இரவு உணவு எப்பொழுது? எது?
M. சையது முபாரக், நாகை.
நாம் உட்பட பல உயிரினங்கள் விடிவதற்கு முன் விழித்து, சூரியன் மறைந்தபின் முன்னிரவில் உறங்கும் விதத்தில் அல்லாஹ் வால் படைக்கப்பட்டிருக்கிறோம். அல்லாஹ் சிலவற்றை இரவில் விழித்து பகலில் தூங்கக் கூடியதாக படைத்திருக்கின்றான். நாம் என்று மின் விளக்குகளை கண்டுபிடித்தோமோ அன்றிலிருந்து இயற்கையை வென்றுவிட்டோம் என்ற இறுமாப்புடன், ஆரவாரத்துடன் இரவுத் தூக்கத்தைத் தொலைத்து விட்டோம். அதன் விளைவாக உடல் உபாதைகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.
இரவு உணவு எப்போது?
அபூபக்கர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் உணவு உண்டுவிட்டு இஷா தொழும் வரை அங்கு தங்கி, இரவு அல்லாஹ் நாடிய அளவு கழித்துவிட்டு பின் (வீட்டிற்கு) வருவார்கள். (புகாரி 602, முஸ்லிம் 4179) (மேலும் பார்க்க: புகாரி 5463, 5465, முஸ்லிம் 4180)
நாம் நமது இரவு உணவை மஃரிபிற்கும், இஷாவிற்கும் இடையில் உண்ண வேண்டும். நாம் படுப்பதற்கு முன் அது செரித்துவிடும். படுப்பதற்கு வயிறு பசித்தால் ஏதாவது ஒரு பழம் சாப்பிடலாம். இரவு 10 மணிக்கு, அல்லது அதற்கு முன்பாக படுத்தவுடன் தூங்குவதற்கான ஹார்மோன் சுரந்து ஆழ்ந்த தூக்கம் நமக்கு வசப்படும்.
ஆனால், இரவு தாமதமாக சாப்பிட்டு விட்டுப் படுத்தால் நமது ஹார்மோன் செரிப்பதற்காக சுரப்பதா? தூங்குவதற்காக சுரப்பதா? என்ற இரண்டும் கெட்டான் நிலைக்கு ஆளாகி செரிமானமும் ஆகாது; தூக்கமும் வராது, ஆகவே, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித் தந்த முறையில் நாம் மஃரிபிற்கு பின் சாப்பிடுவோம். இஷாவிற்குப் பின் நன்கு தூங்குவோம்; ஆரோக்கியம் பெறுவோம்.
மஃரிபிலிருந்து இஷாவிற்குள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் (7 to 8p.m.)
1. செரிமாண (ஜீரண) சக்தி மேம்படும்
2. நல்ல (ஆழ்ந்த) தூக்கம்
3. காலையில் எளிதில் மலம் பிரியும்
4. காலையில் பசி எடுக்கும்
5. நார்மல் BP
6. எடை மேலான்மை (சரியான உடல் எடை)
7. வளர்சிதை மாற்றம் அதிகமாக இருக்கும்
8. ஹார்மோன்சுரப்புசமநிலையில்இருக்கும்
9. தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் மெலடோனின் சுரப்பு சீராக இருக்கும்.
10. Blood Sugarநார்மலாகஇருக்கும்
11. மாரடைப்பு, பக்கவாதம் வரும் வாய்ப்பு மிக குறைவு.
12. நெஞ்செரிச்சல் ஏற்படாது.
13. உடல், மனம் ஓய்வெடுத்து காலையில் புத்துணர்வு கிடைக்கும்.
14. ஊட்டச் சத்தை குடல் நன்கு உறிஞ்சும்.
இஷாவிற்கு பின் தாமதமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் (9.00pm.க்கு பின்)
– அரைகுறை செரிமாணம் ஏற்படும்.
– தூக்கமின்மை ஏற்படும்.
– மலச்சிக்கல் ஏற்படும்.
– காலையில் பசி எடுக்காது (வயிறு மந்தம்).
– High B.P. (அதிகம்).
– அதிக எடை ஏற்படும்.
