விடியலுக்கு முன் எழு! முன்னிரவில் தூங்கு!!
M. சையது முபாரக், நாகை.
நம்மில் பலருக்கு “அதிகாலை‘ என்பதே தெரியாது. சூரிய உதயத்தைப் பார்க்காத ஒரு சமுதாயமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பள்ளிக்கு, கல்லூரிக்கு, வேலைக்குச் செல்ல காலை 9 மணிக்கு அவசர அவசரமாக எழுவோம். அன்று முழுவதும் மனப் பதட்டத்துடன் இருப்போம், விடுமுறை நாட்களில் கேட்கவே வேண்டாம்; பகல் உணவிற்கு எழுந்தாலே ஆச்சரியம் தான். காலை 9 மணிக்கு எழுந்து அவசர அவசரமாக ஓடுவதாலும், லுஹர் நேரத்தில் எழுவதாலும் “காலை உணவு‘ என்பதே காணாமல் போய்விட்டது.
அதனால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் மயங்கி விழும் நிகழ்வை நாம் அடிக்கடி பார்த்து விடுகிறோம். இரவு உணவிற்கும், அடுத்த நாள் நாம் உண்ணும் உணவிற்கும் இடையிலுள்ள நேரத்தை கணக்கிட்டுக்கொள்ளுங்கள். மூளை நன்கு செயல்பட, மூளைக்கு அடிக்கடி ஊட்டச்சத்து தேவை. காலை உணவின் சத்தை மூளை அடையாததால் மூளை சோர்வடைந்து, மற்ற உறுப்புகளைத் தூண்டும் ஆற்றலை மெல்ல மெல்ல இருக்கிறது. அதனால் மேலும் மனமும் சோர்வடைகிறது. இந்த உடல் மொழியையும் நாம் பொருட்படுத்துவதில்லை.
அல்லாஹ்வின் பாதுகாப்பைத் தரும் முக்கிய இரு அத்தியாயங்களின் (முஅவ்விதத் தைன்) முதல் வசனமே அதிகாலை இரட்சகனிடம் பாதுகாவல் தேடுவதைச் சொல்கிறது. (அல்குர்ஆன் 113,114)
“சுப்ஹுத் தொழுகையை ஒருவர் தொழுதால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளார். ஆதமின் மகனே! கவனம் கொள்! அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளவருக்கு ஏதேனும் (நீர் இடையூறு) செய்து, அதனால் உம்மை அல்லாஹ் தண்டித்துவிட வேண்டாம்‘ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்: 1163)
“யா அல்லாஹ்! எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள் வளத்தைத் தருவாயாக!’ என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (அபூதாவூத்)
அதிகாலை நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் ஏன் பாத்திமா(ரழி) அருகில் வந்து எழவைத்து, “அருமை மகளே!’ எழு, அல்லாஹ்வின் வாழ்வாதரங்கள் வழங்கப்படும் நேரத்திற்குச் சாட்சியாளராக இரு. அலட்சியப்படுத்துபவராக மாறி விடாதே. அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே அல்லாஹ் வாழ்வாதாரத்தை (ரிஸ்க்கை) வழங்குகிறான் என்று கூறினார்கள். (பைஹகீ)
இவைகள் நமக்கு பாதுகாப்பை, அபிவிருத்தியை, வாழ்வாதாரத்தை அதிகாலை நேரம் கிடைக்கச் செய்கிறது என்பதை உணர்த்துகிறது. நாம் இவைகளை எல்லாம் கண்டு கொள்ளாமல் அதிகாலை நேரத்தை ஆழ்ந்த உறக்கத்தின் ஊடாக வழியனுப்பிவிட்டு “நமக்கு நலல நேரமே விடியவில்லை‘ என்று புலம்பிக் கொண்டிருக்கிறோம்.
