தலையங்கம் :
வளம் நாடு!-வய(ல்)நாடு! வாழ்வும்!-வீழ்வும்!
சென்ற ஜூலை 31ம் தேதி வயநாட்டில் நடந்த நிலச்சரிவு. ஆரம்பத்தில் BREAKING NEWS ஆக இருந்தது. பிறகு அதுவே TRENDING NEWS ஆக ஆனது. இப்போது அது OLD NEWS ஆக மாறிவிட்டது.
அதாவது சுமார் 1990ஆம் ஆண்டு வரை எதையும் இலகுவாக கடந்து போவது என்பது மனித இயல்பில் அரிதாக இருந்தது. ஆனால் சுமார் 2000மாவது ஆண்டுக்கு பிறகு டி.வி. மற்றும் அனைத்து வகையான ஊடகங்களின் (MEDIA) வளர்ச்சியால் எல்லாவற்றையும் கடந்துபோவது என்பது இயல்பாகிவிட்டது.
ஏனென்றால் மீடியாகாரர்களுக்கு அடுத்து அடுத்து புது செய்தி தேவை. மனிதர்களில் பெரும்பாலோர் மீடியாவோடு ஒன்றி விட் டார்கள்.
வயநாட்டில் நடந்த நிலச்சரிவுக்கு காரணம் என்ன?இறைவனால் நடந்த நிகழ்வா? இயற்கை யால் நடந்த விளைவா?
வயநாட்டில் வழக்கத்திற்கு மாற்றமாக ஜூலை 29, 30 தேதியில் சுமார் 10 சதவீதம் மழை கூடுதலாக பெய்து நிலச்சரிவு ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கான உயிர்கள் மண்ணோடு மண்ணாக புதைத்து விட்டது. அது மட்டுமல்ல முண்டகை, சூரல் என இரண்டு கிராமங்களும் மண்ணோடு புதைந்துவிட்டது. மேலும் மலையின் சில பகுதியே மறைந்து போய்விட்டது. இது கேரளா வரலாற்றில் நடந்த மிக மோசமான நிகழ்வு. இயற்கையால் நடந்து விளைவு என்றால் அதற்கு காரணம் :
சுமார் 1950 ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை 62 சதவீதம் வனப்பரப்பு (காடுகள்) அழிக்கப்பட்டு அங்கு சுமார் 1800க்கு மேற்பட்ட தேயிலை தோட்டங்களாக மாற்றப்பட்டன.
இதன் விளைவால் 2012ஆம் ஆண்டே வயநாடு பாதிக்கப்பட்டது. ஆனாலும் தேயிலை தோட்டத்தின் விரிவாக்கம் தொடர்ந்து கொண்டே தான் இருந்தன. மேலும் சில சுரங்க பணிகளையும் கேரளா அரசு மேற்கொண்டது. இதன் விளைவாகத்தான் இந்த நிலச்சரிவு நிகழ்ந்தது என அரசும், அரசு மூலம் மீடியாவும் கூறுகின்றன.
இறைவனால் நடந்த நிகழ்வு என்றால் அதற்கு காரணம் என்ன?
பொதுவாக புயல், மழை வெள்ளம், பூகம்பம் போன்ற பெரும் துன்பங்கள் நேரும்போது அந்த துன்பங்களில் இறைவனின் கோபத்திற்கு ஆளானவர்கள் மட்டுமின்றி நல்லவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
அல்லாஹ்வின் தண்டனை வரும்போது கெட்டவர்கள் மட்டும்தான் தண்டிக்கப்படுவார்கள். நல்லவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்றும் இறைவசனம் கூறுகிறது.
“திடீரென்றோ, அல்லது வெளிப்படையாகவோ அல்லாஹ்வின் வேதனை உங்களிடம் வந்துவிட்டால் அச்சமயம் அக்கிரமக்காரர்கள் தவிர, (வேறு யாரும்) அழிக்கப்படுவார்களா? என்பதற்கு எனக்கு பதில் சொல்லுங்கள்” என்று (நபியே!) நீர் கேளும். (6:47)
நபிமார்கள் இல்லாதபோது வரும் துன்பங்கள் நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் தான் வந்தடையும். அதுபோல் நடந்த ஒரு நிகழ்வுதான் இந்த நிலச்சரிவும். இதற்கு முன்பு சுனாமி போன்ற நிகழ்விலும் ஏனைய பல நிகழ்விலும் அவ்வாறே நடந்துள்ளன.
ஏன் என்றால்,
நிச்சயமாக, நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் பொருள்கள், உயிர்கள், விளைச் சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். (நபியே!) பொறுமையுடையோருக்கு நீர் நன்மாராயம் கூறுவீராக (2:155)
(நம்பிக்கையாளர்களே!) உங்கள் பொருள்களிலும் உங்கள் உயிர்களிலும் திட்டமாக நீங்கள் சோதிக்க ப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், இணை வைத்தோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால், நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனை) அஞ்சினால் நிச்சயமாக அதுவே உறுதிமிக்க காரியங்களில் உள்ளதாகும். (3:186)
ஒவ்வோர் ஆண்டிலும், ஒரு முறையோ, இரு முறையோ அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் காணவில்லையா? அப்படியிருந்தும் அவர்கள் பாவமன்னிப்புக் கோருவது மில்லை; இன்னும் அவர்கள் படிப்பினை பெறுவதுமில்லை. (9:126)
அவர்களில் அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம். (18:7)
மேற்கண்ட வசனங்கள் மூலம் சோதனை என்பது (பல்வேறான நிகழ்வுகள் மூலம்) நல்ல வர்களுக்கும், கெட்டவர்களுக்கும் வந்து கொண்டேதான் இருக்கும் என்பது நிதர்சனம்.