உறவுமுறைகளைப் பேணுவதன் அவசியமும் – அதனைப் பேணுவதால் ஏற்படும் சிறப்புகளும்—
அதனை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்….
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
எனது தந்தை அபூதாலிப் இறந்தபோது நான் நபி(ஸல்)அவர்களிடம் நபியே! வயது முதிர்ந்தவரும் முஸ்லிம் அல்லாதவருமான உங்களுடைய பெரிய தந்தையார் அபூ தாலிப் இறந்துவிட்டார் என்று கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் கள், நீர் சென்று உம்முடைய தந்தையை அடக்கம் (மட்டும்) செய்துவிட்டுப் பின்னர் வேறெந்த (விதமான) வேலையிலும் ஈடுபடாமல் அப்படியே என்னிடம் வாரும் என்று கூறினார்கள்.
அவ்வாறே நான் சென்று உனது தந்தையை அடக்கம் செய்து விட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். குளித்துவிட்டு வருமாறு நபியவர்கள் எனக்குக் கட்டளையிட நான் அவ்வாறே குளித்தேன். பின்னர் நபியவர்கள் எனக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அறிவிப்பவர்: அலிபின் அபீதாலிப்(ரழி) அவர்கள் (அபூதாவூத்,நஸயீ,முஸ்னதுஅஹ்மத், தஃப்ஸீர்இப்னு கஸீர்: 4:418,419)
யூதர் ஒருவர் இறந்து போனார் அவருக்கு முஸ்லிமான புதல்வர் ஒருவர் இருந்தார். அவர் தமது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளவில்லை. இந்தத் தகவலை இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடம் கூறப்பட்டது. அப்போது இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அந்த முஸ்லிமான மகன் தமது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று அவரை முறைப்படி அடக்கம் செய்திருக்க வேண்டும். முன்னதாக அவருடைய தந்தை உயிர் வாழ்ந்து கொண்டிருந்தபோது அவர் தமது தந்தை திருந்த வேண்டும் என்று பிரார்த்தனை புரிந்திருக்க வேண்டும். (ஒருவேளை) அவர் (திருந்தாமலேயே) இறந்து போனால் (தான்) அதன் பின்னர் அவருக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்று அவர் இருந்து விடலாம் என்று கூறினார்கள்.
பின்னர் இதற்கு சான்றாக, இப்ராஹீம்(அலை) தமது தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல் லாம், அவர் தமது தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவேயன்றி வேறில்லை, மெய்யாகவே, அவர் (தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்பது தெளிவாகியதும் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார். நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடைய வராகவும் இரக்கமுள்ள வராகவும் இருந் தார். (அல்குர்ஆன் 9:114) எனும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அறிவிப்பவர் : சயீத் பின் ஜுபைர்(ரஹ்), தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர்: 4:418-419)
பெற்றோருக்கு நன்மை செய்தவரின் பிரார்த்தனை ஏற்கப்படுவது:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்களில்) மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தபோது (காற்றுடன் சேர்ந்த திடீரென்று) மழை பிடித்துக் கொண்டது. எனவே, அவர்கள் (ஒதுங்குவதற்காக) ஒரு மலைக் குகையை நோக்கிப் போனார்கள். (அவர்கள் உள்ளே நுழைந்த) உடனே மலையிலிருந்து உருண்டு வந்த ஒரு பாறை அவர்களின் குகை வாசலை அடைத்துக் கொண்டது. (வெளியேற முடியாமல் திணறிய) அவர்கள் (மூவரும்) அப்போது தமக்குள், “நாம் (வேறெவருடைய திருப்திக்காகவுமின்றி) அல்லாஹ்வுக்காக (என்று தூய்மையான முறையில்) செய்த நற்செயல்களை நினைத்துப் பார்த்து, அவற்றை முன் வைத்து அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அவன் இ(ப்பாறை)தனை (நம்மை விட்டு) அகற்றிவிடக் கூடும் என்று பேசிக் கொண்டனர். எனவே,
அவர்களில் ஒருவர் இவ்விதம் (இறைவனிடம்) வேண்டினார். இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய தாய் தந்தையர் இருந்தனர். எனக்குச் சிறு குழந்தைகளும் உண்டு, நான் இவர்களைப் பராமரிப்பதற்காக ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். மாலையில் அவர்களிடம் நான் திரும்பி வந்த பின் ஆட்டின் பாலைக் கறந்து கொண்டு வந்து என் குழந்தைகளுக்கு ஊட்டுவதற்கு முன்பாக என் தாய் தந்தையருக்கு முதலில் ஊட்டுவேன். (ஒரு நாள்) இலை தழைகளைத் தேடியபடி வெகுதூரம் சென்றுவிட்டேன். அதனால் அந்திப் பொழுதிலேயே (வீட்டுக்கு) வரமுடிந்தது. அப்போது (என் தாய் தந்தை) இருவரும் உறங்கிவிட்டிருக்கக் கண்டேன்.
