயமாக இறைவன் சொன்னது போல் பலன்களை விட கெடுதலே அதிகம், அவை எவ்வாறு என்றால்,
1. வாகன விபத்துகளுக்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது மதுவே.
2. தொழிற்சாலைகளில் நடக்கும் பல விபத்துக்களுக்கு மதுவை குடித்து விட்டு வேலையில் ஈடுபடும் சில தொழிலாளர்களால் ஏற்படுகிறது.
3. பொருளாதார நஷ்டம்
4. சமூகச் சீர்கேடு
5. மது அருந்துவதால் இதயம், மூளை, குடல், கல்லீரல் ஆகிய உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.
எவ்வாறு என்றால்,
மது வகைகள் தயாரிக்கப்படும் ஆல்கஹால் என்னும் ரசாயனப் பொருள் மனித உயிருக்கு உலை வைத்திடும் அபாய சக்தி கொண்டது. நீண்ட நாட்கள் “ஆல்கஹால்‘ உபயோகப் படுத்துகிற ஒருவர் வைட்டமின் A, B மற்றும் இரும்புச் சத்துக்களையும் இழந்து விடுகிறார்.
இரத்தத்தில் மதுவின் அளவு சுமார் 100 மில்லி கிராமைக் கடந்துவிட்டால் மூளைப் பகுதி முதலில் பாதிக்கப்பட்டு அதனால் கை கால் நடுக்கம், தடுமாற்றம் ஏற்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக கள்ளச் சாராயத்தில் சேர்க்கப்படும் “மெத்தனால் ஆல்கஹால்‘ எனும் எரிப்பொருள் கல்லீரலை பாதித்து உயிர் இழப்பு ஏற்படுவதையும் பார்க்கின்றோம்.
உதாரணமாக மிக சமீபத்தில் சென்ற ஜூன் மாதம் (2024) 19ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலணியிலும், அதனை சுற்றியுள்ள கிராம பகுதியிலும் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் சுமார் 57 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 184 பேருக்கு மேற்பட்ட நபர்கள் கண் பார்வை, உடல் உறுப்புகள் செயல் இழந்துள்ளனர். இதற்கு முன்பும் பல முறை இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.
சூதுவினால் ஏற்படும் தீமைகள் :
1. சூதாடுவதை பழக்கமாக்கிக் கொண்ட மனிதன் தனது தூய்மையான (ஹலாலான) பொருளை சூதின் மூலம் சம்பாதித்ததைக் கொண்டு அதனை வீணாக்கி (ஹராமாக்கி) விடுகிறான்.
2. சூதாட்டத்தில் வென்று விடுகின்றானெனினும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களின் அழிவிற்குக் காரணமாகி பணம் சம்பாதிக்கின்றான்.
3. பணத்தை வீண் விரயம் செய்யும் பழக்கமும் ஏற்படுகிறது.
4. பொதுவாக சூதாடுபவர்கள் தமது பொருளை அலட்சியமாகவே பறிகொடுத்து விடுகின்றனர்.
5. சூதாட்டம் அறிவையும், சிந்தனையையும் பலவீனப்படுத்தி விடுகின்றது.
மனதிற்கு அமைதியின்மையை மது தருவதால் மதுவை அருந்துகிறேன் என சிலர் கூறிக்கொண்டு ஒட்டுமொத்த குடும்பத்தின் அமைதியை குலைக்கின்றார்கள். அதனால் கேவலங்களுக்கும், வேதனைகளுக்கும் ஆளாகின்றார்கள்.
தன்னைத்தானே கட்டுப்படுத்தி ஒழுக்க வாழ்வைப் பேண முடியாத மனிதனால் நன்மையை அடைந்து கொள்ள முடியாது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“மது தீமைகளின் தாய், பெரும் பாவங்களிலெல்லாம் மாபெரும் பாவம்‘ அறிவுடைய எவரும் பாவத்தின் பக்கம் நெருங்கமாட்டான்.
மதுவை தடை செய்யாதவரை, தீமைகளைக் களைய வழியே இல்லை. எனவே அனைவரும் ஒன்றுசேர்ந்து மதுவுக்கு எதிராக தடை செய்ய குரல் கொடுக்க வேண்டும்.