நபி(ஸல்) அவர்கள் இஷாவிற்கு முன் உறங்குவதையும், இஷாவிற்குப் பின் பேசு வதையும் வெறுப்பவர்களாக இருந்தார்கள். (புகாரி : 568)
அடிமூளையிலுள்ள பீனியல் சுரப்பியில் சுரக்கும் திரவம் மெலடோனின். இது ஆழ்ந்த இரவில் நன்கு சுரக்கும்; உறக்கத்தைத் தூண்டுக; உடல் உறுப்புகளைத் தளர்த்தி, புத்துணர்வூட்டும். இரவிலும் நம் கண்கள் வெளிச்சத்தில் உழன்று கொண்டிருப்பதால் இது சுரப்பதில் தடையேற்பட்டு பல உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும். அல்லாஹ் நமக்குத் தூக்கத்திற்காக ஏற்படுத்திய நேரத்தை விழித்திருப்பதன் மூலம் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறோம். இது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் சூனியம் அல்லாமல் வேறு என்ன? ஆகவே, நாம் இரவின் முன்னேரத்திலேயே தூங்கும் பழக்கத்தைக் கைக் கொள்வோம்.
“ஒரு மனிதர் விடியும் வரை தூங்கிக் கொண்டே இருக்கிறார். தொழுகைக்கு எழுவதில்லை‘ என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் “ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்து விட்டான்‘ என்றார்கள். (புகாரி:1144)
காது வழியே செல்லும் திரவம் உடனடியாக உடல் முழுவதும் பரவி விடும். எலும்பு, விட்டை போன்றவற்றை சாப்பிடும் ஷைத்தானின் துர்நாற்றம் மிகுந்த அசுத்தமான அச்சிறுநீர் நம் உடலில் தேங்க வேண்டுமா? என்பதை நாமே முடிவு செய்வோம்.
ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட நயவஞ்சகர்(முனாஃபிக்)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அவ்விரு தொழுகைகளை (ஜமாஅத்தாக) தொழுவதிலுள்ள நன்மைகளை அறிந்தால் மக்கள் தவழ்ந்தாவது வந்து சேர்ந்து விடுவார்கள். இகாமத் சொல்ல முஅத்தினுக்கு கட்டளையிட்டு, பின் ஒருவரை இமாமாக நின்று தெழ வைக்குமாறு கூறி, யார் தொழுகைக்கு வராமலிருக்கிறார்களோ அவர்களைத் தீயிலிட்டுக் கொளுத்த நான் நினைக்கிறேன்‘ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 657)
நயவஞ்சகர் (முனாஃபிக்) தனம் நம்மிடம் மேலோங்குவது இருக்கவும், நாம் நரகம் செல்வதை சிறிதளவு கூட விரும்பாத நபி(ஸல்) அவர்கள் நம்மை தீயிட்டுக் கொளுத்தும் நிலை ஏற்படாதிருக்கவும் நாம் அதிகாலை எழுத்து தொழுவோம்; திக்ர் செய்வோம். பஜ்ர் தொழுகைக்கு வராமல் நாம் அல்லாஹ் தூங்கச் செய்து விட்டான் என்று சாக்குபோக்குச் சொல்கிறோம். தஹஜ்ஜத் தொழுகைக்கே என்ன நிலை என்பதைப் பாருங்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு இரவு என்ன அலி(ரழி)தினிடமும், பாத்திமா(ரழி) இடமும் வந்தார்கள். “நீங்கள் இருவரும் தொழவில்லையா?’ எனக் கேட்டார்கள். அதற்கு நான் “அல்லாஹ்வின் தூதரே! எங்களின் உயிர்கள் அல்லாஹ்வின் கையில் உள்ளன. அவன் எழுப்பும்போது தானே நாங்கள் தொழமுடியும்‘ என்றேன். அவர்கள் மறு மொழி கூறாது திரும்பும்போது தம் தொடையில் அடித்து, “மனிதனோ அதிகம் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான்‘ (18:54) என்றார்கள். (புகாரி :1127)
