அறிவியல் மனப்பான்மை ஆபத்தானதா? அவசியமானதா?
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
இன்றைய உலகம் தகவல்களால் நிரம்பி வழிகிறது. அதாவது பேஸ்புக், வாட்ஸ்ஆப், யூடியூப், இன்ஸ்டாகிராம், எஃஸ்(யீ) என சமூக வலைதளங்களில் ஏதாவது கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
மேற்கண்ட சமூக வலைதளங்களில் (Social Media)வில் இளைஞர்களும், முதியோர்களும், சிறுவர்களும் ஆண்கள், பெண்கள் என வேறுபாடு இல்லாமல் எல்லாத் தரப்பினரும் பயனிருந்தும் பயனில்லாமலும் நேரத்தை செலவிடுகிறார்கள்.
சமூக வளைதலங்களில் அறிவியல், அரசியல், ஆன்மீகம், வரலாறு, மருத்துவம், மனநலம், உணவு பழக்கம், சுற்றுச்சூழல், வியாபாரம், விவசாயம், புதிய, புதிய கண்டுபிடிப்புகள், சினிமா, பண்பாடு, பழக்க வழக்கம், பாரம்பரியம் என ஏதாவது ஒன்றையோ, பலவற்றையோ பார்த்துக் கொண்டே இருக்கின்றனர். இவைகளில் உண்மை எது, போலியானது எது என்பதை அறிய முடியாமல் மக்களில் சிலர் குழப்பமாக உள்ளனர்.
எனவே உண்மை எது? போலி எது? என்பதை கண்டறிய அறிவியல் மனப்பான்மை தேவையாக இருக்கிறது.
அதாவது ஒரு கருத்தை அறிவியல் ரீதியாக போலியானது என்று (தவறென்று) உணரும் பட்சத்தில், அத்தவறான கருத்தை மாற்றிக்கொள்ளும் மனநிலைதான் “அறிவியல் மனப்பான்மை” என்பது.
நமது இந்திய அரசியல் சாசன அமைப்பு கூட ஒவ்வொரு குடிமகனும் (Citizen) அறிவியல் மனப்பான்மையோடு இருப்பது, அடிப்படை கடமை என அரசியல் சாசன அமைப்புச் சட்டத்தில் 51A(H) பிரிவில் வலியுறுத்துகிறது.
ஏன் என்றால்? நடைமுறை உலகில் நாம் கேட்கும், பார்க்கும் படிக்கும் தகவல்களை அப்படியே நம்பாமல் அதன் உண்மைத் தன்மை ஆராயும் உணர்வுதான் அறிவியல் மனப்பான்மை ஆகும்.
(துரதிஷ்டவசமாக நமது நாட்டின் பல ஊடகங்கள் (MEDIA) அறிவியல் மனப்பான்மையற்று விளம்பரத்திற்காக அடிமையாகி விலை போய் கிடக்கிறது)
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அறிவியல் மனப்பான்மை முக்கியம்; அதேபோல் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் அறிவியல் மனப்பான்மை அவசியம். எனவேதான் இறைவன் தன்னுடைய வழிகாட்டும் நூலில் நீங்கள் சிந்திக்கமாட்டீர்களா? என சுமார் 23 இடங்களில் கேட்கி றான். (பார்க்க இறைநூல்: 2:44,3:65,6:32, 6:50, 6:80, 10:3, 10:16, 11:24, 11:51, 12:51, 12:109, 21:10, 21:66,67, 23:80, 28:60, 28:82, 32:4, 37:137,138, 56:62)
ஆனால் துரதிருஷ்டவசமாக பல வருடங்கள் மதரஸா மற்றும் அரபி கல்லூரிகளில் படித்து “ஆலிம்‘ என பட்டத்தை வாங்கி வரும் பல மவ்லவிகள் அறிவியல் மனப்பான்மை அற்றவர்களாக இருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக பல விசயங்களை சொல்லமுடியும். இருப்பினும் சமீப காலமாக மிக சர்ச்சையான கருத்தாக இருக்கும் “மூன்று நாள் பெருநாள்‘ விசயத்தை எடுத்துக்கொள்ளலாம்.
