எப்படி முடியும்?
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
உலக அளவிலும் சரி, இந்தியாவிலும் சரி, முஸ்லிம்கள் சோதனையான கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்கள் மீது அமெரிக்கா, சியோனிசம் (யூதர்கள்) ஏகாதிபத்தியவாதிகள் வெறுப்பை உமிழ்கிறார்கள். அதுபோல் இந்தியாவில் வலதுசாரிகள், வகுப்புவாதிகள், முஸ்லிம்கள் மீது பன்முகத் தாக்குதல் நடத்துகின்றனர்.
மேலும் முஸ்லிம்களில் உள்ள மிகச் சிறிய தீவிரவாத சிந்தனையாளர்களின் நடவடிக்கையின் காரணமாகவும் முஸ்லிம்கள் துன்பத்தையும், துயரத்தையும் அனுபவிக்கின்றார்கள். இறைவன் தன் வழிகாட்டும் நூலில் கூறிய கீழ்கண்ட வசனம் இந்த சூழ்நிலையில் மிகவும் பொருத்தமாக உள்ளது.
“நீங்கள் மனந்தளர்ந்து விடாதீர்கள், கவலையும் கொள்ளாதீர்கள், நீங்கள் ஏக இறை நம்பிக்கையுடையோராயின் நீங்களே மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139)
இறைவாக்கு ஒருபோதும் பொய்யாகாது. நாம் (முஸ்லிம்கள்) மேலோங்க முடியுமா? நிச்சயமாக முடியும். ஆனால் எப்படி முடியும்?
“எந்த சூழ்நிலையிலும், உணர்ச்சிவசப்படாமல், அச்சப்படாமல், நம்பிக்கை இழக்காமல், தோல்வியால் துவண்டு விடாமல்” ஏக இறைவனின் வழிகாட்டி நூலை (அல்குர்ஆனை) பின்பற்றி பிளவுபடாமல் ஒன்றாக முஸ்லிம் சமுதாயம் செயல்பட்டால் நிலைமைகள் மாறும்.
“பூனைக்கு யார் மணிக்கட்டுவது?” காலம் காலமாக இதையே கேட்டும், சொல்லியும் காலத்தை கடத்திக் கொண்டிருக்கின்றார்கள் பலரும். பூனைக்கு மணிக்கட்டுவது நமது வேலை அல்ல; பூனையாக இருந்தாலும் சரி, புலியாக இருந்தாலும் சரி. நம்மால் அடக்க முடியும்.
நாம் நான்காக இல்லாமல் ஒன்றாக ஆகமுடியும். அதாவது குர்ஆன் சுன்னா மட்டுமே போதும் என்று பழகிவிட்டால், பண்பட்டால் பிரிவுபடாத சமுதாயமாக வாழமுடியும்.
உலக முஸ்லிம்களில் சுமார் 80 சதவீதத்தினர் முஸ்லிம் நாடுகளில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மீதமுள்ள 20 சதவீத முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாத நாடுகளில் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். இதில் நமது இந்திய நாட்டில் மட்டும் 20 கோடிக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இது உலக அளவில் முஸ்லிம் நாடாக இல்லாத நாடுகளில் நாம் இரண்டாவது உள்ளோம்.
பல்வேறான சமூகத்திற்கு மத்தியில் முஸ்லிம்கள் வாழ்வது பல சவால்கள் நிறைந்துள்ளன. அதாவது மார்க்கத்தை விட்டுக் கொடுக்காமலும், அரசியல் சாசனம் நமக்கு வழங்கிய உரிமைகளை இழக்காமலும் வாழ்வது எப்படி?
சண்டையும் வேண்டாம்! சரணடையவும் வேண்டாம்!! என்பதை உலக விசயங்களிலும், மார்க்க விசயங்களில் நாம் கடைபிடிக்க வேண்டும்.
நாம் சந்திக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் மற்றவர்கள் தாம் காரணம் என்பது தவறானது. நமது தோல்விக்கு நம்முடையே உள்ள பிரிவுகள் தாம் முக்கிய காரணம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் காலத்திலும், பல கலிஃபாக்களின் ஆட்சி காலத்திலும் பல்வேறு சமூகத்துடன் இணக்கமாக வாழ்ந்த வரலாறு நமக்கு உண்டு. (அதாவது முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தபோது) அவ்வாறு இருக்க ஏன் நாம் மீண்டும் நமக்குள் ஒற்றுமையாக பிரிவு இல்லாமல் வாழ முடியாதா? முடியும்!