– வளர்சிதை மாற்றம் குறைந்து விடும்.
– ஹார்மோன் சுரப்பு சீர்குலையும்.
– மெலடோனின் சுரப்பு சீர்குலையும்.
தூக்கம்கெடும், புற்று நோய் வர வாய்ப்பு.
– BS அதிகரிக்கும்.
– மாரடைப்பு, பக்கவாதம் வர வாய்ப்பு.
– அமிலம் உணவுக் குழாய்க்கு மேல் ஏறுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படும்.
– உடல் களைத்து, சோம்பல் ஏற்படும்.
– குடல் சரியான முறையில் உறிஞ்சாது.
மக்கள் முன்பு உணவு வீணாகிவிடக் கூடாதே என்பதற்காக சோற்றில் நீரூற்றி அடுத்த நாள் நீச்சோறாக (நீராகாரமாக – பழைய சோறாக) உண்டனர். ஆனால், இன்றோ கார்ப்பரேட் நிறுவனங்களின் கவர்ச்சி விளம்பரங்களில் மதிமயங்கி, அளவிற்கு அதிகமாக உணவுகளை வாங்கி, வீணாக்கி, குப்பைக் கூடைக்குள் வீசுகின்றனர். நான் வாங்குகிறேன்; நான் வீணாக்கு கிறேன்; உனக்கென்ன? என்று கேட்கும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.
வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிக்கமாட்டான். (6:141, 7:31); அவர்கள் ஷைத்தானின் சகோதரர்கள் (17:27) என்பதையும், உலகில் சிலர் உணவின்றி கஷ்டப் படுகிறார்களே, அதுபோல நாளை நமக்கு உணவு கிடைக்காவிடில் நமது நிலை என்ன? என்பதையும் நாம் சிந்திப்பதில்லை.
கார்ப்பரேட்டுகளின் அட்டூழியங்கள்:
ஒன்றுக்கும் உதவாத, உடல் நலத்திற்குத் தீங்கு செய்கின்ற, குமட்டலை ஏற்படுத்துகின்ற, குடலைப் புரட்டும் நாற்றத்தைத் தருகின்ற சிகரெட்டை கார்ப்பரேட் நிறுவனங்கள் காசாக்கியது எப்படி? உற்சாகம் பெற, இளமை ஊஞ்சலாட, ஸ்டைலாக சிகரெட் பிடித்து பைக்கில் சுற்றினால் பெண்கள் பின்னால் தொற்றிக் கொள்வர், இளம் பெண்கள் மத்தியில் ஹீரோவாக, விளையாட்டில் மின்ன என்ற பொய்யான, போலியான விளம்பரங்களை வீசி இளைஞர்களை பிரமை பிடிக்க வைத்து, புகைத்தலை நாகரீகமாக்கினர். இதனால் சிகரெட் வியாபாரம் பிய்த்துக் கொண்டு ஓடியது.
அதைப் போன்ற வியாபார உத்தியைத்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த Fast Food (துரித உணவு)களிலும் செய்கின்றனர். ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படாத, பணம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட இவர்களின் பணப்பசிக்கு ஆராய்ச்சியாளர்களும் துணை போகின்றனர். கண்ணைக் கவரும் நிறத்தை, மூக்கைத் துளைக்கும் வாசனையை, நாக்கை சப்புக் கொட்ட வைக்கும் ருசியைக் கொண்ட உணவுப் பொருட்களை புதிது புதிதாக கண்டுபிடிக்கின்றனர். குழந்தைகளை ஈர்க்கும் கவர்ச்சியான, வண்ண மயமான பாக்கெட்டுகளை வடிவமைக்கின்றனர். அந்த ஈர்ப்பில் மட்டுமே கவனம் செலுத்தும் வகையில் விளம்பரங்களை வெளியிடுகின்றனர். ஏழை, நடுத்தர மக்கள் கடைகளில் வைத்திருக்கும் பிளாஸ்டிக் (கேரி) பைகளை பறிமுதல் செய்வதுடன் அபராதமும் விதிக்கும் அரசு விதவிதமாக, கண்களைக் கவரும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் உணவுகளை அடைத்து விற்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதுடன் கடன் களையும் தள்ளுபடி செய்கிறது.