உடனே எப்போதும் போன்று பால் கறந்து, பால் செம்புடன் வந்தேன். பெற்றோரைத் தூக்கத்திலிருந்து எழுப்பிட மனமில்லாமல் அவர்கள் இருவருடைய தலைமாட்டில் நின்றுகொண்டேன். அவர்கள் இ/ருவருக்கும் முன் குழந்தைகளுக்கு முதலில் ஊட்டுவதையும் நான் விரும்பவில்லை. எனது குழந்தைகளோ என்னுடைய காலருகில் (பசியால்) கதறிக் கொண்டிருந்தனர். இதே நிலையில் நானும் அவர்களும் இருக்க வைகறை வந்துவிட்டது. (இறைவா!) நான் இச்செயலை உன்னுடைய திருப்தியை நாடியே செய்தேன் என்று நீ கருதியிருந்தால் எங்களுக்கு இந்தப் பாறையைச் சற்றே நகர்த்திடுவாயாக! என்று பிரார்த்தனை செய்தார். அவ்வாறே அல்லாஹ் அப்பாறையை அவர்களை விட்டு (முழுமையாக) அகற்றிவிட்டான். (புகாரி: 5974, 2215, 2272, 2275, 2333, 3465)
பெற்றோராக இருந்தாலும் இணை வைப்புக்கு இணங்காதே:
எதைப் பற்றிய அறிவு உனக்கு இல்லையோ அதை எனக்கு இணையாக ஆக்குமாறு அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்கு நீ இணங்கவேண்டாம் என அல்லாஹ் அறிவுறுத்துகின்றான். (31:15, 29:8) அதாவது; பெற்றோர் தங்களின் (இணை வைப்பு) மார்க்கத்தில் தங்களைப் பின்பற்ற வேண்டுமென என்னதான் பேராவல் கொண்டாலும் அவர்களின் விருப்பத்திற்கு நீ இணங்கிவிட வேண்டாம்; அதே நேரத்தில் அவர்களின் இந்நிலையில் இம்மையில் அவர்களிடம் நீ நல்ல முறையில் நடந்து கொள்வதை அதாவது அவர் களுக்கு உதவி செய்வதை தடுத்துவிடவும் வேண்டாம். (தஃப்சீர் இப்னு கஸீர்: 7:177-182)
தாயன்பா? இறையன்பா?
சஅத் பின் மாலிக்(ரழி) அவர்கள் கூறியதாவது: இந்த (31:15)ஆவது வசனம் எனது தொடர்பாகவே அருளப் பெற்றது. நான் எனது தாயாருக்கு நன்மை செய்யும் மனிதனாக இருந்துவந்தேன். நான் இஸ்லாத்தை ஏற்றபோது எனது தாயார்; “சஅதே! உம்மிடம் நான் புதிதாகக் காணும் இந்த வழிமுறை என்ன?” கண்டிப்பாக நீ இந்த மார்க்கத்தைக் கைவிடவேண்டும் இல்லாவிட்டால் நான் சாகும்வரை எதையும் உண்ணவோ பருகவோ மாட்டேன் அப்போது என்னால் நீ குறை கூறப்படுவாய் “தாயைக் கொன்றவனே! எனத் தூற்றப்படுவாய்” என் மிரட்டினார்.