உதாரணமாக : இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தையான அபூதாலி பின் ஆதரவுடன் மக்காவில் 13 ஆண்டுகள் (நபி ஆன பிறகும்) வாழ்ந்தார்கள். அபூ தாலிப் அவர்கள் முஸ்லிம் அல்ல, இஸ்லாத்தை இறப்பு வரை ஏற்றுக்கொண்ட வரும் அல்ல. (அல்லாஹ் நாடவில்லை) ஆனால் நபி(ஸல்) அவர்கள் அபூதாலிப் அவர்களின் ஆதரவை பெறமாட்டேன் என கூறவில்லை. மாறாக மதீனாவிற்கு செல்லும் வரை அவர்கள் ஆதரவுடனே வாழ்ந்தார்கள்.
மற்றொரு உதாரணம் : மக்காவில் நபி தோழர்கள் (சஹாபாக்கள்) பல பெரும் துன்பங்களை அனுபவித்த போது சில முஸ்லிம்களை நபி(ஸல்) அவர்கள் அபிசீனியாவிற்கு செல்லுமாறு கூறினார்கள்.
இத்தனைக்கும் அபிசீனியாவில் ஆட்சி புரிந்து வந்தது நஜ்ஜாஸி என்னும் கிறிஸ்த்தவ மன்னர். இன்னும் வரலாற்றில் பல சம்பவங்கள் இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றுக் கொள்ளாதவர் களுடன் நெருக்கமாகவும், இணக்கமாகவும் வாழ்ந்த வரலாறுகள் உண்டு.
அவ்வாறு இருக்க ஏக இறைவனையும், இறைத் தூதரையும் ஏற்றுக்கொண்ட நான்கு மத்ஹபுகாரர்களும் ஒற்றுமையாக வாழ முடியாதா? முடியும்!
மக்கள் தயாராக உள்ளனர். ஆனால் இதற்கு சில இடைத்தரகர்கள் (மத்ஹபை ஆதரிக்க கூடியவர்கள்) தடையாக உள்ளனர். இஸ்லாம் மீதும் முஸ்லிம்கள் மீதும் அவதூறு பரப்பும்பொழுது ஆத்திரப்படும் முஸ்லிம் சமூகம் இந்த பிரிவை ஆதரிப்பவர்களை எதிர்க்க எந்த முயற்சியும் தொடராக செய்யவில்லை. அவ்வப்போது சிலர் எதிர்ப்பை காட்டுவார்கள். பின்பு அடங்கி போய்விடுகிறார்கள்.
எது நல்லது?
எது பாதுகாப்பானது?
எது வரம்பு மீறாதது?
என்று கூட தெரியவில்லை. நிச்சயமாக ஒற்றுமைதான் நம்மை மேலோங்கச் செய்யும்.
நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் 5:2)
எனவே இறைவாக்குப்படி சமுதாய ஒற்றுமை, சமுதாய முன்னேற்றம், வளர்ச்சி, பாதுகாப்பு, அமைதிக்காக பாடுபடுவதும் மார்க்க கடமையாகும்.
ஒற்றுமையில் முயற்சி செய்யாமல், கவலை கொள்ளாமல் மத்ஹபு பிரச்சனைகளில் மட்டுமே பேசுவதும், எழுதுவதும் சுயநலமாகும். (ஷைத்தானின் செயலாகும்) மற்றும் இஸ்லாமிய கோட்பாட்டுக்கு எதிரானதும் கூட.
ஏன் என்றால்,
“நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயமாக நீங்கள் (நாம்) இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெறுவார்கள்” என்று இறைவன் கூறுகிறான். (அல்குர்ஆன் 3:104)
“மேலும், முன்பு தெளிவான சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டுப் பிரிந்து விட்டோரைப் போல் நீங்களும் ஆகாதீர்கள். அவ்வாறு பிரிவினையை ஆதரிப்பவர்களுக்கு கடும் வேதனை உண்டு‘’ (அல்குர்ஆன் 3:105)
இந்த (ஒற்றுமை) முயற்சிகள் மேற்கொள்ளும்போது பல சவால்களை நாம் சந்தித்தே ஆகவேண்டும். ஏன் என்றால் எந்தவொரு இறை நம்பிக்கையாளர்களும் சோதனையை சந்திக்காமல் சுவனம் செல்ல முடியாது. (பார்க்க வசனம் 2:214)
உறுதியான, தெளிவான இறை நம்பிக்கை (ஈமான்) இருக்கின்ற நிலையில் எந்த நெருக்கடிகளையும் நம்மால் சமாளிக்க முடியும்.