2 நிமிடமா? 2 நாளா?
TV சீரியல் பார்க்க, மொபைலில் அணி வகுக்கும் புடவை, ஆபரணங்களை அலச இடையூறு தராத வகையில் உணவை விரைவாக, சுவையாக சமைக்க நினைக்கும் இல்லத்தரசிகளின் ஆர்வத்தை 2 நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸ் தீர்த்தது. இதனால் தாய்க்கு உற்சாகம்: குழந்தைக்கு கொண்டாட்டம்.
2 நிமிடத்தில் நூடுல்ஸ் தயார் என்று கூறும் கார்ப்பரேட் நிறுவனம் அது செரிக்க 2 நாள் ஆகும் என்பதை, ஆரோக்கியத்திற்குக் கேடு என்பதைச் சொல்லுமா? மக்களின் ஆரோக்கியம் அவர்கள் நோக்கம் அல்ல; நம் உடல் சீர்கெட்டால்தான் அவர்களுக்கு கொண்டாட்டம். அதன்மூலம் தானே நமது பணத்தை மருத்துவமனை மூலமாக சட்டப்படி கொள்ளையடிக்க முடியும்.
நூடுல்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளாமலும் வழவழப்பாகவும் இருக்க “ஸ்டைரோஃபோம்‘ என்ற மெழுகு சேர்க்கப்படுகிறது. இது நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேப்பர் கப்பின் உட்புறம் பூசப்பட்டிருக்கும் மெழுகேதான். இது செரிக்காமல் வயிற்றுப் பகுதியில் ஒட்டுவதால் உணவுக் குழாயிலோ, இரைப்பையிலோ, குடலிலோ பாதிப்பை ஏற்படுத்துகிறது. தினம் மதிய உணவிற்குத் தொட்டுக் கொள்ள பாக்கெட் சிப்ஸ்(ப்ராண்டட் நேம்) வாங்கிய 9 மற்றும் 11 வயதுள்ள இரு மாணவர்களுக்கு அபன்டிக்ஸ்(குடல்வால்) ஆபரேசன் செய்யப்பட்டதை நான் அறிவேன்.
பேக்கரி உணவுகள், குக்கீஸ், கிராக் கர்ஸ், பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளில் நார்ச்சத்து இல்லை; புரதச் சத்தைத் தேடவேண்டும்; ஊட்டச்சத்துகள் மிக குறைவு. மாவுப் பொருள் (கார்போஹைட்ரேட்) அதிகம். உப்பு, மசாலா அதிகம்; கலோரி, ஊடு கொழுப்பு அதிகம்; பதப்படுத்த, கண்களைக் கவர சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள் அதிகம். இவைகளால் செரியாமை, மலச்சிக்கல், அதிக எடை, ஊளை சதை, சுகர், இரத்தக் கொதிப்பு, நுரையீரல், கல்லீரல், சிறுநீரகப் பிரச்சனை, மாரடைப்பு, பக்கவாதம், புற்று நோய்கள் வரும். துரித உணவுடன் வாங்கப்படும் பெப்ஸி, கோக் போன்ற குளிர்பானங்கள் செரிமானத்தை தரும் என்கின்றனர். ஆனால், அது செரிமானத் தருவதில்லை; இதிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடு எழும்புகளிலுள்ள கால்சியத்தை உறிஞ்சி எலும்புகளை பலவீனப்படுத்துகிறது. இதில் சேர்க்கப்படும் வேதிப் பொருள்களின் தீமை வேறு இருக்கிறது.