அதாவது அறிவியலில் ஒரு பகுதியான சூரிய கணக்கை நம்புவதும் மற்றொரு பகுதியான சந்திர கணக்கை நம்பமாட்டோம் என விடாப்பிடியாக இருந்து கொண்டு முதல் பிறை விசயத்தில் மக்களை பிளவுபடுத்தி இரண்டு நாள் பெருநாள் கொண்டாட வைப்பதை காணலாம்.
இறைவன் தன் வழிகாட்டும் நூலில் (குர்ஆனில்) சூரியன், சந்திரன் பற்றி கூறும் பொழுது,
“அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துவான், இரவை அமைதி தருவதாகவும், சூரியன், சந்திரனையும் காலம் காட்டிகளாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் ஏற்பாடு”. (அல்குர்ஆன்: 6:96 )
இறைவன் இவ்வாறு கூறியிருக்க இதற்கு மாற்றமாக மவ்லவிகள் வைக்கும் வாதம் என்ன தெரியுமா?
“அறிவியல் இன்று ஒன்றை சரிகாணும், நாளை வேறு ஒன்றை சரிகாணும்‘ எனவே அறிவியல் நம்புவது ஆபத்தானது என்ற வாதத்தை வைக்கிறார்கள்.
இது ஓரளவு உண்மைதான். ஆயினும் மவ்லவிகளே! மற்றும் மவ்லவிகளை கண்மூடித்தனமாக பின்பற்றும் முஸ்லிம்களே! நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். அது என்னவென்றால்,
எல்லாவற்றையும் நம்புவது எப்படி ஆபத்தானதோ, அதைவிட ஆபத்தானது எதையும் நம்பாமல் இருப்பதுமாகும்.
எனவே அறிவியலை கண்மூடித்தனமாக பின்பற்ற நாம் சொல்லவில்லை. நாம் மேலே குறிப்பிட்டது போல்,
ஒரு கருத்தை அறிவியல் ரீதியாக சரி என்று நிரூபிக்கும் பட்சத்தில் அந்த கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலைதான் அறிவியல் மனப்பான்மை ஆகும்.
இதற்கு உதாரணமாக இறைவன் தன் வழிகாட்டும் நூலில் (குர்ஆனில்) இறை நிராரிப்பாளர்களையும், இணை வைப்பாளர்களையும் பார்த்து கேட்கிறான்.
“அல்லாஹ்வுடன் மற்ற கடவுள்களும் இருக்கிறார்கள் என்பதற்கு உண்மையிலேயே நீங்கள் சாட்சியங் கூற (நிரூபிக்க) முடியுமா? அல்குர்ஆன் 6:19
அதாவது, ஒரு விசயத்தைப் பற்றி சாட்சி சொல்வதற்கு (நிரூபிப்பதற்கு) வெறும் கணிப்பும், யூகமும் போதுமானதல்ல. மாறாக இந்த விசயம் சரிதான் என்று உறுதியாகச் சொல்வதற்கு (நம்புவதற்கு) அதைப்பற்றி முழுமையான அறிவு இன்றியமையாததாகும். அகில உலகங்களிலும் அடிபணிந்து வணங்கிட தகுதியான, சுயாதிகாரம் படைத்த ஆட்சியாளன் இறைவனைத் தவிர வெறொருவனும் இருக்கின்றான் என்று உறுதியாக உங்களால் நிரூபிக்க முடியுமா? என்பதே இறைவனின் கேள்வியாகும்.
எனவே யாரெல்லாம் தம் அறிவையும், சிந்தனையும் மரத்துப்போக செய்யவில்லையோ, மேலும் தம் மனத்தை பிடிவாதம் என்னும் பூட்டால் பூட்டப்படாமல் இருக்கின்றார்களோ அவர்கள் அறிவியல் மனப்பான்மை ஆபத்தானது என சொல்லமாட்டார்கள், மாறாக அவசியமானது என்றே கூறுவார்கள்.
ஒரே வட்டத்திற்குள் சுற்றிக்கொண்டு இருந்தாலும் அந்த வட்டத்தை விட்டு வெளியேறி மாற்று கருத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயாராய் இருக்கின்ற மனிதர்களே! சிந்தனை உள்ள மனிதராவார்கள்.