முன் ஸுன்னத் தொழுகையும்! முஸ்லிம்கள் செய்யும் தவறும்!
N. அஹமது இப்ராஹிம், ஒரத்தநாடு
இஸ்லாம் மார்க்கத்தில் வேறு எந்த வழிபாட்டிற்கும் இல்லாத உயரிய நிலை தொழு கைக்கு மட்டுமே உண்டு. வழிபாடுகளில் முதன் முதலில் இறைவனால் கடமையாக்கப் பட்டது தொழுகைதான், அது மட்டுமல்ல நாளை (மறுமையில்) நம்மிடம் (மனிதர்களிடம்) நடத்தப்படும் முதல் விசாரணை தொழுகையை குறித்துதான். மேலும் இறை நிராகரிப்பின்பால் இட்டுச் செல்லும் ஒரே செயல் தொழுகையைப் புறக்கணிப்பதுமாகும்.
இத்தகைய பல சிறப்புக்குரிய தொழுகை மிக சரியானதாக அமையவேண்டும் என்பது மிக முக்கியம். ஆனால் ஐவேளை ஜமாஅத்துடன் தொழக்கூடிய பல சகோதரர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் மிகப் பெரிய தவறு என்னவென்றால்,
இகாமத் சொல்லும்போதோ அல்லது ஜமாத் நடைபெறும் போதோ ஸுன்னத்தான தொழுகையில் ஈடுபடுவதாகும். இந்த தவறை பெரும்பாலோர் குறிப்பாக ஃபஜ்ர் தொழுகையின் முன் ஸுன்னத் அவசியம் என்ற காரணத்தால் ஜமாத்துடன் கலந்து கொள்ளாமல் முன் ஸுன்னத் தொழுகையை தொழுவதை பார்க்கலாம்.
இவ்வாறு செய்வது சரியா? தவறா?
இவ்வாறு செய்வது தவறு என்பதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஆதாரபூர்வமான ஹதீத் நூல்களில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. “தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு விட்டால் ஜமாத்தல்லாத வேறு எந்த தொழுகையும் இல்லை‘ (முஸ்லிம்:1282, அபுதாவூது, திர்மிதி, நஸாயி, இப்னு மாஜா, அஹமது)
அப்துல்லாஹ் இப்னு ஸர்ஜிஸ்(ரழி) அவர்கள் அறிவித்ததாக பதிவு செய்யப்பட்ட ஹதீத்:
“ஒருவர் பள்ளிவாசலில் நுழைந்தார், அது சமயம் நபி(ஸல்) அவர்கள் சுபுஹு(பஜர்) தொழுகையை தொழுது கொண்டிருந்தார்கள்.
வந்தவர் பள்ளியின் ஒரு ஓரத்தில் நின்று தனியாக முன் ஸுன்னத் தொழுதார். பின்னர் நபிகளாருடன் ஜமாத் தொழுகையில் கலந்து கொண்டார்.
ஸலாம் கொடுத்த பின் நபி(ஸல்) அவர்கள் அந்த நபரிடம் கூறினார்கள்:
தோழரே! நீ செய்த செயல் தவறானது என தம்முடைய ஆட்சேபனையைத் தெரிவித்தார்கள். (முஸ்லிம், அஹமது, நஸயீ)
ஹதீத் : 2
இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவித்ததாக பதிவு செய்யப்பட்டவை :
ஒரு தடவை நான், முன் ஸுன்னத் தொழுதுகொண்டிருக்கும்போது முஅத்தின் இகாமத் சொல்ல தொடங்கிவிட்டார். அப்போது ஜமாத் நடத்துவதற்காக வந்த நபி(ஸல்) அவர்கள் என்னை பிடித்து இழுத்து சென்றவாறு, “நீர் நான்கு ரக்அத் ஸுபுஹ் தொழுகின்றீரா? என்று கேட்டார்கள். (அரபு நாடு சென்று வந்தவர்களுக்கு தெரியும் யாரேனும் ஜமாத் நடக்கும் பொழுது முன் ஸுன்னத் தொழுதால் அவரை இழுத்து சென்று ஸப்பில் (வரிசையில்) நிறுத்தி விடுவார்கள்)
மேற்கண்ட ஆதாரப்பூர்வமான ஹதீத்கள் இவ்வாறு இருக்க பள்ளிவாசல்களில் ஜமாத் நடந்து கொண்டிருக்கும்போது தாமதமாக வந்த சகோதரர்கள் அவசர அவசரமாக முன் ஸுன்னத்தை தொழுது விட்டு ஜமாத்துடன் கலந்து கொள்ள வருவார்கள்.
(இந்த தவறை பல தவ்ஹீத் சகோதரர்கள் கூட செய்வதை பார்க்கலாம்)
ஜமாத் நடக்கும்போது முன் ஸுன்னத் ஏன் தொழுகிறீர்கள் என்று கேட்டால், இவ்வாறு செய்வது (தொழுவது) வெறுக்கத்தக்க செயல் இல்லை, இது கூடும் என மத்ஹபு நூலில் உள்ளது என்று காரணம் கூறுவார்கள்.
மார்க்கத்தில் எந்தவொரு செயலும் ஒன்று கூடும், அல்லது கூடாது என்று மட்டும்தான் இருக்க முடியும். அதிலும் தொழுகையில் இரண்டு கருத்து இருக்க ஹதீத் நூல்களில் ஆதாரமில்லை. நபி(ஸல்) அவர்கள் ஜமாத் நடத்தும்போதே முன் ஸுன்னத் தொழக் கூடாது என்று ஹதீத் நூல்களில் இருக்கும்போது,
இது கூடும் என்று சொல்ல மத்ஹபு நூல்களில் குறிப்பிடுவதற்கு ஆதாரம் உள்ளதா?
பஜ்ரின் முன் ஸுன்னத் தொழுகையானது அவசியம் தொழுதாக வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் ஜமாத் நடக்கும்போது தொழுவது தான் தவறு. அதே வேளையில் ஜமாத் முடிந்த பின்பு தனியாக அதை தொழுவதில் எந்த தடையும் இல்லை.