கார்ப்பரேட்டுகளின் புரட்டுகள் :
நம் நாட்டு உணவுகள் தரமற்றவை; பூச்சி மருந்தின் விசம் கலந்தவை; வெளிநாட்டு உணவுகள் தரமானவை என்ற போலி பிம்பத்தை மக்களிடம் திணித்தது கார்ப்பரேட் நிறுவனங்கள். உடலுக்கு நலனைத் தரக்கூடிய தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் தீங்கானது என்றும், உடலுக்கு தீங்கான சுத்தி கரிக்கப்பட்ட பாமாயில், சூரியகாந்தி எண் ணெய் நல்லது என்றும் கூறி பாமாயிலை சந்தைப்படுத்தி கொள்ளை லாபம் கண்டது கார்ப்பரேட் நிறுவனங்கள். இது உடலுக்கு கெடுதலைத் தந்ததுடன் நம் நாட்டு அந்நிய செலவாணியிலும், பெரிய இழப்பை ஏற்படுத்துகிறது.
கோழி என்றால் ஓடித்திரிய வேண்டும், குஞ்சுகளுக்கு உணவைத் தேடிதர வேண்டும், குஞ்சுகளை அரவணைக்க வேண்டும், கூண்டில் அடைக்கப்பட்டதை ஓடி ஆட முடியாததை சதைப்பற்றிற்காக ஹார்மோன் செலுத்தப்பட்டதை (ப்ராய்லர்) கோழி என்று கார்ப்பரேட் நிறுவனங்கள் நம் தலையில் கட்டுவதை நாம் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்கிறோம். ஊளைச் சதை, சிறு வயதிலேயே சிறுமிகள் பூப்படைதல் மற்றும் பல நோய்களை இது தருகிறது என்பதை நாம் அறிவோம். ஆனால் அதன் ருசியில் மயங்கி, நாவில் நீருற வயிற்றில் தள்ளிக்கொண்டிருக்கிறோம்.
பாரம்பரிய உணவுகள் :
நம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தையும் தரக்கூடிய உணவுப் பொருள்கள் நம் நாட்டிலும் இருக்கிறது; துரித உணவாக அவல், பொறி, பானங்களாக இளநீர், பதநீர், பழரசங்கள், மோர், நுங்கு, சமைக்காமல் சாப்பிடும் உணவுகள் சமைத்து சாப்பிடும் உணவுகள், சைவ, அசைவ உணவுகள் என்று பல இல்லத்தரசிகள் மன ஈடுபாட்டுடன் சில மணி நேரங் களை சமையலறையில் செலவளித்தாலே போதும் சுவையான உணவை குடும்பத்திற்குக் கொடுத்திட முடியும்; ஆரோக்கியத்தை பெருக்கிட முடியும்.
பசியும் தூக்கமும் :
நாம் நமது உணவு முறையை மாற்றாத வரை, அந்நிய உணவுகளின் பக்க விளைவை உணராதவரை, மருந்து, மாத்திரைக்காக, மருத்துவமனைக்காக பல இலட்ச ரூபாய்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க வேண்டியிருக்கும். ருசியை விட உயிரும் ஆரோக்கியமும் முக்கியம். அதனால் பசியும் தூக்கமும் நமக்கு தேவை. இனியாவது அதில் நாம் செய்யும் தவறை திருத்திக் கொள்வோம்.
“மனிதர்களில் அதிகமானோர் இரு அருட்செல்வங்கள் விசயத்தில் இழப்புக் குள்ளாகிவிடு கின்றனர். அது 1.ஆரோக்கியம், 2.ஓய்வு” என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (புகாரி: 6412)
“பசித்து புசி‘ என்பது முதுமொழி. நாம் மஃரிபிற்கு பின் இரவு உணவு சாப்பிட்டு இஷா விற்கு பின் தூங்கி அதிகாலையில் எழும்போது நமக்கு புத்துணர்ச்சி ஏற்படும். முன்னிரவில் சாப்பிடுவதால் காலையில் பசி எடுக்கும். உறுப்புகள் நன்கு செயல்பட்டு ஆரோக்கியமான வாழ்வு அமையும். நமது வேலைகளை, அமல்களை மன மகிழ்வுடன் செய்யமுடியும்.
ஆகவே, மஃரிபிற்கு பின் புசிப்போம்! இஷாவிற்கு பின் ஓய்வு எடுத்து தூங்குவோம்!! விடியலுக்கு முன் எழுவோம்!!! அல்லாஹ்வின் அளப்பெரும் நன்மைகளை அடைவோம்!!!