ஒரு செயல் நன்மை என்று உணர்ந்தால் அதை செய்ய நாமே முதலில் முன்வர வேண்டும் பின்பு பலரும் முன் வருவார்கள்.
காலம் கடந்துவிட்டது, கையை மீறிப் போய் விட்டது என சாக்குபோக்கு சொல்லாமல் இன்றே முயல்வோம். இறைவன் துணை புரிவான்.
சிலர் ஹனஃபியாக பிறந்து வளர்ந்ததால் எந்த பெருமையும் இல்லை, மற்றவர்கள் வேறு மத்ஹபுகளில் பிறந்தும், வளர்ந்தும் வந்தார்கள் என்பதில் எந்த இழிவும் இல்லை. நாம் எந்த முயற்சியும் செய்யாமல் நம்மை முஸ்லிமாக இறைவன் பிறக்கவும், வளரவும் செய்தான். இதில் ஆணவம் கொள்வதற்கு எதுவும் இல்லை.
சில விசயங்களிலும் வழிகாட்டியாக இருக்கும் உலக கல்வியுடன் கூடிய குர்ஆன் சுன்னா கல்வி முறையே அனைவருக்கும் பொதுவான, இலகுவானதான பாடப் பிரிவுகளே அனைத்து அரபி கல்லூரிகளிலும் பாடமாக இருக்கவேண்டும்.
மஸாயில்கள் மார்க்கமாக ஒருபோதும் ஆகமுடியாது. மஸாயில்கள் மார்க்கமானதால் தான் (மத்ஹபு நூல்கள்) இந்த மோசமான பிரிவுக்கே காரணம்.
முஸ்லிம் அறிஞர்கள் மஸாயில்களைப் பற்றியே பேசுவதிலும், எழுதுவதிலும், ஆதரிப்பதிலும், தர்க்கிப்பதிலும் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.
இது இஸ்லாமிய கல்வி முறைக்கு மாற்றமான ஜாஹிலியாத்(அறியாமை கால) செயலாகும். அதாவது மஸாயில் வெறி, இயக்க வெறி, மொழி வெறி, கட்சி வெறி ஆகியவை அனைத்தும் இஸ்லாத்தையும், முஸ்லிம்களின் ஒற்றுமையை குழைக்கும் அறியாமைக்கால கோட்பாடுகள் ஆகும்.
உலகில் தோன்றிய எல்லா மதங்களும், சித்தாந்தங்களும், கொள்கைகளும் விமர்சனத்திற்கும், தாக்குதலுக்கும் உள்ளாகாமல் இருந்ததில்லை. அதுபோல மத்ஹபு கொள்கைகளும் தாக்குதலுக்கு உள்ளாவதில் வியப்பு எதுவும் இல்லை.
இதுவரை உலக வரலாற்றில் மத்ஹபு நூலை படித்ததால் இஸ்லாம் மார்க்கத்தை தழுவினேன் என்று ஒரே ஒரு நபரை அடையாளம் காட்டமுடியுமா?
இஸ்லாத்தை தமது வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொண்ட பல அறிஞர்கள் முதல் பாமரர்கள் வரை குர்ஆனையும், நபி(ஸல்) அவர்கள் வாழ்க்கை வரலாற்றையும் படித்தும், கேள்விப் பட்டும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிமாக ஆனார்கள் என்பதே வரலாறு.
இஸ்லாம் மீதும், முஸ்லிம்கள் மீதும் அக்கறை இருப்பவர்களிடம் பிரிவு சிந்தனைகள் தோன்றாது, இதனை களைவது தனி மனிதனால் முடியாது என்பது எனக்கு தெரியும், எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் ஒற்றுமை ஏற்பட்டால்தான் இறைவாக்குப்படி (3:139) நாம் மேலோங்குவோம் என்பது உண்மை. முயற்சி செய்வோம். இறைவன் நாடினால் கண்டிப்பாக நடக்கும்.