இதைக் கேட்ட நான் என் (அருமைத்) தாயே! நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டாம். நிச்சயமாக நான் எதற்காகவும் எனது இந்த மார்க்கத்தைக் கைவிடமாட்டேன் என்று கூறினேன். எனது தாயார் ஒருநாள் முழுக்க சாப்பிடாமல் அப்படியே இருந்தார். அதனால் மறுநாள் காலை களைத்துப் போயிருந்தார். இரண்டாம் நாளும் (எதையும்) சாப்பிடவில்லை. மூன்றாம் நாள் காலையில் (முந்தைய நாளைவிட)களைத்துப் போயிருந்தார். பின்னர் மூன்றாம் நாளும் எதையும் உண்ணாமல் இருக்க நான்காம் நாள் காலை கடுமையாகச் சோர்ந்து போனார். இதைக் கண்ட நான்;
“எனது அருமைத் தாயே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களுக்கு நூறு உயிர்கள் இருந்து அவை ஒவ்வொன்றாகப் பிரிந்தாலும் எதற்காகவும் எனது இந்த மார்க்கத்தை நான் கைவிடமாட்டேன். இது உங்களுக்குத் தெரியவே செய்யும். எனவே உங்களுக்கு விருப்ப மிருந்தால் உண்ணுங்கள். இல்லையானால் உண்ணாமல் இருங்கள்” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டேன். அதன் பின்னர் எனது தாயார் சாப்பிடலானார்கள். (முஸ்லிம் : 4789,4790, ஜாமிஉத் திர்மிதி : 3113, முஸ்னது அஹ்மத், கிதாபுல் இஷ்ரா லித்தப்ரானீ, தஃப்சீர் இப்னு கஸீர்: 7:177-182, 7:8-10)
பெற்றோர் உலகை விட்டு மறைந்த பின்னரும்:
மாலிக் பின் ரபீஆ(ரழி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் அன்சாரிகளில் (பனூ சலிமா கூட்டத்தாரில்) ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது பெற்றோர் இறந்த பிறகு அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய நன்மை ஏதேனும் எஞ்சியுள்ளதா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஆம்! நான்கு விசயங்கள் உள்ளன.
1. அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வதும் பாவமன்னிப்புக் கோருவதும்,
2. அவ்விருவரும் செய்த வாக்குறுதிகளை மதித்து நடைமுறைப்படுத்துவது,
3. அவர்களின் நண்பர்களை மதிப்பது, 4.அவர்களின் வழியாக மட்டுமே உனக்குக் கிடைத்துள்ள உறவுகளை மதித்து வாழ்வது. இவைதான் அவர்களின் மரணத்துக்குப் பின்னர் நீர் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் எஞ்சியவையாகும் என்று கூறினார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா, தஃப்சீர் இப்னு கஸீர்: 5:222-226) மேலும்,
முதலில் தாய், அடுத்து தந்தை, அடுத்து சகோதரி, அடுத்து சகோதரன்…
(நபியே!) அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். தாம் “எதை (யாருக்குச்) செலவு செய்ய வேண்டும்?” என்று; அதற்கு நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை (முறையே) தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், (கொடுங்கள்);
மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.” (அல்குர்ஆன் 2:215) இது குறித்து;
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உதவும் கையே உயர்ந்தது. நீ யாருக்கு (முதலில்) செலவழித்தாக வேண்டுமோ அவர்களிலிருந்தே (உனது உதவியைத்) தொடங்கு. அவர்கள் முறையே; உனது தாய், உனது தந்தை, உனது சகோதரி, உனது சகோதரன், அதன் பின்னர், நெருங்கிய உறவினர்கள் ஆகியோர் ஆவர் என்று, அறிவிப்பவர்: தாரிக் அல்முஹாரிபீ (ரழி), அபூரிம்ஸா(ரழி), நஸயீ, முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்: 1:675,676) மேலும், முந்தைய வசனங்களில் பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு கட்டளையிட்ட உயர்ந்தோன் அல்லாஹ் அதைத் தொடர்ந்து;
(நபியே!) நெருங்கிய உறவுக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், அவரவர்களின் உரிமைகளை வழங்குவீராக. அறவே வீண் விரயம் செய்யாதீர். (17:26) என்று குறிப்பிடுகின்றான்.
நான்காவது முறையாகத்தான் தந்தை :
அபூஹுரைரா(ரழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மக்களிலேயே மிகவும் தகுதியான வர் யார்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “உனது தாய்” என்றார்கள். அவர் “பிறகு யார்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “உனது தாய்” என்றார்கள். அவர் “பிறகு யார்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “உனது தாய்” என்றார்கள். அவர் (நான்காவது முறையாக) “பிறகு யார்?” என்று கேட்டதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “உனது தந்தை” என்றார்கள். (முஸ்லிம்: 4979,4980,4982, திர்மிதி, அபூதாவூத், முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்: 5:228-231)