ஃபஜ்ர் தொழுகை நமக்குத் தவறிவிட்டதாக நாம் நினைக்கிறோம். அப்படி அல்ல, அல்லாஹ் தம் அருட்கொடைகளைத் தருவதிலிருந்து நம்மைத் தூரமாக்குகிறான் என்பதாக நினைப்போம். ஃபஜ்ர் தொழுகையையும் தவறவிடமாட்டோம். நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகை (வானவர்களின்) வருகைக்குரியதாக இருக்கிறது. (அல்குர்ஆன் 17:78)
இரவு நேர வானவர்களும் பகல் நேர வானவர்களும் நம்மிடம் ஒருவர் பின் ஒருவராக வருவர். பஜ்ர் தொழுகையிலும், அஸர் தொழுகையிலும் இரு சாராரும் சந்திப்பர். பின் நம்முடன் இரவு தங்கியவர்கள் மேலேறிச் செல்வர். அனைத்தையும் அறிந்த அல்லாஹ் “என் அடியார்களை எந்நிலையில் விட்டுவந்தீர்கள்?’ எனக் கேட்பான் “அவர்கள் தொழும் நிலையிலேயே அவர்களிடம் சென்றோம், அவர்கள் தொழும் நிலையிலேயே அவர்களிட மிருந்து வருகிறோம்‘ என்று வானவர்கள் பதிலளிப்பர். (புகாரி: 555)
அல்லாஹ்விடம் வானவர்கள் நம்மைப் பற்றி வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டுமா? தூக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறார்கள் என்று சொல்லவேண்டுமா? “உங்களில் ஒருவர் உறங்கும்போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும்‘ இரவு இன்னும் இருக்கிறது; உறங்கு என்று கூறுகிறான். அவர் எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்ச்சியுடன், மன அமைதியுடன் காலைப் பொழுதை அடைகிறார் இல்லை எனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராக காலைப் பொழுதை அடைகிறார் என நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி : 1142)
“ஃபஜ்ரின் இரு ரக்அத்(சுன்னத்) தொழுகை இந்த உலகையும், அதில் உள்ளவற்றையும் விட சிறந்ததாகும்‘ என நபி (ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்:1314)
“எவர் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதுவிட்டு சூரியன் உதயமாகும் வரை திக்ரில் ஈடுபட்டு பின் இரு ரக்அத் நஃபில் தொழுவாரோ அவருக்கு (முழுமையான) ஹஜ், உம்ராவின் நன்மை கிடைக்கிறது‘ என நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். (திர்மிதீ)
“நாம் தினமும் ஷைத்தானின் பிடியிலிருந்து விலகி, மகிழ்ச்சியாக, அமைதியாக அருள் வளங்கள் பெற்று வாழ, ஹஜ், உம்ரா பலன்களையும் பெற முயற்சிக்க வேண்டாமா?
அதிகாலை நாம் விழிக்கும்போது, அப்போது அதிக அளவில் கிடைக்கும் பிராண வாயுவை (ஓசோன் : 03) சுவாசிக் கும்போது, நுரையீரல் அதிக அளவு ஆக்ஸிஜனை உள் வாங்குகிறது. அதனால், நம் உடல் உறுப்புகள் புத்துணர்ச்சி பெறுவதுடன், பல நோய்கள் நம்மை விட்டு ஓடிவிடுகின்றன.
“அதிகாலை விழிப்பதால் உடல் நலம், மன நலம் கூடும்‘ என்கிறது பல பல்கலைக் கழகங்களின் ஆய்வு.
“முன்னிரவில் தூங்கி, அதிகாலை விழிக்கும் பழக்கம் ஒரு மனிதனை ஆரோக்கியமாக, திறமையாக, புத்திக் கூர்மையாக வைத்திருக்கும்‘ என அமெரிக்க அறிஞர் பெஞ்சமின் ஃப்ராங்களின் கூறினார்.
இனியும் நாம் அதிகாலை நேரத்தை ஆழ்ந்த தூக்கத்தில் கழித்து ஷைத்தானின் நண்பனாக மாறி, அல்லாஹ்வின் அனைத்து அருள்வளங்களையும் இழக்க வேண்டுமா? இல்லை. அல்லாஹ்வின் பாதுகாப்பை, அருள்வளத்தை, மன அமைதியை, மகிழ்ச்சியைப் பெற வேண்டுமா? முடிவு நம் கையில்.
ஆகவே, நாம் அதிகாலை எழுவோம்! இஷா தொழுதுவிட்டு முன்னிரவில் உறங்குவோம்!! அல்ஹம்துலில்லாஹ்.