மனம்!

in 2024 ஆகஸ்ட்

மனம்!

அய்யம்பேட்டை A. நஜ்முதீன்

உலகிலேயே  மிக  வேகமானது: 

ராக்கெட்டா?

ஒலியா?

ஒளியா? 

காற்றா?

இவைகள் எல்லாம் இல்லை. இருப்பினும் நம் கண் முன்னால் நடக்கும் இவைகளின் செயல்களால் இவைகள் தான் வேகமானது என பெரும்பாலோர் நினைக்கிறோம். ஆனால் உண்மை இது வல்ல. உண்மை என்னவென்றால் மேற்கண்ட எல்லாவற்றையும் விட வேக மானது நம் மனமே!

ஆம்! நினைத்த சில நொடிகளில் எங்கெங்கோ சென்றுவிட்டு திரும்பி விடுகிறது. அத்துனை வேகமானது நமது மனம்.

அதுமட்டுமல்ல இன்னும் ஏராளமான ஆற்றல்களையும் உள்ளடக்கியிருக்கிறது. மேலும் உடலில் இருக்கும் ஏனைய உறுப்புக்களைப் போன்று இதற்கென்று தனி உருவம் இல்லை. அதாவது மனம் என்றால்உள்ளம்அல்லது மனசாட்சி என்றும் சொல்லலாம்.

நம் உடலை மூளைதான் இயக்குகிறது. அதுபோல உள்ளத்தையும் (மனதையும்) மூளைதான் இயக்குகிறது. ஆயினும் இந்த மூளையையே கட்டுப்படுத்தும் சக்தி மனதுக்கு  உண்டு.

இந்த மனம் (உள்ளம்) என்பது இரண்டு  வகையாகும். 

ஒன்று : மேல் மனம் (CONSCIOUS MIND)

மற்றொன்று : உள் மனம் (SUB CONSCIOUS MIND)

மனம் செயல்படுகிறதா? இல்லையா? என்பதை அறிய ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்விகள் உதிக்கும். அதன் காரணமாக வெறும் நம்பிக்கைக்கும், உண்மை நிலைக்கும் இடையே உள்ள நிலைமையை அறிய முயற்சி செய்யும். அது மட்டுமல்ல எது நல்லது? எது கெட்டது? என்பதும்  அறிய  வரும்.

பொதுவாக மனதை கட்டுப்படுத்த தெரியாமல் கண்ணியத்தை இழந்து இழிநிலைக்கு ஆளானவர்களே உலகில் அதிகம். அதுபோல் மனதை கட்டுப்படுத்தி மேன்மை அடைந்த வர்களும் உலகில் உண்டு. அவ்வாறு ஆனவர்களைப் பற்றி இறைநூலில் (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளதை  பார்ப்போம்.

நிச்சயமாக மனித மனம், தீயவற்றை அதிகமாக தூண்டிவிடக் கூடியதாகும். ஆனால் எவருக்கு இறைவன் கருணைபுரிந்தானோ அவருடைய மனதைத் தவிர (அல்குர்ஆன்12:53)

உலகில் நடந்த முதல் பெரும்பாவம் தீய மனத் தூண்டுதலாலேயே நடந்ததாக நமக்கு படிப்பினையாக இறைநூலில் கூறப்பட்டுள்ளது.

ஆதமுடைய இரு மகன்களின் வரலாற்றைக் கூறிய இறைவன், அதில் “…இறுதியில்  தன்னுடைய சகோதரனை கொலை செய்யும்படி அவனுடைய மனம் அவனைத் தூண்டியது. அதனால் அவன் அவரைக் கொலை செய்து பேரிழப்பிற்கு ஆளாகிவிட்டான்”.  என கூறியுள்ளான். (அல்குர்ஆன் 5:30)

மற்றொரு சம்பவம் :

இது இணைவைக்கும் பெரும் பாவத்திற்கு ஆளானது. 

மூஸா(அலை) ஸாமிரியே! உன் விவகாரமென்ன? என்று கேட்டார்கள். அதற்கு அவன், இவர்களுக்கு தென்படாத ஒன்றை நான் கண்டேன். அந்த தூதரின் காலடியிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து உருக்கிய தங்கத்தை (காளை சின்னத்தின் மீது) அதன் மீது தூவினேன். இவ்வாறு செய்யும்படியே என் மனம் என்னைத் தூண்டியதுஎன்று ஸாமிரி  கூறினான்.

ஆக, மேற்கண்ட இரு சம்பவங்களும் தீய மனத் தூண்டுதலால் நடந்தது.

மேற்கண்ட தீய மனதிற்கு மாறாக உண்மையை நாடியும் மன அமைதி பெறவும் நடந்த ஒரு சம்பவத்தையும் இறைநூலில் இறைவன் கூறியுள்ளான்.

என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்கு காட்டுவாயாக! அதற்கு இறைவன், நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா? என்று கேட்டான். அதற்கு அவர் (நபி இப்ராஹீம்(அலை) அவ்வாறல்ல! மாறாக என் உள்ளம் (மனம்) அமைதி பெறவே என்று கூறினார்…” (அல்குர்ஆன் 2:260)

எனவே ஒரு விசயம் உண்மையா? பொய்யா? என்பது மனம் அமைதிப்படுவது மூலமே உணர முடியும், அதே வேளையில் இறைவனின் எச்சரிக்கை என்னவென்றால்,

உமக்கு அறிவு இல்லாததை நீர் பின்பற்றாதீர்! (ஏனென்றால்) செவி, பார்வை, உள்ளம் (மனம்) ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படும்என்பதாக இறைவன் கூறுகிறான். (அல்குர்ஆன் : 17:36)

அடுத்து இறைவன் சொல்கிறான் :

மனிதனைப் படைத்து, அவனது மனம் எதை எண்ணுகிறது (நல்லதையா? தீயதையா?)  என்பதையும் அறிவோம்.

நாம் அவனுக்குப் (மனிதனுக்கு) பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்என்பதாக இறைவன் கூறுகிறான்.  (அல்குர்ஆன் 50:16)

ஆக வெறுமனே மனிதனை படைத்து விட்டு இறைவன் ஓய்வு எடுக்கவில்லை. எல்லா நிலைகளிலும் எது சரி? எது தவறு? என்று எச்சரிக்கை செய்ய கூடிய குர்ஆனை கொடுத்து, கண்காணிப்பவனாகவும் இருக்கின்றான் என்பது தெரிய வருகிறது. எனவே  தான்  இறைவன்,

உங்களுக்கு(நமக்கு) முன்னர் பல சமுதாயங்கள் தோன்றின, அவர்களின் வரலாற்றை படித்து பாருங்கள். அல்லது உலகம் முழுவதையும் சுற்றிப் பாருங்கள். இறைவனின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக செயல்பட்டவர்கள், எவ்வாறு அழிவை சந்தித்துள்ளார்கள் என்ற உண்மை உங்களுக்கு தெரியும்”. (அல்குர்ஆன் 3:139)

எனவே வாழ்வில் உயர்வு வேண்டு மானால் இறைவனின் வழிகாட்டும் நூலான இறைநூலை மனதில் பதிய வைத்து செயல்பட வேண்டும். ஏனென்றால் நீங்கள் உண்மையிலேயே இறை வழிகாட்டுதலைப் பேணி நடக்க விரும்பும் இறை நம்பிக்கையாளராக இருந்தால், நிச்சயமாக மனம் கவலை கொள்வதோ, தைரியத்தை இழப்பதோ கூடாது. அப்போதுதான் உயர்நிலை அடைவீர்கள்.

Previous post:

Next post: